வாழ்வென்பது பெருங்கனவு !!!(மகளிர் பக்கம்)
பால்யத்திலும் இளமையிலும் எதிர்காலம் குறித்து கனவுகள் என்னவாக இருந்தன? அவை நிறைவேறினவா என்கிற கேள்விகளோடு அரசுப் பள்ளி ஆசிரியை உமாவை அணுகியபோது,“ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையும் கனவுகளால் மட்டுமே கட்டமைக்கப்பட்டது என்றால் மிகையாகாது. கனவுகள் என்பவை வெறும் வார்த்தைகள் அல்ல, எண்ணங்களின் வலிமையே கனவுகள், கனவுகளின் இடையறாத பயணமே வாழ்க்கை என்ற அடிப்படையில் அமைந்ததே மனித வாழ்வு. என்னைப் பார்த்து உனது கனவு என்ன என்று சிறு வயதில் யாரும் கேட்டதாக நினைவில் இல்லை.மின்சாரம் இல்லாத ஒரு குடிசையில் பிறந்தேன். சிம்னி விளக்குகள்தான் வீட்டில் ஒளிரும். என்னைச் சுற்றி அன்பான மனிதர்களும் பசுமையான வயல்களும் நிறைந்திருந்தன. கிராமத்துப் பள்ளியில் கண்கள் நிறைய ஒளியுடனும் மனம் முழுவதும் கனவுகளுடனும் பள்ளி சென்றவள் நான்.
இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே போதை போல கனவுகளில் மிதந்திருக்கிறேன். அத்தனைக் கனவுகளையும் படிப்பில் காட்டி வளர்ந்தேன். விளைவு 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பள்ளியில் இரண்டாமிடம், முதன் முதலில் செய்தித்தாளில் செய்தியுடன் என் முகம் வருகிறது. பள்ளியின் பல மேடைகளும் பரிசுகளும் எனது வசமானதும் இந்தக் கனவுகளால்தான். 10 வயதில் வரலாற்றுப் புத்தகத்தில் மொகலாயப் பேரரசு பற்றி படிக்கையில் மனதில் தோன்றிய கனவின் விளைவு 30 வயதில் வட இந்திய மொகலாயப் பேரரசின் வரலாற்று இடங்களை நேரில் காண வைத்தது.
பொறியியல் துறையில் படிக்க, குறிப்பாக கப்பல் துறையில் பணி புரிந்து உலகம் சுற்ற வேண்டும் என்பதே என் மிகப் பெரிய கனவு. அண்ணா பல்கலைக்கழகத்தில் இதைப் படிக்க வேண்டும் என அப்படி ஒரு பெரிய கனவு. மெரிட்டில் இடம் கிடைத்து , தேவையான மதிப்பெண் பெற்றாலும் குடும்பச் சூழலும் பொருளாதாரமும்தான் ஒவ்வொருவர் கனவையும் நிஜமாக்குகிறது என்ற இயல்பு நிலை புரிந்தபோது சொற்ப கட்டணமே ஆசிரியர் பயிற்சிக்குப் போதுமாம் என்று கூறி எனது கனவுத் தொழிற்சாலைக்குப் பூட்டுப் போடப்பட்ட நாட்கள் அவ்வளவு வேதனைக்குரியவை.
திருமணமும் , குடும்ப வாழ்வும் சேர்ந்து போட்டி போட்டுக் கொண்டு கனவுகளை கானல் நீராக்க வியூகம் வகுத்தன, ஆனாலும் கனவுகளுக்கு வலிமை அதிகம் என்பதால் அவற்றைத் தகர்த்தெறிந்து தொடர்ந்தேன்.வழி மாறிய போதும் கனவுகளின் பிரம்மாண்டம் குறையவேயில்லை.ஆசிரியப் பயிற்சியின் தாகம் தீராது இளநிலை, முதுநிலை என கணக்குப் பாடத்தில் பட்டம் பெற்றாலும் கனவு மடைமாற்றம் பெற்று கல்வியியலில் திசை திரும்ப பி.எட் , எம்.எட் ஆனது.
அட… அண்ணா பல்கலைக்கழகம் வேண்டாம் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு கல்லூரியிலாவது படிக்க மாட்டோமா என்று மனம் கெஞ்சிய நாட்களும் உண்டு. அனைத்தும் கடந்து, சென்னை ஐ.ஐ.டி இன் சிறப்பு பேச்சாளராக பல பள்ளி கல்லூரிகளின் துறைத் தலைவர்கள் முன் எனது பணிகளைப் பகிர்ந்து கொள்ள வைத்தது எதுவோ அதுவே எனது கனவாக மாறிப் போயிருக்கின்றது என உணர்ந்திருக்கிறேன்.நாம் விரும்பியது கிடைக்கவில்லை என்றால் கிடைப்பதை விரும்ப வேண்டும்… எவ்வளவு அற்புதமான வரிகள் தெரியுமா? எனது கனவுகளும் அப்படித்தான். கனவென்பது நாம் காணும் காட்சிகள் மட்டுமல்ல, நம் சூழலால் கட்டமைக்கப்படுவதுமே என உணர்ந்தேன்.வாழ்க்கையின் கனவு என்னை ஆசிரியராக்கி 18 வருடங்கள் ஆயிற்று. கண் பார்வைக்குள் இருந்த எனக்கான கனவு புள்ளியாகத் தேய்ந்து வெகுதூரம் நகர்ந்து பிரயாணம் செய்து விட்டேன். ஆனால் அதற்கான எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. இந்த 18 ஆண்டுகளும் புதுப் புதுக்கனவுகளை வாழ்க்கை எனக்கு அமைத்துத் தந்திருக்கிறது.
ஆம் … ஆயிரக்கணக்கான மாணவர்களது மனதில் கனவு விதைகளை விதைக்கும் ஆயுதமாக என்னை மாற்றியுள்ளது இயற்கை, அவர்களது வாழ்க்கைக் கனவுகளைக் கட்டமைக்கும் பொறுப்புகளை வழங்கி அதில் வெற்றி காணவும் வழி அமைந்துள்ளது. விளைவு ஏர் இந்தியாவின் BOLT AWARD (Broad Outlook earner Teacher ) 2007 இல் ஈரோடு மாவட்ட சிறந்த ஆசிரியர் , தனியார் தொலைக்காட்சி அளித்த சிறந்த கனவு ஆசிரியர் விருது 2015 உட்பட ,10க்கும் மேற்பட்ட விருதுகள் சிறந்த ஆசிரியரென என்னை அடையாளப்படுத்தியுள்ளது.
வகுப்பறைகளுக்கு வெளியேதான் கற்றுக் கொள்ள ஏராளமானவை உள்ளன என பல்வேறுபட்ட அனுபவங்களை மாணவருக்குத் தந்ததால் அவர்களது கனவுகள் விரிந்தன, தமிழ்நாடு அறிவியல் இயக்கப் பணிகளால், நூலகப் பணிகளால், கற்பித்தல் செயல்பாடுகளால் எங்கள் வகுப்பறைகள் கனவுகளின் கூடாரங்களாயின. விளைவு மாணவருடனான கற்பித்தல் , அணுகுமுறை, இவற்றையெல்லாம் பல மேடைகளில் கருத்தரங்குகளில் இடையறாது சொல்லிக் கொண்டே இருந்தேன். ஏறத்தாழ மாவட்ட, மாநில, பன்னாட்டு கருத்தரங்குகள் என 15க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பங்கேற்றிருக்கிறேன்.
கனவுகளின் கூட்டங்களால் துரத்தப்பட்ட நான் ஆசிரியர்களுக்கான கட்டகங்கள் தயாரிக்கும் பணி மேற்கொண்டு 2005 லிருந்தே ஏறக்குறைய 13 புத்தகங்களில் பணி புரிந்து தமிழகம் முழுக்க ஆசிரியர்களுக்கான பயிற்சிக் குறிப்புப் புத்தகத்தில் (கட்டகம்) எனது பெயர் வந்தது.அதன் அடுத்த நிலையாக, லட்சக்கணக்கான குழந்தைகள் பயன்படுத்தும் பாடநூல்களில் பாடநூல் ஆசிரியராகப் பெயர் வந்தது. 2010ல் தமிழகம் முழுவதும் 5 ஆம் வகுப்புக் குழந்தைகள் பயன்படுத்தும் சமூக அறிவியல் பாட நூலைத் தயாரிக்கும் பணியில் என்னை முழுமையாக இணைத்துக் கொண்டது கூட எனது சூழலின் கனவுகளால் உந்தப்பட்டுத்தான்.
இவையனைத்தும் ஒரு புறம் இருந்தாலும் குடும்ப வாழ்க்கையின் தொடர் போராட்டங்களும் மற்றொரு புறம் இணைந்தே வளர்ந்தன. தேடிச் சோறு நிதந் தின்று என்ற பாரதியின் வரிகளால், வள்ளுவன் அடிகளால் கனவுகளுக்கு உரமிட்டு வளர்த்து வந்தேன். வகுப்பறைகளில் மாற்றங்களை உருவாக்கி என்னை இயங்க வைத்தது கனவு, அடுத்து எனது சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வர வைத்தது என் குடும்பச் சூழல். கல்வித் துறையில் மிகப் பெரும் மாற்றங்களை முன்னெடுக்க வழிகாட்டிய கனவுகள் ஏராளம். சாபங்களை வரங்களாக மாற்றும் மனப்பான்மையை எனது சூழலின் கனவுகள் எனக்குக் கற்றுத் தந்தன.
எனது பார்வையில் கனவுகள் என்பவை தனித்தனியான விருப்பங்களோ ஆசைகளோ அல்ல, அது ஒரு கூட்டுப் பிணைப்பு, அணுக்களின் பிணைப்பு போல அதுவும் சிறு சிறு மூலக்கூறுகள் இணைந்து உருவான பிரம்மாண்டங்களின் மறு வடிவம், ஆதலால்தான் நம்மை உறங்க விடாமல் துரத்துகிறது. நான் கல்வித்துறையில் பல முக்கியத் துறைகளில் பணியாற்றும் சூழல் உருவானது. பாடநூல் பிழை திருத்துநராக, பாடநூல் ஆசிரியராக, பாடநூல் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக , மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரிவில், ஆசிரியர்களுக்கான பல பயிற்சிகளின் மாநில ஒருங்கிணைப்பாளராக என 5 ஆண்டுகள் சுழன்று பணியாற்றி ஓட வைத்ததற்கும் எனது கனவுகளே காரணம்.
இந்தப் பயணத்தில் உருவானது தான் A3 என்ற அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு, எனது கணவரின் துணையுடன் 3 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்காக உருவாக்கப்பட்ட மாநில அமைப்பு இது , எத்தனையோ ஆசிரியர்களை இன்று தமிழக அரசின் கனவு ஆசிரியராக உருவாக்கிய தளம் இது, மொத்த ஊடகமும் சமூக வலைதளங்களும் நல்லாசிரியர்களை, திறமையான குழந்தைகளுக்காக மட்டுமே அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களை ஆரம்பத்தில் அடையாளம் காண உதவியது இந்த A3 குழு. பள்ளிகளை அடுத்து சமுதாயத்திலும் மாற்றங்களை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுக்கவும் தொடர்ந்து இயங்கவும் இந்தக் கனவுகளே என்னை வழிநடத்துகின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம், இதை மாநிலம் முழுக்க எடுத்துச் செல்லும் பணிகளில் தற்சமயம் இயங்கி வருகிறேன்.
எல்லாவற்றையும் விட பள்ளிகளில் குழந்தைகளோடு குழந்தையாக வாழும் தருணங்களும், சமுதாயத்தில் நடக்கும் அவலங்களும் மாறி மாறி நடைமுறை சமுதாய மாற்றத்திற்கான வழிகளைத் தேடுவதில் கனவுகள் தடம் மாறியுள்ளன. அதோடு இணைந்து எனது அனுபவங்களில் தேவையானவற்றை மற்றவருடன் பகிரும் வழக்கமும் தொடர்ந்து எழுத்தின் வழியே வெளிப்படுகிறது. இது கூட எனது கனவின் ஒரு பகுதியே. இப்படியாக ஒரு மரத்திற்கு கிளைகள் பல இருந்தாலும் ஆழமான வேரில்தானே அஸ்திவாரம். பல செயல்பாடுகள் கிளைகளாகப் பரந்து விரிந்து இருந்தாலும் அவற்றின் வேர் என கனவுகள்தான்.இந்தக் கனவுகள் காலம் செல்லச் செல்ல இன்னும் கூர்மையாகலாம் …கனவுகள் மாறினாலும் வாழ்வென்பது பெருங் கனவாக என்னுள் கனன்று கொண்டே இருக்கும்”.
Average Rating