நீராலானது இவ்வுலகு தண்ணீர் விநியோகத்தை தனியார் மயமாக்கிய கோவை மாநகராட்சி!!(மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 3 Second

கோவை மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை கடந்த பிப்ரவரி மாதம் 400 மில்லியன் டாலருக்கு பிரெஞ்சு நாட்டின் சுயஸ் என்னும் தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. உலகமயமாக்கல் தற்போது உலகை கிராமமாக சுருக்கி, மனிதகுலத்தை நாடுகளின் எல்லை கடந்த வர்த்தக சமூகமாக மாற்றியுள்ளது. அதேபோல இயற்கை வளங்களை வர்த்தகப் பண்டங்களாக மாற்றி உள்ளது உலகமயத்தின் தத்துவமான சந்தை பொருளாதாரம், உலகமய கொள்கைகள் தற்போது நமது கோவை நகராட்சி வரை வந்துள்ளது.

2012ம் ஆண்டு தேசிய நீர் கொள்கை இயற்கையின் கொடையான எண்ணெய்க்கு அடுத்தபடியாக நீர் இன்று மிகப் பெரிய வர்த்தகப் பொருளாக மாறிவருகிறது. “இந்தியாவில் மிகவும் அடிமட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம்தான் தண்ணீர். இதை மாற்றியமைக்க வேண்டும்” என்று கூறிய அன்றைய திட்டக் கமிசனின் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா சில வருடங்களுக்கு முன் கூறியதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

அவரின் இந்த கொள்கையை நடைமுறைப் படுத்த 2012ம் ஆண்டு “நீர் கொள்கை” என்னும் அரசுக்கான ஒரு வழிகாட்டு நெறிமுறையையும் வெளியிட்டார். இக்கொள்கை ஒரு தனிநபரின் தண்ணீர்ப் பயன்பாட்டு தேவை (per capita water need) நாள் ஒன்றுக்கு 185 லிட்டர் என்று வரையறை செய்கிறது. அதாவது, ஒரு மனிதனின் குடிநீர், உணவு, சுகாதார நடவடிக்கைகள், தொழில் உபயோகங்கள் போன்ற செயல்பாடுகளுக்காக ஒரு நாள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் நீர் அளவீடு இது. இந்த அள விற்குள்ளாக தனிநபர்களின் நீர் பயன்பாட்டை கண்காணிக்க அளவிடும் கருவிகளும் பயன்படுத்தப்படும்.

நீர் பயன்பாட்டிற்கு ஏற்ப வரி விதிக்கப்படும். இப்படி அரசிற்கு நீர் மேலாண்மை குறித்த பல வழிகாட்டுதல்களை தருகிறது இக்கொள்கை. உலக வர்த்தக கழகத்தின் கொள்கையின் அடிப்படையில் இந்தக் கொள்கை வரையப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில், குடிக்கும் தண்ணீரை மானுடத்தின் அடிப்படை உரிமையாக்கக் கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்தன அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள். நீரை வர்த்தகப் பொருளாக மாற்றும் வேலையை இந்த நாடுகள் செய்து வருகின்றன.

இந்த நாடுகளில் உள்ள விவெண்டி, சூயஸ், பெக்டெல் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ளன. இந்த நிறுவனங்கள் 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன. உலக வர்த்தகக் கழகமும் தண்ணீரையும் ஒரு சரக்காகவே ஏற்றுக் கொண்டுள்ளது. உலக வர்த்தக கழகத்தின் கொள்கைப்படி தண்ணீர் வினியோகம் மற்றும் மேலாண்மை போன்றவற்றை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிட வேண்டும்.

அதாவது அரசு என்பது தண்ணீரை வினியோகம் செய்யும் சேவை மையமாக இருப்பதில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு, அந்த பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு விட்டுவிட வேண்டும். கூடுதலாக, தண்ணீர் தொடர்பான வர்த்தக செயல்களை வரையறுத்து உலக வர்த்தக கழகத்தின் மற்றொரு ஒப்பந்தமான காட்ஸ் (GATS) கூறுகிறது. தனியார் மயமாகும் நீர் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் முதலாக நீர் மேலாண்மை தனியாரிடம் கொடுக்கப்பட்டது.

Infrastructure Leasing and Financial Services (IL&FS), Tiruppur Exporters Association (TEA) மற்றும் Tamil Nadu Water Investment Company (TWIC) ஆகிய மூன்று நிறுவனங்கள் சேர்ந்து New Tirupur Area Development Corporation Ltd என்னும் நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த நிறுவனம் திருப்பூர் நகர நீர் பரிமாற்றம் மற்றும் கழிவு மேலாண்மையை செய்து வருகின்றது. நாள் ஒன்றுக்கு சுமார் 185 மில்லியன் லிட்டர் தண்ணீரை பரிமாற்றம் செய்கிறது இந்த நிறுவனம்.

அரசு அமைப்புகள் உட்பட தனியார் நிறுவனங்களும் இதில் பங்குதாரர்களாக உள்ளனர். திருப்பூரைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் மற்றும் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவை ஆகியவை இத்திட்டத்தின் மூலம் தீர்க்கப்படுகிறது. மேலும் நிலத்தடி கழிவு மேலாண்மையையும் இந்த நிறுவனம் மேற்கொள்கிறது. இதனை தொடர்ந்து தற்போது கோவை நகராட்சி நீர் விநியோகத்தை பன்னாட்டு நிறுவனத்திடம் கொடுத்துள்ளது. இந்த நிறுவனம் டில்லி நகரத்திற்கான நீர் விநியோகத்தை செய்து வருகிறது.

நீர் என்னும் உரிமை

இந்திய அரசமைப்புச் சட்டம் “சட்டத்தின்படியான ஆட்சியை” குடிமக்களாகிய நமக்கு உறுதி செய்துள்ளது. மேலும் அரசமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள வாழ்வதற்கான அடிப்படை உரிமை என்பது சுகாதாரமான குடிநீரை உள்ளடக்கியதே என்று இந்திய உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் கூறியுள்ளது. அந்த வகையில் தண்ணீர் தனியார்மயமாகுவது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே புறம்பானதாகும்.

குடிநீர் வழங்குவது தொடர்பான அதிகாரம் ஆரம்பத்தில் மத்திய, மாநில அரசுகளுக்குத்தான் பிரித்து வழங்கப்பட்டிருந்தது. 1992ம் ஆண்டிற்கு பிறகு உள்ளாட்சிகளுக்கும் இந்த அதிகாரம் அளிக்கப்பட்டது. தண்ணீரில் எந்த அளவுக்கு மாசுக்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை கலந்திருக்கலாம் என்ற அளவை நிர்ணயிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.

நம் அரசமைப்புச் சட்டப்படி ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் நீர் நிலைகளை நிர்வகிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது. மாநிலங்களுக்கிடையே பாயும் நீரை நிர்வகிப்பதிலும், பயன்படுத்துவதிலும் பங்கிடுவதிலும் சிக்கல் ஏற்படும்போது அவற்றைத் தீர்க்க மத்திய அரசுக்கு முழு உரிமையுண்டு. மேலும், இந்திய அரசமைப்புச் சட்டம் நீர் பாசனம், கால்வாய்கள், நீர்த்தேக்கம், நீர் மின்சாரம் ஆகியவை மாநில அதிகாரங்களுக்கு உட்பட்டதாக வரையறுத்துள்ளது. எனவே நீர் குறித்தான எந்த மாற்றமும் மாநில அளவில் முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும். நீர் கொள்கை இதனை கூறுகிறது. அதற்கு ஏற்ப தற்போது கோவை நகராட்சி நீர் தனியார்மயமாக்கும் வேலையை துவங்கி உள்ளது.

எதிர்குரல் கொடுப்போம்

ஆண்டுதோறும் தூய குடிநீர் கிடைக் காமலும் சுகாதார வசதி இல்லாமலும் உலகெங்கும் ஐந்து வயதுக்கும் குறைவான 21 லட்சம் குழந்தைகள் மாண்டுப் போகின்றன. இந்தியாவில் தூய குடிநீர் கிடைக்காமல் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் பேர் இறந்து போவதாக மத்திய அரசின் ஆய்வு அறிக்கை கூறுகிறது. மிகக்கொடிய இரு பெரும் நோய்களான எய்ட்ஸ் மற்றும் மலேரியாவினால் கொல்லப்பட்டவர்களை விட, தூய குடிநீர் கிடைக்காமல் மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகம். ஐ.நா.வின் கணக்கீட்டின்படி, உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர்.

உலகின் 88 கோடியே 40 லட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. 260 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. இந்தியாவில் தண்ணீர் தனியார் மயமானால் அது மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே சென்றடையும் என்பதை கூறத் தேவையில்லை. இதற்கு உதாரணமாக தில்லியில் தனியார்மயமாக்கப்பட்ட தண்ணீர் எப்படி மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே பயன் அளிக்கிறது என்பதை ஓர் ஆய்வு தெளிவுபடுத்துகிறது (பார்க்க : Sujith koonan & Preeti Sampat, “Delhi Water Supply Reforms”, EPW, 28th April 2012).

தண்ணீர் தனியார்மயமாவது என்பது ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு இருதலைக் கொள்ளியாக அமையும் என்பதை கூறத்தேவையில்லை. சமூகப்பொருளாதார ஏற்றத்தாழ்வால் நாள் ஒன்றுக்கு தனிமனித தேவையான 40 லிட்டர் தண்ணீரைக் கூட பெற முடியாத இம்மக்களுக்கு தண்ணீர் தனியார்மயமானால் இவர்களின் வாழும் உரிமை முற்றிலுமாக அழியும் அபாயம் உள்ளது. எனவே தனியார்மயத்திற்கு எதிரான விழிப்புணர்வு இயக்கங்களை உருவாக்குவது அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பருக்கள்… தழும்புகள்…!!(மருத்துவம்)
Next post வியப்பில் ஆழ்த்தும் உலகின் வினோதமான 9 போன்கள் ! (வீடியோ)