அண்டை நாடுகளுடன் உறவு சுமூகமானால் அமைதி ஏற்படும்: பாக். பிரதமர் இம்ரான்கான் பேச்சு!!(உலக செய்தி)
பாகிஸ்தானில் கடந்த மாதம் 25ம் தேதி நடந்த தேர்தலில், கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து இம்ரான்கான் பாகிஸ்தானின் 22வது பிரதமராக கடந்த 18ம் தேதி பொறுப்பேற்றார். அவர் முதன் முதலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இம்ரான்கான் கூறியதாவது:அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவை ஏற்படுத்த பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தும். இல்லையென்றால் பாகிஸ்தானில் அமைதி ஏற்படாது. தற்போது நாம் சந்திக்கும் மோசமான பொருளாதார நிலைபோல், பாகிஸ்தான் வரலாற்றில் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. 10 ஆண்டுக்கு முன்பு பாகிஸ்தானின் கடன் ₹6 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது பாகிஸ்தானின் கடன் ₹28 லட்சம் கோடியாக உள்ளது. இந்த கடனுக்கு வட்டி கட்டவே, நாம் கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம். இப்பிரச்னையை தீர்ப்பது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். பாகிஸ்தானின் மனித வளர்ச்சியும் மோசமாக உள்ளது. 23 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர். 45 சதவீத குழந்தைகள் போதிய வளர்ச்சி இல்லாமல் உள்ளனர். ஒருபுறம் நாம் கடன்பட்டுள்ளோம், மறுபுறம் மனித வளர்ச்சியும் மிக மோசமாக உள்ளது. வரி வசூலிப்பு முறை, காவல்துறை, நீதித்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவற்றில் சீர்திருத்தம் செய்யப்படும். பாகிஸ்தானின் அனைத்து செல்வங்களும், பணக்கார பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளில் குவித்து வைத்துள்ளனர். அவை பாகிஸ்தானுக்கு திருப்பி கொண்டு வரப்படும்.
வெளிநாட்டில் உள்ள பாகிஸ்தானியர்கள், பாகிஸ்தான் வங்கிகளில் பணத்தை சேமிக்க வேண்டும். அவர்களின் முதலீடு எனது ஆட்சியில் பாதுகாப்பாக இருக்கும். முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்வேன். அரசின் செலவினங்களை குறைக்க சிறப்புக் குழு அமைக்கப்படும். ஓராண்டுக்குள் அனைத்து வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் வகையில் திட்டம் கொண்டுவருவது பற்றி தலைமை நீதிபதியிடம் சந்தித்து பேசவுள்ளேன். வெளிநாடுகளில் கடனை வாங்கி பொருளாதாரத்தை மேம்படுத்துதற்கு பதில், வரி சீர்திருத்தம் மூலம் நாட்டின் வருவாய் பெருக்கப்படும். தொடர்ந்து கடன் வாங்கினால் எந்த நாடும் முன்னேற முடியாது. கடன்கள் குறுகிய காலத்துக்கு மட்டுமே வாங்க வேண்டும். நான் வெளிநாடுகளுக்கு சென்று பணம் கேட்டால் அது எனக்கு தலைக்குனிவு. ஒரு நாட்டின் தலைவர் கடன் கேட்டால், என் நாடு பற்றி என்ன நினைப்பார்கள்? 20 கோடி பேரில் 8 லட்சம் பேர் மட்டுமே வரி கட்டுகின்றனர். வரி செலுத்துவது நமது பொறுப்பு. வரி செலுத்த தொடங்கினால், பணப் பற்றாக்குறையிலிருந்து நாம் மீள்வோம்.
16 அமைச்சர்கள் பதவி ஏற்பு
இம்ரான்கான் அமைச்சரவையில் 3 பெண் அமைச்சர்கள் உட்பட 16 அமைச்சர்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அதிபர் மம்னூன் உசேன் பதவிபிரமாணம் செய்து வைத்தார். வெளியுறவுத்துறை அமைச்சராக ஷா மெகமூத் குரேஷியும், ராணுவ அமைச்சராக பர்வேஸ் கட்டாக், நிதி அமைச்சராக ஆசாத் உமர் உட்பட பலர் பொறுப்பேற்றனர்.
இம்ரானுக்கு மோடி கடிதம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு, பிரதமர் மோடி அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘பாகிஸ்தானுடன் ஆக்கப்பூர்வமான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை இந்தியா எதிர்நோக்கியுள்ளது. பாகிஸ்தானுடன் அமைதியான உறவை ஏற்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாத தெற்கு ஆசியாவை உருவாக்க, பணியாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.
80 வேண்டாம் 2 கார் போதும்
பிரதமர் இம்ரான் மேலும் கூறுகையில், ‘‘அரசின் செலவினங்களை குறைக்க தேசிய அளவில் ஒரு குழு அமைக்கப்படும். எனது வாழ்க்கையில் இருந்தே அந்த மாற்றத்தை தொடங்குகிறேன். நான் பிரதமர் மாளிகையில் வாழப்போவதில்லை. அங்கு ராணுவ செயலாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 3 படுக்கை அறை வீடு எனக்கு போதும். பிரதமர் இல்லத்தை, நவீன ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக மாற்றப்படும். பிரதமர் இல்லத்தில் 524 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். எனக்கு 2 பேர் மட்டும் போதும். இங்கு 33 குண்டு துளைக்காத வாகனங்கள் உட்பட 80 வாகனங்கள் உள்ளன. எனக்கு 2 வாகனம் மட்டும் போதும். மற்ற வாகனங்கள் எல்லாம் ஏலத்தில் விற்கப்பட்டு அந்தப் பணம் அரசு கஜானாவில் சேர்க்கப்படும்’’ என்றார்.
Average Rating