மன ஆரோக்கியத்துக்கு உதவும் தொழில்நுட்பம்!!(மருத்துவம்)

Read Time:11 Minute, 10 Second

உடல் ஆரோக்கியத்திற்காக எவ்வளவு மெனக்கெடுகிறோமோ, அதே அளவு மன ஆரோக்கியத்தையும் வளா்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவருமே இருக்கிறோம். மருத்துவத்துறையில் உடல் ஆரோக்கியத்திற்காக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் பல வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், மனநலத்திற்கு, ஆத்மாவை அமைதிப்படுத்துவதுதான் ஒரே வழியாக இருக்கிறது என்பதால் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சிகளை மன அமைதிக்கான வழிகளாக மனநல மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இவற்றை முறையாக செய்வது எப்படி, எங்கே கற்றுக் கொள்வது போன்ற ஏகப்பட்ட சந்தேகங்கள் பலருக்கும் இருக்கிறது. சமீபகாலமாக உடனடி மனநிறைவின் எதிர்பார்ப்பு, கவனச்சிதறல் போன்ற மனக்கோளாறுகளை தொழில்நுட்பத்தோடு அடிக்கடி தொடர்புபடுத்தி, அவை நம் அன்றாட வாழ்வில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டுகிறோம். உண்மையில் தொழில்நுட்பங்கள் நம் எதிரிகள் இல்லை. தொழில்நுட்பத்தை நாம் கையாளும் விதத்தில்தான் அவற்றின் நன்மைகளும் தீமைகளும் அடங்கியுள்ளன. அந்த வகையில், நம் மனநலத்தை வளர்த்துக்கொள்ள பயன்படும் சில தொழில்நுட்பங்களைப் பார்ப்போம்.

PIP Device

மிகச்சிறிதாக இருக்கும் இந்த கருவியை ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனோடு தொடர்புபடுத்துவதன் மூலம் ஒருவரின் மனப்பதற்ற நிலையை உடனடியாக
அறிந்துகொள்ள முடியும். கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையே இந்த கருவியை வைத்துக் கொள்ளும்போது, தோல் தொடர்பின் வழியே ஒரு சில நிமிடங்களில் வெப்பம் அளவிடப்படுகிறது.
ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனில் தெரியும் குளிர்கால உருவமானது, பயன்படுத்துபவரின் ஸ்ட்ரெஸ் லெவலுக்கு ஏற்றவாறு, வெப்பநிலை அதிகரித்து, மெல்லமெல்ல கோடைக்கால உருவமாக மாற ஆரம்பிக்கும். அதற்குத் தகுந்தவாறு நம் மன அழுத்த அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.

Muse Headband

இந்த ஹெட்பேண்ட் உங்கள் மூளையில் என்ன ஓடுகிறது என்பதை துல்லியமாக கணித்துச் சொல்லிவிடும். இதை தலையில் அணிந்துகொண்டு மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளும்போது மூன்று விதமான ஒலிகளை எழுப்பும். எழும்பும் ஒலிகளில், அலைகள் ஓசை என்றால் நல்லது. புயல் சத்தம் என்றால் கெட்டது பறவைகள் ஒலி என்றால் நடுநிலை. இந்த ஒலி வகைகள் நீங்கள் எந்த அளவு கவனம் செலுத்துகிறீர்கள், அல்லது அமைதியாக இருக்கிறீர்கள் என்பதைக் குறிப்பவை. புயல் சத்தம் கேட்டால், மனதில் புயலாக ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை கட்டுப்படுத்திக்
கொள்ளலாம்.

Calm app

இதில் பதியப்பட்டிருக்கும், மனதை மயக்கும் இயற்கை காட்சிகள், இதயத்தை வருடும் மெல்லிசை மற்றும் படுக்கைநேரக் கதைகளைக் கேட்டுக் கொண்டே உறங்கச் செல்வதால் மன அழுத்தம் குறைத்து தூக்கக் கோளாறு நோயை குணப்படுத்தலாம்.

தியானம் செய்யும்போது உச்சரிக்கக்கூடிய மந்திரங்கள், மனதை அமைதிப்படுத்தும் இசையைக் கேட்டுக்கொண்டே தியானம் செய்யலாம். பிரபலமான தியானப் பயிற்சி முறைகள், மூச்சுப்பயிற்சி வகைகளும் இந்த அப்ளிகேஷனில் இருக்கின்றன. மனப்பதற்றம் அதிகமாக உணரும் தருணங்களில் எல்லாம் Calm app -ஐ பயன்படுத்தி மனதை அமைதியடைய செய்யலாம்.

Headspace app

தியானம் செய்யும் முறைகள், கடுமையான வேளைப்பளு மிகுந்த நாளில் மன அழுத்தத்திலிருந்து எப்படி வெளியேறுவது போன்றவற்றை கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் சிறந்த App இது. இதிலிருக்கும் தினசரி வழிகாட்டியைப் பின்பற்றி தியானம் செய்ய, வெறும் 10 நிமிடங்களே தேவைப்படும். நினைவூட்டல் (Reminder) வசதியை பயன்படுத்தி தினமும் தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். பிரபலமான யோக குருமார்கள் சொல்லித்தரக்கூடிய நூற்றுக்கணக்கான யோகப்பயிற்சி அமர்வுகள் இதில் இருக்கின்றன. உங்களின் பலவீனப்புள்ளிகளை கண்டறிந்து, அதற்குத் தேவையான அமர்வுகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் உங்கள் மனநலத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

Breath2Relax app

மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கக்கூடிய மூச்சுப்பயிற்சிகளாக அடிவயிற்றிலிருந்து சுவாசித்தல் (Abdomon Breathing) மற்றும் விரைவான சுவாசித்தலை (Speed breathing) மனநல வல்லுனர்கள் இப்போது பரிந்துரைப்பதால், இந்த அப்ளிகேஷனை உபயோகிப்பவர்கள் மனஅழுத்த மேலாண்மைத் திறனை கற்றுக் கொண்டு உடலின் Fight-or-flight நிலையைக் கையாள முடிகிறது.

மேலும், கோபம் மற்றும் மனப்பதற்றத்தை கட்டுப்படுத்தல், மனநிலையை சமநிலைப்படுத்தல் போன்றவற்றையும் மேம்படுத்திக் கொள்ள முடியும். The Anxiety and Depression Association of America அமைப்பு இந்த அப்ளிகேஷனுக்கு தரவரிசையில் Very Good என பரிந்துரைத்ததன் அடிப்படையில், அமெரிக்க ராணுவம், ராணுவ வீரர்களின் மனநல மேலாண்மைக்கு இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துகிறது என்பதே இதன் கூடுதல் சிறப்பு.

Focus@Will music service

சிலருக்கு படிக்கும்போதோ அல்லது அசைன்மென்ட்கள், புராஜக்ட்கள் என முக்கியமான வேலைகளை இசையைக் கேட்டுக் கொண்டே செய்யும்போது, அதிக கவனத்துடன் ஈடுபட முடியும்.

இதை கருத்தில் கொண்டு, நரம்பியல் ஆராய்ச்சி அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட Focus@Will அப்ளிகேஷனில் கேட்கப்படும் சோதனைக் கேள்விகள் மூலம் உங்களின் ஆளுமை வகையை தீர்மானித்து, உங்கள் கவனத்தை மேம்படுத்துவதற்கு பொருத்தமான இசையை வழங்குகிறது. இதைப் பயன்படுத்தியவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் அவர்களின் கவன ஒருமுகப்படுத்தும் திறன் 200-400 சதவீதம் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Deep Virtual reality app

‘நீருக்கடியில் நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள், அப்போது உங்கள் உடல் லேசாகி, அப்படியே காற்றில் நடப்பதுபோல் இருக்கிறது, உங்களைச் சுற்றி உலகமே மெதுவாக நகர்கிறது’ இப்போது இந்தக்காட்சியை தியானத்திற்கான ஒரு புள்ளியாக கற்பனை செய்து பாருங்கள். நிஜ உலகின் அசாதாரண சூழல்கள் இல்லாத இந்த ஏகாந்தமான அனுபவத்தை, Virtual reality -ஆக Deep அப்ளிகேஷன் உங்களுக்கு கொடுக்கிறது. மூச்சுப்பயிற்சியின் மூலமாக உங்கள் அசைவுகளை கட்டுப்படுத்தும் வகையில் இதை வடிவமைத்திருக்கிறார்கள்.

Zen Zone virtual reality app

இந்த அப்ளிகேஷனும் Virtual reality தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அமைதியான இசையை அனுபவித்துக்கொண்டே, உடல் மற்றும் சுவாசத்தை காட்சிப்படுத்தக்கூடிய வகையில் இரண்டு புதுமையான அனுபவங்களைக் கொடுக்கிறது. அதேநேரத்தில், ஆழ்மனதின் அமைதியைக் கண்டறியக்கூடிய, உங்களுக்கான ரகசிய பூங்காவை நீங்களே வடிவமைத்துக் கொள்ளும் வாய்ப்பையும் இந்த
அப்ளிகேஷன் மூலம் பெறுவீர்கள்.

Fitbit’s Relax app

அயனி (ION) மாதிரிகளைக் கொண்டுள்ள Fitbit, மனதை தளர்வடையச் செய்யும் அப்ளிகேஷனாகும். இதைப் பயன்படுத்தும் பயனாளிகள், 3 முதல் 5 நிமிடங்கள் நீடிக்கும் மூச்சுப்பயிற்சியின்போது சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு இரண்டின் வேகத்தையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினந்தோறும் ஒரு சில நிமிடங்களாவது மனதை அமைதியாக வைத்துக்கொள்வதற்கு பயன்படும் பயிற்சி இது. ஒவ்வொரு நாளும் இதயத் துடிப்பின் வேகத்தை எந்த அளவிற்கு கட்டுப்படுத்துகிறீர்கள், அதன் மூலம் உங்கள் இதயம் மற்றும் மனநலம் எவ்விதம் முன்னேறியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது.

மேற்சொன்னவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒருசில நிமிடங்களாவது உபயோகித்து உங்கள் மனநலத்தை வளர்த்துக் கொள்வது முக்கியம். அந்த தருணத்தை அனுபவிப்பதும், நாம் எதிர்கொள்ளும் சூழலை அப்படியே ஏற்றுக் கொள்வதும்தான் மனஅமைதிக்கான வழிகள். மனம் அமைதியடையும் போதுதான் ஒருவருடைய படைப்பாற்றல், முடிவெடுக்கும் திறன் போன்றவை சிறப்பாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் கால்களை 180 டிகிரி அளவில் பின்புறமாக திருப்பி நடந்து சாதனை!!(உலக செய்தி)
Next post சாதனையைவிட ஆங்கிலம் பெரிதா? : தங்க மங்கை ஹீமாதாஸ்!!(மகளிர் பக்கம்)