உலகின் தலைசிறந்த சொல்!(மருத்துவம்)
நம் எல்லோரின் அன்பையும், மரியாதையையும் பெற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முதல் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி வரை நாம் பார்த்து வியக்கும் சாதனையாளர்களின் பிரத்யேக குணங்கள் இவை. இவற்றை கவனித்தாலே வெற்றி பெறும் ஃபார்முலா புரிந்துவிடும்.
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
தென்தமிழகம் ராமேஸ்வரத்தில் ஏழைத்தம்பதிக்கு மகனாக பிறந்து குடும்பத்துக்கு உதவும் பொருட்டு சிறுவயதிலேயே செய்தித்தாள் போடும் வேலை செய்திருக்கிறார். பள்ளிப்பருவத்தில் சுமாரான மாணவனாக இருந்தாலும் கற்பதில் திடமான ஆர்வமும், படிப்புக்காக பல மணிநேரங்கள் செலவழிப்பவராகவும் இருந்ததால் தனது சொந்த முயற்சியில் சென்னை ஐ.ஐ.டியில் விண்வெளி பொறியியல் பட்டம் பெற்று விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் பணிபுரிந்தார்.
ஏவுகணை சோதனை, விண்வெளிக்கலன்களை வடிவமைக்கும் திட்டம் என் விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் பங்கெடுத்த அதே வேளையில் இதய நோய் சிகிச்சைக்கு முக்கியமான கரோனெரி ஸ்டென்ட்டை (Coronary Stent) உருவாக்கினார். நாட்டின் பதினொன்றாவது குடியரசுத்தலைவரான அப்துல் கலாம் தன்னுடைய பதவிக்காலம் முடிந்ததும் 2 சூட்கேஸில் தன்னுடைய புத்தகங்களை மட்டும் உடன் எடுத்துச்சென்ற ஒரே ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்றவர். இத்தனை பெருமைகளுக்கும் அவரது எளிமை, விடாமுயற்சி மற்றும் நாட்டுப்பற்றே காரணம்.
சச்சின்
சமீபத்தில் சச்சின் திடீரென்று தன் காரிலிருந்து இறங்கி தெருவில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களோடு கிரிக்கெட் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியதை எல்லோரும் பார்த்திருக்க முடியும். கிரிக்கெட் உலகில் எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், தன்னுடைய பணிவு, எளிமையால் அனைவரையும் கவர்ந்தவர். மிகப்பெரிய மதுபான கம்பெனியிலிருந்து விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும்,
“புகை, மதுப்பழக்கத்தை மற்றவர்களிடம் புகுத்தும் விளம்பரங்களில் நான் நடிக்கமாட்டேன்” என்று சமூகம் சார்ந்த நல்ல முடிவை எடுத்ததன் மூலம் தனக்கு பணம் மட்டும் குறிக்கோள் இல்லை என்பதை தெளிவுபடுத்தினார். இறை நம்பிக்கை, தேசபக்தி, பொறுப்புணர்வு, கவனம், சவால்களை சமாளிக்கும் திறன் மற்றும் அர்ப்பணிப்பு போன்ற குணங்கள் கிரிக்கெட்டைத் தாண்டி, வாழ்க்கையிலும் நல்ல மனிதன் என்ற பெயரைப் பெற்று மிகச்சிறந்த வெற்றியாளனாக்கியது.
அமிதாப்பச்சன்
இன்று பிக்-பி என கொண்டாடப்படும் அமிதாப்பச்சன், ஒருகாலத்தில் டிரைவ்ன் ரெஸ்டாரன்ட் பென்ச்சில் தூங்கி, தன் வாழ்க்கையைத் துவங்கியவர் இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் ஆனார். ‘கூலி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தினால் மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் நடிக்கவே முடியாது என்று பேசப்பட்டு, இன்று 75 வயதிலும் பிஸியாக நடித்துக் கொண்டு சாதனைக்கு வயதில்லை என நமக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கிறார்.
‘க்ரோர்பதி’ நிகழ்ச்சியில் உலகின் மூலை முடுக்கெல்லாம் புகழ்பெற்ற இவர், தன்னுடைய ஓய்வு பெறும் வயதான 57ல் தன்னுடைய ABCL கம்பெனி நஷ்டமடைந்ததைத் தொடர்ந்து, திவாலாகி கைவசம் படம் ஏதுமில்லை, பணமுமில்லை என எல்லாவற்றையும் இழந்து நின்ற கதை பலருக்குத் தெரியாது. அப்போதும் மனம் தளர்வடையாதவர், எம்.பி பதவி, பத்மபூஷண் விருது என வாழ்க்கையில் அடையாத புகழே இல்லை. இவையெல்லாவற்றுக்கும் காரணம் மன தைரியம், குடும்பத்தாரின் ஒத்துழைப்பு. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக உடற்பயிற்சி செய்வதையும் தனக்கென வகுத்துக்கொண்ட விதிகளையும் தவறாமல் கடைபிடித்து வருபவர். அமிதாப்பும், புகையிலை, மது விளம்பரங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கை உடையவர்.
முகேஷ் அம்பானி
உலகின் தலை சிறந்த சொல் என்ற ‘வேலைக்காரன்’ பட வசனத்தை நிஜ வாழ்வில் பின்பற்றுகிறவர் முகேஷ் அம்பானி. இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி ஆவதுதான் நாட்டிலிருக்கும் புதுத் தொழிலதிபர்களின் கனவாக இருக்க முடியும். ஆனால் அம்பானிக்கோ, அவரின் 30 வயதிலேயே பாலியஸ்டர் ஃபைபர் மற்றும் நூல் தயாரிப்பில் உலகிலேயே மிகப்பெரிய உற்பத்தியாளராக வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய கனவாக இருந்ததாம்.
இன்று ரிலையன்ஸ் நிறுவனம் உலகிலேயே பாலியஸ்டா் ஃபைபர் உற்பத்தியில் நம்பர் ஒன்னாக விளங்குவதன் மூலம் தன் கனவை நிறைவேற்றிவிட்டார். ‘பேச்சைக்குறை செயலில் இறங்கு’ என்பது இவரது கொள்கை. உலகளவில் நடக்கும் பொருளாதார கருத்தரங்கில் ஒருமுறைகூட இவரது உரை நடந்ததில்லை. ஆனால், உலக நாடுகளில் பேசப்படும் மிகப்பெரும் தொழிலதிபராக இருப்பதே இதற்குச்சான்று. அடுத்து, யாரையும் சார்ந்திருப்பதை விரும்பாதவர்.
மக்கள் எப்போதும் தனது சொந்த வியாபாரத்தில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துபவர். சிறுவயதில் வியாபார நுணுக்கங்கள் கற்றுக்கொள்ளத் தொடங்கிய சில நாட்களிலேயே தன்னுடைய மாமா ராசிக்பாயின் இழப்பு, அடுத்த 6 மாதத்திலேயே தனது தந்தை பக்கவாத நோயில் வீழ்ந்தது என அடுத்தடுத்து தடைகள் வந்தபோதும் தளராத நெஞ்சுரம் மிக்கவர். இப்படி முகேஷ் அம்பானியிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் ஏராளம்.
Average Rating