உடலுக்கும் உள்ளத்துக்கும்!!(மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 2 Second

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மூன்றாவது சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. யோகாவின் அவசியத்தையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்வதோடு, அதன் பலன்களையும் பெற வேண்டும் என்பதே இந்த சர்வதேச யோகா தினத்தை அனுசரிப்பதற்கான முக்கிய நோக்கமாக உள்ளது. யோகா மற்றும் இயற்கை மருத்துவரான தீபாவிடம் யோகாவின் வரலாறு அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமாகக் கேட்டோம்… யோகா மிகவும் பழமை வாய்ந்த ஒரு கலை. அதன் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா தினமாக ஜூன் 21-ம் நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டுமென, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தியிருந்தார்.

ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி, அதற்கான தீர்மானத்தை ஐ.நா. சபையில் முன்மொழிந்தார். 2014 டிசம்பர் 11 அன்று 193 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பொதுச் சபை அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதற்கு அமெரிக்கா, கனடா, சீனா உட்பட 177 நாடுகளின் ஆதரவு கிடைத்தது. இதுவரை எந்த ஐ.நா. தீர்மானத்துக்கும் இவ்வளவு அதிக நாடுகள் ஆதரவு தெரிவித்தது இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே, அந்தத் தீர்மானம் அமோக ஆதரவுடன் ஐ.நா. சபையில் நிறைவேறியது. ஜூன் 21-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படும் என்று ஐ.நா. சபை அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, இதுகுறித்து பேசிய அப்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், ‘நோய்கள்
வராமல் தடுக்க, மன அழுத்தத்தைக் குறைக்க மற்றும் மனதுக்கு அமைதியைக் கொடுப்பதிலும் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது’ என்று தெரிவித்திருந்தார்.

அவசர வாழ்வுக்கு அவசியமான கலை.

சாதி, மதம், இனம், மொழி, நாடு போன்ற பல்வேறு வேறுபாடுளைக் கடந்து அனைவருக்கும் பொதுவானதாக, உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருப்பதே யோகா. இது ஓர் உள்ளார்ந்த அறிவியலை தன்னூடே கொண்டுள்ளது. இதன் மூலம் தன்னைத்தானே புரிந்துகொள்ளக்கூடிய, சுயம் உணர்தல் என்ற நிலையை எளிதாக அடையலாம். யோகா ஆன்மாவிற்கு அத்தியாவசியமான ஒன்று. அது ஆன்மாவின் கருவிகளான உடல் மற்றும் மனதை ஒருங்கிணைக்கிறது. யோகாவானது அறிவியலையும் ஆச்சரியப்பட வைக்கும் நுண்ணறிவு கொண்டதாக உள்ளது. யோகிகளின் பார்வைப்படி யோகா பயிற்சியானது ஜீவாத்மாவை அண்டம் முழுவதும் பரவியிருக்கும் ஆற்றலான பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்கச் செய்யும் கருவியாக அமைந்துள்ளது.

உடலுக்கும் உள்ளத்துக்கும்

யோகாவானது ஒருவரின் உடல், மனம், உணர்ச்சி, ஆற்றல் அல்லது சக்தி போன்ற அடிப்படை விஷயங்கள் அனைத்திலும் ஆரோக்கியமான வகையில் தன் ஆதிக்கத்தை செலுத்துகிறது. கர்மயோகா உடல் அளவிலும், ஞானயோகா மனம், அறிவு தொடர்பாகவும், பக்தியோகா உணர்ச்சிகளின் நிலையிலும், கிரியாயோகா ஆற்றல் அல்லது சக்தி நிலையிலும் நின்று தன் ஆதிக்கத்தை திறம்பட செலுத்துகின்றது. மேலும் அது வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளையும், அறநெறிகளையும் முறையே இயமம், நியமம் என்பதன் மூலம் நமக்கு தெளிவாக விவரிக்கின்றது. இதன்படி இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கைக்கான நெறிமுறைகளை சரியாகக் கடைபிடித்தால் நாம் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

யோகாவின் வரலாறு

யோகாவானது ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பூமியில் தன் ஆணிவேரை பதித்திருக்கிறது. வேதங்கள் உருவானபோதே யோகக்கலை பழக்கத்தில் இருந்ததன் மூலம் அது வேதங்களைவிட மிகவும் பழமையானது என்பது தெளிவாகிறது. மகரிஷி பதஞ்சலி என்பவர், இந்தக் கலையை மானுடர்க்கு ஏற்றவாறு மாற்றி அதன் சாரத்தையும், அதன் மூலம் அவர் பெற்ற ஞானத்தையும் தொகுத்து வழங்கியுள்ளார். இன்று அனைவரிடத்தும் அந்தப் பயிற்சியானது நோய் வரும்முன் காக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பரவலாக கடைபிடிக்கப்படுகிறது.

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகா பயிற்சிகள்

ஒருவருடைய உடலையும், மனதையும் ஒருநிலைப்படுத்துவதோடு, உடல் வலிமை பெறுவதற்கும் யோகா பயிற்சிகள் உதவுகிறது. யோகா பயிற்சிகளில், யமா, நியமா, ஆசனம், பிராணாயாமம், பிரத்யஹாரம், தாரணம், தியானம், சமாதி, பந்தா, முத்ரா, ஷட்கர்மம், யுக்தாஹாரா, மந்த்ரா ஜபா, யுக்தகர்மா போன்ற இன்னும் பல பயிற்சிகள் உள்ளன.

யோகா பயிற்சிகள் செய்யும்முன்…

* யோகா பயிற்சி மேற்கொள்ளும் இடங்கள் நல்ல காற்றோட்டத்துடன், சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டும்.
* பயிற்சிகளை செய்வதற்குமுன் காலைக் கடன்களை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும்.
* Yoga Mat -ல் பயிற்சிகள் செய்ய வேண்டும். இல்லையென்றால் சுத்தமான விரிப்புகள், ஜமுக்காளம் போன்றவற்றை தரையில் விரித்து அதன்மேல் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
* தளர்வான மேலாடைகள் அணிவது இதுபோன்ற பயிற்சிகளை செய்வதற்கு சுலபமாக இருக்கும். மேலும் உள்ளாடைகள் சரியான அளவு
இறுக்கத்துடன் இருப்பது அவசியம்.
* யோகா பயிற்சிகளை கண்டிப்பாக வேகமாக செய்யக்கூடாது. உடல்சோர்வாக இருக்கும்போது செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
* பெண்கள் மாதவிடாய் மற்றும் மகப்பேறு காலங்களில் பயிற்சிகளை செய்தால், அதற்கு முன்பு யோகா மருத்துவரின் ஆலோசனைகளைக் கேட்டு செய்வது நல்லது. பயிற்சிக்குப் பின்…
* பயிற்சி முடித்தபிறகு அரைமணி நேரம் கழித்துதான் குளிக்க வேண்டும்.
* பயிற்சி முடித்த அரைமணி நேரம் கழித்த பிறகே உணவு உண்பதும், குடிநீர் அருந்துவதும் சரியானது. யோகாவின் வியக்க வைக்கும் பயன்கள்
* ரத்தக்கொதிப்பு, நீரிழிவு, சுவாசக்கோளாறு, உடல்பருமன் போன்ற வாழ்வியல் நோய்களுக்கு தீர்வு காண்பதற்கு யோகா பெரிதும் உதவுகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
* மனஅழுத்தம், மனச்சோர்வு, கவலை, பதற்றம் போன்றவற்றை குறைப்பதற்கு உதவுகிறது.
* பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் மற்றும் ஹார்மோன் பிரச்னை களுக்குத் தீர்வு காண உதவுகிறது.யோகாவை சரியான முறையில் எப்படி செய்ய வேண்டும் என்று அதற்குரிய யோகா மருத்துவரிடம் அல்லது பயிற்சியாளரிடம் கற்றுக்கொண்ட பிறகு செய்வதால் அதனுடைய முழுமையான பலனை நாம் பெறலாம். அரசு கட்டுப்பாட்டிலுள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு இலவசமாக யோகா பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் நோய்களுக்கு இயற்கை மருத்துவ முறைகள் மற்றும் யோகா பயிற்சிகள் மூலம் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. உடல் மற்றும் மனதினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் யோகா பயிற்சிகளை செய்வது நல்லது. யோகத்தில் உடலும் மனதும் நேர்க்கோணலானால் வாழ்க்கையில் வளைவு சுளிவுகளும் வசந்தமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எலி காய்ச்சலால் 74 பேர் பலி!!(உலக செய்தி)
Next post விஜய் ஏன் சங்கீதாவை திருமணம் செய்தார் தெரியுமா?(வீடியோ)