கிச்சன் டையரீஸ் !!(மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 13 Second

டயட் உலகின் லேட்டஸ்ட் வரவுகளில் தனித்துவமானது வாரியர் டயட். வாரியர் என்றால் போர் வீரன். அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் போர் வீரர்கள் இரவில் மட்டுமே நொறுங்க உண்பார்கள். பகல் முழுதும் விரதம்தான். சிலர், பகலில் மிகக் குறைந்த அளவு உண்பார்கள். இரவில் நன்கு உண்பார்கள். இப்படி, போர் வீரனைப் போல் உண்பதால்தான் இதற்குப் பெயர் வாரியர் டயட். இதுவும் நம் ஊரில் வழக்கத்தில் இருந்ததுதான். ‘ரோகி மூன்று வேளை; போகி இருவேளை; யோகி ஒரு வேளை’ என்பார்கள்.

நாம் யோகிக்குச் சொன்னதை அங்கே வீரனுக்குச் சொல்லியிருக்கிறார்கள். வாரியர் டயட்டில் ‘விரத நேரம்: விருந்து நேரம்’ என்ற இரு பகுப்புகள் உள்ளன. ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரத்தையும் இந்த இரு விகிதங்களாகப் பிரித்திருக்கிறார்கள். விருந்து நேரத்தில் உணவை வெளுத்து வாங்கலாம். விரத நேரத்தில் உணவுக்கு ஸ்ட்ரிக்ட் தடா. தண்ணீர் மட்டுமே அருந்தலாம். விரத நேரத்தில் பசி தோன்றினால் விருந்து நேரத்தில் கூடுதலாகச் சாப்பிட்டு அடுத்த விரத நேரத்தில் பசி வராமல் தடுத்துக்கொள்ள வேண்டும்.

தொடக்க நிலையில் 12:12 விகிதத்தைக் கடைப்பிடிக்கலாம். இதன் படி, காலை ஒன்பது மணிக்கு சாப்பிடத் தொடங்க வேண்டும். பசிக்கும் போது சாப்பிட்டு இரவு ஒன்பது மணிக்குள் விருந்தை முடித்து விட வேண்டும். விருந்து நேரத்தில் மூன்று வேளையாக உணவைப் பிரித்து உண்ணலாம். பிறகு இரவு ஒன்பது முதல் மறுநாள் காலை ஒன்பது வரை கடுமையான விரத நேரம். எந்த உணவையும் தொடக்கூடாது. இது தொடக்க நிலை. பிறகு, காலை உணவைத் தவிர்த்துவிட்டு விருந்து நேரத்துக்குள்ளேயே இரு வேளையாக சுருக்க வேண்டும்.

முதல் கட்டத்தை வெற்றிகரமாகக் கடந்தவர்கள் அடுத்ததாக 8:16 என்ற விகிதத்தைக் கடைப்பிடிக்கலாம். இதில் எட்டு மணி நேரத்தில் உணவை இரண்டு வேளையாக எடுக்கலாம். அதாவது ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறையும் உணவு. பிறகு பதினாறு மணி நேரங்கள் விரதம். இதில், முதல் கட்ட விருந்தில் எளிமையாக, குறைந்த அளவிலான உணவுகளும் இரண்டாவது கட்ட விருந்தில் அதிக அளவில் உணவுகளும் இருக்கலாம். இப்படியே விரத நேரத்தை அதிகரித்துக்கொண்டே போய் 23:1 என்ற விகிதத்துக்குச் செல்ல வேண்டும்.

இதில், விருந்து நேரமான இரவில் மட்டும் அதிகபட்சமாக உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உண்ண வேண்டும். பகலில் தண்ணீர் மட்டும் குடிக்கலாம். சிலர் பழச்சாறுகள் அருந்துகிறார்கள். அளவாக எடுக்கலாம் தவறு இல்லை. பொதுவாக, வாரியர் டயட்டை பேலியோ டயட் பின்பற்றுகிறவர்களே உப டயட்டாக பயன்படுத்துகிறார்கள். அதாவது, பேலியோவில் விலக்கப்பட்ட உணவுகளுக்கு தடா விதித்துவிட்டு கொழுப்புச்சத்து உள்ள அசைவம் உள்ளிட்ட உணவுகளை தினசரி இரவு வேளை மட்டும் உண்டு வந்தால் அதுதான் பேலியோ வாரியர் டயட்.

விருந்து நேரத்தில் கையில் கிடைத்த உணவை எல்லாம் உண்டால் இந்த டயட் முழுமையடையாது. ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உடையோர் 12:12 என்ற விகிதத்துக்கு மேல் முயற்சி செய்ய வேண்டாம் அது ரிஸ்க். முழுமையான வாரியர் ஆக முடியவில்லை எனில் வார இறுதி நாளில் மட்டும் 23:1 விகிதமும் வார நாட்களில் 12:12 விகிதமும் பின்பற்றி வீக் எண்ட் வாரியராகவும் மாறலாம்.

ஜவ்வரிசியிலும் வந்தாச்சு கலப்படம்

ஜவ்வரிசி பளிச் என்ற நிறத்தை அடைவதற்காக டினோபால் எனப்படும் ஆப்டிக்கல் வொயிட்னர் கெமிக்கல் கலக்கப்படுகிறது. இது, புற்றுநோய் வரை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கை ரசாயனம். பார்க்க பளிச்சென்று இல்லாமல் சிறிது மஞ்சளாக இருக்கும் ஜவ்வரிசியைப் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், இதனை நாம் எளிய பரிசோதனைகளால் கண்டறிய முடியாது. ஆய்வகம் சென்று பரிசோதித்துதான் கண்டுபிடிக்க முடியும்.

உணவு விதி

தாவரங்களைச் சாப்பிடுங்கள்; ப்ராசஸ்டு என்றால் தவிர்த்திடுங்கள். தாவரங்கள் நம் உடலுக்கு வலுவூட்டும் உணவுப் பொருட்கள். ஆனால், ஓர் உணவு, தாவரங்களை ப்ராசஸ் செய்து அதிலிருந்து கிடைப்பது என்றால் அந்த உணவிடமிருந்து தொலைவாகவே இருங்கள். உதாரணமாக எலுமிச்சையைச் சொல்லலாம். சிட்ரிக் பழங்களில் அற்புதமானது இது. தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால், இதே எலுமிச்சையை ஊறுகாயாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பீஸாவுக்கு எந்த ஊரு?

இன்றைய இளசுகளின் ஃபேவரைட் டிஷ் என்றால் அது பீஸாதான். ஒரு காலத்தில் சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே இருந்த பீஸா கடைகள் இப்போது சிறு நகரங்களிலும் சிற்றூர்களிலும்கூட முளைத்துவிட்டன. இன்று ஜென் Z தலைமுறையின் பார்ட்டியோ, பஞ்சாயத்தோ எது என்றாலும் பீஸா கடையில்தான் நடக்கின்றன. அந்த அளவுக்கு நம் நவீன வாழ்வோடு ஒன்று கலந்துவிட்ட பீஸாவின் பூர்வீகம் எந்த நாடு தெரியுமா? இத்தாலிதான். பீஸா என்ற சொல் மிகப் பழையது.

கிட்டதட்ட ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இத்தாலியின் காட்டா நகரில் பீஸா பரிமாறப்பட்டதாக ஆவணங்கள் சொல்கின்றன. ஆனால், அது இன்று நாம் சாப்பிடும் பீஸா அல்ல. ஃபோகாசியா என்ற ரொட்டிதான் பீஸாவின் பாட்டி என்கிறார்கள். கிட்டதட்ட பீஸாவைப் போலவே அதுவும் தயாரிக்கப்பட்டாலும் மேலே டாபிங்ஸ் மட்டும் இருந்திருக்காது. அந்த வடிவில் கொஞ்சம் மாறுதல் ஏற்பட்டு பீஸா உருவானது. பதினெட்டாம் நூற்றாண்டில் இத்தாலியின் நேப்பிள் நகரில் பீஸாவின் மேல் தக்காளி மற்றும் தக்காளி சாஸை டாப்பிங்ஸாகச் சேர்க்கத் தொடங்கிய பிறகுதான் தற்போதைய நவநாகரிக பீஸா உருவானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி!!(மருத்துவம்)
Next post சற்று முன் நடிகை சமந்தாவுக்கு நடந்த சோகம்!!(வீடியோ)