ஆசிரியர்களுக்கு எத்தனைத் தேர்வு?(மகளிர் பக்கம்)
ஆசிரியர் பயிற்சி பெற்று தேர்வெழுதி வெற்றிப் பெற்றவர்களுக்கு டெட் என ஒரு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், வெற்றிப்பெற்றவர்கள் என்றைக்காவது தனக்கு பணி கிடைக்கும் என்ற நினைப் பில் இருந்தனர். தற்போது, டெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால், இந்த வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட்டு மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே பணி நியமனம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது ஆசிரியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்று பணிக்காகக் காத்திருக்கும் குமாரின் கருத்துக்கள்…
‘‘நான் ஒரு மாற்றுத்திறனாளி. டெட் மற்றும் முதுநிலை ஆசிரியர் தேர்வுஆகியவற்றில் வெற்றிப்பெற்றுள்ளேன். ஆனால், இதுவரை பணி வழங்கப் படவில்லை. இந்த நிலையில், இன்னுமொரு போட்டித் தேர்வு என்பது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இப்படி தேர்வு தேர்வு எனத் தேர்வுகள் மட்டுமே நடத்திக் கொண்டிருப்பதால் என் போன்ற மாற்றுத் திறனாளிகளும், பெண்களும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். முன்பு ஆசிரியர் பணிக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் நடைபெற்றது. பின் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றால்தான் பணி என்ற நிலை வந்தது. 2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற அனைவருக்கும் பணி கிடைத்தது. பின் 2013ல் அதிகம் பேர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றதால் வெயிட்டேஜ் முறையில் அவரின் கல்வித் தகுதியோடு தகுதித் தேர்வு மதிப்பெண் கணக்கில் சேர்க்கப்பட்டு பணி நியமனம் நடைபெற்றது. பின்னர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை அளித்து 90ல் இருந்து 82 ஆக குறைக்கப்பட்டது.
இப்படி ஆண்டுதோறும் குழப்பி இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு காலிப் பணியிடம் ஏற்படும்போது தனியே ஒரு போட்டித் தேர்வு நடத்தி அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடக்கும் ஆந்திர மாநிலத்தின் முறையை இங்கேயும் பின்பற்றுவதாகக் கூறி அரசாணை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன் ஆந்திராவை இவர்கள் பார்த்ததில்லையா? 2017 தகுதித் தேர்வில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்கள் 5,12,260 பேரும், இடைநிலை ஆசிரியர்கள் 2,41,815 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்… 2013, 2014, 2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கை 82,000 பேர் ( இதில் மாற்றுத்திறனாளிகள் தோராயமாக 1000 பேர்) இதில் இன்னும் ஒரு கொடுமையான விஷயம் தகுதித் தேர்வு சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டும் தான் செல்லுபடியாகும்.
2013ல் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு காலக்கெடு முடிய ஓராண்டு மட்டுமே உள்ளது. எனவே தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் முன்னுரிமை கோரி அமைச்சரிடம் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்ததால்… கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டதால்… மாணவர் எண்ணிக்கை குறைந்து ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. எனவே அரசுப் பள்ளிகளை இழுத்து மூடும் நிலைக்கு வந்து விட்டது. இப்போதைக்கு தப்பித்துக் கொள்ள தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்களுக்கு மற்றுமொரு தேர்வு வைக்கிறது.எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியர் பணி நியமனம் செய்ய வருடத்துக்கு வருடம் முறையை மாற்றி மாற்றி பின்பற்றி குழப்புவதா? ஏற்கனவே பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் முறைகேடு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் முறைகேடு என்று நடக்கும்போது இந்தத் தேர்வு மட்டும் முறையாக நடக்கவா போகிறது? இதனால் தமிழ்நாடு முழுவதும் பணிக்காகக் காத்திருக்கும் சுமார் 8 லட்சம் பேர் கண்ணீர் சிந்துகின்றனர். அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிட்டது. இதற்கு ஒரே தீர்வு கல்வியை முழுவதும் அரசுடமையாக்குவதைத்தவிர வேறு வழியில்லை’’ என்கிறார்.
Average Rating