அழைத்து வந்தவர்கள் அணைத்துச் சென்றால் என்ன?(கட்டுரை)
இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, இடர்பாடுகள் பலவற்றுக்கு மத்தியில், 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி, இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. அதன் ஊடாக, மாகாண சபை முறைமையிலான அரசியல் பொ(றி)தி அறிமுகம் செய்யப்பட்டது.
தமிழ் மக்களது அபிலாஷைகளுக்கு (யானைப்பசிக்கு) சோளப்பொரி போட்டது போலவே, தீர்வு அமைந்தது. ஆனாலும், பிராந்திய வல்லரசின் சொல்லுக்கும் செயலுக்கும் மறுப்புத் தெரிவிக்க முடியாத நிலை, இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தரப்புக்கும் ஏற்பட்டது.
மாகாண சபை முறைமையில் பல குறைகள் காணப்பட்டாலும் வடக்கு, கிழக்கு இணைந்த ஆட்சிமுறை, பெரும்பான்மையான தமிழ் மக்களால் நிறைவாகப் பார்க்கப்பட்டது. ஆனால், எது நிறைவாகப் பார்க்கப்பட்டதோ, அதுவும் இல்லாது, இறுதியில் எதுவும் இல்லாது, முழுமையாக வற்றிய நதியாகி விட்டது மாகாணசபை.
ஆனாலும், தேர்தல் என வரும் போது, அதில் போட்டியிட வேண்டும்; வெற்றி பெறவேண்டும்; அதனூடாக முடிந்தளவு கருமங்களைப் பொது மக்களுக்கு ஆற்ற வேண்டும்; இவ்வாறானதொரு மாகாண சபைத் தேர்தலையே தற்போது வடக்கு, கிழக்கு எதிர்பார்த்து உள்ளது.
இதில், வடக்கு, கிழக்கில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்தப் போகின்றார்கள் என்பது, இன்றுவரை பல தரப்புகளாலும் எதிர்பார்க்கப்படும் விடயமாக உள்ளது.
இது இவ்வாறு நிற்க, கடந்த 2013ஆம் ஆண்டு, வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை, அன்றைய ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையில், அக்காலப்பகுதி நிலைமையுடன் சேர்த்து, தமிழர் விவகாரங்களைக் கையாளக் கூடிய முதலமைச்சர் வேட்பாளரைக் கூட்டமைப்புத் தேடியது. சட்டப்புலமை, நெஞ்சுரம், மொழி வல்லமை எனப் பல்வேறு ஆளுமைகள் நீதியரசர் விக்னேஸ்வரனை இனம் காட்டின.
ஒரு கட்டத்தில், கூட்டமைப்பின் நான்கு கட்சிகளும் ஒருமித்துக் கோரியபோது, “சரி, தயார்” என விக்னேஸ்வரனும் கூறினார். தலைவர் சம்பந்தன், விடாப்பிடியாக நின்று, விக்னேஸ்வரனை அரசியலுக்குள் அழைத்து வந்தார் எனக் கூறினாலும் மிகையல்ல.
அவர் நீண்ட காலமாகத் தலைநகரில் வசித்திருந்தாலும், வடக்கே யாழ்ப்பாணத்தில் கணிசமானோரால் அறியப்பட்டிருந்தார். ஆனாலும், கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைகளில், ஏனைய நான்கு கட்சிகளின் அங்கத்தவர்களும் அவருக்கான அங்கிகாரத்தைச் சிறப்பாக வழங்கினர். “உங்கள் வாக்குகளில் முதலாவதை இவருக்கு இட்டு, மிகுதி இரண்டை எங்களுக்கு வழங்குங்கள்” என முழங்கினர்.
இதனாலேயே அவர் இலட்சம் தாண்டிய விருப்பு வாக்குகளைப் பெற்றார். வடக்கின் முதலாவது முதலமைச்சர் ஆனார். கூட்டமைப்பும் அமோக ஆதரவுடன் மொத்தமாக உள்ள 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைத் தனதாக்கியது. மக்களும் பாரிய எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தனர்.
ஆனால், யாரது கண் பட்டதோ, கூட்டுக்குள் குழப்பங்கள் தோன்றியது; குழப்பங்கள் விளக்கங்களைத் தேடின. இறுதியில் விளக்கங்கள் கோ(தீ)ர, நீதிமன்றப் படியும் ஏறியாகி விட்டது. யாரின் பக்கம் நீதி; யாரின் பக்கம் அநீதி என்பதற்கு அப்பால், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பங்கம் ஏற்பட்டது மட்டுமே உண்மை. இவர்களின் அரசியல் வறுமை, யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அடுத்த வேளை உணவுக்கு அல்லல்படும், ஏழைகளின் வறுமையை இரட்டிப்பாக்கியது.
சரி, இவை இதுவரை நடந்தவை. இனி அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தமிழரசுக்கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டும் என்ற செய்திகள் அடிபடுகின்றன. இந்நிலையில், விக்னேஸ்வரனை அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக, கூட்டமைப்பு அறிவிக்காத பட்சத்தில், அவர் தலைமையில் வேறு ஓர் அணி களமிறங்கக் கூடும். தமிழ் மக்களால் களமிறங்குமாறு வலியுறுத்தக் கூடும்; வற்புறுத்தப்படவும்கூடும்.
அதில் தமிழ்த் தேசிய முன்னணியும் இணையக் கூடும். ஏற்கெனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வீழ்ச்சியைக் கண்டுள்ள கூட்டமைப்புக்கு, வலுவான எதிர் அணியாக அமையலாம்.
மறுபுறத்தே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கணிசமான எழுச்சியைக் கண்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) சற்று உற்சாகத்தில் உறைந்துபோயுள்ளது. முன்னரைக் காட்டிலும் வடக்கு, கிழக்கில் தென்பகுதியைச் சேர்ந்த பெருந்தேசியக் கட்சிகளின் வாக்கு வங்கிகளும் அதிகரிக்கச் செய்யப்பட்டுள்ளன.
தமிழர் விடுதலைக் கூட்டணியும் தனியாகக் களமிறங்குவதாக அறிவித்துள்ளது. சில சுயேச்சைக் குழுக்களும் களமிறங்கக்கூடும். இவ்வாறாகத் தமிழ் மக்களது வாக்குகள் சிதறு தேங்காய் போல சிந்திச் சிதறக்கூடும்.
மேலும், கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையிலான ஐந்து வருட காலப்பகுதியில், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் பெருவாரியான பெரும்பான்மையின மக்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.
அவ்வாறாகக் குடியேற்றப்பட்டவர்களில் கணிசமானோர், வாக்காளர் பட்டியலிலும் பதிவு செய்யப்பட்டு விட்டார்கள். அந்தக் குடியேற்றவாசிகள் பெருந்தேசியக் கட்சிகளுக்கே வாக்களிப்பார்கள். போதாக்குறைக்கு தமிழர்கள் சிலர், அக்கட்சிகளில் போட்டியிட்டு, தமிழ் வாக்குகளைப் பெருந்தேசியக் கட்சிகளுக்கு ஈட்(தே)டிக் கொடுப்பார்கள்.
இதனால் அந்த மாவட்டங்களிலிருந்து கடந்த முறையிலும் பார்க்க, கூடுதல் எண்ணிக்கையில் பெரும்பான்மையின அங்கத்தவர்கள் தெரிவாகும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தமிழ்க் கட்சிகளை ஒரே குடையின் கீழ் போட்டியிடச் செய்வதற்கான முயற்சியில் ‘கிழக்குத் தமிழர் ஒன்றியம்’ முழு மூச்சாக ஈடுபட்டுள்ளது.
வடக்கில் நடக்கும் தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான சிக்கல்கள் அங்கும் தாக்கம் செலுத்தும்; எதிரொலிக்கும். அண்ணளவாக மூன்று இனங்களும் சம அளவில் வாழ்கின்ற கிழக்கில், கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றுவதில் இது பாரிய வீழ்ச்சியை நிச்சயமாக ஏற்படுத்தும்.
இதைவிட, ஏனைய இனங்களோடு ஒப்பிடுகையில் தமிழ் மக்களது வாக்களிப்பு வீதம், குறைவாகவே தேர்தல்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. அத்துடன், தமிழ் மக்கள் அரசியலில் நம்பிக்கையற்று, ஒருவித சலிப்புத் தன்மையிலான நிலையிலும் உள்ளனர்.
இவ்வாறாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களது வாக்குகள் சிதறிச் சின்னாபின்னமாகி, மக்களது சுதந்திர வாழ்வுக்கு கல்லறை கட்டிவிட, குழிதோண்டப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலை ஏற்பட வேண்டும் என, கொழும்பு எதிர்பார்த்து உள்ளது.
ஆகவே, பொறுப்புள்ளவர்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய பெரும் கடப்பாட்டில் உள்ளனர். எம்மிடம் வலுவின்றி, நிறையவே அவர்களுக்கு விட்டுக்கொடுத்து விட்டோம்; எங்களுக்குள் வலுவாக வாழ, எமக்குள் விட்டுக்கொடுக்க யோசிக்கின்றோம்; எங்கள் வளவுகளை காவு கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்; எம் மண்ணை, எம் முன்னே இழந்து கொண்டிருக்கின்றோம்; ஆனால் எம் மனங்களை கல்லுப் போல வைத்திருக்கின்றோம்.
வடக்கின் முதலமைச்சரும் கூட்டமைப்பின் தலைவரும் கடந்த 18 மாதங்களாகக் கதைபேச்சில்லையாம்; ஆனால், முரண்பாடுகளும் இல்லையாம். கடந்த ஜூன் மாதத்தில், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘நீதியரசர் பேசுகின்றார்’ நூல் வெளியீட்டு விழாவில், நீதியரசரும் பேசியுள்ளார்; சம்பந்தனும் பேசியுள்ளார். இதற்குக் காரணம் எது, எவர், ஏன் எனக் கண்டறியப்பட வேண்டும். தலைவர்களுக்கு இடையிலான ஆரோக்கியமான உரையாடல்கள், வலுவான உறவுகளை ஏற்படுத்தும். இதுவே நம்பிக்கைகளைக் கட்டியெழுப்பும்.
மைத்திரி -ரணில் கூட்டு, நாட்டு நலனைக் காட்டிலும் தங்களது கட்சிகளைப் பலப்படுத்துவதில் அதிக ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றது.
2020ஆம் ஆண்டுக்குள் தீர்வு நிச்சயம் என்கிறார் சந்திரிகா. என்ன விதத்திலாவது அரசமைப்புக்கு வேட்டு வைக்க வேண்டும் என்பதில் ஒன்றிணைந்த எதிரணி குறியாக நிற்கின்றது. இவ்வாறாக, இவர்கள் பொறுப்புகளைத் துறந்து, அரசியல்செய்ய, தமிழ் மக்களுக்கு ஆறுதல் கிடைக்கும் என சம்பந்தன் இனியும் நம்புவது வீணானது.
ஆகவே, பல்வேறு பரிமாணங்களை உடைய இனப்பிணக்கைப் பல்வேறு பார்வைகளில் நோக்க (மீட்க) வேண்டிய தேவை, அவசியம் நம் அரசியல் தலைவர்களுக்கு உண்டு. உடைந்(த்)து சின்னாபின்னமாகச் சிதறிய நிலையில் உள்ள கட்டுமானங்களை, மீள உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. மீறல்களும் பிறழ்வுகளும் மலிவான சூழலில், பாதுபாப்பற்று வாழும் எம் மக்களை மீட்க வேண்டிய அவசர நிலை உள்ளது.
மொத்தத்தில் எம்முன்னே, அபாயம் களைந்து, பக்குவமாகவும் பாதுகாப்பாகவும் மீட்டு எடுக்க வேண்டிய அடையாளச் சின்னமாக, தமிழ்த் தேசியம் உள்ள வேளையில், கட்சிகளின் சின்னமா முக்கியம் என்ற வினா தொக்கி நிற்கின்றது.
கொழும்பில் ஆன்மீகத்துடன் ஆனந்தமாக வாழ்ந்தவரை, அரசியலுக்குள் கௌரவமாக அழைத்து வந்து, தங்களுக்குத் தலையாட்ட வில்லை என்பதால், அரசியல் அறியாதவர், நிர்வாகம் தெரியாதவர் என இ(வ)சை பாடக் கூடாது. இது முதலமைச்சருக்கான ஆதரவு தேடும் துதி பாடல் அல்ல; மாறாகத் தமிழ் மக்களுக்கிடையில் ஒற்றுமையைத் தேடுவதற்கான பிரார்த்தனை மட்டுமே.
Average Rating