ரஷ்யாவின் புதிய காய் நகர்த்தல்!!(கட்டுரை)
ரஷ்யாவைத் தவிர்த்து, மத்திய கிழக்கு விவகாரத்தில் மாற்று நிலைமைகளை ஏற்படுத்துதல் என்பது முடியாத ஒன்றாகும். மேற்கத்தேய நாடுகள், தொடர்ச்சியாக ரஷ்யாவை ஆக்கபூர்வமானதொரு செயற்பாட்டாளராகக் கருதாவிட்டாலும், ரஷ்யாவின் பங்கு, குறித்த விவகாரத்தில் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். குறிப்பாக சவூதி அரேபியா, தனது பிராந்திய வல்லரசாண்மையை நிலைநிறுத்திக் கொள்வதற்கும், துருக்கி, குர்திஸ் இன மக்களுக்கு ஈராக்கில் ஐக்கிய அமெரிக்கா உதவியதைத் தொடர்ந்தும், ரஷ்யாவுடன் இராஜதந்திர உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டதிலிருந்து, ரஷ்யாவைப் புதியதொரு பங்காளராகப் பார்க்கும் மனப்பாங்கு, மத்திய கிழக்கில் உருவானது எனலாம். மறுபுறத்தில் ரஷ்யாவும், தனது செல்வாக்கைத் தொடர்ச்சியாக மத்திய கிழக்கில் பேணவே முயல்கின்றது. இதன் ஒரு படிமானமே, “இஸ்லாமியப் பயங்கரவாதத்துக்கு” எதிராக, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில், ரஷ்யா இராணுவ ரீதியில் தலையிட்டமை பார்க்கப்படவேண்டியதாகும்.
2015ஆம் ஆண்டில் சிரியாவின் உள்நாட்டு போரில் ரஷ்யா தலையிட்ட போது, அதன் அடிப்படை நோக்கம், ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) குழுவை ஒழித்தலே ஆகும். டமாஸ்கஸ்ஸை ஐ.எஸ்.ஐ.எஸ் ஆக்கிரமிக்க முற்பட்ட போது, சிரிய அரசாங்கம், ரஷ்யாவிடம் விடுத்த கோரிக்கையைத் தொடந்தே, மத்திய கிழக்கில் ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியிருந்தது. 1990களுக்கு அண்மித்த காலப்பகுதியில் ரஷ்யா, ஆப்கானில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள தலைப்பட்டமைக்கு பின்னர், நேரடியாகவே இராணுவ ரீதியில் காய் நகர்த்தியமை, 2015 சிரிய உடன்படிக்கையின் அடிப்படையிலேயே ஆகும். அதன்படி, ரஷ்யாவும் இவ்வாண்டு ஜனவரி மாதமளவில், சிரியாவிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவைத் தோற்கடித்ததுடன், தனது இராணுவக் காய் நகர்த்தல்களைத் தவிர்த்து, தற்போது ஏழு ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு, பேச்சுவார்த்தை மூலமான தீர்வைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துகிறது. இதன் பொருட்டு, சோச்சியிலும் அஸ்தானாவிலும் சமாதான உடன்படிக்கையில் வேலை செய்யும் அதேவேளையில், ரஷ்யா, பயங்கரவாதத்தின் மீதான போரில் மூலோபாய நாடாக, சிரியாவை மதிக்கின்றது; அதன் பொருட்டு, சிரிய இராணுவத்துடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருகிறது. இது, சிரியாவைப் பொறுத்தவரை, பயங்கரவாதத்தைத் தடுக்கவும், மேற்கத்தேய தலையீடுகள் சிரியாவில் இருப்பதைத் தடுப்பதற்கான ஒரு உத்தியாகவே காணப்படுகின்றது.
மற்றைய உதாரணம், இஸ்ரேல் – பலஸ்தீன சமாதான நடவடிக்கையில் ரஷ்யா கைக்கொள்ளும் காய் நகர்த்தல்கள். ஐ.அமெரிக்காவும் ஏனைய மேற்கத்தேய நாடுகளும், தொடர்ச்சியாக சமாதான உடன்படிக்கையை இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளத் தள்ளப்பட்டு, இன்னமுமே வெற்றிபெறாத இந்நிலையில், ரஷ்யாவின் குறித்த இப்புதிய நடவடிக்கை, குறித்த பிராந்தியத்தில் ரஷ்யா தனது செல்வாக்கைத் தொடர்ச்சியாகச் செலுத்தத் தலைப்படுவதைக் காட்டுகின்றது.
எது எவ்வாறாக இருப்பினும், இஸ்ரேல், இரு தேசக் கொள்கைக்கு ஒத்துப்போகப் போவதில்லை. மறுபுறத்தில், மேற்கத்தேய உதவியுடன் ஹமாஸ் இயக்கம், தீவிரவாத இயக்கமாக முத்திரை குத்தியிருப்பது, இஸ்ரேலின் கொள்கையைக் கேள்விக்குட்படுத்த முடியாத நிலைக்கு, சர்வதேச அரசியலை நகர்த்தியுள்ளது. மறுபுறத்தில், பலஸ்தீனிய தேசிய அதிகாரசபை (PA), இருதேசக் கொள்கையின் அடிப்படையிலேயே தீர்வு பெறவேண்டும் என வலியுறுத்துவதுடன், ஹமாஸ் இயக்கமும் இஸ்ரேல் அண்மையில் கைப்பற்றிய பலஸ்தீனிய இடங்களை விட்டு வெளியேறவேண்டும் எனவும் வலியுத்துவது, பேச்சுவார்த்தை என்பது மிகவும் இலகுவான காரியம் அல்ல என்பதையே காட்டுகின்றது.
மேலும், பிராந்திய நிலையில், ஈரான், ரஷ்யாவின் தலையீட்டை எதிர்க்கவில்லை என்ற போதிலும், ஹமாஸ் இயக்கத்துக்குத் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆயுத மற்றும் இராணுவ உதவியைக் கைவிடுவதாகவும் இல்லை. சவூதி அரேபியா, பலத்தீனத்துக்கு நட்பு நாடாக இருந்தபோதிலும், ஐ.அமெரிக்காவின் செயற்பாட்டாளராக மத்திய கிழக்கில் இருப்பது, ரஷ்யாவின் தலையீட்டை விரும்பாத நிலைக்கே, அதனை இட்டுச்செல்லும். மேலும், ஈராக், யேமன், சிரியா ஆகியவற்றுடனான மோதல், ஈரானுடனான வல்லரசுத் தன்மை தொடர்பிலான போட்டி என்பன, சவூதி அரேபியாவை தனது நிகழ்ச்சி நிரலைத் தாண்டி, வேறொரு வல்லரசு அரசு மத்திய கிழக்கில் தலையிடுவதை விரும்பாது. இந்நிலை, ரஷ்யாவின் சமாதான உடன்படிக்கையை எட்டுதல் தொடர்பிலான செயற்பாட்டுக்கு ஆதரவு அளிக்கமுடியாத நிலையிலேயே சவூதி அரேபியாவைப் பேணிக்கொள்ளும்.
துருக்கியைப் பொறுத்தவரை, அது ரஷ்யாவின் வருகையை விரும்புவதுடன், அதுவே ஐ.அமெரிக்கா – இஸ்ரேல் – துருக்கி – ரஷ்யா நிலைமைகளில், துருக்கிக்குச் சார்பான நிலையை ஏற்படுத்தும் என விரும்புகின்றது. இஸ்ரேல் – துருக்கியின் இராஜதந்திர உறவுகள் இன்னமும் சீராகவே இருக்கின்ற போதிலும், அதனைக் கட்டிக்காப்பதால் வரும் நன்மைகளை விட, ரஷ்யாவுடன் சார்பாக இருப்பதால் ஏற்படும் நன்மை பற்றியே, துருக்கி அண்மைக்காலத்தில் சிந்திக்கின்ற நிலைமை, துருக்கி, ரஷ்யாவின் சமாதான உடன்படிக்கை எட்டுதல் தொடர்பில் தரகராக இருத்தலை வரவேற்கும். துருக்கி, ஈரானைப் போலவே கட்டாரும், ஹமாஸ் இயக்கத்தை ஆதரிக்கிறது, ரஷ்யாவுடன் நெருங்கிய உறவைப் பேணுகின்றது.
இவ்வாறு ஒரு சீரற்ற களநிலைவரங்கள் மத்தியிலேயே ரஷ்யா, மத்திய கிழக்கின் அரசியலில் தலையீடு செய்வது பார்க்கப்படவேண்டியதாகும். இது வெறுமனே சிரியா, இஸ்ரேல் – பலஸ்தீனப் பிரச்சினையைத் தாண்டி, ரஷ்யாவின் தலையீடு, குறித்த பிராந்தியத்தில் மேலதிகமாக ஏற்படுத்தப்படப்போகும் தாக்கங்கள், சிக்கல்கள் தொடர்பிலேயே இப்போது கவனம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகின்றது.
Average Rating