உதவியாளரை நாய் என அழைத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்!! ( உலக செய்தி)
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போதே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது பல பெண்கள் பாலியல் புகார் கூறினர், அதில் இருந்து சீரான இடைவெளிக்கு ஒருமுறை அவர் சர்ச்சையை ஏற்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அமெரிக்கா மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் விவகாரம் தொடங்கி பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மனைவியின் உடலழகை வர்ணித்தது வரை சர்ச்சை மன்னனாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே தனது முன்னாள் உதவியாளரை நாய் என அழைத்து அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தொலைபேசி உரையாடல் பதிவு ஒன்றை அவரது முன்னாள் உதவியாளர் ஒமரோசா மனிகால்ட் நியூமேன் என்ற பெண் ரகசியமாக பதிவு செய்து சமீபத்தில் வெளியிட்டு உள்ளார்.
அந்த உரையாடல் பதிவு, அவரும் ஜனாதிபதி டிரம்பும் உரையாடுவதாக அமைந்து உள்ளது.
அந்த உரையாடலில் ஜனாதிபதி டிரம்பின் குரல் என்று நம்பப்படுகிற ஒரு குரல் ஆச்சரியத்துடன், ´´நீங்கள் பணியில் இருந்து விலகுவதாக தொலைக்காட்சியில் பார்த்தேன். இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?´´ என்று கேட்கிறது.
அதற்கு ஒமரோசா, ´´ஜெனரல் கெல்லி என்னிடம் வந்து, நீங்கள் அனைவரும் நான் பணியில் இருந்து விலக வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்´´ என்று பதில் அளித்து உள்ளார்.
உடனே டிரம்பின் குரல் என நம்பப்படுகிற அந்தக் குரல், ´´இல்லை… என்னிடம் யாரும் இதைப்பற்றி சொல்லவில்லை. எனக்கு தெரியாது. நீங்கள் பணியில் இருந்து செல்வதை நான் விரும்பவில்லை´´ என்று கூறுகிறது. இப்படியாக அந்த உரையாடல் நீளுகிறது. இந்த தொலைபேசி உரையாடல், அமெரிக்காவில் என்.பி.சி. தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப் ஒமரோசாவை நாய் என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பதிவிட்டுள்ளதாவது :-
´அழுது புலம்பும் பைத்தியக்கார கீழ்வாழ்க்கை பெண்ணுக்கு நன்மை செய்யலாம் என வெள்ளை மாளிகையில் வேலை அளித்தால் அது சரியாக அமையவில்லை, அந்த நாயை உடனடியாக வேலையை விட்டு நீக்கியது மிக சிறப்பான செயல் ஜான் கெல்லி(வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி).´ என அவர் பதிவிட்டுள்ளார்.
கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள டிரம்பின் இந்த பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒமரோசா, தனக்கு கிடைக்கும் ஒவ்வொறு வாய்ப்பிலும் கருப்பினத்தவரை இழிவு படுத்துவதே டிரம்பிற்கு வழக்கமாக உள்ளது. இந்த விவகாரத்தை வைத்து இனவெறி போரை தூண்ட முயற்சிக்கிறார் என தெரிவித்துள்ளார்.
டிரம்பின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜனநாய கட்சி நிர்வாகி வில்சன், அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர் பெண்ணின் நிறத்தின் காரணமாக நாய் என அழைக்கலாமா? யாராக இருந்தாலும் நாய் என அழைக்கும் அளவிற்கு அவருக்கு எப்படி தைரியம் வந்தது ? என ட்ரம்பின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், ஒரு ஜனாதிபதி எனும் கண்ணியத்துடன் பேச டிரம்ப் முயற்சிக்க வேண்டும் எனவும், கருப்பினத்தவருக்கு எதிரான அவரது கருத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் என பலரும் ட்ரம்பிற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Average Rating