வீட்டில் பிரசவம்: மூடநம்பிக்கைகளும், உண்மை நிலவரங்களும்!!(மருத்துவம்)
மூளை, முதுகுத்தண்டு, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தவர்.
மூடநம்பிக்கை: மருத்துவமனையில் மட்டும்தான் பிரசவம் பார்க்கவேண்டும் என்ற சட்டம் இல்லை
.உண்மை நிலவரம்: வீட்டில் பிரசவம் பார்க்கும் உரிமை தமிழகத்தில் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 82ன்படியும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை எண் 61606 / தா.சே.ந.3 / இரு.1 / 2018ன் படியும் வீட்டில் பிரசவம் பார்ப்பது சட்டவிரோதம். மூடநம்பிக்கை: வீட்டில் பிரசவம் பார்ப்பது தனிமனித உரிமை.உண்மை நிலவரம்: தமிழகத்தில் தனி மனிதனுக்கு அந்த உரிமைவழங்கப்படவில்லை.
விளக்கம்: உரிமையும் கடமையும் ஒரே நாணயத்தின் இரு கண்கள். ஒரு தனி மனிதனுக்கு சில உரிமைகள் உள்ளன. அவற்றை அளிக்க வேண்டியது அரசின் / சமூகத்தின் கடமை. அதே போல் அரசுக்கும் சமூகத்துக்கும் சில உரிமைகள் உள்ளன. அவற்றை அளிக்க வேண்டியது தனிமனிதனின் உரிமை.அதாவது தனிமனிதனின் உரிமை = அரசின் கடமை.அரசின் உரிமை = தனிமனிதனின் கடமை.இதில், அரசின் உரிமையைப் பாதிக்கும் எந்த உரிமைகளும் தனி மனிதனுக்கு வழங்கப்படமாட்டாது.
உதாரணமாக, குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை ஒருவருக்கு உள்ளது. ஆனால், ‘நான் ஆண் குழந்தை மட்டும்தான் பெற்றுக்கொள்வேன்’ என்று கூறி (மீயோளி பரிசோதனை) ஸ்கேன் செய்து பெண் சிசுக்களை கருவில் அழிக்கும் உரிமை கிடையாது.நம் நாட்டில் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளியில் கூறுவது கூட சட்டப்படி குற்றம். இதில் சமூகத்தின் உரிமைதான் முன் நிற்கும்.எப்படி ஆண் குழந்தை மட்டும் பெற்றுக் கொள்வேன் என்று அடம் பிடிக்க யாருக்கும் உரிமையில்லையோ, அதே போல் வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்வேன் என்று கூறவும் உரிமை இல்லை.
மூடநம்பிக்கை: அந்தக் காலத்தில் வீட்டில்தான் பிரசவம் பார்த்து அனைவரும் நலமாக இருந்தார்கள்.
உண்மை நிலவரம்: அந்தக் காலத்தில் வீட்டில் பிரசவம் பார்க்கும் போது 1 லட்சம் பிரசவங்களில் 2000 தாய்மார்கள் மரணமடைந்தார்கள். மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும்போது 1 லட்சம் பிரசவங்களில் 60 தாய்மார்கள் மரணமடைந்தார்கள்.
மூடநம்பிக்கை: தமிழகத்தில் 90 சதவிகிதம் சிசேரியன் நடக்கிறது.
உண்மை நிலவரம்: தமிழகத்தில் 33 சதவிகிதம்தான் சிசேரியன் நடக்கிறது. இது அமெரிக்கா வில் நடக்கும் அளவுதான்.
மூடநம்பிக்கை: மருத்துவ மனைகளில் தேவையில்லாமல் சிசேரியன் செய்கிறார்கள்.
உண்மை நிலவரம்: தமிழகத்தில் நடக்கும் பிரசவங்களில் சுமார் 70 சதவிகிதம் அரசு மருத்துவமனைகளில்தான் நடக்கின்றன. இங்கு சிசேரியன் முற்றிலும் இலவசம். இதிலிருந்தேமருத்துவ மனைகளில் தேவையில்லாமல் சிசேரியன் செய்கிறார்கள் என்பது பொய் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
மூடநம்பிக்கை: சிசேரியனால் பக்கவிளைவுகள் அதிகம்.
உண்மை நிலவரம்: சிசேரியனைவிட சுகப்பிரசவத்தில்தான் பக்க விளைவுகள் அதிகம்.
விளக்கம்: வெசிக்கோ வெஜைனல் ஃபிஸ்டுலா (அதாவது பிறப்புறுப்பின் வழியாக சிறுநீர் வருவது; இருமினாலோ, தும்மி னாலோ உடனே சிறுநீர் கழிவது), வெசிக்கோ ரெக்டல் ஃபிஸ்டுலா (அதாவது பிறப்புறுப்பின் வழியாக மலம் வருவது; இருமினாலோ, தும்மி னாலோ உடனே மலம் கழிவது) ஆகிய கொடூர பக்க விளைவுகள் சுகப்பிரசவத்தில் மட்டுமே வரும். சிசேரியனில் இதுபோன்ற பக்க விளைவுகள் கிடையாது.
மூடநம்பிக்கை: விலங்குகள் எல்லாம் சுகப்பிரசவம்தானே?
உண்மை நிலவரம்: விலங்குகள் எல்லாம் சுகப்பிரசவம். ஆனால், விலங்குகளில் பிரசவ கால மரணம் என்பது மிகவும் அதிகம். உதாரணமாக, புள்ளியுள்ள கழுதைப்புலிகளில் (Spotted hyenas) 1,00,000 பிரசவங்களில் 18,000 கழுதைப்புலிகள் மரணமடைகின்றன.ஆடு மாடுகளில் 1 லட்சம் பிரசவங்களில் 2000 மரணங்கள் நடக்கின்றன (ஆதாரம் http://www.fao.org/wairdocs/ilri/x5522e/x5522e0a.htm) மரபு வழி மருத்துவம் மூலம் நடக்கும் பிரசவங்களிலும், வீடுகளில் நடக்கும் பிரசவங்களிலும் 1,00,000 பிரசவங்களில் 2000 மரணங்கள் நடக்கின்றன.
மூட நம்பிக்கை: சில பல வெளிநாடுகளில் எல்லாம் வீட்டில் பிரசவம் பார்க்கலாம்.
உண்மை நிலவரம்: அங்கெல்லாம் கர்ப்ப கால மரணவிகிதம் என்பது மிகவும் அதிகம். இதுதான் நிதர்சனம்.
Average Rating