அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி சீன இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு: உலக வர்த்தக போர் விஸ்வரூபம் எடுக்கிறது!!( உலக செய்தி)
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ரூ.1.12 லட்சம் கோடி சீன பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் அதிகரித்து வரும் சீன பொருட்களின் ஆதிக்கத்தை குறைக்க அந்த நாட்டு பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கும் முடிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்தார். இதன்படி, கடந்த ஜூலை 6ல் ரூ.2.38 லட்சம் கோடிக்கு சீன இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
இதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதே அளவு கூடுதலாக 25 சதவீதம் வரியை சீன அரசு விதித்தது. இது, உலகளவிலான வர்த்தக போருக்கு வழி வகுத்தது. அதன் பிறகும், சீனாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலும் ரூ.1.12 லட்சம் கோடி மதிப்புக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பது குறித்து டிரம்ப் ஆலோசனை நடத்தி வந்தார். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று அந்த உத்தரவை அமல்படுத்தி உள்ளார்.
இதன் மூலம் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ரூ.3.50 லட்சம் கோடி பொருட்களுக்கு இனிமேல் கூடுதலாக 25 சதவீதம் வரியை சீனா கட்ட வேண்டும். இது சீன இறக்குமதியை அடியோடு குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதை அறிந்ததும் சீனா அதே அளவு, அதாவது ரூ.1.12 லட்சம் கோடிக்கு அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் இறக்குமதி வரியை விதித்து உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவின் குறிப்பிடத் தகுந்த தயாரிப்புகளான ஹார்லி பைக், பவுர்பான்,ஆரஞ்ச் பழச்சாறு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையிலான வர்த்தக போர் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
* ஆண்டுதோறும் ரூ.35 லட்சம் கோடி மதிப்பிலான அமெரிக்க பொருட்கள் சீனாவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
* அதேபோல் ரூ.14 லட்சம் கோடி மதிப்புள்ள சீன பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. புதிய வரி விதிப்பால் இருநாட்டு வர்த்தகமும் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாம் யார் தெரியுமா? டிரம்ப் ஆவேசம்
அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்புக்கு பதிலடியாக சீனாவும் ரூ.1.12 லட்சம் கோடி பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்த தகவலை அறிந்ததும் அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘‘நாம் யார் தெரியுமா?. அவர்களை விட நாம் பொருளாதாரத்தில் மிகவும் வலிமையானவர்கள். இது அவர்களுக்கு தெரியும்’’ என்றார்.
வழக்கு தொடரப்படும் சீனா அதிரடி அறிவிப்பு
சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’எங்கள் இறக்குமதி ரூ.14 லட்சம் கோடிதான். ஆனால் அவர்கள் இறக்குமதி ரூ.35 லட்சம் கோடி. யாருக்கு பாதிப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உலக வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் நடவடிக்கை விதிமுறைகளை மீறியது. அவர்கள் நடவடிக்கைக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். மேலும் இதற்கு எதிராக வழக்கு தொடரப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது.
Average Rating