உங்கள் நாப்கின் தரமானதா?(மருத்துவம்)
தொலைக்காட்சிகளில் வரும் கவர்ச்சி கரமான விளம்பரங்களைப் பார்த்து நாப்கின்களை வாங்குபவர்களாகவே பெரும்பாலும் நாம் இருக்கிறோம். ஆனால் நாம் வாங்கும் நாப்கின்கள் தரமானதா என்பதைப் பற்றி என்றாவது யோசித்திருக்கிறோமா?பெண்கள் தங்கள் அழகை மேம்படுத்தவும், அழகானவர்களாய் தம்மை வெளிக் காட்டவும் அழகு சாதனப் பொருட்களில் துவங்கி, ஆடை, அணிகலன், காலணி எனப் பார்த்துப் பார்த்து வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை, நாப்கின்களை வாங்குவதில் காட்டுகிறோமா என்றால், பெரும்பாலும் அதைப் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாதவர்களாகவே இருக்கிறோம்.
இயற்கை நியதியின் காரணமாக, மாதச் சுழற்சியாய் பெண்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைத்து, ஃபீல் ஃப்ரீ பெண்ணாய், தன்னம்பிக்கையுடன் இயங்க வைப்பதில் முக்கியப் பங்காற்றும் நாப்கின்களின் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு குறித்து அறிய மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவராக பணியில் இருக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த டாக்டர் மஞ்சுளாவிடம் பேசியபோது…பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் நான்கு விதமான லேயர்களால் வடிவமைக்கப்படுகிறது.
*நாப்கினின் மேல் பகுதியான முதல் லேயர் சுத்திகரிக்கப்படாத பிளாஸ்டிக்கால் தயாரானது.
*இரண்டாவது லேயர் மறுசுழற்சி செய்யப்பட்ட டிஸ்யூ பேப்பர் கொண்டு தயாரானது. பார்க்க வெள்ளை நிறத்தில் பளிச்சென்று தெரிய வேண்டும் என்பதற்காகவே டிஸ்யூ பேப்பரை ப்ளீச் செய்வார்கள். எல்லோரும் அறிந்த ஒன்றுதான், ப்ளீச் என்றாலே அது கெமிக்கல் இல்லாமல் செய்ய இயலாது.
*மூன்றாவது லேயர் என்பது ஜெல். இந்த லேயர்தான் ஈரப்பதத்தை அதிக அளவில் தாங்கக் கூடிய சக்தி கொண்டது. பெட்ரோலியத்தின் என்ட் ஃபுராடக்ட்தான் இந்த ஜெல். இதைப் பயன்படுத்திதான் ஈரத்தை உள்வாங்கக் கூடிய மூன்றாவது லேயர் தயாராகிறது.
*கடைசியாக இருக்கும் நான்காவது லேயர் பாலிதின் லேயர். இது ஆன்டி லீக் ஸ்டெரெயின் ஆகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படுகிறது.
இந்த நான்கு அடுக்குகளிலுமே மிகமிக நுண் துகள்களாக, அதாவது மிக மெல்லிய நுண் துகள்களாக வேதியல் பொருட்கள் கலந்திருக்கும். இந்த வேதியல் பொருட்கள் மீது ஈரத்தன்மை படும்போது வேறுவிதமான வேதிப்பொருளாக அது உருமாறுகிறது. இந்த மாற்றம் அடைந்த வேதிப்பொருள், பெண்களின் பிறப்பு உறுப்பு வழியாக உடலில் பரவும்போது தீங்குகள் ஏற்படும்.உடலின் மற்ற பகுதிகளில் இருக்கும் தோலை விட, வஜினா மற்றும் வல்வாவில் உள்ள தோல் மிகவும் மென்மையான தன்மை கொண்டதாக இருக்கும். மென்தன்மை காரணமாக இது எளிதில் பாதிப்படையக் கூடியது. ப்ளீச் செய்ய பயன்படுத்தப்படும் கெமிக்கல், ஈரப்பதம் படும்போது உண்டாகும் வேதியல் மாற்றத்தினால், வஜினாவில் உள்ள மென்தன்மையான தோல் பாதிப்படையும். அதன் வழியாக நுண்கிருமிகள் உள்ளே ஊடுருவி கர்ப்பப்பை கருக்குழாய்களையும் சேர்த்தே பாதிப்படைய செய்யும். இது பெண்களுக்கு குழந்தையின்மையை ஏற்படுத்துவதற்குக்கூட காரணமாக அமைகின்றது.
ஜெல் லேயரில் இருக்கக்கூடிய பெட்ரோலியம் பொருளின் மீது ஈரத் தன்மை படும்போது டயாக்சின் என்கிற வேதிப் பொருளாக உருமாறுகிறது. டயாக்சின் கேன்சரை உருவாக்கக்கூடிய ஒரு வேதிப் பொருள். இது அதிக அளவில் பயன்படுத்தும்போது உடலில் அதிக அளவில் பரவி புற்றுநோயை உண்டாக்க வழிவகுக்கும்.பெண்கள் இடைவெளியின்றி 6 முதல் 12 மணி நேரம் வரை கூட வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அந்த மாதிரியான சூழலில், அடிக்கடி நாப்கின்களை மாற்றுவதென்பது அவர்களுக்கு இயலாத காரியமாக உள்ளது. இந்த மாதிரியான சூழல்களால், சந்தைகளில் எளிதாகக் கிடைக்கக்கூடிய, நீண்ட நேரம் தாங்கக் கூடிய தன்மை கொண்ட அல்ட்ரா தின், எக்ஸ்ட்ரா லார்ஜ் போன்ற நாப்கின்களை விளம்பரங்களைப் பார்த்து வாங்கி பயன்படுத்துகிறார்கள். எந்தவகையான நாப்கினாக இருந்தாலும் 2 அல்லது 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் பெண்கள் மாற்றுதல் வேண்டும். பயன்படுத்திய நாப்கின் அதிகமாக நனையவில்லை என்றாலும் அல்லது இரவு நேரமாக இருந்தாலும், நாப்கினை அடிக்கடி மாற்றுவதே நல்லது.
என்ன, நாம் சாதாரணமானது என நினைத்து பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் நாப்கினில் இத்தனை இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறதா? நாப்கினை வாங்கும்போது கண்களை மூடிக் கொண்டு ஏதோ ஒரு பிராண்ட் என வாங்காமல், அழகாக பேக் செய்யப்பட்டுள்ள இந்த நாப்கின் எதனால் செய்யப்பட்டுள்ளது? அதன் மூலக் கூறுகள் என்னென்ன என்பதை படித்துப் பார்த்து மிகவும் கவனமாக வாங்க வேண்டும். அதிலும் குறிப்பாக டயாக்சின் ஃப்ரீயாக உள்ளதா, அன்ப்ளீச்டா, ஐ.எஸ்.ஐ. தரச் சான்று பெற்றதா என்பவற்றைக் கவனித்துப் பார்த்து வாங்குதல் மிகவும் நல்லது.ப்ளீச் செய்யப்படாத நாப்கின்களை வாங்கி பயன்படுத்தும்போது, நாப்கின்கள் ஈரத்தன்மையோடு இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அடிக்கடி மாற்ற வேண்டிய சூழல் மற்றும் ஒரு சில சிரமங்கள் ஏற்படலாம். உடலின் நன்மைகளைகருத்தில் கொண்டால் இந்த சின்னச் சின்ன சிரமங்கள் நமக்கு ஒன்றுமே இல்லை.
– மகேஸ்வரி
டயப்பர்…
கு ழந்தைகளுக்காகப் பயன்படுத்தும் டயப்பரும் நாப்கினைப் போன்றதே. பெண்கள் பயன்படுத்தும் நாப்கினில் இருப்பது போன்றே இதிலும் நான்குவிதமான லேயர்கள் உண்டு. நாப்கினில் இருப்பது போன்றே டயப்பரிலும் அதே ரசாயனப் பொருட்களே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு மேலோ அல்லது குறிப்பிட்ட வயதிற்கு மேலோ டயப்பரை தொடர்ந்து குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் அது அவர்களை கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிக்கத் துவங்கும். தொடர்ந்து டயப்பரை பயன்படுத்தும்போது சிறுநீரகத் தொற்று அபாயம் குழந்தைகளுக்கு ஏற்படும். 3 அல்லது 4 வயது வரை டயப்பரை பயன்படுத்தி பழகிய குழந்தைகள் சிறுநீரைக் கட்டுப்படுத்துவதற்கு பழக்கப்படாமலே இருப்பார்கள். குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போதே பெற்றோர்கள் அல்லது குழந்தையை வளர்ப்பவர்கள் டயப்பர் பயன்பாட்டைக் குறைத்து, சிறுநீர் கழிக்க, கழிப்பறைகளுக்கு அழைத்துச்சென்று பழக்கப்படுத்துதலே நல்லது
Average Rating