இளம் வயதினரையும் விட்டுவைக்காத ஆஸ்டியோபொரோசிஸ்!!(மருத்துவம்)
ஆஸ்டியோபொரோசிஸ் பற்றி ஏற்கனவே நிறைய தகவல்களை பார்த்திருக்கிறோம். எல்லா நோய்களும் வயதை முந்திக்கொண்டு தாக்க ஆரம்பித்திருப்பதை போல ஆஸ்டியோபொரோசிஸும் இப்போதெல்லாம் இளைய வயதிலேயே வருகிறது. எலும்புகள் ஸ்பான்ஜ் மாதிரி மென்மையாவதையும், லேசாக தடுக்கினாலோ, கீழே விழுந்தாலோ எலும்புகள் உடைகிற நிலைக்கு போவதையும்தான் ஆஸ்டியோபொரோசிஸ் என்கிறோம். ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்பட்டு எலும்புகள் முறிவதால் ஏற்படுகிற வலி சாதாரணமானதில்லை. அது உடல் இயக்கத்தையே முடக்கிப் போடலாம். தீவிரமான நிலையில் இறப்பு வரை கொண்டு போகலாம்.
ஆஸ்டியோபொரோசிஸ் வரலாம் என்பதன் பின்னணியில் உள்ள காரணங்கள்…
* ஒல்லியாக, மிகச் சிறிய உருவத்தில் இருப்பது.
* குடும்பப் பின்னணியில் 50 வயதுக்கு மேல் அடிக்கடி எலும்பு முறிவை சந்தித்த நபர்கள் இருப்பது.
* மெனோபாஸை நெருங்கும் வயது
* மாதவிலக்கே வராமலிருப்பது
* எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் குறிப்பிட்ட சில மருந்துகளை நீண்ட காலமாக எடுத்துக்கொள்வது
* கால்சியம் பற்றாக்குறை
* குடிப்பழக்கம்
* உடலுழைப்பே இல்லாதது.
ஆஸ்டியோபொரோசிஸைத் தடுக்கும் வழிகள்
ஆஸ்டியோபொரோசிஸை முன்கூட்டியே தடுக்கலாம். ஆனால் அதற்கான முயற்சிகள் சிறு வயதிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்.விசித்திரமாகத் தெரிகிறதா? ஆமாம்…. சிறு வயதிலிருந்தே எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பழக்கங்களை மேற்கொண்டால்தான் வயதான பிறகு ஆஸ்டியோபொரோசிஸ் ஆபத்து தவிர்க்கப்படும். எனவே, சிறுவயதிலிருந்தே சத்தான உணவுகள், உடற்பயிற்சிகள் போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
சரி… ஆஸ்டியோபொரோசிஸ் பற்றி தொடர்ச்சியாக நாம் பேசியும், படித்தும் வருகிறோம். அவற்றிலிருந்து உங்களுக்கு எந்தளவுக்கு தெரியும்? ஒரு க்விஸ்
பார்ப்போமா?
* நீங்கள் தெரிந்து வைத்திருப்பது : எலும்புகள் பலவீனமாவது போல உணர்வோம்.
மருத்துவ விளக்கம் : இல்லை… ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பு ஆரம்பித்தவர்களுக்கு எலும்புகள் வலுவிழந்த உணர்வெல்லாம் ஏற்படாது. கீழே விழுந்தோ, தும்மும்போதோ, திடீரென எலும்பு முறிவு ஏற்படலாம். முதுகெலும்பும் பாதிக்கப்படலாம். அதுவரை உங்களுக்கு அதன் ஆபத்து தெரியாது. போன் டென்சிட்டி டெஸ்ட் என்கிற பரிசோதனையின் மூலம் எலும்புகளின் அடர்த்தியையும், ஆரோக்கியத்தையும் முன்கூட்டியே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
* நீங்கள் தெரிந்து வைத்திருப்பது : கால்சியம் வேண்டுமென்றால் அதற்கு வைட்டமின் டி சத்து அவசியம்.
மருத்துவ விளக்கம் : ஆமாம்… வெயில், டுனா வகை மீன் போன்றவற்றில் மட்டுமே வைட்டமின் டி கிடைக்கும். அது போதுமான அளவு இருந்தால்தான் கால்சியம் உடலால் கிரகிக்கப்படும்.
* நீங்கள் தெரிந்து வைத்திருப்பது : கால்சியம் பற்றாக்குறை ஏற்படும்போது உங்கள் உடல், அதை எலும்புகளில் இருந்து எடுத்துக்கொள்ளும்.
மருத்துவ விளக்கம் : ஆமாம்… உடலுக்குத் தேவையான கால்சியம் உணவின் மூலம் கிடைக்காவிட்டால், அது தனக்கு தேவையானதை எலும்புகளில் இருந்து உறிஞ்சி கொள்ளும். அதன் விளைவாக எலும்புகள் மெலிந்து, எப்போது வேண்டுமானாலும் முறிந்து போகிற நிலைக்கு தள்ளப்படும்.
* நீங்கள் தெரிந்து வைத்திருப்பது : 30 வயதிலிருந்தே எலும்புகள் வலுவிழக்கத் தொடங்கும்
மருத்துவ விளக்கம் : உண்மைதான்… 30 வயது வரை திசு இழப்பை விட அதன் உற்பத்தி அதிகமாக இருக்கும். அதன் பிறகு அந்த செயல்பாடு மந்தமாகும். எலும்புகள் வலுவிழந்து எளிதில் உடைந்து போகும். அதன் தொடர்ச்சியாக ஆஸ்டியோபொரோசிஸ் ஆபத்து நெருங்கும்.
* நீங்கள் தெரிந்து வைத்திருப்பது : 50 வயதுக்கு பிறகு உடற்பயிற்சி செய்வது எலும்புகளின் ஆரோக்கியம் காக்கும்.
மருத்துவ விளக்கம் : உண்மைதான். இந்த வயதில் செய்கிற உடற்பயிற்சிகளின் மூலம் புதிய எலும்புகள் உருவாக வாய்ப்பில்லை. ஆனால் அவற்றின் ஆரோக்கியம் மேம்படும். தினமும் 30 நிமிடம் நடப்பது கூட போதுமானது.
* நீங்கள் தெரிந்து வைத்திருப்பது : ஆண்களைவிட பெண்களுக்கே ஆஸ்டியோபொரோசிஸ் ஆபத்து அதிகம்.
மருத்துவ விளக்கம் : உண்மைதான். பெண்களின் எலும்புகள் ஆண்களின் எலும்புகளைவிட அளவில் சின்னதாகவும், மெலிந்தும் இருக்கும். மெனோபாஸுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதும் இதற்கு முக்கியமான காரணம்.
நீங்கள் தெரிந்து வைத்திருப்பது : எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அவசியமான கால்சியத்தை உணவிலிருந்தே பெறலாம்.
மருத்துவ விளக்கம் : உண்மைதான். பால், கேழ்வரகு, கீரைகள், பழங்கள் போன்றவற்றிலிருந்தே உடலுக்குத் தேவையான கால்சியத்தை பெறலாம். ஆனால் இவற்றை தினமும் போதுமான அளவு எடுத்து கொள்ள வேண்டும்.
நீங்கள் தெரிந்து வைத்திருப்பது : குடும்பப் பின்னணியில் ஆஸ்டியோபொரோசிஸ் இருந்தால் மற்றவருக்கும் வரலாம்.
மருத்துவ விளக்கம் : வரும்தான். ஆனால் அதை தள்ளிப் போடலாம். பால் குடிப்பது, வைட்டமின் டி அதிகமுள்ள உணவு உண்பது, உடற்பயிற்சி செய்வது, காய்கறிகள் சாப்பிடுவது, குடி, சிகரெட் தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் எலும்புகளின் ஆரோக்கியம் காக்கலாம்.
Average Rating