காற்றின் வழியே செவிகளுக்கு…!!!(மகளிர் பக்கம்)

Read Time:20 Minute, 9 Second

வானொலி நிலைய இயக்குநராய் ஒரு பெண் தலைமை ஏற்க, முழுக்க முழுக்க பெண்ஆர்.ஜே.க்களைக் கொண்டு 93.9 பண்பலையில் சூரியன் எஃப்.எம். சேலம் நகரில் புதிதாய் தன் அலைவரிசையை துவங்கியுள்ளது. ‘கேளுங்க… கேளுங்க… கேட்டுக்கிட்டே இருங்க…’ என, ‘பசங்க மட்டும்தான் அட்ராசிட்டி பண்ணுவாங்களா என்ன? விட்டா நாங்களும் அதைவிட பெரிசாவே செய்வோம்’ என களமிறங்கி இருக்கிறார்கள் இந்த ரேடியோ ஜாக்கி பெண்கள் படை. ‘இனி என்னங்க 18 பட்டி ஜில்லாவும் கிடுகிடுக்க, வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் எங்கள் ரகளையால் சேலம் நகரம் அதிரோ அதிருன்னு அதிரப் போகுது’ என்கின்றனர்.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, புதுச்சேரி, தூத்துக்குடி என நிறைய இடங்களில் மாஸ் காட்டிய சூரியன் எஃப்.எம். இப்போது சேலத்தில் பெண் ஆர்.ஜே.க்களை மட்டும் கொண்டு தன் மாஸ் எஃப்.எம். பண்பலையைத் தெறிக்கவிட்டுள்ளது. இந்தப் புது முயற்சி குறித்து, சூரியன் எஃப்.எம் 93.9 பண்பலையின் நிலைய இயக்குநர் எழில்யாவிடம் பேசியபோது…

“தென்தமிழ்நாட்டில் பெண்ஆர்.ஜே.க்களைக் கொண்டு உருவாகியுள்ள முதல் ஸ்டேஷன் என்கிற பெருமையோடு, இதை தலைமையேற்றிருக்கிற நானும் பெண்” எனப் பேசத்துவங்கினார் எழில்யா. “அடிப்படையில் நான் பொறியியல் பட்டதாரி. 12 ஆண்டுகள் கல்லூரி பேராசிரியராக இருந்ததால், பேசுவது இயல்பாக எனக்கு வந்தது. ஒரு ஆர்.ஜே.வாக களத்தில் இறங்கலாம் என முடிவு செய்தேன். என் படிப்பு, திறமை, ஆற்றல், எல்லாத்தையும் பார்த்து பெண் ஆர்.ஜேக்களை வழிநடத்தும் புரோக்ராம்ஹட் என்கிற பொறுப்போடு, சேலம் வானொலியின் மொத்த கண்ட்ரோலையும் இந்தான்னு என்கிட்டயே கொடுத்துட்டாங்க” எனச் சிரிக்கிறார்.

“பணியிடங்களில் வேலையில் ஆரம்பித்து, சம்பளம்… இத்தியாதி இத்தியாதி என எல்லாத்திலும் பெண்களுக்கு ஒரு சமமற்ற தன்மை இருக்கும்.ஆண்கள் கம்யூனிகேட் செய்யுற எல்லாத்தையும் அரட்டையில் துவங்கி, தகவல், தொழில்நுட்பம்னு நாங்களும் செய்வோம்ல என நிரூபிச்சுட்டு இருக்கோம். அதுக்காக இது பெண்களுக்கு மட்டுமேயான நிகழ்ச்சிகளைத் தரும் ஃப்ளாட்பார்ம்னு நினைக்காதீங்க, ஆர்.ஜே.மட்டும்தான் பெண்கள். மற்றபடி நாங்கள் சொல்கிற தகவல்கள் எல்லோருக்குமானதுதான். பெண்களாக இருந்தாலும் பசங்க மனதை எங்களாலும் புரிஞ்சுக்க முடியும். ஆண்களின் சோகம், சுகம், துக்கம், சிரிப்பு என எல்லாத்தையும் இதில் பேசுறோம். ஒரு வட்டத்திற்குள் சுற்றாமல், சிட்டியில் ஆரம்பிச்சு சினிமா, கிரிக்கெட், மியூசிக்னு கலந்து கட்டுறோம். எங்கள் பெண் ஆர்.ஜே.க்கள் எல்லாருமே சேலத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு சில ஆர்.ஜே.வெளியில் சென்று மக்களோடு மக்களா கலந்து சிட்டி விசயங்களைத் திரட்டி, திகட்டத்திகட்டக் கொடுக்குறாங்க” என்றார்.

“எனக்கு எப்பவுமே ஊர்சுத்துறதுன்னா ரொம்ப பிடிக்கும்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் ஆர்.ஜே.மீனா. “என் விருப்பத்துக்கு ஏற்றமாதிரியே வேலையும் கிடைச்சா அதைவிட சந்தோஷம் என்னங்க இருக்கு. அல்வா சாப்பிடுற மாதிரி லபக்குன்னு பிடிச்சுக்கிட்டேன். புதுப்புது இடங்களுக்குச் செல்வது, அங்கிருக்கும் ஸ்பெஷலான விசயங்களைத் தெரிந்துகொள்வதுன்னு, சாப்பாட்டில் ஆரம்பிச்சு எதையும் விடுறது இல்லை. எங்கே சாப்பிட்டா, என்ன டேஸ்ட்ல உணவு கிடைக்கும் என்கிற அப்பேட்ல துவங்கி, அந்த இடத்தோட அத்தனை சிறப்பையும் அப்படியே கொடுத்துருவேன். ரூட்நம்பர் 93.9 என்கிற தலைப்பில் சேலம் மாடர்ன் தியேட்டரில் துவங்கி, சேலத்தின் இண்டு இடுக்கு சந்து பொந்து எல்லாத்துக்குள்ளையும் நுழைஞ்சு செய்தியை செவிகளுக்குள் நுழைக்கும் அரும்பெரும் பணி என்னுடையது” எனச் சிரிக்கிறார். “நான் வெளியில் இருந்து லைவ்வா தருகிற தகவல்களை கோ-ஆர்.ஜே. பவித்ரா ஸ்டேஷன்ல இருந்து தொகுத்து அவங்க ஸ்டைல்ல கொடுப்பாங்க. மக்களோட மக்களா பேசி, அவர்களையும் பங்கேற்க வைக்கிறோம். சேலத்தில் இவ்வளவு விசயம் இருக்கானு வியப்பாவும், சேலஞ்சிங்காவும் இருக்கும்.

ரூட் நம்பர் நிகழ்ச்சியில் சொன்னதுக்கு பிறகுதான் எங்களுக்கே இந்த விசயம் தெரிய வருதுன்னும், எங்க ஏரியாவுக்கு வாங்க, எங்க இடத்துக்கு வாங்கன்னு சிலரும் அழைக்க ஆரம்பிச்சுட்டாங்க” என சிரிக்கிறார்.“3 வருஷம் சேலத்தில் உள்ள லோக்கல் சேனலில் வீ.ஜே.வாக இருந்தேன்.ஆர்.ஜே.வேலைக்கு, சேலம் சூரியன் எஃப்.எம். ஆள் எடுப்பதாக அறிந்து ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். இப்ப உங்க முன்னாடி ஆர்.ஜே.வா நிற்கிறேன். நீங்க ஆர்.ஜே.ஆயிட்டீங்க என்ற தகவல் என் செல்போன்ல வந்தப்ப நான் கத்துன கத்து இருக்கே… ‘என்ன சொல்றீங்க, என்ன சொல்றீங்கன்னு’ சொன்னவுங்ககிட்டே கத்திட்டேன். அம்புட்டு பிடிச்ச வேலை எனக்கு இது. எனக்கு தெரிஞ்ச விஷயத்தை சேலம் மக்களுக்கே சொல்றேன். அந்த சந்தோஷம் அனுபவிக்கிறவுங்களுக்குத்தான் தெரியும். படித்தது எம்.ஏ. லிட்ரேச்சர். சொந்த ஊர் ஆந்திரான்னாலும் பிறந்து வளர்ந்தது சேலம். ஆர்.ஜே. வீ.ஜே.வேலை என்றால் சென்னையை நோக்கித்தான் போகணும். நாம படிச்சு வளர்ந்த ஊருலே அதுக்கான வாய்ப்பு வாசல் தேடி வந்தால் விடுவோமா நாங்க. முன்னாடி டி.வி.யில பேசும்போது ‘அக்காடா’ன்னு போட்டோ எடுக்க பசங்க ரவுண்டு கட்டுவாங்க… இப்ப எஃப்.எம்.ல பேச ஆரம்பிச்சதும், நீங்கதான்ஆர்.ஜே. மீனாவான்னு ஆச்சரியம் காட்டுறாங்க. நாம நேயர்களுக்காக பிரசன்ட் பண்றத மகிழ்ச்சியா, ஹேப்பியா, சோர்வே இல்லாமல் ரசனையோடு சொன்னாப் போதும். நாமதாங்க சிறந்த ஆர்.ஜே.” -படபடவெனப் பேசி முடித்தார்.

“நான் ஆர்.ஜே.மித்ரா. பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிச்சிருக்கேன். சின்ன வயதில் இருந்து சோஷியல் ஈவென்ட்ஸ் நிகழ்வில் நிறைய கலந்துக்குவேன். சேலம் தினகரனில் 3 வருடமாக சப்எடிட்டராக இருந்தேன். எழுத்தில் செய்ததை குரல் மூலமாக செய்கிறேன். பிறந்தோம் வளர்ந்தோம்னு இல்லாமல், இருக்குற இடத்துல நல்ல விசயத்தை நாலு பேருக்கு விதைக்கிறோம் என்ற எண்ணம் மன நிறைவா இருக்கு.காலையில் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ன்னு ஒரு ஷோ பண்றேன். அதில் பெரிய பாப்பா குரல் மாடுலேஷன் என்னுடையது. கொங்கு தமிழ் கலந்த கிராமத்து பெண் கேரக்டர். என்னுடன் பேசுகிற இன்னொருஆர்.ஜே. படித்த சிட்டி பொண்ணாப் பேசுவாங்க. மீண்டும் மதியம் 1 மணியில் இருந்து 3 மணிவரை ‘இது எங்க ஏரியா..’ என்கிற ஷோ தொகுத்து வழங்குகிறேன். பெண்கள் என்றால் ரெஸிபி, ப்யூட்டி டிப்ஸ், ஹெல்த் டிப்ஸ் இதுதான் இருக்கணுமா? வுமன் எம்பவர்மென்ட், வுமன் ஆன்டர்பிரினியர்ஸ் என பெண்களை மோட்டிவேட் செய்கிற விஷயங்களைச் செய்கிறேன்.

உட்கார்ந்த இடத்தில நம் கருத்தை மக்களிடத்தில் சொல்ல தைரியமா ஒரு வழி கிடச்சிருக்கு. விடுவோமா நாங்க. பேசிக்கிட்டே இருப்போம். நிறையபேர் அன்றைய செய்திய படிக்காதவங்களா, படிக்க நேரமில்லாதவங்களா இருப்பாங்க. அவுங்களும் என்னோட டார்கெட் ஆடியன்ஸ்தான். செய்திகளை அப்டேட் செய்து அவர்களின் காதுகளுக்கும் கொண்டுபோய் சேர்த்துருவேன்” என முடித்தார்“நான் லோகா தேவி. பிறந்தது வளர்ந் தது படிச்சது வேலை செய்யுறது எல்லா சேலம்தான். முதல்முறையா ஆர்.ஜே. டிரெயினிங்காக சென்னைக்குப் போனேன். அதுவரைக்கும் நான் சென்னைக்கு போனதே இல்லை. உனக்கு தெரிஞ்ச லக்கி பெர்சன் யாருன்னு என்னைக் கேட்டா நான் என்னைதான் சொல்லுவேன். சின்னவயதில் இருந்து என்னோட ஃபேஷன், டிரீம் எல்லாமே ஆர்.ஜே.தான். எத்தனை பேருக்கு அவுங்க லைஃப் டிரீம் அப்படியே நடந்திருக்கு? என்னோட லைஃப்ல நான் என்னோட கனவை துரத்தி அடைஞ்சிருக்கேன்” எனப் பேசத் துவங்கினார். “நேயர்களுக்கு சுருக்கமா என் பெயர் எல்.டி. எப்பவுமே நான் ஜில் அண்ட் கூல் பொண்ணு.

கல்லூரிப் படிப்பு முடித்த வாரத்திலே என்னை ஆடிஷனுக்கு கூப்பிட்டாங்க. என்னோட முதல் இன்டர்வியூவே இதுதான். சும்மா முயற்சி செய்தேன். ஆனால் அது ஒரு இன்டர்வியூ மாதிரியே இல்லாம செம ஜாலியா கூலா போச்சு. 5 ரவுண்ட் இருந்தது. டிரெயினிங் அதைவிட ஜாலியா போச்சு. சென்னையில் உள்ள சூரியன் எஃப்.எம். நிலையத்தில் ஒரே ஜாலியும், அரட்டையும், கும்மாளமுமா டிரெயினிங் போச்சு. டிரெயினிங்ல நாங்க நிறைய கத்துக்கிட்டோம்.எங்களுக்கான முகவரியே கிரியேட்டி விட்டி தான். இந்த வேலையைப் பொறுத்தவரை ஒரு விசயத்தை நாம எவ்வளவுக்கு எவ்வளவு ஈஸியா, கூலா நேயர்களிடம் கொண்டு போறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவுட்புட் சூப்பரா வரும். மண்டையில போட்டு ரொம்ப குழப்பிக்காமல் சிம்பிளா ஜாலியா செய்யணும். அப்பதான் ரீச் ஆவோம்.

நான் பண்ற ஷோ ‘டிக்…டிக்..டிக்’. ஷோ முழுவதும் செம ரகளையா, விளையாடி, எல்லாரையும் சிரிக்க வைக்கிற மாதிரிப் போகும். எப்பவுமே நேயர்களோடு ஒன்-டு-ஒன் கனெக் ஷன் இருக்கணும். அப்பதான் கேட்கிற நேயர்களும் அட நாமும் போன் செய்து பேசுவோம்னு நினைப்பாங்க. ஜாலியா பக்கத்தில நெருங்கி பேசுற மாதிரி சொன்னா அதுதான் நிகழ்ச்சியோட சக்ஸஸ்.காலை 11 மணி முதல் 1 மணி வரை ‘சேலம் பொண்ணு இது சினிமா கண்ணு’ என்ற ஷோ பண்றேன். இது முழுக்க முழுக்க சினிமா செய்திதான். எல்லாமே ஆன் ஸ்பாட் பேச்சுதான். மரியாதை கலந்த மகிழ்ச்சியோட நேயர்களை கலாய்க்கணும். அதே நேரம் சிரிக்கவும் வைச்சுருவேன். சொல்ல வந்ததை சாஃப்டா, ஸ்வீட்டா, சொல்லணும். அதுதான் என் ஸ்பெஷாலிட்டி.. வளவளன்னு பேசக்கூடாது. அதுதான் என் பாலிஸி” என முடித்தார்அடுத்து ஆர்.ஜே. ரஞ்சனி. “நான் பி.டெக். ஐ.டி. இஞ்சினியரிங் சென்னையில் முடிச்சேன்.

ஸ்கூல் படிப்பும் அங்குதான். ஆனால் சொந்த ஊர் சேலம். ஐ.டி.வேலை கிடைத்தாலும் என்னோட ஃபேஷனா ஆர்.ஜே. வேலை மட்டும்தான் மனதில் இருந்தது. ஆடிஷன்ல கலந்து செலக்டாகி என் கேரியரும் ஸ்டார்ட் ஆச்சு. சென்னையில் படிச்சு வளர்ந்தாலும் எனக்கு பிடிச்ச வேலை என் சொந்த ஊரிலே கிடச்சது ரொம்பவே ஹேப்பி. என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் ரொம்பவே பாராட்டுறாங்க. ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ ஷோ நானும் கோ.ஆர்.ஜே. மித்ராவும் இணைந்து செய்யுறோம். டாம் அன் ஜெரி கேரக்டர் மாதிரிதான் இதுவும். நாட்டு நடப்பை ஸ்லாங்கில் பேசிக்கொள்வோம். சினிமா பாடல் வரிகளை வைத்து அன்றைய நிகழ்ச்சிக்குஏற்ற மாதிரி விஷயங்களை டச் பண்ணுவோம். இது தவிர்த்து இணைய தளம், ஃபேஸ்புக் என வீடியோ அப்லோட் செய்யுறதுன்னு சேலம் எஃப்.எம். டிஜிட்டல் வேலைகளின் பொறுப்பையும் ஏற்றுள்ளேன். ஒரே ஜாலிதான் எங்க டீம். அதுவும் பெண்களாக இருப்பதால் கூடுதல் ஜாலி” என்றார்.

“நான் ஆர்.ஜே. பவித்ரா. சேலம் கல்லூரியில் பி.எஸ்.ஸி., எம்.பி.ஏ. படித்தேன். எனக்கு ஆர்.ஜே. கனவெல்லாம் இல்லை. வேறு ஒரு இன்டர்வியூவுக்காக போயிருந்தேன். என் பேச்சுத் திறன், நான் பேசுற ஆட்டியூட், என் மேனரிசம் எல்லாத்தையும் பார்த்துட்டு ஆர்.ஜே.க்குத்தான் நீங்க செட்டாவீங்கன்னு, சேலம் சூரியன் எஃப்.எம்.ல் முயற்சி செய்யச் சொல்லி ரெஃபர் பண்ணுனாங்க. முயற்சி செஞ்சுதான் பார்ப்போமேன்னு இறங்குனேன். செலக்ட் ஆயிட்டேன். இந்த ஆர்.ஜே.வேலை என் வாழ்க்கைய வேற லெவல்ல டியூன் பண்ணியிருக்கு. நான் இரண்டு ஷோ பண்றேன். காலையில் பிரேக் பாஸ்ட் ஷோ. காலையில் சேலம் மக்களை தட்டி எழுப்புறதே நான்தான். அட்வைஸ், மோட்டிவேஷன்னு போரடிக்காம, படத்துல வர்ற சீன் டயலாக்கை வைத்தே நானும் சீனைப் போட்டுருவேன். உதாரணத்துக்கு ‘பூவே உனக்காக’ படத்தில் வர்ற விஜய் மாதிரி எப்பவுமே ஃபீல் பண்ணாம நம்ம அட்டகத்தி தினேஷ் மாதிரி அடுத்தடுத்து அட்டெம்ட் செய்துக்கிட்டே இருக்கணும் என ஏதாவது சினிமா, பஞ்ச் டயலாக் போடுவேன். டயமிங்கில் ரைமிங் பண்றதெல்லாம் எனக்கு அசால்டா வரும். படிக்கும்போது எப்பவும் யாரையாவது கலாய்ச்சுக்கிட்டே இருப்பேன். இப்ப முழு நேரத் தொழிலும் அதுதான்னு ஆகிப்போச்சு.

நான் படிச்ச படிப்புக்கு வேலை செஞ்சாக்கூட இவ்வளவு என்ஜாய் செய்து வேலை செய்திருப்பேனான்னு தெரியாது. இப்ப ரொம்பவே திருப்தியா ஃபீல் பண்றேன். லாஞ்ச் ஆகி ஒரு வாரத்திலே ‘ஏன் பவி நீங்க நேற்று ஷோவுக்கு வரலை’ன்னு கேட்கிற அளவுக்கு சேலம் மக்களோட நான் மிங்கிள் ஆகிட்டேன்” என்கிறார்.“சுருக்கமா நான் ஆர்.ஜே.சாரா என்கிற சரண்யா. சேலம்தான் நேட்டிவ். பி.ஏ.தமிழ் இலக்கியம் முடித்தேன். படிப்பை முடிச்சதும் ஆர்.ஜே. வேலை தேடி வந்திருச்சு. நாம அதிகமா வாய் பேசுறோமே… இதை வச்சு என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். அதுக்காகவே இருக்கு ஆர்.ஜே.போஸ்ட் அப்படீன்னு தோழிகள் சொன்னாங்க. ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். என்னையும் செலக்ட் செய்து இந்தாம்மா ஆர்.ஜே. போஸ்ட்டுன்னு கொடுத்துட்டாங்க. காலேஜ் செகண்ட் இயர் படிக்கும்போதே கம்யூனிட்டி ரேடியோவில் நிறைய நிகழ்ச்சி செய்திருக்கேன்.

சேலத்திலே எஃப்.எம். வந்தா விடுவோமா? அதுவும் ஆல்வுமன் ஆர்.ஜே. ஸ்டேஷன் என்பதில் மிகப் பெரும் கொண்டாட்டம் எங்களுக்கு. மாலை 3 மணிக்கு ‘கேளுங்க..கேளுங்க…’ என்கிற ஷோ பண்றேன். பிடிச்ச பாடலை நேயர் விருப்பத்திற்கு போடுறதுதான் நம்ம வேலை. இரவு 9 டூ 11 ஆண்களுக்காக, ‘ஆண்கள் மனதில்’ என்கிற ஷோவில் ஆண்களோடு பேசுவேன். தங்கள் எமோஷன், கவலை, அழுகைன்னு நிகழ்ச்சியில் ஷேர் பண்றாங்க ஆண்கள். அவுங்களுக்கு ஏதோ என்னால முடிஞ்ச குட்டி சொல்யூஷன் சொல்லி, தொடர்ந்து சாங்ஸ்…காலர்ஸ்… சாங்ஸ்… என ஜாலியா போகுது” என விடை கொடுத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த 7 விஷயத்த பசங்க, லவ் பண்ற பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் பண்ணுவாங்க!(அவ்வப்போது கிளாமர்)
Next post நயன்தாரா சம்பளம் 4 கோடி! (சினிமா செய்தி)