பெண்களுக்கான உள்ளங்கை நெல்லிக்கனி(மகளிர் பக்கம்)
குடும்ப அமைப்பு பெண்ணின் வளர்ச்சிக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் மிகப்பெரிய மலையாக மாறி தாண்ட முடியாத தடையாக அமர்ந்து விடுகிறது. பல பெண்கள் தனது விருப்பம், திறமை இரண்டையும் விட்டுக் கொடுத்துவிட்டு வாழ்வாதாரத்துக்கான, தனக்கான அடையாளத்துக்கான பணி வாய்ப்பைத் தேடி அலைகின்றனர். பயணம் பண்ண முடியாது, பத்தாம் வகுப்பு தாண்டவில்லை, புதிதாகத் தொழில் தொடங்க என்னிடம் பணம் எதுவும் இல்லை…
இப்படியான பெண்களின் புலம்பல்களைத் தகவல் தொழில்நுட்பம் இல்லாமல் செய்துள்ளது. இருக்கின்ற இடத்தில் இருந்தே மிகப்பெரிய மூலதனம் எதுவும் இன்றித் தன் வருவாய்க்கான வழிகளை ஏற்படுத்திக் கொள்ளவும் அவர்களது ஸ்மார்ட் போன் உதவுகிறது. வாட்ஸ் ஆப் மட்டுமே பல பெண்களின் பிசினஸ் தளமாகி வியத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு ஹோம்பிரனர் என்ற புதிய அடையாளம் தந்துள்ளது.
“இவர்கள் நாட்டின் உற்பத்தியிலும், வணிகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாக உள்ளனர்” என்கிறார் தொழில்முனைவோரான டாக்டர் சவுந்தர்யா ராஜேஸ். அவதார் கேரியர் கிரியேட்டர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான சவுந்தர்யா ராஜேஸ் ஆங்கில இலக்கியம், மனிதவளம், வணிக மேலாண்மை என பட்ட மேற்படிப்புகள் முடித்துள்ளார். சென்னை சிட்டி வங்கியில் பணியாற்றிய இவர் முதல் குழந்தைப் பிறப்புக்குப் பின் அந்த வேலையை உதறினார். பின் ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷனில் தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சித்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பகுதிநேரப் பேராசிரியர் எனப் பல தளங்களில் பணியாற்றியுள்ளார். அதன் பின் அவதார் கேரியர் கிரியேட்டர் நிறுவனம் (2000), அவதார் ஹியூமன் கேப்பிட்டல் டிரஸ்ட் (2008), பிளக்ஸி (FLEXI)கேரியர்ஸ் இந்தியா அமைப்பு (2011) என அடுத்தடுத்து தனது நிறுவனங்களைத் துவங்கி நடத்தி வருகிறார். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
25000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கி வேலை வாய்ப்புக்குத் தயார்படுத்தியுள்ளார். ஹோம் பிரனராக பெண்கள் வெற்றி பெறுவதற்கான வழிகள் குறித்த நமது கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் டாக்டர் சவுந்தர்யா ராஜேஸ். குடும்ப அமைப்பு பெண்களைப் பல வழிகளில் இறுக்குகிறது. புகுந்த வீட்டுக்கு வரும் பெண்ணின் தலையாய பணி அந்தக் குடும்பம் இயங்குவதற்கான வீட்டு வேலை முதல் சம்பாதிப்பது வரை ஓய்வின்றிப் பணியாற்ற வேண்டும்.
குழந்தைப் பிறப்பு, வளர்ப்பு என எல்லாம் கவனிப்பதால் ஒரு கட்டத்துக்கு மேல் வெளியிடங்களுக்குப் பயணித்து வேலை பார்க்க முடியாமல் வீட்டுக்குள் முடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். வீட்டுப் பணிகளையும் கவனித்தபடியே பணியாற்றும் யோசனைதான் அவர்களை ஹோம்பிரனராக மாற்றுகிறது. இப்படிப் பணியாற்றும் பெண்களுக்குக் கிடைக்கும் பலன்களைப் பட்டியலிடுகிறார் சவுந்தர்யா ராஜேஸ்
1. ஹோம்பிரனரின் பிளஸ் பாயின்டுகள்
* பணியமைவிடத்துக்குப் போய் வருவதற்காகச் செலவிடுகிற நேரம் மிச்சப்படுகிறது. போக்குவரத்து நெருக் கடியை கையாள வேண்டிய அவசியம் இல்லாததால் அதனால் ஏற்படும் மன அழுத்தம் தவிர்க்கப்படுகிறது.
* அதிகரித்த உற்பத்தித்திறன் போக்குவரத்துக்கு ஆகும் நேரத்தை மிச்சம் செய்வதும் பெண்களுக்கு பணியாற்றுவதற்கான நேரத்தை அதிகப்படுத்தித் தருகிறது.
* நெகிழ்வுத்திறனை இது இயல்பாக்குகிறது. உங்களது பணியினை முன்னுரிமைப்படுத்தவும் மற்றும் பணியையும் வாழ்க்கையையும் உண்மையிலேயே ஒருங்கிணைக்கவும் இது பெண்களுக்கு உதவுகிறது.
* தொலைபேசி அழைப்புகள், அலுவலக உரையாடல்கள் மற்றும் வெட்டிப்பேச்சு போன்றவற்றிலிருந்து ஏற்படும் கவனச்சிதறல்கள் இதில் இருக்காது.
* பணி செய்ய நன்கு பரிச்சயமான அமைவிடம், வீட்டிலேயே பணியாற்றும் சவுகரியம், அதனால் மனஅழுத்தமும் குறைவாகவே இருக்கும்.
* ஓர் அலுவலகத்தை நிறுவுவதற்கான பெரும் செலவு மிச்சமாகிறது.
* பெண்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த முடிகிறது. தேவையான சத்தான உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம்.
* ஒரு பெண் தான் அலுவலகத்துக்குத் தயாராகிச் செல்வதற்கு ஆகும் செலவுகளும், நேரமும் இதில் மிச்சப்படும். காலை நேரத்தில் வீடு போர்க்களமாவதைத் தவிர்க்கலாம்.
2. ஹோம் பிரனர்கள் சந்திக்கும் சவால்கள்
* இவர்கள் உறுதியான திட மனதையும் மற்றும் பணியாற்றும் உணர்வையும் கொண்டிருப்பது அவசியம். சோம்பேறித்தனத்திற்கு / காலம் தாழ்த்துவதற்கு வழிவகுக்கலாம்.
* தனிப்பட்ட மற்றும் குடும்பம் தொடர்பான வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் பணியின் மீது செலுத்தும் கவனம் குறையலாம்.
3. ஹோம்பிரனராக இருப்பது பெண்கள் தன்னை மேம்படுத்திக் கொள்ள எவ்விதம் உதவுகிறது?
* என்ன செய்வது என்று தெரியாமல் நேரத்தை வீணாக்கக்கூடிய பெண்களுக்கு அவர்களது திறன் மற்றும் நேரத்தை எப்படி பயனுள்ளவாறு செலவிடுவதென வழிகாட்டலைத் தருகிறது.
* பணியாற்றுவதற்கான பேரார்வத்தையும், கனவையும் கொண்டிருந்தாலும் வெளியில் சென்று பணியாற்றுவதற்கு முற்றிலுமாக எந்த வாய்ப்பும் இல்லாத பெண்களுக்கு பணியாற்றத் தொடங்குமாறு ஊக்குவிக்கிறது.
* பணியாற்றும் பெண்கள் குழுவின் பங்கேற்பை அதிகரிக்கிறது. நட்புக்குறிய பெண்கள் இணைந்து கூட்டாகவும் இது போன்ற பணிகளில் ஈடுபட்டு தன்னோடு சேர்த்து அவர்கள் வளர்ச்சிக்கும் உதவ முடியும்.
4. ஒரு ஹோம்பிரனர் வளர்த்துக் கொள்ள வேண்டிய முக்கியமான திறன்கள்/பண்பியல்புகள் என்ன?
* தனது கனவு/லட்சியம் பற்றிய பேரார்வமும், துடிப்பும்.
* அதனை எட்டுவதை நோக்கி பணியாற்ற பொறுப்புறுதி.
* பணிக்கான திறன்கள்.
* பிசினஸ் பற்றிய சிறந்த, யதார்த்தமான அறிவு.
* பொறுமை மற்றும் விடா முயற்சி .
5. மூலதனம், உழைப்பு, நிர்வாகம், நிதி மேலாண்மையை ஒரு ஹோம்பிரனர் எவ்விதம் கையாள வேண்டும்?
* முதலீடு கடன்கள் கிடைக்கின்றன. பணத்தை செலவிடுவது குறித்து கவனமாக இருக்க வேண்டும். பிசினஸிற்கு அத்தியாவசியமானவைகள் பற்றி முழுமையாக சிந்தித்து அவைகளுக்கு மட்டுமே செலவிடவேண்டும். எதிர்காலத்தில் வரும் அவசரநிலைகளுக்காக மிஞ்சுகிற லாபத்தை சேமிக்க/முதலீடு செய்ய வேண்டும்.
* மிக முக்கியமாக, உங்களது தனிப்பட்ட மற்றும் தொழில் நிதி விஷயங்களை தனித்தனியாக கையாளவேண்டும். உங்களது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக நிறுவனத்தின் நிதியையோ அல்லது தொழில் செலவுகளுக்காக தனிப்பட்ட கடன்களையோ பயன்படுத்தக்கூடாது.
* விவேகமாக முதலீடு செய்யவும் ஒரே கூடையில் அனைத்து முட்டைகளையும் வைக்காதீர்கள். உங்களது முதலீட்டை பரவலாக பல துறைகளில் செய்யுங்கள். அவசர நிலைகளின்போது எளிதாக எடுக்கும் வகையில் போதுமான நிதியை உடனே மாற்றக்கூடியதாக வைத்துக்கொள்ளுங்கள்.
* குறிப்பிட்ட காலஅளவுகளில் முறையான தணிக்கையை மேற்கொள்ளுங்கள் மற்றும் உள்ளே வருகிற மற்றும் வெளியே செல்கிற அனைத்து பண பரிவர்த்தனைகளையும் பதிவிட்டு கண்காணியுங்கள். இது குறித்து ஹோம்பிரனர் எச்சரிக்கையாக கவனத்துடன் இருக்கவேண்டும்.
* பணத்தை கையாள்வதற்கு நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளை வைத்துக்கொள்ளவும்.
* செல்கின்ற தூரம் வரை எப்போதும் முன்னேறிச் செல்லவும். வெற்றி என்பது ஒரு நல்ல விஷயம். ஆனால் இன்னும் அதிகம் சாதிப்பதற்கு எப்போதுமே வாய்ப்பு இருக்கிறது. ஆகவே எங்கு நீங்கள் இருக்கிறீர்களோ, மற்றும் என்ன வைத்திருக்கிறீர்களோ, அதோடு ஒருபோதும் நிறுத்திக்கொள்ளாதீர்கள். தொடர்ந்து முன்னே செல்லுங்கள். உங்களது எல்லைகளை தொடர்ந்து விரிவுபடுத்துங்கள்.
6. ஹோம்பிரனராக இருந்தபடி பெண்கள் பலருக்கும் வேலை வாய்ப்பை அளிக்க முடியுமா?
ஆம், தாராளமாக. ஆனால், ஒரு கூட்டாளியாக யார் ஆவது மற்றும் ஒரு பணியாளராக யார் இருப்பது என ஆற்ற வேண்டிய பங்கு குறித்து நீங்கள் நன்கு அறிந்திருப்பது அவசியம். அவர்கள் ஆற்ற வேண்டிய பங்கும், பணிகளும் தெளிவாக வரையறை செய்யப்பட வேண்டும். ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்புகள் தெளிவாக எடுத்துக்கூறப்பட வேண்டும். வேலைவாய்ப்பு என்று வரும்போது எப்போதும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும்.
7. ஹோம் பிரனரின் எதிர்காலம்?
குடும்பத்தலைவிகளாக இருந்து கொண்டே ஆன்லைன் மறுவிற்பனையாளர்களாக செயல்படுவோர்களின் எண்ணிக்கை நடப்பு அளவான 2 மில்லியனிலிருந்து 2022ம் ஆண்டுக்குள் 21-23 மில்லியனாக அதிகரிக்கும். அத்துடன், இந்திய சில்லறை விற்பனை சந்தையில் நடப்பு அளவான 1.2%லிருந்து 5.4% ஆக ஆன்லைன் மறுவிற்பனையாளர்களின் சந்தைப்பங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாப்க்ளூஸ் என்ற மின்-வர்த்தக நிறுவனத்தில் மொத்த விற்பனையாளர்களின் அடித்தளத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்களாக இருக்கின்றனர் மற்றும் இந்த பெண்களில் கணிசமான எண்ணிக்கையில் வீட்டிருந்தே செயலாற்றும் வீட்டு தொழில்முனைவோர்கள் இருக்கின்றனர். அதன் ஆறு லட்சம் விற்பனையாளர்களில் ஏறக்குறைய 1.6-1.8 லட்சம் நபர்கள் பெண் வீட்டுத்தொழில்முனைவோர்கள் (ஹோம்பிரனர்) ஆவர். நம் நாட்டுக்கே உரிய பாரம்பரிய ஆடைகள், துணிகள், இல்ல அலங்காரம் மற்றும் பெண்களுக்கான ஃபேஷன் துணைப்பொருட்கள் ஆகியவற்றில் இவர்கள் மிக அதிகமாக இயங்குகின்றனர்.
ஹோம் பிரனர் என்பது தனிப்பட்ட பெண்ணின் வளர்ச்சி மட்டுமல்ல அது தன்னோடு சார்ந்து பல பெண்களின் வளர்ச்சிக்கான வாய்ப்பையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. இது சமூக மேம்பாட்டோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றுகிறது. இனி எந்தப் பெண்ணும் தன்னால் சம்பாதிக்க முடியவில்லையே என முடங்க வேண்டியதில்லை. நீங்கள் கால்பதிக்கவும், கனவு காணவும் மாற்றங்களுக்கான விதையாகவும் இந்த உலகம் கதவுகளற்றுக் காத்திருக்கிறது.
Average Rating