ரஷிய விண்கலம் மூலம் பெண் சுற்றுலா பயணி விண்ணில் பறந்தார்
ஈரானைச்சேர்ந்த முஸ்லிம் பெண் சுற்றுலா பயணியுடன் ரஷியன் சோயுஸ் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அவருடன் 2 விண்வெளிவீரர்களும் அதே விண்கலத்தில் பயணம் செய்கிறார்கள். ரஷிய விண்கலமான சோயுஸ் டி.எம்.ஏ-9 நேற்று கஜக்ஸ்தான் நாட்டில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அதில் ரஷிய விண்வெளி வீரர் மைக்கேல் லோபஸ் அலெக்ரியா மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் மிகையீல் டைïரின் ஆகியோர் விண்ணில் செலுத்தப்பட்டனர்.
இவர்களுடன் சுற்றுலாபயணி அனூஸ்கேக் அன்சாரி என்ற பெண்ணும் இந்த விண்கலத்தில் பயணம் செய்கிறார். விண்ணுக்குப்பயணம் செய்யும் முதல் பெண்சுற்றுலா பயணி ஆவார். அதோடு முதல் முஸ்லிம் பெண் ஆவார். முதல் ஈரானியர் ஆவார்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரில் 1984-ம் ஆண்டு குடியேறிய அனூஸ்கேக் அந்த நாட்டு குடிஉரிமை பெற்றவர். 40 வயதான இவர் அங்கு சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.
100கோடி கட்டணம்
அனூஸ்கேக் இந்த விண்வெளிபயணத்தை சுற்றுலா பயணியாகத்தான் மேற்கொண்டிருக்கிறார். இதற்காக அவர் 100 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தி இருக்கிறார் என்று தெரிகிறது. எவ்வளவு ரூபாய் கட்டினார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்பு சுற்றுலா பயணிகளாக சென்றவர்கள் இந்த தொகையை செலுத்தியதால் அவரும் இந்த அளவு தொகை செலுத்திஇருப்பார் என்று நம்பப்படுகிறது.
நேற்று காலை 9.39 மணிக்கு இந்த விண்கலம் ஏவுதளத்தில் இருந்து சீறிப்பாய்ந்தது. முன்னதாக அமெரிக்க,ரஷிய தேசியக்கொடிகளுடன் ஈரான் கொடியையும் விண்கலத்தில் கொண்டு செல்ல அவர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அமெரிக்க, ரஷிய அரசாங்கங்களின் தலையீட்டின் பேரில் அவர் ஈரான் கொடியை அகற்றி விட்டார்.
ஜப்பானியருக்கு பதிலாக
அனூஸ்கேக் சிலமாதங்களுக்கு பிறகு பறக்கவிடப்படும் சோயுஸ் விண்கலத்தில் தான் பயணம் செய்வதாக இருந்தது. இந்த சோயுஸ் விண்கலத்தில் ஜப்பானிய தொழில்அதிபர் ஒருவர் பயணம் செய்வதாக இருந்தது. மருத்துவக்காரணங்களுக்காக அவர் பயணம் செய்யவில்லை.
அவருக்கு பதிலாக அனூஸ்கேக் இந்த முறை பயணம் செய்தார். சுற்றுலா பயணியாக விண்வெளிக்கு செல்லும் 3-வது பயணி இவர் ஆவார். ஏற்கனவே 2 பேர் இதற்கு முன்பு கட்டணம் செலுத்தி விண்வெளிக்கு சுற்றுலா பயணம் சென்றனர்.
நாளை புதன்கிழமை
இந்த விண்கலம் நாளை புதன்கிழமை விண்வெளியில் அமைக்கப்பட்டு உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இணையும். அங்கு அவர் 10 நாட்கள் தங்கி இருப்பார். பிறகு கடந்த 7 மாதங்களாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி ஆய்வுகள் மேற்கொண்ட அமெரிக்க ரஷிய விண்வெளிவீரர்கள் இதே விண்கலத்தில் பூமிக்கு திரும்புகிறார்கள்.
அவர்களுடன் அனூஸ்கேக் திரும்புகிறார். அவருடன் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு சென்ற மைக்கேல் லோபஸ், மிக்கேல் டைïரின் ஆகியோர் 6 மாதம் அங்கு தங்கி ஆய்வுகள் மேற்கொள்வார்கள்.
இதற்கிடையில் சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து அமெரிக்க அட்லாண்டிஸ் விண்கலம் நேற்று பூமிக்கு புறப்பட்டது. அது நாளை புதன் கிழமை புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் தரை இறங்கும்.