வீட்டில் பிரசவம் : விபரீதத்தை அலசுகிறார்கள் மருத்துவர்கள்!!(மகளிர் பக்கம்)
திருப்பூர் அருகே கார்த்திகேயன் என்பவர் தனது மனைவிக்கு எந்த மருத்துவ ஆலோசனையும் இல்லாமல் யூ டியூபை பார்த்து இயற்கை முறை பிரசவம் பார்க்க முயற்சித்து அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இயற்கை மருத்துவமுறை குறித்து பல விமர்சனங்கள் எழத்தொடங்கியது. இது குறித்து டாக்டர் ரவீந்திரநாத் கூறுகையில், “பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறு பிறவி போலதான். பிரசவம் பார்க்கும் போது, ரத்த வங்கி இருக்க வேண்டும்.
மகப்பேறு மருத்துவர் இருக்க வேண்டும். குழந்தைகள் மருத்துவர் இருக்க வேண்டும். மயக்க மருத்துவர் இருக்க வேண்டும். இதை விட்டுவிட்டு வீட்டில் வைத்து பிரசவம் பார்ப்பது என்பது மூடத்தனம், பிற்போக்குத்தனம். இது போன்ற செயலில் ஈடுபடுகிறவர்கள் மீது கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இப்படித்தான் இந்தப் பிரச்சனையை பார்க்க வேண்டும். பண்டைய கால மருத்துவமுறைகளில் இருக்கும் நேர்மறையான அம்சங்களை ஏற்றுத்தான் இன்று நவீன மருத்துவம் வளர்ந்திருக்கிறது.
நவீன மருத்துவம் வளர்ந்த பிறகுதான் உலகளாவிய அளவில் இருந்த பெரியம்மை, போலியோ, ரணஜன்னி, தொண்டை அடைப்பான் போன்ற ஏராளமான நோய்களை ஒழித்திருக்கிறோம், கட்டுப்படுத்தி இருக்கிறோம். இது மட்டுமல்லாமல் நிபோலா போன்ற புதுப்புது நோய்கள் வருவதையும் தடுத்திருக்கிறோம். இப்படியான சூழலில் இயற்கை மருத்துவம் என்கிற வார்த்தைப் பிரயோகமே தவறு. இயல்பாக இயற்கையில் ஏற்படும் நோய்களை தடுத்து நிறுத்துவதற்காக உடல் இயங்கியலில் தலையிடுகிறோம் என்பது செயற்கைதான்.
மருத்துவம் என்பது அறிவியல்… அவ்வளவுதான். மக்களை குழப்பக்கூடாது. கடந்த மாதம் அமெரிக்காவில் ஒரு வருக்கு மார்பகப் புற்றுநோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கீமோதெரபி கொடுத்த பிறகு, வேறு உடல் பாகங்களில் அது பரவி விட்டது. அவர்களுக்கு நவீன மருத்துவத்தில் ஹிமினோ தெரபி முறையில் கேன்சர் செல்களை மட்டும் கண்டறிந்து முழுமையாக குணப்படுத்தியிருக்கிறார்கள். இது மருத்துவத்தின் வளர்ச்சி. இந்த சிகிச்சை காரணமாக எதிர்காலத்தில் பலபேர் புற்றுநோயில் இருந்து விடுபட போகிறார்கள்.
இதற்கு முன்பு புற்றுநோயால் எத்தனையோ பேர் இறந்து இருக்கிறார்கள். பிரசவத்தின்போது ரத்தப்போக்கு காரணமாக இறந்து இருக்கிறார்கள். இன்று நவீன மருத்துவத்தின் மூலம் உயிர் இழப்பு குறைக்கப்பட்டிருக்கிறது.இந்த இயற்கை மருத்துவம் என்று சொல்வதில் தமிழ் தேசிய இனவெறி இருக்கிறது. பழமைவாதம் இருக்கிறது. நவீன அறிவியல் வளர்ச்சிக்கு எதிரான போக்கு இருக்கிறது.நவீன மருத்துவம் இன்று தனியார்மயமாகி இருக்கிறது.
முதலாளிமயமாகி இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். நவீன மருத்துவம் முழுமையாக இலவசமாக கிடைக்க வேண்டும். எந்த அறிவியலும் மக்களுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்கும் நிலைதான் எல்லா துறையிலும் இருக்கிறது” என்கிறார் ரவீந்திரநாத். மகப்பேறு மருத்துவர் முரளி கூறுகையில், “வீட்டில் பிரசவம் பார்க்கும் முறை மேலை நாடுகளில் பின்பற்றப்படுகிறது என்றால் அங்கு எல்லா நவீன மருத்துவ வசதிகளையும் அருகில் வைத்துக்கொண்டு அதை செய்கிறார்கள்.
அதற்கான சூழலை அந்த நாட்டின் வளர்ச்சி ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் பெண்களின் கல்வி, உடல் நலன் குறித்த விழிப்புணர்வு, ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வு இல்லை. இப்படி இருக்கும்போது மேலை நாட்டில் அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக அதே முறையை நாம் பின்பற்றுவது மிகவும் ஆபத்தானது. யூ டியூப் வழியாக விமானம் ஓட்டுவதை பார்த்து நானும் விமானி ஆகிவிடுவேன் என்பதெல்லாம் பைத்தியக்காரத்தனம், கண்டிக்கத்தக்கது.
ஒவ்வொரு பிரசவத்திற்கும் சிகிச்சை மாறுபடும். முதல் குழந்தை சுகப்பிரசவம் என்பதற்காக இரண்டாவது பிரசவமும் எளிமையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த குழந்தை எடை அதிகமாக இருக்கும். இப்படி இன்னும் பல்வேறு பிரச்சனைகளை அடிப்படையாக வைத்துதான் சுகப்பிரசவமா இல்லை அறுவை சிகிச்சை செய்வதா என்று முடிவு செய்யப்படும். இயற்கை முறை பிரசவம் என்ற பெயரில் அதை வீட்டில் வைத்து செய்யமுடியாது. செய்யவும் கூடாது. அது மிகவும் ஆபத்தானது.
இயற்கை மருத்துவத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதுவும் அதற்கென்று படித்த அனுபவமுள்ள மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். என்றைக்கு அரசாங்கமே மக்களின் நலன்களில் முக்கியத்துவம் கொடுத்து மருத்துவத்தை அரசுடமையாக்குகிறதோ அன்றைக்கு அறுவை சிகிச்சை பிரசவம் குறையும். இங்கு நவீன மருத்துவத்தில் இருக்கும் தனியார்மயக் கொள்ளையின் காரணமாகவே பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை அதிகமாகியிருக்கிறது. இந்த தனியார்மய மருத்துவமனைகள் உருவானதற்கு ஊடகங்கள் பெரும் காரணமாக இருக்கிறது.
இதை அரசு சரி செய்ய வேண்டும். மக்கள் நல்ல மருத்துவர்களை அணுகவேண்டும். கார்ப்பரேட் மருத்துவர்களிடம் சிக்கிக்கொள்ள கூடாது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு மருத்துவத்துறையின் மீது நம்பிக்கை ஏற்படும்” என்கிறார்.இது குறித்து சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் கேட்டபோது, “முறையான பயிற்சி இல்லாமல், முறையான சிகிச்சை இல்லாமல், மருத்துவரின் ஆலோசனையில்லாமல் பாதுகாப்பற்ற முறையில் நடந்த ஒரு துயரச் சம்பவம் இது.
பத்து மாதங்கள் உள்ளே இருக்கும் குழந்தையை இழப்பதையோ, குழந்தைப் பேறு என்கிற விஷயத்தில் ஒரு தாயின் மரணத்தையோ ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படி மருத்துவரின் ஆலோசனையில்லாமல் நடந்த செயலின் மூலம் ஒட்டுமொத்த இயற்கை மருத்துவத்துறையையும் குறை கூறுவது சந்தர்ப்பவாதமே ஒழிய வேறொன்றும் இல்லை. சுகப்பிரசவம் தேவை என நினைப்பது சரியே. இன்று வளர்ந்த நாடுகளில் வீட்டில் பிரசவம் பார்க்கும் முறையை ஆதரிக்கிறார்கள்.
மருத்துவமனைகளில்கூட கணவரை அருகில் வைத்துக் கொண்டு பிரசவம் பார்க்கும் சிகிச்சை முறை வரவேற்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. ஒரு பெண் இயற்கை பிரசவத்திற்கு தயார் நிலையில் இருக்கிறாரா என்று மருத்துவர்தான் முடிவு செய்யவேண்டும். ஆனால் இயற்கை பிரசவத்தை ஆதரிப்போர், ‘அந்தக் காலத்தில் மருத்துவரா பார்த்தார்… பாட்டிதானே பிரசவம் பார்த்தார்’ என்று கேட்பார்கள். 1940களில் 10 பிரசவங்களில் 5 மரணங்கள் ஏற்பட்டன. அன்று வீட்டிற்கு 6, 7 குழந்தைகள் இருந்தனர். சில வீடுகளில் 8 பேர் பிறந்தார்கள். இரண்டு பேர் இறந்து விட்டனர் என்று அந்த இழப்பை எளிமையாக கடந்து விடுவார்கள்.
ஆனால் இன்றைய சூழல் அப்படி இல்லை. இன்று 2 குழந்தைகளே அதிகம் என்கிற நிலைக்கு வந்துவிட்டோம். இந்தச் சூழலில் சித்த மருத்துவரோ, ஆயுர்வேத மருத்துவரோ, அலோபதி மருத்துவரோ யாராக இருந்தாலும் பிரசவத்திற்கென்று படித்த மருத்துவர் அவசியம். கர்ப்பிணி இயற்கை பிரசவத்திற்கு வலுவுடையவரா என்று அப்போதுதான் உறுதி செய்ய முடியும். ஒரு வேளை இயற்கை பிரசவத்தில் சிக்கல் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் உடனடியாக நவீன மருத்துவரிடம், அறுவை சிகிச்சைக்கோ அல்லது அவசர சிகிச்சைக்கோ அழைத்துச்செல்வதற்கான வழி இல்லாமல் இயற்கை பிரசவம் செய்ய முயற்சிப்பது மிகவும் தவறு.
கேரள மாநிலத்தில் நவீன மருத்துவமனைகளில் இயற்கை பிரசவ முறை வந்துவிட்டது. அங்கு இயற்கை முறையை முயல்கிறார்கள். அதில் சிக்கல் இருந்தால் நவீன மருத்துவரின் கூட்டுறவோடு மருத்துவம் பார்க்கும் தன்மை இருக்கிறது. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை இன்று நமக்கு தேவை. சுகப்பிரசவம் வேண்டும் என்பதை மக்கள் 100 சதவீதம் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அதற்கான வழிமுறைகளை அன்றைய காலகட்டத்தில் பின்பற்றியதையே செய்து கொள்ளவேண்டும் என்கிற சாத்தியம் அற்ற சூழலில் நாம் இருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
வெளிநாடுகளில் 6லிருந்து 7 சதவீதம் அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெற்றெடுக்கும் முறை இருக்கிறது. நம் நாட்டில் அது 40 சதவீதம். அப்படியானால் இந்தியப் பெண்கள் யாருக்கும் இயற்கை முறையில் பிரசவம் நடப்பதற்கு வழி இல்லையா என்கிற கேள்வி எழுகிறது. இயற்கை முறையில் தன்னுடைய பிரசவம் நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்கள் கருத்தரித்திருக்கும் காலத்தில் இயற்கை பிரசவத்தை கொண்டு வரக்கூடிய உடல் உழைப்பும், அதற்கான பயிற்சியும் ஆரம்பத்தில் இருந்தே எடுத்துக்கொள்ள வேண்டும்.
மூச்சுப்பயிற்சி, யோகா பயிற்சி, உணவுகள், அதற்கான மனநிலை என எல்லாவற்றையும் தயார்படுத்தவேண்டும். இதை எதுவும் செய்யாமல் கடைசி கட்டத்தில் முடிவெடுக்கும்போது பிரச்சனை வருகிறது. பிரசவத்தின் இறுதிக்கட்டத்தில் பல முடிவுகளை மருத்துவர்கள் எடுக்க வேண்டிய சூழல் இருக்கிறது. உதாரணமாக பனிக்குடத்தில் தண்ணீர் குறைந்து இருக்கிறதா, சுவாசத்திற்காக குழந்தை திணறுகிறதா இப்படி பல கேள்விகளை வைத்துதான் சுகப்பிரசவம் சாத்தியமா இல்லையா என தீர்மானிக்க முடியும். ஆனால் நவீன சிகிச்சை முறையில் அறுவை சிகிச்சையை மட்டுமே செய்கிறார்கள் என்று மக்கள் அச்சப்படும் சூழல் ஒரு பக்கம் இருக்கிறது.
சில மருத்துவர்கள் அறமற்ற செயல்களில் ஈடுபடுவதால் மருத்துவத்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இன்மை ஏற்படுகிறது. இதனால் அவசியமான சூழலில் கூட நவீன மருத்துவத்தை புறக்கணிக்கக்கூடிய மனோபாவம் உருவாகிறது. இவையெல்லாம் இதுபோன்ற தவறான அணுகுமுறைகளுக்கும் போலி மருத்துவர்கள் வருவதற்கும் காரணமாக இருக்கிறது. இந்த நாட்டிற்குத் தேவை ஒருங்கிணைந்த மருத்துவம். எங்கு எந்த மருத்துவம் தேவை என்பதை நிர்ணயித்து அரவணைத்து அறமோடு பணியாற்றுவதுதான் மருத்துவருடைய கடமை.
இதை விட்டுவிட்டு நவீன மருத்துவம்தான் பெரிது, இயற்கை முறைதான் பெரிது என்று கூச்சலிடுவதற்குப் பின்னால் மிகப்பெரிய வணிகம் இருக்கிறது என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இதனால் மக்கள் மத்தியில் ஓர் அச்சமும் யார் மீதும் நம்பிக்கை அற்ற தன்மையும் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாதிரியான சூழலில் மக்களை யார் அரவணைக் கிறார்களோ அவர்களிடம் தஞ்சம் அடைகிறார்கள். சந்தர்ப்பவாத மருத்துவர்கள் மக்களை வைத்து பணம் ஈட்டுகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நவீன மருத்துவர்கள் சிலர்,
இயற்கை முறையில் சென்றால் இப்படித்தான் நடக்கும் என்று அங்கு நடந்த தவறை சுட்டிக்காட்டாமல், ஒட்டுமொத்த இயற்கை மருத்துவத்துறையையே தவறாக சித்தரிக்கும் மனோபாவம் அதிகரித்திருக்கிறது. இந்தப் பிரச்சனையையும் அப்படித்தான் பார்க்கிறார்கள். அங்கு தவறான மனிதர்கள் தண்டிக்கப்படுவதில்லை. மாறாக ஒட்டுமொத்த துறையையே தவறாக சித்தரிக்கிறார்கள்.
நவீன அறிவியல், இயற்கை முறை இரண்டுமே நம் நாட்டிற்கு தேவையாக இருக்கிறது. ஒரு மகப்பேறு மருத்துவர், பாட்டி சொன்ன குறிப்புகளையும் சேர்த்து ஒருங்கிணைந்த மருத்துவம் பார்த்தால் அதை விட சிறப்பு இந்த உலகத்தில் வேறு இல்லை” என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன். அறிவியல் வளர்ச்சி குறித்த அறிவு அற்ற, மூட நம்பிக்கைகளில் இன்னமும் திளைக்கும் இச்சமூகத்தில்வீட்டில் பிரசவம் பார்ப்பது போன்ற விபரீதம் அதிர்ச்சி ஊட்டுகிறது. ஓர் உயிர் என்றாலும் அது விலை மதிக்க முடியாதது.
Average Rating