மஞ்சள் காமாலை… வரும் முன் காப்போம்!(மருத்துவம்)
கல்லீரலில் ஏற்படும் நோய்களில் கவனிக்க வேண்டியதாக இருக்கும் மஞ்சள் காமாலை, மேலோட்டமான அறிகுறிகளின் மூலமே நாம் அறியக்கூடிய ஒன்றாக இருக்கிறது. வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கத்தின் காரணமாகவே ஏற்படும் இந்த நோயினை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஜாய் வர்கீஸிடம் இதன் அறிகுறிகள், தடுப்பு முறைகள், சிகிச்சைகள் பற்றி விரிவாகப் பேசினோம்…பிலிருபின்(Bilirrubin) என்கிற மஞ்சள் நிறத்திலுள்ள ஒரு நிறமிப்பொருளினை கல்லீரல் சுரக்கிறது. இது கொழுப்பைக் கரைக்கக்கூடிய, ரத்தத்திலுள்ள ஒரு கழிவுப் பொருள்.
இந்த கழிவுப் பொருளானது மலம் வழியாகவும், சிறுநீர் வழியாகவும் வெளியேறக்கூடியது. இந்த பிலிருபின் உடலிலிருந்து வெளியேறுவதில் ஏதாவது பிரச்னை ஏற்படும்போது, அது நம் உடலில் தேங்கிவிடுகிறது. இது மஞ்சள் நிறமி என்பதால் உடலில் மஞ்சள் காமாலையாக வெளிப்படுகிறது.
நம் ரத்தத்தில் பிலிருபின் அளவானது 1.2 மில்லி கிராமுக்குள் இருக்க வேண்டும். இது சாதாரணமாக ஒரு நாளைக்கு 4 மில்லி கிராம் அளவிற்கு உடலில் உற்பத்தியாகும். கல்லீரலில் பாதிப்பு ஏற்படும்போது இந்தச் சுரப்பு அதிகரித்து ரத்தத்தில் இதன் அளவு அதிகரிக்கிறது.
இதனால் கண், தோல், நகம், சிறுநீர் ஆகியவை மஞ்சள் நிறத்துக்கு மாறுவதையே மஞ்சள் காமாலை என்கிறோம். இந்நோய்க்குரிய அறிகுறிகளைக் கொண்டு அதன் தன்மையைக் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையளிப்பதன் மூலம் அதை குணப்படுத்தலாம்.
இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருப்பது, எண்ணெய் உணவுவகைகள், மசாலா உணவுகள் சேர்த்துக் கொள்வது, உடலின் சூடு அதிகரிப்பது போன்ற காரணிகளால் உடலின் பித்தம் அதிகரித்து மஞ்சள் காமாலை ஏற்படுகிறது என்று சாதாரணமாக சொல்வதுண்டு. இவை அனைத்தும் மருத்துவரீதியாகவும் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணிகள்தான். எனவே, மேற்சொன்ன தவறுகளைத் தவிர்ப்பதும், உடலினை குளிர்ச்சியோடு வைத்துக் கொள்வதும் அவசியம்.
நோய் அறிகுறிகள்…
கண்கள் மற்றும் உடல் மஞ்சள் நிறமாவது, வாந்தி மற்றும் மலம் வெள்ளையாகப் போவது, சோர்வு, தலைவலி, குமட்டல், எடை குறைவு, காய்ச்சல், பசியின்மை, உடல் அரிப்பு, சிறுநீரில் இயல்புக்கு மீறிய மஞ்சள் நிறம், நாக்கு, உள் உதடு மற்றும் கைகளில் மஞ்சள் நிறப் புள்ளிகள் போன்றவை இந்நோய்க்குரிய அறிகுறிகள்.
மஞ்சள் காமாலையின் வகைகள்
இந்நோய் பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடியது. இந்நோயை அதன் தன்மைகளின் அடிப்படையில் சிறுவயதில் வருவது, கல்லீரல் பாதிப்பால் வருவது என்று வகைப்படுத்துகிறோம்.
குழந்தை பிறந்த 3 முதல் 8 நாட்களில் சிவப்பணுச் சிதைவினாலும், பிறவிக் குறைபாட்டாலும் ஏற்படக்கூடிய பாதிப்பினை சிறுவயதில் வரக்கூடிய மஞ்சள் காமாலை என்கிறோம். இதில் குழந்தையின் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக இருக்கும். இதுபோன்ற பிரச்னையுடைய குழந்தைகளுக்கு சூரிய ஒளியிலிருந்து கிடைக்கக்கூடிய புற ஊதாக்கதிர்களின் மூலமாக சிகிச்சை கொடுப்பதன் மூலம் 2 வாரத்தில் அப்பிரச்னை சரியாகிறது.
வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடிய ஹெப்படைட்டிஸ் A, B, C, D மற்றும் E போன்ற வகைகளினால் ஏற்படும் பாதிப்புகள், கல்லீரல் புற்றுநோய், Cirrhosis என்கிற ஈரல் சுருங்கிப்போதல், ரத்தத்தில் பிலிருபின் அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் அதிகமாவது, ஈரல் சரியாக வேலை செய்யாதது போன்ற அனைத்தும் கல்லீரல் பாதிப்பிற்குக் காரணமாகிறது. இதில் வைரஸ் B மற்றும் C-யால் வரக்கூடிய மஞ்சள் காமாலை அதிக ஆபத்துகளை உடையதாக இருக்கிறது.
காரணங்களும் தடுப்பு முறைகளும் மஞ்சள் காமாலை ஏற்படுவதற்கான பொதுவான காரணம் தொற்று. சில வகை வைரஸ் தொற்றுகள் கல்லீரலில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில் ஹெப்படைட்டிஸ் A, B, C, D, E போன்ற வகைகள் உள்ளன. இதில் A மற்றும் E வகை தொற்றுகள் சுகாதாரமில்லாத உணவு, நீர் போன்றவற்றின் மூலம் பரவுகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்றுள்ள நபர்களின் கையிலுள்ள நகம், அழுக்கு போன்றவற்றின் மூலமும் மற்றவர்களுக்குப் பரவுகிறது. பெரும்பாலானவர்கள் இந்த வகை தொற்றுகளாலேயே பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
B மற்றும் C வகை தொற்றுகள் பாதுகாப்பற்ற உடலுறவு, அசுத்தமான ரத்தம் மற்றும் ரத்தம் தொடர்பான பொருட்கள் மூலம் பரவுகிறது. அதாவது ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவர்களுக்கு தொற்று நீக்கம் செய்யாமல் பயன்படுத்துவதன் மூலமும் இந்நோய் பரவுகிறது. ஊசியின் மூலம் பரவும் இந்த இரண்டு வகை வைரஸ்களும் மிகவும் மோசமானவைகளாக கருதப்படுகிறது.
இந்த வகை வைரஸ்கள் நமது ரத்தத்தில் பல வருடங்கள் வரை இருந்து கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்றவை ஏற்படவும் முக்கியமான காரணமாக இருக்கிறது. ஹெப்படைட்டிஸ் B வகை நோய்க்கு முழு நிவாரணம் தருகிற சிகிச்சை இதுவரை ஏதுமில்லை. ஆனால், இந்நோயைத் தடுத்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு ஹெப்படைட்டிஸ் B தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது இந்தத் தடுப்பூசியை குழந்தைப் பருவத்திலேயே போட்டுக்கொள்வதால் எதிர்காலத்தில் இவ்வகை தொற்று ஏற்படுவதைக் குறைக்க முடியும்.
மேற்கண்ட வைரஸ் தொற்றுகள் மட்டுமில்லாமல் மதுப்பழக்கமுடைய நபர்களுக்கும் கல்லீரல் பாதிக்கப்படுவதால் மஞ்சள்காமாலை ஏற்படுகிறது. மரபியல் காரணங்கள் மற்றும் காசநோய் பிரச்னைகளை உடைய குழந்தைகளுக்கும் மஞ்சள் காமாலை ஏற்பட வாய்ப்புள்ளது.
காசநோய் மற்றும் வலிப்பு பிரச்னைகளுக்காக நீண்ட நாட்கள் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கும் மஞ்சள் காமாலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாற்று மருந்துகள் எடுத்துக்கொள்வது அல்லது மருந்துகளை நிறுத்துவதன் மூலம் மஞ்சள் காமாலை ஏற்படாமல் தடுக்கலாம்.
A மற்றும் E வகை வைரஸ் தொற்றுகள் நமது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் மூலமாக 2 அல்லது 3 வாரங்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால் B மற்றும் C வகை வைரஸ் தொற்றுகளுக்கு அதற்குரிய மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதில் C வகை வைரஸ் தொற்றுக்கு 3 மாத காலம் மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் சரி செய்ய முடியும். ஆனால், B வகை வைரஸ் தொற்றுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதன் மூலமாக இந்த வைரஸ் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் இப்பிரச்னையைக் கட்டுப்படுத்தலாம்.
மதுப்பழக்கத்தால் உண்டாகிற மஞ்சள் காமாலை பிரச்னைக்கு, அப்பழக்கத்தை சரியான முறையில் கைவிடுவதே சரியான தீர்வாக இருக்கும். மரபியல் காரணங்களால் ஏற்படுகிற மஞ்சள்காமாலைக்கான சிகிச்சை முறைகள் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு Supportive medicine மூலமாக சிகிச்சை கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல.
இப்பிரச்னையால் கல்லீரல் முழுவதும் சேதமடைந்துவிட்டால், அறுவை சிகிச்சை மூலமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்கிற நிலை ஏற்படுகிறது. ஆனால், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் நபர்களின் மொத்த அளவில் 5 சதவிகிதத்துக்கும் குறைவான நபர்களே இதுபோன்ற அறுவை சிகிச்சை வரை செல்கின்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் காமாலை பிரச்னையுடைய நபர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி ஹெப்படைட்டிஸ் B தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும். கல்லீரலில் பாதிப்புகளை உண்டாக்கும் மருந்துகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். கல்லீரலில் கொழுப்புச்சத்து அதிகமாக படியாமலிருக்கும் வகையிலான உணவு பழக்க வழக்கங்களைப் பின்பற்ற வேண்டும். அரிசி, உருளைக்கிழங்கு, இனிப்புகள் போன்ற கார்போஹைட்ரேட் சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். உடல் எடையைக் குறைக்க தினசரி நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
மஞ்சள் காமாலை வரும்முன் காக்க…
* நாம் உண்ணும் உணவை சுகாதாரமான முறையில் தயாரித்து, சுகாதாரமான முறையில் உட்கொள்ள வேண்டும். சுகாதாரமற்ற இடங்களில் நீர் அருந்துவது, உணவுப் பொருட்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
*நமது சுற்றுப்புறம், கழிவறை போன்றவற்றை சுகாதாரமான முறையில் வைத்துக் கொள்வதோடு நம் உடல் உறுப்புகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
*குழந்தை பிறந்தவுடனும் அதன் பிறகு 1, 2 என்கிற மாத இடைவெளியிலும் மூன்று டோஸ்களாக ஹெப்படைட்டிஸ் பி தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி மற்றவர்களுக்கு 0, 1, 6 என்கிற மாத இடைவெளியில் போடப்படுகிறது.
*மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட தாய், குழந்தைக்குப் பால் கொடுப்பதால் குழந்தைக்கும் பாதிப்பு வரக்கூடிய வாய்ப்புள்ளது. அதுவே தடுப்பூசி போட்டுக்கொண்ட தாய் எனில் குழந்தைக்கு பாதிப்பு வராது. அப்படியே வந்தாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கும்.
*டிஸ்போஸபிள் ஊசியையே பயன்படுத்த வேண்டும்.
*மதுப்பழக்கத்தைக் கைவிடுவது நல்லது.
*கொழுப்பு சார்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.
Average Rating