‘தூறலும் நின்று போச்சு’!!(கட்டுரை)
தற்போது புலம்பெயர் தமிழ் உறவுகள் பலர், ஊரில் உலாவுகின்றார்கள். விசாரித்ததில், அவர்களுக்கு இப்போது அங்கு விடுமுறை நாள்களாம். இவ்வாறாக, பள்ளித்தோழன் ஒருவன் பல வருடங்களுக்குப் பின்னர் சந்தித்தான்.
“உங்களுக்கு என்ன, நீங்கள் வெளிநாட்டுக்காரர்…” என்று வெடியைக் கொழுத்திப் போட்டேன்.
“என்ன, சும்மா வெளிநாடுதான்; நிறத்தால், அங்கு நாங்கள் இரண்டாம் இடம்; இனத்தால், இங்கு நாங்கள் இரண்டாம் இடம்” எனப் பொரிந்து தள்ளினார். அர்த்தம் பொதிந்த இவ்வாக்கியங்கள், நாட்டின் அரசமைப்பு முறை ஊடாக, ஓர் இனம் பாதுகாக்கப்படவில்லை; பேணப்படவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது.
ஒரு நாட்டில் காணப்படுகின்ற ஐந்து நட்சத்திர விடுதிகளின் எண்ணிக்கை, வானத்தைத் தொடுகின்ற கட்டடங்களின் எண்ணிக்கை போன்ற வெளி விம்பங்களைக் கொண்டு, அந்த நாட்டின் செல்வச் செழிப்பு, மதிப்பு கணிப்பிடப்படுவதில்லை.
உண்மையில், நாட்டின் குடிமக்கள், எவ்வாறான முறையில் அந்த நாட்டு அரசாங்கத்தால் நடாத்தப்படுகின்றார்கள் அல்லது நோக்கப்படுகின்றார்கள்; மக்கள், அரசாங்கத்தில் விசுவாசம், நம்பிக்கை பொருந்தியவர்களாக வாழ்கின்றார்களா என்பவற்றின் அடிப்படையிலேயே நாட்டின் கௌரவம் தங்கி உள்ளது.
இதை, அந்த நாட்டின் அரசமைப்பு, அங்குள்ள ஒவ்வொரு மக்கள் குழுமம் தொடர்பிலும், எவ்வாறான வரையறைகளை, விளக்கவுரைகளை வழங்குகின்றது என்பதில் முழுமையாகத் தங்கியுள்ளது.
இவ்வாறனதொரு நிலையில், இலங்கையில் தொடர்ந்து ஆட்சிபீடத்தை அலங்கரிக்கின்ற அரசாங்கங்களால், தமிழ் மக்கள், கடந்த காலங்களில் எவ்வாறு நடத்தப்பட்டார்கள், நிகழ்காலத்தில் எவ்வாறு நடாத்தப்பட்டு வருகின்றார்கள், எதிர்காலத்தில் எவ்வாறு நடாத்தப்படுவார்கள் என்பது, வேதனை அளிக்கும் ஒன்றாக உள்ளது.
இவை தொடர்பில் ஆட்சியாளர்கள், தமிழ் மக்களது எண்ணங்களை, கவலைகளை, விருப்பங்களை ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளியே நிற்கின்றார்கள்.
ஆனால், முக்கியமான தேர்தல்கள் வரும் வேளையில், தமிழ் மக்களது வாக்குகளைக் கொள்ளை கொள்வதற்காக, இனமுறுகல் தீர்க்கப்பட வேண்டும்; தமிழ் மக்கள் சுபீட்சமாக வாழ வேண்டும், அதற்காக நாங்கள் கடினமாக உழைக்கின்றோம் என்பது போன்ற மாய வசனங்கள் பேசி, நடிகர்கள் ஆகின்றார்கள்.
இவ்வாறாக, 2015 ஜனவரி எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மாற்றம் தேவை எனத் தமிழ் மக்கள் வேண்டி நின்றார்கள். ‘விடியலைத் தருவோம்’ என, தற்போதைய ஆட்சியாளர்கள் இசைந்தார்கள். தேர்தலில் வெற்றி பெற்றார்கள்;
வரலாறு காணாதவாறு, தெற்கின் இரண்டு பெருந்தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்து, ஆட்சியில் அமர்ந்தார்கள். புதிய அரசமைப்பு விரைவாக வரப்போகின்றது; அது தீர்வைப் படைக்கப் போகின்றது; எனத் தேசமும் சர்வதேசமும் காத்திருந்தன.
ஆனால், அவை எல்லாமே வெறும் வெற்றுப் பேச்சுகளே அன்றி, வெற்றிப் பேச்சுகள் அல்ல எனத் தமிழ் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
தெற்கின் பிரதான பெருந்தேசியக் கட்சிகள், நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதிலேயே, தமது முழுக்கவனத்தையும் ஒன்று குவித்து வைத்துள்ளன. தெற்கின் அரசியல்வாதிகள், அதிகாரக் கதிரையைப் பிடிக்க, எங்கள் முதுகில் சவாரி செய்கின்றார்கள் என, விடயங்கள் தெரிந்த தமிழ் மக்கள், ஆதங்கத்துடன் உள்ளனர்.
கடந்த முறை போன்றே, ஐனாதிபதித் தேர்தலை முன்வைத்து, சீனச் சார்பு அணியும் இந்தியா உட்பட, மேற்குலக சார்பு அணியும் இலங்கையில் களமாடத் தயாராகின்றன.
“தற்போதைய அரசமைப்பு, கள்ளத்தனமாக தயாரிக்கப்பட்டு வருகின்றது” என, 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரையில், சமாதானப் பேச்சுவார்த்தை மேடைகளில் கலந்து கொண்ட ஐீ.எல் பீரீஸ் கூறுகின்றார்.
“மஹிந்தவும் மைத்திரியும் இணைந்தால் மட்டுமே, சிறப்பான தீர்வுத் திட்டத்தை வழங்க முடியும்” என எஸ். பி. திஸாநாயக்க கூறுகின்றார்.
இவ்வாறாக, ஆளுக்கு ஆள் ஆர்ப்பாட்டமான, அட்டகாசமான வியாக்கியானங்களை வழங்கி வருகின்றார்கள்.
மறுபுறத்தே, தமிழ் மக்களது நீண்ட காலப் பிரச்சினை குறித்து, தமது மக்களிடம் விளக்கமாகவும் தெளிவாகவும் கூறி, நியாயபூர்வமான தீர்வைக் காண, அரசாங்கத்துக்கு விருப்பமும் இல்லை; தேவையும் இல்லை. உண்மையில், அரசமைப்பு மாற்றமோ, அதனூடான புதிய பாதையைப் போடவோ, தெற்கு தயாரில்லை.
இதற்கிடையில், கடந்த ஆட்சியில் கிறிஸ் பூதம் போல, இந்த ஆட்சியில் குள்ள மனிதர்களின் வீர விளையாட்டுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்கள் பயத்தில் உறைந்து உறையுளுக்குள் ஒழிந்துள்ளனர்.
இன்றைய நவீன உலகம், செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா என ஆராய்வுகளை நடாத்துகின்றது. ஆனால், வட்டுக்கோட்டை, அராலி போன்ற பிரதேசங்களில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் தொடர்பில் ஆராயும் மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் பொலிஸார், மக்கள் பிரதிநிதிகள், மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.
இவற்றின் மூலம், தொடர்ந்தும் வடக்கு, கிழக்கை ஒருவித கொதி நிலையில் வைத்திருப்பதற்கே தெற்கு விரும்புகின்றது. அங்குள்ளவர்களின் மனங்கள், ஆக்கபூர்வமாகச் சிந்திப்பதையும் செயலாற்றுவதையும் தடுத்து நிறுத்தி, வீணாக, வீணானவற்றில் கவனத்தை திசை திருப்பப் பல முனைகளில் முயல்கின்றது.
இதைப் போன்றே சர்வதேசமும் இலங்கையைத் தீர்வுகள் இன்றி, எப்போதும் குழம்பிய குட்டையாக வைத்திருக்கவே விரும்புகின்றது. அப்போதுதான், அது விரும்பிய, வேண்டிய மீன்களைப் பிடிக்க முடியும். அதன் உதடுகள் அளவளாவும் அரசமைப்பு உருவாக்கம் என்பது, வெறுமனே அரசியல் அரங்கை அழகு பார்க்கும் கண்ணாடிகளே ஆகும்.
இதன் நீட்சியாகவே, இப்போது வெளிநாட்டு இராஜதந்தரிகள், தம் இலக்கை அடைய இலங்கை நோக்கிப் படை எடுக்கின்றார்கள். அதன் உச்சக்கட்டமாக, சீனாவின் சிந்திப்பில், மஹிந்த -சம்பந்தன் சந்திப்புக் கூட நடைபெற்றுள்ளது.
மஹிந்த தலைமையிலான அணியை விலக்கி, அரசமைப்பு மாற்றத்தைக் கொண்டு வர முடியாத நிலை உள்ளது. அரசமைப்புக்கு எதிரான அவர்களது பரப்புரை, இனவாத நெருப்பைக் கக்குகின்றது.
ஆட்சிக்காலத்தில் வெற்றிக் கடலில் மட்டுமே மிதந்த மஹிந்த, அரசியல் தீர்வு தொடர்பில் நினைக்கவே இல்லை. தன்னால் கொண்டு வர முடியாத அரசியல் தீர்வை, நல்லாட்சி கொண்டு வர, அவரும் அனுமதிப்பாரா என்பதும் ஆச்சரியக் குறியே ஆகும்.
இவை எல்லாவற்றுக்கும் அப்பால், தென்னிலங்கைக் கட்சிகள் இனப்பிணக்கை தீர்க்க வேண்டும் என இன்னமும் இதய சுத்தியாக சிந்திக்கவில்லை. ஆகவே, ஒருபோதும் அரசமைப்பு வேலைகளை முழுமைப்படுத்துவதைப் பொறுப்புடன் செய்ய மாட்டார்கள். மாறாக, உலகத்துக்காக வெறுமனே போலியாக நாடகம் காட்டுவார்கள்.
முழுமையாக நம்பிய சர்வதேசமும் கைவிட்டு, ஓரளவு நம்ப வைக்கப்பட்ட நல்லாட்சியும் கைவிட்டு, நிர்க்கதியாக, எதுவுமே இல்லாத சூன்யமான நிலையே, தற்போது தமிழ்மக்கள் பக்கத்தில் நீடிக்கின்றது.
உச்சப் பொறுமையின் எல்லைகள் கடந்தும், நம்பிக்கைகள் தகர்ந்தும், வாக்குறுதிகள் நொருங்கி விட்டன. இனி விட்டுக் கொடுக்க இம்மியளவும் இடமில்லாதவாறு, சம்பந்தன் நன்றாக வளைந்து கொடுத்து விட்டார். தெற்கு, தீர்வு வழங்கும் எனத் தவணைகள் கூறி, தமிழ் மக்களிடமும் வாங்கிக் கட்டியும் விட்டார். அரசியல் தீர்வைத் தாருங்கள் என்றால் தெற்கு அபிவிருத்தியை நீட்டுகின்றது. தெற்கின், வழமையான ஏய்க்காட்டல்களும் ஏமாற்றுதல்களும் தமிழ் மக்களைத் தொடந்து வரப் போகின்றன.
இனமேலாதிக்கம் உள்ளவரை, இன நல்லுறவு இல்லை; மதம், மதம் பிடித்து உள்ளவரை, மத நல்லுறவும் இல்லை. பெரும்பான்மை என்ற எண்ணம் பெருக்கெடுக்கும் வரை, சிறுபான்மைக்கு வண்ணமயமான வாழ்வு இல்லை.
கொடிய யுத்தத்தால் பல இலட்சம் பெறுமதியான இல்லத்தை இழந்தவர்களுக்கு வெறும் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான வீட்டைக் கட்டிக் கொடுப்பதிலேயே தள்ளாடுகின்றது நல்லாட்சி. இவர்களால், பல இலட்சம் தடைகளைத் தாண்டி, அரசமைப்பின் ஊடாக, அமைதியைத் தரும் வலு உள்ளதா?
ஆகவே, அரசமைப்பு மழை பொழியும் (தீர்வு) என எதிர்பார்த்த பலருக்கு, அதன் தூறலே நின்று போச்சு என்பது, கசப்பான செய்தியே. ஆகவே, தமிழர்கள் இனி என்ன செய்யப் போகின்றார்கள், சிந்திக்க வேண்டிய விடயம்.
Average Rating