இழந்து விட்ட அரசியல் ஓர்மம்!!(கட்டுரை)

Read Time:17 Minute, 34 Second

தேர்தலொன்று விரைவில் வரப்போகிறது போல் தெரிகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஊர்களுக்குள் அடிக்கடி வந்து போகின்றமை அதற்கான கட்டியமாகும்.

குறிப்பாக, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், ‘மடித்து’க் கட்டிக் கொண்டு, களத்தில் இறங்கி விட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்துக்கும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, திருகோணமலை மாவட்டத்துக்கும் கடந்த வாரம் சென்று, தத்தமது கட்சிகளைப் புனரமைக்கும் நடவடிக்கைகளிலும், அங்குள்ள முக்கியஸ்தர்களைத் தங்களின் கட்சிகளுக்குள் ஈர்த்துக் கொள்ளும் செயற்பாடுகளிலும் இறங்கியிருந்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கடந்த வாரம் வடக்கில் வாழ்வாதார உதவிப் பொருட்களை, மக்களுக்கு வழங்கிவைத்தார்.

அடுத்துவரும் சில மாதங்களில், மாகாண சபைகளுக்கான தேர்தல் நடப்பதற்கான சாத்தியங்கள், அதிகமாகவே உள்ளன.

ஆனால், பழைய முறையிலா, புதிய முறையிலா? அந்தத் தேர்தல்கள் நடக்கும் என்பதற்கு, அறுதியான விடை இன்னும் கிடைக்கவில்லை.

இருந்தபோதும், “பழைய முறையில் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்திக் காட்டுவோம்” என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மருதமுனையில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசியிருந்தார்.

மாகாண சபைத் தேர்தல், பழைய முறையில் நடப்பதற்கான சாத்தியங்கள்தான் அதிகமாக இருப்பது போல் தெரிகிறது. அதுதான், முஸ்லிம் சமூகத்துக்கு சாதகமாகவும் அமையும்.

ஆனாலும், புதிய முறையில்தான் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பிடிவாதமாக உள்ளதாகத் தெரியவருகிறது.

மாகாண சபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் கிழக்கில்தான் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் என்பதை, சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை அதிகமாகப் பெறுவதற்கான சாத்தியங்கள், கிழக்கில்தான் உள்ளன.

அதுமட்டுமன்றி, முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரைப் பெறுவதற்கும், ஆட்சியில் முஸ்லிம் கட்சிகள் பங்குகொள்வதற்குமான வாய்ப்புகளும் கிழக்கு மாகாணத்தில்தான் அதிகமாக இருக்கின்றன. அதனால், முஸ்லிம் அரசியல் கட்சிகள், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும்.

ஆனால், முஸ்லிம் அரசியல் கட்சிகளில் எவையெல்லாம் தனித்துக் களமிறங்கும், எந்தக் கட்சிகள் கூட்டமைத்துப் போட்டியிடும் என்பதையெல்லாம் இப்போதைக்கு உறுதியாகச் சொல்லிவிட முடியாது. ஆனாலும், சில அனுமானங்கள் உள்ளன.

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் களம், இம்முறை வெகுவாகச் சூடுபிடிக்கும். அதற்கான ஏற்பாடுகளையும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன. உதாரணமாக, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸும், அ.இ.ம காங்கிரஸும் தத்தமது கட்சி சார்பில், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களென, தலா ஒவ்வொருவரை நியமித்திருக்கின்றன. அந்தக் கட்சிகளின் வாக்கு வங்கிகளில், இந்த நியமனங்கள் அதிகரிப்பை ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கை, குறித்த கட்சிகளிடம் உள்ளன.

இன்னொருபுறம் அதிகாரங்கள் எவையுமில்லாத நிலையில், மாகாண சபைத் தேர்தலொன்றைத் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா, முதன் முதலாக எதிர்கொள்ளும் நிலை ஏற்படவுள்ளது.

கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து, தேர்தல்களில் தனது கட்சியைக் களமிறக்கிப் பழக்கப்பட்டவர் அதாவுல்லா.

கடந்த, கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களின் போது, அம்பாறை மாவட்டத்தில் தனது கட்சி சார்பாக, மூன்று உறுப்பினர்களைச் சொல்லி வைத்தால்போல் வென்றெடுத்து வந்த அதாவுல்லாவுக்கு, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலானது, கடந்த காலத்தைப் போல், சுகமாக அமையும் எனக் கூறிவிட முடியாது.

இன்னொருபுறம் ஹசன் அலி – பஷீர் சேகுதாவூத் தலைமையிலான வண்ணத்துப் பூச்சியைச் சின்னமாகக் கொண்ட ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பும் கிழக்குத் தேர்தலில் களமிறங்குவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரியவருகிறது. ஆனாலும், வண்ணத்துப்பூச்சி தனித்துப் பறக்குமா? கூட்டணி அமைக்குமா என்பது குறித்து, இப்போதைக்கு அறிந்து சொல்ல முடியவில்லை.

எவ்வாறாயினும், முஸ்லிம் கட்சிகளின் சில நடவடிக்கைகள், மக்கள் மத்தியில் சில சந்தேகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகின்றமையையும் ஆங்காங்கே காணக்கூடியதாக உள்ளது.

உதாரணமாக, “அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் பங்காளிக் கட்சிகள், முஸ்லிம் காங்கிரஸை கிழக்கில் மிகப்பெரிய எதிரியாகப் பார்க்கின்றன” என்று, முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியிருக்கின்றார்.

மேலும், “சினேக சக்திகள் என்று நினைத்தவர்கள், இன்று பெரிய வில்லங்கமாக மாறியிருக்கின்றனர்” என்றும், தமது பங்காளிக் கட்சிகள் குறித்து, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறியிருக்கின்றார்.
இந்தச் சினேகக் கட்சிகள் எவை, என்பதையும் அவற்றின் நடத்தைகள் எவ்வாறுள்ளன என்பதையும் கூட, ஹக்கீம் விவரித்துள்ளார்.

“ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முதல் தடவையாக, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டோம். இதன்மூலம் அழிந்து போயிருக்கின்ற ஒரு கட்சிக்கு, உயிரூட்டுகின்ற வேலையைப் பார்த்துவிட்டோமா என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது. அது மாத்திரமின்றி, அழிந்து போயிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தற்போது தலைதூக்கி ஆடிக்கொண்டிருக்கிறது” என்றும் ஹக்கீம் கூறியிருக்கின்றார்.

இவ்வாறானதொரு நிலையில்தான், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சந்தித்துப் பேசியதாகத் தெரிவிக்கும் செய்திகளும் படங்களும் ஊடகங்களில் வெளியாகி இருக்கின்றன.

இவை அனைத்தையும் கூட்டிக்கழித்துப் பார்ப்பவர்களுக்கு, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ அணியுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடப் போகிறதா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகிறது.

இன்னொருபுறம், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது, முஸ்லிம் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் பெருமளவில் இல்லாமல் போயிருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

முஸ்லிம்களுக்கு, மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் நடந்த அநீதிகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அல்லது அவற்றை விடவும் அதிகமான கொடுமைகள், இந்த ஆட்சியில் நடந்துள்ளதாக முஸ்லிம்கள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், மஹிந்த தரப்புடன் முஸ்லிம் அரசியல் கட்சியொன்று, தேர்தல் கூட்டு வைத்துக் கொள்வதை, ‘செய்யக் கூடாத’ காரியமாக முஸ்லிம் சமூகம் பார்க்கப் போவதில்லை என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.

‘அரசியலில் முஸ்லிம்கள், தமது எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக் கூடாது’ என்று, அறிஞர் ரி.பி. ஜாயா கூறியமை குறித்து, முஸ்லிம் சமூகம் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து, இப்போது சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது.

ரி.பி. ஜாயா சொன்னதன் முழுமையான அர்த்தத்தை, இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் போலவே தெரிகிறது.

முஸ்லிம் சமூகத்தின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆளுந்தரப்பின் கூடைகளுக்குள்ளேயே போடப்பட்டிருப்பது, முஸ்லிம்களுக்கு அத்தனை ஆரோக்கியமானதாக அமையவில்லை என்பதை, இந்த அரசாங்கத்தில் நடைபெற்ற கடந்த கால நிகழ்வுகள் மூலம் புரிந்து கொள்ள முடியும். ஆட்சியாளர்களின் தவறுகளையும் பிழைகளையும் முஸ்லிம் சமூகம் சார்பாகத் தட்டிக் கேட்பதற்கு, அரசாங்கத்துக்கு வெளியில், அந்தச் சமூகம் சார்பாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினரேனும் இல்லை என்பது ஆபத்தானதாகும்.

எனவே, மாகாண சபைத் தேர்தலின்போது முஸ்லிம் அரசியல் கட்சிகள், இது குறித்தும் கவனம் செலுத்துதல் வேண்டும். தனது முட்டைகளை எல்லாக் கூடைகளுக்குள்ளும் பிரித்துப் போடுவது பற்றி, முஸ்லிம் சமூகம் யோசிக்க வேண்டும். தேர்தல் கூட்டுகளும் அதனை மனதில் வைத்து அமைக்கப்படுதல் அவசியமாகும்.

இன்னொருபுறமாக, ஒவ்வொரு தேர்தல்களிலும் வாக்களிக்கும் இயந்திரங்களாக மட்டுமே, முஸ்லிம் மக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையையும் இங்கு சுட்டிக்காட்டுதல் அவசியமாகும். நல்லாட்சி அமைவதற்கும், அமைந்த பின்னரும் நடந்துள்ள தேர்தல்களில், முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

உதாரணமாக, அம்பாறை மாவட்டம் நுரைச்சோலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 வீடுகளையும் பயனாளிகளுக்கு வழங்கப் போவதாக ஜனாதிபதி உறுதியளித்து, இரண்டு வருடங்கள் கடந்து விட்ட போதும், இதுவரை அது நடக்கவில்லை. சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கென நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டத்துக்காக, சவுதி அரேபியா நிதியுதவி வழங்கியிருந்தது.

இதேவேளை, ஒலுவில் பிரதேசத்தில் மக்களின் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்களைச் சுவீகரித்து, நிர்மாணிக்கப்பட்ட துறைமுகம் இன்னும் இயங்காமலேயே உள்ளது. இந்தத் துறைமுகத்தைச் செயற்பட வைக்கப் போவதாகவும், துறைமுகப் பிராந்தியத்தை வர்த்தக வலயமாக மாற்றப் போவதாகவும், தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியிருந்தமையும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

ஆனால், தனது வாக்குறுதி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இப்படி அபிவிருத்தி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்ட, எந்தவொரு பெறுமானம்மிக்க வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே, மாகாண சபைத் தேர்தலொன்றை முஸ்லிம் சமூகம் சந்திக்கப் போகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழர் சமூகமானது, பல்வேறு பலன்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. அரச படைகள் பிடித்து வைத்திருந்த தமிழர்களின் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்கள், விடுவிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றிலுள்ள தமிழர் சமூகம் சார்பான அரசியல் கட்சிகள், இதற்காகப் பெரும் முயற்சிகளை எடுத்திருந்தன. ஆனால், கிழக்கு மாகாணத்தில் அரச இயந்திரங்களால் அபகரிக்கப்பட்டுள்ள, முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிலங்கள், நல்லாட்சி அரசாங்கம் வந்த பிறகு, விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆக, முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும், வெற்று வாக்குறுதிகளாக உள்ள நிலையிலேயே, அடுத்தடுத்துத் தேர்தல்கள் வருகின்றன. அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின்போதும், முஸ்லிம் மக்களிடையே வாக்குறுதிகள் தாறுமாறாக அள்ளி வீசப்பட்டிருந்தமையும் நினைவு கொள்ளத்தக்கது.

எனவே, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட ஆகக்குறைந்த வாக்குறுதிகளாவது நிறைவேற்றப்படும் வரையிலாவது, ஆட்சியாளர்களையும் ஆட்சியில் பங்காளிகளாக உள்ள முஸ்லிம் கட்சிகளையும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் புறக்கணிப்பதற்கான அரசியல் ஓர்மம், முஸ்லிம் சமூகத்துக்கு இருக்குமா என்கிற கேள்வி இங்கு முக்கியமானதாகும்.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மீளமீள வழங்கிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளையும் அவர்கள் சார்ந்த கட்சிகளையும் தொடர்ந்தும் ஒரு சமூகம் சொரணையின்றி ஆதரித்துக் கொண்டிருக்கலாமா என்ற கேள்வியும் எழுகிறது.

ஒருவர் நம்மை ‘முட்டாள்’ என்று சொல்லும் போது வருகின்ற கோபம், அரசியலில் நம்மை மீளமீள ஏமாற்றுகின்றவர்கள் மீது, ஏன் நமக்கு வருவதில்லை என்பது குறித்து, நம்மில் அதிகமானோர் ஏன் சிந்திப்பதேயில்லை?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வௌ்ளத்துக்கு மத்தியில் அகதி முகாமில் நடைபெற்ற திருமணம்!!(உலக செய்தி)
Next post சிறுநீரகம் காப்போம்!!(மருத்துவம்)