அத்தனைக்கும் ஆசைப்படு பெண்ணே!(மகளிர் பக்கம்)
இந்தியாவின் ஆட்சி, அதிகாரம், சட்டம் ஒழுங்கு துறைகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மனித இனம் காட்டு வாழ்க்கையில் இருந்து விவசாயத்தை நோக்கிப் போன காலத்தில் பெண்ணே விவசாய முறைக்கும் தாயாக இருந்தாள். தொழில்மயமாதல் பெண்ணின் உலகத்தையும் திறனையும் வீட்டுக்குள் சுருக்கியது. ஆணை மட்டுமே அடையாளமாகக் கொண்ட வாழ்க்கையிலிருந்து பெண் தனது கட்டுக்களை உடைத்து வெளி வந்தது பெரிய கதை.
அதன் காவிய நாயகிகளாக முதலாய்க் கால்பதித்த பெண்கள் பலர். இதில் சிலர் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே தங்கள் சாதனைத் தடத்தைப் பதிவு செய்துள்ளனர். முதல் பெண் மருத்துவர் ஆனந்த பாய் ஜோஷி (1886), முதல் பெண் பொறியாளர் லலிதா (1937) ஆவர். இந்திய சுதந்திரத்துக்குப் பின் அரசின் நிர்வாகப் பொறுப்புகளில் பெண்கள் இடம் பிடித்துள்ளனர். முதல் பெண் ஆளுநர் சரோஜினி நாயுடு, முதல்வர் சுதேசா கிருபாளினி, பெண் சபாநாயகர் ஷானா தேவி, முதல் வெளிநாட்டுத் தூதர் விஜயலட்சுமி பண்டிட், பெண் பிரதமர் இந்திராகாந்தி, முதல் ஐ.ஏ.எஸ்., அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா, முதல் ஐ.பி.எஸ்., கிரண்பேடி, முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.
திறமைகளும் ஆசைகளும் இருந்தாலும் பெண்கள் குடும்பம் சார்ந்த பொறுப்புக்களால் முடக்கப்படுகின்றனர். குடும்பத்தை நிர்வகிக்கக் கண்டிப்பாகப் பணத்தேவை இருக்கும் பட்சத்தில் பெண்கள் பணம் ஈட்டும் பணிகளுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதிலும் பெண் தனது குடும்பப் பொறுப்புக்களுக்கு எந்தக் குறையும் வைத்திடாமல் அனைத்தையும் நிறைவேற்றிய பின்னரே அவள் தனது வேலையைத் தொடர முடியும். விரும்பிய துறையை விட்டு வருமானத்துக்காக மட்டும் வேலையைத் தொடரும் பெண்கள் அதிகம்.
பெரும்பான்மைப் பெண்கள் பொருளீட்ட மட்டுமே தன் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணிகளுக்கு வர வேண்டும் என பெண்கள் ஆசைப்படும் போது அவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் நுழைகின்றனர். அப்போது பெற்றோர் இவர்களுக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளுக்குத் தயாராகின்றனர். ஆனால் ஆண்களைப் போல குறிப்பிட்ட இலக்கை அடையும் வரை பெண்கள் முயற்சிக்க அவர்களைக் காலம் அனுமதிப்பதில்லை. குறிப்பிட்ட வயதை எட்டிய உடன் திருமணத்துக்கான தேவை அவர்களை மடை மாற்றம் செய்துவிடுகிறது. ஐ. ஏ. எஸ். கனவை மனதுக்குள் புதைத்துக் கொண்டு வாழும் பெண்கள் அதிகம்.
தன் கனவுக்கான நெருப்பை அணைத்திடாமல் பாதுகாக்கும் பெண்கள் அதை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எட்டி விடுகின்றனர். இத்தனை சவால்களையும் தாண்டி ஐ. ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.இந்த மாற்றத்தை வரவேற்கலாம். இனிப் பிறக்கும் பெண் குழந்தையின் திறன் அறிந்து தான் ஒரு ஐ. ஏ. எஸ். என்ற கனவோடு வளர்ப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் கனகராஜ்.
இவர் கோவை அரசு கலைக்கல்லூரியில் அரசியல் அறிவியல்த்துறையின் தலைவர் மற்றும் பேராசிரியராக உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்றவர்களில் 85 பேர் வெற்றி பெற்று நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., பணிகளில் உள்ளனர். 2500 பேரை டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெறச் செய்துள்ளார். 4 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு வாழ்வியல் திறனேற்றும் பயிற்சி அளித்துள்ளார். 400 பள்ளிகளில் அறிவுத் திறன் மற்றும் எண்ண ஓட்ட மேம்பாட்டுப் பயிற்சி அளித்துள்ளார். இவரிடம் பயிற்சி பெற்ற பெண்கள் பலர் உயர் பதவிகளில் உள்ளனர். குறிப்பாக அஜிதா பேகம் ஐ.பி.எஸ்., ஹைதராபாத் தேசிய காவலர் பயிற்சிப் பள்ளியில் துணை இயக்குனராக உள்ளார். லலிதாம்பிகை மணிப்பூரில் உதவி ஆட்சியராக உள்ளார்.
“இப்போது என்னிடம் ஐ.ஏ.எஸ். பயிற்சி பெற்று வரும் 400 பேர்ல 225 பேர் பெண்கள்,” எனும் பேராசிரியர் கனகராஜ் மேலும் கூறுகையில், “பலதரப்பட்ட குடும்ப சூழல்ல இருந்து ஐ.ஏ.எஸ். பயிற்சிக்காக வர்றாங்க. டாக்டர், இன்ஜினியர், ஆர்ட்ஸ் படிச்சவங்களும் குடிமைப்பணித் தேர்வுகள் எழுதத் தயாராகறாங்க. புகழ்பெற்ற கல்லூரில படிப்பை முடிச்சிட்டு ஐ,ஏ.எஸ்., தேர்வுல ஜெயிக்கணுன்ற தீவிரம் பயிற்சிக்கு வர்றவங்ககிட்டப் பார்க்க முடியுது. ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கு வர்ற பெண்களுக்கு திருமணம்ன்றது பெரிய தடையா இல்லை. பெற்றோர் தரப்புல ஐ.ஏ.எஸ். படிக்கிற பெண்கள கல்யாணத்துக்கு அவசரப்படுத்துறதில்லை. அதே போல கல்யாணம், குழந்தைனு ஆனப்புறமும் மனைவி ஐ.ஏ.எஸ். படிக்க ஊக்கப்படுத்துற ஆண்களைப் பார்க்க முடியுது. ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கு வர்ற பெண்கள் எண்ணிக்கை அதிகரிச்சிருக்கிறதுக்கு இதுவும் ஒரு காரணம். பெண்ணை அடிமைப்படுத்துற நிலையில இருந்து சமூகம் மாறியிருக்குதுன்றதுக்கான அடையாளமா இதைப் பார்க்கலாம்,” என்கிறார் கனகராஜ்.
அனைத்து வாய்ப்புக்களும் அமையப் பெற்ற பெண்கள் மட்டும் உயர் பதவிகளை எட்டுவதில்லை. ஒடுக்கப்பட்ட பெண்கள் இந்தப் பதவிகளை தனக்குக் கிடைக்கிற விடுதலையாகக் கொண்டாடுகின்றனர். இது குறித்து கனகராஜ் கூறுகையில் “இளம் வயது விதவை, மணமுறிவு பெற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவங்க, படித்தும் திருமணத்துக்குப் பின் வேலைக்குப் போகக் கூடாது என தடுக்கப்பட்ட பெண்கள் என…பலதரப்பட்டவங்களும் தன்னோட வலியைத் தாண்டி உயர்ந்த இடத்தை பிடிக்க முயற்சிக்கிறாங்க.
தன்னோட குழந்தைகள நல்ல நிலைக்கு கொண்டு வரணும். படிப்பும், வேலையும் தனக்கு பாதுகாப்பா மாறணும்னு எதிர்பார்க்கிற பெண்கள் மிகத் தீவிரமா குடிமைத் தேர்வுல ஜெயிக்கறாங்க. இது போன்ற பதவிகள் பெண்ணுக்கு மதிப்பையும், தன்னம்பிக்கை, தைரியம், பாதுகாப்பு எல்லாம் தருது. இவர்களால குடும்பம் மேம்படுது. அந்தப் பெண் தனிப்பட்ட முறையில் தன்னை வளர்த்துக்கறதோட சமூக மேம்பாட்டுக்கும் உதவுறதைப் பார்க்கிறோம்,” என்கிறார் கனகராஜ். மேலும் அவர் கூறுகையில், இன்னிக்கு போட்டித் தேர்வு எழுத வர்ற பெண்கள் ஆணுக்கு இணையான திறமையுள்ளவங்களா இருக்காங்க. தேர்வுக்கு தயாராகுறதுலயும் அதேஅளவு தீவிரம் காட்டுறாங்க. பெண்கள் பள்ளியில படிக்கிற பெண்களை விட கோஎட்ல படிக்கிற மாணவிகள் தன்னம்பிக்கை அதிகம் உள்ளவங்களா இருக்காங்க. தலைமைப்பண்பு, முடிவெடுக்கும் திறன் எல்லாமே இவங்களுக்குக் கூடுதலா இருக்கு. சோசிஷியல் ஸ்கில்லும் இவங்களுக்கு அதிகம். தமிழக அரசு பெண்களுக்கு வேலை வாய்ப்புல 30 சதவீதம் ஒதுக்கியிருக்கு. இந்த வாய்ப்பைப் பெண்கள் பயன்படுத்தி தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு நடக்குற போட்டித் தேர்வுல கலந்துக்கறதும் பெண்களுக்கான அரசுப்பணி வாய்ப்பை அதிகப்படுத்திக் கொடுத்திருக்கு. ஆனா மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள்ல இது போன்ற ஒதுக்கீடு பெண்களுக்கு இல்லை. நேர்முகத் தேர்வில் மட்டும் பெண்களுக்கு கரிசனம் காட்டுகின்றனர். மத்திய அரசுப் பணிகள்லயும் பெண்களுக்கு சட்டப்படியான ஒதுக்கீடு வழங் கப்படணும்.
ஒரு காலத்தில் குடிமைத் தேர்வுகள்ல சிவில் சர்வீஸ் பணிகளுக்கு வர பெண்கள் தயக்கம் காட்டுவாங்க. இப்போ அப்படியில்லை. ஐ.ஏ.எஸ். க்கு இணையா ஐ.பி.எஸ். ஆக வரவும் பெண்கள் ஆர்வமா இருக்காங்க. பணியிடங்கள்ல பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் அவங்கள சோர்வடைய செஞ்சிருக்கு. ஆனா பணியிடங்களில் பாலியல் கொடுமையைத் தடுக்கும் சட்டம் வந்த பின்னாடிபெண்கள் வேலை பார்க்கும் எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு. பணியிடங்கள்ல பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடுற அளவுக்குப் பெண்களுக்கு இந்தச் சட்டம் உதவியிருக்கு. தமிழ்நாடு அரசு குடிமைப்பணிகளுக்கு இலவசப் பயிற்சி வழங்குது. பெண்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து கூடுதலா மையங்கள் அமைச்சு பயிற்சி கொடுக்க வேண்டிய தேவை இருக்கு.
உயர் பதவிகளுக்கு பெண்கள் வந்தாலும் அவர்கள் அரசியல்வாதிகள் சொல்வதை செய்றவங்களா இருக்காங்க. அதிகாரத்தைக் கையில் வச்சிருக்கிறவங்க அரசியல் வாதிகள். பெண்கள் அரசியல் விழிப்புணர்வுடன் அரசியல் அமைப்பிலயும் இடம் பிடிக்கணும். சட்டத்தை நடைமுறைப் படுத்துறதோடு, சமூக மேம்பாட்டுக்கான சட்டங்களை இயற்றும் அதிகாரம் கொண்ட பதவிகளுக்கும், பணிகளுக்கும் பெண்கள் வரணும். அப்படிப் பெண்கள் அரசியல், அதிகாரம், நிர்வாகம் மாதிரியான பணிகளுக்கு வரும் போது மிகப்பெரிய சமூக மறுமலர்ச்சியே உண்டாகும். இந்திய அளவுள இன்னிக்கும் சில இனங்கள் பெண்களுக்கு முழு அதிகாரமும் கொடுக்குது. வட மாநிலத்தில் உள்ள “காசி” என்ற இனத்துல பெண்கள் தலைமை இன்னிக்கும் இருக்கு. சொத்துல உரிமை, முடிவெடுக்குற அதிகாரம், குடும்ப நிர்வாகம் இப்படி எல்லாமே பெண்கள் கைல இருக்கு. கேரளாவுல நாயர் இனப் பெண்களுக்கும் இது மாதிரியான உரிமைகள் கொடுக்கப்படுது.
தாய்வழிச் சமூகத்துல தலைமை வகிச்ச பெண்கள் மறுபடியும் கல்வி, அரசியல் அறிவு வழியா அந்த இடத்தைப் பிடிக்கணும். பெண்களால முடியும். இனி எந்தப் பெண்ணையும் பார்த்து “நீ என்ன பெரிய கலெக்டரா” எனக் கிண்டல் செய்யாமல், நீயெல்லாம் கலெக்டர் ஆக வேண்டிய பொண்ணு என உயர்ந்த எண்ணங்கள பெண் குழந்தையோட மனசுல விதைச்சு வளர்க்கணும்,” என்கிறார் கனகராஜ். பெண்ணுக்கு எதில் தான் சவால் இல்லை? சவால்களைத் தாண்டி சாதிக்கும் திறன் பெண்ணுக்கு உண்டு. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல பெண்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில் அரசியல் பதவிகள் வகித்து வருகின்றனர். எதுவும் சாத்தியப்படும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். இனி வரும் காலங்களில் இந்தியாவின் உயர் பதவிகளுக்கு ஆசைப்படுங்கள் பெண்களே!
Average Rating