ராஜீவின் புதிய அணுகுமுறை!!(கட்டுரை)
ஜே.ஆரின் சர்வகட்சி மாநாடு தொடர்பில், ஓராண்டு காலத்துக்கு முன்பே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் சொன்ன ஆரூடம் பலித்திருந்தது.
இது அமிர்தலிங்கத்தையும் தமிழ் மக்களையும் பொறுத்தவரையில், துரதிர்ஷ்டவசமானதாகும்.
இராணுவ வழியில், இந்த இனப்பிரச்சினையை அணுக ஜே.ஆர் எண்ணியிருந்தார். அதற்குத் தயாராவதற்குத் தேவையான காலத்தைப் பெற்றுக்கொள்வதற்கான, காலங்கடத்தும் முயற்சியாகவே சர்வகட்சி மாநாடு நடத்தப்பட்டது என்பதே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கருத்தாக இருந்தது.
இதன் காரணமாகத்தான், அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் கடுமையாக எதிர்த்திருந்தன.
ஜே.ஆர், தன்னுடைய இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான முன்மொழிவுகளையும் சர்வகட்சி மாநாட்டையும் கைவிட்டதாக, 1984 டிசெம்பர் இறுதியில் அறிவித்த நிலையில், அமிர்தலிங்கத்தின் நிலைமை, பெரும் தர்மசங்கடமாக இருந்தது.
மறுபுறத்தில், இந்திரா காந்தியின் மறைவைத் தொடர்ந்து, பிரதமராகப் பதவியேற்றிருந்த ராஜீவ் காந்தி, இந்திய நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, 1984 டிசெம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டி, இந்தியாவின் மிக இளவயதுப் பிரதமராக, 1984 டிசெம்பர் 31ஆம் திகதி பதவியேற்றிருந்தார்.
ராஜீவ் காந்தி, நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து ஆட்சியமைக்கும் சமாசாரங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் ஜே.ஆர், சர்வகட்சி மாநாட்டைக் கைவிடும் முடிவை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழகம் திரும்பியிருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு இந்தியாவை நம்புவதை விட, வேறு வழியிருக்கவில்லை. 1985 ஜனவரி இரண்டாம் திகதி, ராஜீவ் காந்திக்கு இலங்கைத் தமிழர்கள் சார்பில் வாழ்த்துத் தெரிவித்து, கடிதமொன்றை அமிர்தலிங்கம் அனுப்பி இருந்தார்.
அதில், ராஜீவ் காந்தியின் கரிசனை, இலங்கை மீது திரும்ப வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி இருந்தார்.
கடந்த இரண்டுவார காலத்துக்குள், இலங்கையில் வாழும் 30 இலட்சம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சி, முட்டுக்கட்டை நிலையை எட்டியுள்ளது என்று குறிப்பிட்ட அமிர்தலிங்கம், ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கம், திடீரென்று சர்வகட்சி மாநாட்டைக் கைவிடுவதாக அறிவித்துள்ளதுடன், ஜே.ஆரின் அமைச்சரவை, ஜே.ஆர் சர்வகட்சி மாநாட்டின் முன்பாகச் சமர்ப்பித்திருந்த முன்மொழிவுகளையும் கைவிடுவதாக அறிவித்திருப்பதானது, கடந்த ஒன்றரை வருட காலத்துக்கும் மேலாக, இந்தியா எடுத்துவந்த முயற்சிகளைச் சூனியமாக்குவதாக அமைகிறது என்று எழுதியிருந்தார்.
மேலும், தமிழர் வாழும் பகுதிகளில் தற்போது நிலவி வரும், அரச பயங்கரவாதத்தை முற்றுப் பெறச்செய்யும் அரசியல் தீர்வொன்று, எட்டப்படும் என்ற நம்பிக்கை, முற்றாக அற்றுப்போயுள்ளது. முன்னாள் பிரதமர் அவர்களுடைய செல்வாக்கும், நிரந்தரத் தீர்வொன்றை எட்டும் நல்லெண்ணமும்தான் பெரும் இன அழிப்பிலிருந்து, தமிழ் மக்களைக் காக்கும் அரணாக இருந்ததுடன், பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாகவும் அமைந்தது. நீங்கள், டிசெம்பர் மாதம் வௌியிட்டிருந்த அறிக்கை, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் கொடூர வன்முறைத் தாக்குதல்கள் பற்றிய இந்தியாவின் அக்கறையைச் சுட்டும் பேச்சுகள் என்பவை தொடர்பில், நாம் மிகுந்த நன்றியுடையவர்களாகிறோம். தற்போது ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டையானது, இந்தியா புதிய முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் செல்வாக்கை, இலங்கை அரசாங்கமும் தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று, தனது கடிதத்தில் அமிர்தலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்தியாவைத் தவிர எமக்கு வேறு உதவியில்லை. உதவியற்றிருக்கும் தமிழர்கள், தம்மை அடக்குமுறையிலிருந்தும், இன அழிப்பிலிருந்தும் பாதுகாப்பதற்காக, உங்களைத்தான் எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று, ராஜீவ் காந்தியிடம், இலங்கை விவகாரத்தில் உடனடியாகத் தலையிட, உருக்கமாக வேண்டியிருந்தார்.
ஓரம் கட்டப்பட்ட பார்த்தசாரதி
அதைத் தொடர்ந்து அமிர்தலிங்கம், உடனடியாக கோபால்சாமி பார்த்தசாரதியையும் தொடர்புகொண்டிருந்தார்.
தன்னை உடனடியாக, டெல்லியில் சந்திக்குமாறு பார்த்தசாரதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, டெல்லி சென்ற அமிர்தலிங்கம் குழு, 1985 ஜனவரி 13ஆம் திகதி, பார்த்தசாரதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தப் பேச்சுவார்த்தையில், அமிர்தலிங்கத்தின் பிரதான நோக்கம், புதிதாகப் பதவியேற்றுள்ள ராஜீவ் காந்தி தலைமையிலான, இந்திய அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை, அறிந்துகொள்வதாகவே இருந்தது.
இந்திரா காந்தியினுடைய இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டிருந்த ஜே.ஆர், ராஜீவ் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, அதுதொடர்பில் ஊடகங்களுக்குச் சாதகமான கருத்தையே வௌியிட்டிருந்தார்.
ஆகவே, இலங்கைத் தமிழ்மக்கள் தொடர்பில், இந்திராவின் பின்பான, இந்தியாவின் நிலைப்பாடு மாறியிருக்கிறதா என்ற கேள்வி, தமிழ்த் தலைமைகளுக்கு முக்கியமானதொன்றாகவே இருந்திருக்கும்.
இலங்கை தொடர்பில், ராஜீவ் காந்தி அரசாங்கம், புதிய கொள்கையைக் கொண்டிருப்பதாக பார்த்தசாரதி குறிப்பிட்டிருந்தார். “இலங்கையுடனான உறவில் எதிர்ப்பைவிட, இணக்கமுறையிலான அணுகுமுறையைக் கையாளுதல், பேச்சுவார்த்தைகளில் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் இணைத்துக்கொள்ளுதல், பேச்சுவார்த்தைக்கு முன்னரும், பின்னரும் இலங்கை அரசாங்கம் மற்றும் ஆயுதக் குழுக்களுக்கிடையே, யுத்தநிறுத்தத்தை உருவாக்குதல், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யத்தக்கதான தீர்வைக் காணுதல் ஆகியவற்றின் அடிப்படையில்தான், இலங்கை தொடர்பிலான, இந்தியாவின் புதிய கொள்கை அமைந்திருக்கும்” என்று, பார்த்தசாரதி மேலும் விளக்கியிருந்தார்.
அமிர்தலிங்கத்துக்கு, இது தொடர்பில் நிறையச் சங்கடமும் அசூசையும் இருந்தது. ஜே.ஆரை இனியும் நம்பமுடியாது என்ற நிலைக்கு அமிர்தலிங்கம் வந்திருந்தார். அதைப் பார்த்தசாரதியிடம் வௌிப்படையாகவே குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்தசாரதியும் ஆமோதித்திருந்ததுடன், தானும் இக்கருத்தையே ராஜீவ் காந்தியிடம் தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஆயினும் ராஜீவ் காந்தி, தன்னுடைய கருத்தைக் கேட்கவில்லை என்று அமிர்தலிங்கத்திடம் தெரிவித்த பார்த்தசாரதி, தான் விரைவில் இந்தச் செயற்பாட்டிலிருந்து ஓரம் கட்டப்படலாம் என்று தெரிவித்ததுடன், ராஜீவ் காந்தியை நேரில் சந்தித்து, அமிர்தலிங்கத்தின் கருத்துகளை, அவரிடம் நேரடியாகவே சொல்லுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இலங்கை விவகாரத்திலிருந்து, அடுத்து இரண்டு மாதங்களில், பார்த்தசாரதி முழுமையாக ஓரம் கட்டப்பட்டார் எனலாம். இது பற்றி, தன்னுடைய நூலொன்றில் குறிப்பிடும் ஜே.என். திக்ஸிட், ‘ராஜீவ் காந்தி மற்றும் பார்த்தசாரதி இடையேயான உறவு, நேர்மறையானதாக இருக்கவில்லை.
பார்த்தசாரதியின் ஆழ்ந்து ஆராய்ந்த, கவனம்மிக்க, பொறுமையான இராஜதந்திரப் பாணி, ராஜீவ்காந்தியின் உடனடியான, முடிந்தமுடிபான விளைவுகளைத் தரத்தக்க இராஜதந்திர அணுகுமுறையுடன் ஒன்றிப்போகவில்லை. ஆகவே, இந்தியாவின் புதிய வௌியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்ட ரொமேஷ் பண்டாரி, 1985 பெப்ரவரி, மார்ச் காலப்பகுதியில், இலங்கை விவகாரம் தொடர்பாக, இந்திய அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதியானார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இராஜதந்திரக் கொள்கை மாற்றம் பற்றி, அமிர்தலிங்கத்திடம் மட்டுமல்ல, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களிடமும் பார்த்தசாரதி தெரிவித்திருந்தார்.
ஜே.ஆரின் நல்லெண்ணம் பற்றி, ராஜீவ் காந்தி நம்பிக்கை கொண்டுள்ளதாக அமிர்லிங்கத்திடம் பார்த்தசாரதி தெரித்திருந்தார். இந்திரா காந்தியின் இருவழிக் கொள்கை கைவிடப்படும் என்றும், பேச்சுவார்த்தைக்கு முன்பாக, யுத்த நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்துமென்றும் தெரிவித்ததுடன், இனித் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் யாவும் ஒன்றிணைந்து, ஒரே சக்தியாகச் செயற்படுவதுதான் உசிதமானது என்ற ஆலோசனையையும் வழங்கியிருந்தார்.
அமீர் – ராஜீவ் சந்திப்பு
1985 ஜனவரி 14ஆம் திகதி டெல்லியில், அமிர்தலிங்கம் குழு, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தியாவை அண்மித்த அனைத்து நாடுகளுடனும் தான், நல்லுறவைப் பேணவே விரும்புவதாக அமிர்தலிங்கத்திடம் தெரிவித்திருந்த ராஜீவ்காந்தி, இலங்கையை மட்டும், இதற்கு விதிவிலக்காக்க முடியாது என்று, நேரடியாகவே தெரிவித்திருந்தார்.
பேச்சுவார்த்தை மூலமான தீர்வுதான் ஒரேவழி என்பது, ராஜீவின் கருத்தாக இருந்தது. இந்திரா காந்தி காலத்திலிருந்து பெரிதும் வேறுபட்ட களமாக இது இருக்கிறது என்பது, அமிர்தலிங்கத்துக்குப் புரிந்திருக்கும்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர், ஊடகங்களிடம் கருத்துரைத்த அமிர்தலிங்கம், “இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்கள் இனியும் பலியாகாதிருக்க, இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள்விடுத்திருந்தார்.
இந்திரா காந்தியோடு ஒப்பிடுகையில், இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமானதொரு நிலைப்பாட்டை ராஜீவ் காந்தி எடுத்திருந்தாலும், அமிர்தலிங்கத்துடன் ராஜீவ் காந்தி சந்திப்பை நடத்தியதானது, இலங்கை அரசாங்கத்துக்குக் கடும் அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
ஜனவரி 16ஆம் திகதி, ஊடகங்களிடம் கருத்து வௌியிட்டிருந்த அமைச்சர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ், “இலங்கைக்குள் பிரிவினையையும் தனிநாட்டையும் கோரும், ஒன்றரை வருட காலத்துக்கும் மேலான முயற்சியின் விளைவாக, உருவான முன்மொழிவுகளை நிராகரித்த ஒரு தரப்புடன், வௌிநாட்டு அரசாங்கமொன்று பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பில், இலங்கை அரசாங்கம் கவலை கொள்கிறது” என்று குறிப்பிட்டதுடன், தமது அதிருப்தியை, இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கும் கொண்டுசென்றுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
பௌத்த பிக்குகளின் அழுத்தத்தால் ஜே.ஆர், தான் கைவிட்ட, தன்னுடைய முன்மொழிவுகளை, அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நிராகரித்ததால்தான் கைவிட்டதாக, அக்கதையை மாற்றி இருந்தமையானது ஆச்சரியத்துக்குரியது.
ஒருவேளை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, ஜே.ஆரின் முன்மொழிவுகளுக்கு நேரடியாகவே சம்மதித்திருந்தால், அதை ஜே.ஆரால் நிறைவேற்றியிருக்க முடியுமா என்பது ஐயத்துக்குரிய கேள்வியாகும்.
இந்திரா காந்தியைப் போன்று, இலங்கை அரசாங்கத்துடன் முரண்பட்ட உறவைக் கைக்கொள்ள, ராஜீவ் காந்தி விரும்பி இருக்கவில்லை என்பது, அவரது அடுத்த நடவடிக்கையில் வௌிப்பட்டது.
ஜனவரி 18ஆம் திகதி, இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக இருந்த பேர்னார்ட் திலகரட்ணவை வரவழைத்துச் சந்தித்த ராஜீவ் காந்தி, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்கத் தான் உதவி செய்ய விரும்புவதாகக் குறிப்பிட்டதோடு, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவைச் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தச் செய்தி, இலங்கை உயர் ஸ்தானிகர் ஊடாக, ஜனாதிபதி ஜே.ஆரிடம் சேர்ப்பிக்கப்பட்டது.
ஜே.ஆர் இதை, வேறு வழியில் அணுகத் திட்டமிட்டார். ராஜீவ் காந்தியை நேரடிச் சந்திப்பதை, ஜே.ஆர் விரும்பி இருக்கவில்லை. அதனால், இலங்கையின் தேசியப் பாதுகாப்பு அமைச்சரான லலித் அத்துலத்முதலியை, ராஜீவ் காந்தியுடன் சந்திப்பு நடத்த, இந்தியாவுக்கு அனுப்பி வைக்க, ஜே.ஆர் முடிவெடுத்தார்.
இந்த விஜயமும் சந்திப்பும் 1985 பெப்ரவரி மத்தியில் நடத்தப்படத் திட்டமிடப்பட்டது.
இதேவேளை, 1985 ஜனவரியில் இலங்கையின், வடக்கு-கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஜே.ஆரும் அத்துலத்முதலியும் கங்கணம்கட்டிக்கொண்டு செயற்பட்டனர்.
Average Rating