திராவிட இயக்கம் தாக்குப் பிடிக்குமா?( கட்டுரை)
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவருமான கலைஞர் மு. கருணாநிதியின் மறைவு, தமிழக அரசியலில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பெரியாருக்குப் பிறகு, திராவிட இயக்கத்தின் முன்னணித் தலைவர்களாக இருந்த அண்ணா,
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் முன்பே மறைந்து விட்ட நிலையில், கடைசித் தூணாக இருந்த கலைஞர் கருணாநிதியும் மறைந்து விட்டார் என்ற செய்தி, திராவிட இயக்கச் சிந்தனையாளர்களுக்கும் திராவிட சித்தாந்தத்துக்கும் பேரிழப்பாக அமைந்திருக்கிறது.
சமத்துவத்தின் குரலாகவும் தாய்மொழி தமிழின் உற்ற பாதுகாவலர்களாகவும் தமிழர்களுக்குத் தன்மான உணர்வை ஏற்படுத்திச் சுயமரியாதைக் கொள்கைகளின் சுடர்களாக விளங்கிய, அண்ணா போன்ற திராவிட இயக்கத் தலைவர்கள் வரிசையில், கலைஞர் கருணாநிதி மிக முக்கியமான தலைவராகத் திகழ்கிறார்.
“திராவிட இயக்கம்” நூற்றாண்டு காலத்தைக் கடந்து விட்டது. அந்த இயக்கத்தின் தலைவர்களும் கடந்து சென்று விட்டார்கள் என்பதுதான், தற்போதையை நிலைமை. “கடவுள் மறுப்பு” என்பதில் உறுதியாக இருந்தார் பெரியார். ஆனால் “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்று விலகிச் சென்றார் அண்ணா.
அதையே கலைஞர் கருணாநிதியும் கடைப்பிடித்தாலும், அவ்வப்போது பெரியாரின் “கடவுள் மறுப்பு” கொள்கையைச் சுட்டிக்காட்டத் தவறியதில்லை. ஆனால் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும், அதிலிருந்து மாறுபட்டு முற்றிலும், ஆன்மீக அரசியலை முன்வைத்து, திராவிட இயக்கத்தின் ஏனைய கொள்கைகளைக் கடைப்பிடித்தனர்.
பெரியாருடையது “தேர்தல் அல்லாத அரசியல்” என்றால், அண்ணா உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் “தேர்தல் பாதையை” தேர்வுசெய்தார்கள். தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்பதை, கட்சித் தொண்டர்களையும் மக்களையும் அழைத்து மாநாடு நடத்தி, அந்த மாநாட்டில் வாக்குப் பெட்டி வைத்து, தேர்தல் களத்துக்கு வந்தது திராவிட முன்னேற்றக் கழகம்.
அதே சமயத்தில், “சமூக நீதி” என்ற திராவிட இயக்கக் கொள்கையில் அண்ணா, கருணாநிதி,
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அனைவருமே, ஒரே பக்கத்தில் நின்றார்கள். முதலமைச்சராக இருந்த நேரங்களில் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூவருமே, இட ஒதுக்கீட்டை உயர்த்தியிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் “சுயமரியாதை” கொள்கை விடயத்தில், அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும் மட்டுமே, கடைசி வரை உறுதியாக இருந்தார்கள். திராவிடத்துக்கு மாற்றாக “அண்ணாயிசம்” ஒன்றை, அ.தி.மு.கவை ஆரம்பித்த போது எம்.ஜி.ஆர் அறிவித்தார்.
ஆனால் அது, அறிவித்த இடத்திலிருந்து முன்செல்லவில்லை. தமிழ்மொழி என்று வரும் போது, திராவிட இயக்கத்தின் நான்கு முதலமைச்சர்களுமே, ஒரே நேர்கோட்டில் நின்றார்கள். உலகத்தமிழ் மாநாடு நடத்துவதாக இருந்தாலும் சரி, தமிழ் செம்மொழிக் கோரிக்கை வைப்பதாக இருந்தாலும் சரி, உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பதாக இருந்தாலும் சரி, ஒரே பார்வை இருந்தது.
ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் என்ற மும்மொழித்திட்டம் மாற்றப்பட்டு, தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கை, அண்ணாவின் முதல் சட்டமாக இயற்றப்பட்டமை, திராவிட இயக்கத்தின் முதல் சாதனை என்றே சொல்லலாம்.
கடவுள் மறுப்புத் தவிர, திராவிட இயக்கத்தின் அனைத்துக் கொள்கைகளிலும், திராவிட இயக்கத்தின் சார்பில் வந்த முதலமைச்சர் ஓர் அணியில் நின்றார்கள். திராவிட இயக்கக் கொள்கைகளை அமுல்படுத்தும் வழிகளில் வேறுபாடுகள் இருந்ததே தவிர, கொள்கைகளைக் கைவிட, எந்த முதலமைச்சரும் முன்வரவில்லை என்பதை, பொன் விழாக் கண்ட திராவிட இயக்க ஆட்சியில் காணலாம்.
தேசியக் கட்சிகளின் பிறப்பிடமாக இருந்த தமிழ்நாட்டில், முதன்முதலில் திராவிட இயக்க சிந்தனைகள்தான், மாநிலக் கட்சிகளுக்கு மதிப்பைப் கொடுத்தன. அப்படித்தான் தேர்தலில் போட்டியிடாத திராவிடர் கழகமாக இருந்தாலும், தேர்தலில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும், அ.தி.மு.கவாக இருந்தாலும், திராவிட சித்தாந்ததின் மீது நின்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றைக்கும் கூட ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன.
ஒரு நூற்றாண்டு கால திராவிட சித்தாந்தம், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது. திராவிட இயக்கம் காலூன்ற, “பிராமணரல்லாத இயக்கம்”, தமிழ் மொழி முன்னேற்றம், சாதி ஒழிப்பு, மாணவர் எழுச்சி என்று பல்வேறு வியூகங்களை முன்வைத்து தேர்தல் களத்துக்கு வந்தாலும், மாநில உரிமைகள் என்பதை முன்வைத்தும், “வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” என்ற கோஷத்தை விதைத்தும், தமிழ்நாடடில் திராவிட சித்தாந்தத்துக்கு எதிராக இருந்த தேசியக் கட்சிகளை, திராவிட இயக்கத் தலைவர்கள் தோற்கடித்தனர் என்றால், அதில் முதல் வரிசையில் நிற்பவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர்தான். அடுத்த வரிசையில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இருப்பார்கள்.
ஆகவே சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகம், “மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி” என்று அடுத்தடுத்து பல்வேறு முழக்கங்களை முன்னெடுத்து, தமிழகத்தை திராவிட இயக்கத்தின் பிடியில் கட்டிப் போட்டிருந்த அனைத்து முதல் தலைமுறைத் தலைவர்களும் விடைபெற்று விட்டார்கள்.
இனி திராவிட இயக்கத்தின் கொள்கைகளை ஏந்திச் செல்ல வேண்டிய பொறுப்பில், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வும், எடப்பாடி பழனிசாமி – ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.கவும் இருக்கின்றன.
அதில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க பெரும் சோதனையில் சிக்கியுள்ளது. இன்றைக்கு, கலைஞர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகும் எஞ்சியிருக்கின்ற திராவிட இயக்கமாக, தி.மு.க மட்டுமே முன்னணியில் நிற்கிறது.
கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு, தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரான பிரதமர் நரேந்திர மோடி வந்தார். அதேபோல், ஜெயலலிதா மறைந்த போதும் பிரதமர் வந்தார். மத்திய அமைச்சர்கள் எல்லாம் வந்தார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும், இருவரது மரணத்துக்கும் வந்தார். இறுதிச் சடங்கு முடியும் வரை, மயானம் வரை வந்து விட்டு போனார்.
திராவிட இயக்கத்தின் தலைவர்களின் மறைவில், தேசியக் கட்சிகளின் தலைவர்கள் குவிந்தமைக்கு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தது, ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இல்லாமலேயே, இத்தனை தலைவர்கள் சென்னையில் முகாமிட்டார்கள். இந்தப் பயணங்களில் உள்ள செய்தி, ஒரு பக்கம் இரங்கல் தெரிவிப்பதாக இருந்தாலும், திராவிட இயக்கங்களான தி.மு.கவிடமும் அ.தி.மு.கவிடமும் பிரிந்து நிற்கும் ஒட்டுமொத்த வாக்காளர்களையும், தங்களின் தேசியக் கட்சிகள் பக்கமாகத் திருப்ப முடியுமா என்ற நோக்கமும் அடக்கம் என்பதை மறந்துவிட முடியாது.
ஏனென்றால், தமிழக மக்கள், தேசியக் கட்சியான காங்கிரஸ் பக்கம் உறுதியாக, 1967 வரை நின்றவர்கள். “தன்மான உணர்வு”, “மொழி கிளர்ச்சி” போன்றவற்றால் தேசிய நீரோட்டத்தில் இருந்து தமிழக வாக்காளர்களை திராவிட நீரோட்டத்துக்கு கொண்டு வந்தது திராவிட இயக்கம் என்பது அவர்களுக்குத் தெரியும்.
இந்தத் திராவிட இயக்கத்திடமிருந்து தமிழக மக்களைப் பிரித்து எடுத்துச் செல்ல, கூட்டணிகள் மூலமும் அதிகாரத்தின் மூலமும், தேசியக் கட்சிகளான பா.ஜ.க.வும் காங்கிரஸும், மத்திய ஆட்சியில் இருந்த போது எடுத்த எந்த முயற்சிகளும் பயனளிக்கவில்லை.
ஆகவே, அந்த திராவிட இயக்க வாக்காளர்களின் தலைவர்களாகத் திகழ்ந்த கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மரணத்துக்கு அளிக்கும் முக்கியத்துவம் மூலம், ஓர் அனுதாபத்தை அந்த வாக்காளர்களிடம் பெற்று விட, தேசிய கட்சிகள் முயல்கின்றன.
குறிப்பாக, ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் உள்ளிட்ட பல அவதாரங்கள், திராவிட இயக்க வாக்குகளைப் பிரிக்க தோற்றுவிக்கப்பட்டாலும், மரணம் அடைந்த தலைவர்களுக்கு செலுத்தும் மரியாதை, தங்கள் பக்கம் அந்த வாக்காளர்களை இழுக்கும் என்று, தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நம்புகிறார்கள்.
அதன் ஓர் அங்கமாகத்தான், முன்னாள் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு, தேசிய அளவில் துக்கம் அனுசரிப்பு, உறுப்பினராகவே இல்லை என்றாலும் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இரங்கல் தெரிவித்து ஒத்திவைப்பு உள்ளிட்ட பல மரியாதைகளை, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசாங்கம் செய்திருக்கிறது.
அதே நேரத்தில் தமிழக அரசியலைத் தங்களுக்குள் வைத்துக் கொள்ள நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதிதான், கலைஞர் கருணாநிதிக்கு, மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய அனுமதி மறுத்ததும், அதை எதிர்த்து நீதிமன்றம் சென்று தி.மு.க. உத்தரவிட்டதும் நிகழ்ந்தது.
தி.மு.க.வுக்கு அ.தி.மு.கவுக்கும் இடையிலான போட்டியை விஸ்வரூபமாக்கி, திராவிட இயக்கச் சித்தாந்தத்துக்குள் தமிழ்நாட்டை வைத்துக் கொள்ள, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் ஸ்டாலினும் அ.தி.மு.கவை வழிநடத்தும் எடப்பாடி பழனிசாமி – ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் முனைப்புக் காட்டுகிறார்கள்.
ஆனால் தூண்களாக திகழ்ந்த திராவிட இயக்கத் தலைவர்களை இழந்துள்ள திராவிட இயக்கம், தேசியக் கட்சிகளின் வலைவீச்சைச் சமாளித்துத் தாக்குப் பிடிக்குமா என்பது, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி – ஓ. பன்னீர்செல்வம் போன்ற நிகழ்காலத் தலைவர்களின் கையில் இருக்கிறது.
தமிழ்நாட்டில், திராவிடத்தைத் தேசியக் கட்சிகள் வெல்லுமா என்பது தான், இப்போது எழுந்துள்ள கேள்வி.
Average Rating