ஒரு பெண்…நான்கு மகன்கள்…மூன்று தந்தைகள்..!(மகளிர் பக்கம்)
சில பல வருடங்களுக்கு முன் நம் சமூகத்தில் ஒரு பெண் திருமணம் செய்துகொண்டவுடன் அவள் தன் கணவனின் உரிமையும், உடைமையும் ஆகவேண்டிய நிர்பந்தம். அவளுக்குத் தன் கணவனைப் பிடிக்கவில்லை என்றாலும், அவளின் தேவைகள் நிறைவேறவில்லை என்றாலும் எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவனுடன் சேர்ந்து வாழ்ந்தாக வேண்டும். இது எழுதப்படாத விதி. தவிர, கணவன் எவ்வளவு அயோக்கியனாக, குடிகாரனாக இருந்தாலும் குழந்தைகளுக்காக, குடும்ப நலனுக்காக பொறுத்துக்கொள்ள வேண்டும். தன்னுடைய பொருளாதார தேவைக்காக, குடும்ப கௌரவத்துக்காக பெண் ஆணை சார்ந்திருந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.என்றைக்கு பெண்கள் சுயமாக வருமானம் ஈட்ட ஆரம்பித்தார்களோ, அப்போதிருந்து நிலைமை வேறு திசையை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. அப்போது தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கூட அவளுக்கு இல்லை. ஆனால், இப்போது பெண் தனக்கு விருப்பப்பட்ட எல்லாவற்றையும் தானே தேர்ந்தெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டாள். கணவன் உட்பட. இன்று விவாகரத்து கூட எளிதாகிவிட்டது.
இதுதவிர, மண வாழ்க்கையைத் தாண்டிய பாலியல் துணையுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த பெண். கணவன் திருமண வாழ்க்கைக்கு வெளியே கொண்டிருக்கும் காதலியோடு ஓட்டம் என்ற செய்திகளை நாளிதழ்களில் தினம் தினம் படித்துக்கொண்டே இருக்கிறோம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாதிரியான செய்திகளைப் பார்ப்பது மிகவும் அரிது. இன்று இது ஒரு வாடிக்கையாகிவிட்டது. ஒரு பெண் தன்னுடைய கணவனை விட்டு இன்னொருவனை நாடிச் சென்றால் நம் சமூகத்தில் அது கள்ளக்காதலாகிவிடுகிறது. ஏன் இந்த அவப்பெயர்? ஏன் ஒரு பெண் தன் கணவனை விட்டு இன்னொருவனை நாடிச் செல்கிறாள்? அப்படியே நாடிச் சென்றாலும் அதில் என்ன தவறு இருக்கிறது? இதையெல்லாம் எப்படி நாம் பார்க்கிறோம்? இங்கே ஒரு பெண் தன் கணவன் இருக்கும்போதே இன்னொரு ஆணை கணவனின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ள முடியுமா? அதற்கு அந்த கணவன் சம்மதிப்பானா? அவன் சம்மதிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவளும் கணவனின் அனுமதியுடன் இன்னொருவனை திருமணம் செய்து கொள்கிறாள். இதற்கு பிறகும் அவளுக்கு இன்னொருவனின் மீது காதல் வருகிறது. அவனையும் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள். அதற்கு அந்த இரண்டு கணவன்களும் சம்மதிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பெண் மூன்று கணவன்களுடன் ஒரே வீட்டில் வசித்தால் எப்படி இருக்கும்? இது சாத்தியமா? இந்தக் கேள்விகளுடன் தான் ‘me you them’ படத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
பிரேசிலின் வறுமையைக் கோடிட்டு காட்டுகிற வறண்டு போன ஒரு கிராமத்தில், இளம் பெண் ஒருத்தி, தன்னுடைய மூன்று கணவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தாள். அவளின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவானதுதான் இத்திரைப்படம்.பிரேசிலின் வட கிழக்குப் பகுதியில் பாலைவனம் போல் காட்சியளிக்கும் ஒரு குக் கிராமம். வசந்த காலத்தில் கூட மரங்களில் இலைகள் உதிர்ந்து வறண்டு போய் இருக்கின்றன. அந்த கிராமத்துக்கு தன் மகனுடன் தனியே வருகிறாள் டர்லீன். அந்த மகனின் தந்தை யார் என்று தெரியவில்லை. அங்கே வசித்து வந்த அவளின் அம்மா இறந்துவிட அவளது வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. அந்த ஊரில் சொந்த வீடு, நிலம் என்று கொஞ்சம் வசதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் வயதான ஓசியாஸ் டர்லீனுக்கு அடைக்கலம் தருகிறான். அதற்காக தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வேண்டுகிறான். திருமணம் நடக்கிறது. சில வருடங்களில் டர்லீனுக்கு இன்னொரு மகன் பிறக்கிறான்.ஓசியாஸின் வீட்டிற்கு வரும் உறவினரான ஜெஸின்கோ அவர்களுடைய வீட்டிலேயே தங்குகிறான். அவனுக்கும் ஓசியாஸின் வயது. ஜெஸின்கோவுக்கும் டர்லீனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு திருமணம் செய்துகொள்கிறார்கள். டர்லீன் இன்னொரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். காலம் ஓடுகிறது.
தங்களுடைய வேலைகளில் மூழ்கிப்போகும் ஜெஸின்கோவும், ஓசியாஸும் டர்லீனுக்கு சலிப்பூட்டுகிறார்கள். இருவரையும் சகித்துக்கொண்டு ஒரே வீட்டில் அவள் வாழ வேண்டியிருக்கிறது. இச்சூழலில் டர்லீன் சிரோ என்ற இளைஞனை சந்தித்து காதலில் விழுகிறாள். மற்ற கணவர்கள் இதற்கு சம்மதித்தார்களா என்பதே மீதிக்கதை.இக்கதை நம்ப முடியாததாக இருந்தாலும், இது நிஜக்கதை என்பதால் நாம் நம்பித்தான் ஆகவேண்டும். டர்லீனின் வறுமையும், கையறு நிலையும்தான் வயதான ஓசியாஸை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைக்கிறது. ஆனால், அவள் வாழ்க்கையில் தேடிக்கொண்டிருந்த நட்பும், அன்பும் ஜெஸின்கோவிடம் கிடைக்க அவனை நாடுகிறாள். ஆனால், அவளின் உடல்ரீதியான தேவை இருவரிடமும் நிறைவேறாதபோதுதான் அவள் மூன்றாவதாக சிரோவை நாடுகிறாள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கணவர்கள் யாரும் அவளை நிராகரிக்கவில்லை. அவளும் யாரையும் நிராகரிக்கவில்லை. கொஞ்சம் பிசறி யிருந்தாலும் இந்தக் கதை தவறாகியிருக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இயல்பான நகைச்சுவையாலும், மென்மையான இசையாலும் பிணைக் கப்பட்ட திரைக்கதை பார்வையாளர்களுக்குள் எந்தவித அலுப்பையும் தருவதில்லை. இந்த மாதிரியான கதை அம்சத்துடன் ஒரு படத்தை இங்கே எடுத்து திரையரங்கங்களில் வெளியிட்டால் பெரிய கலவரமே வெடிக்கும். முதலில் தணிக்கைக் குழு அனுமதிக்குமா என்ற கேள்வியே பதில் இல்லாமல் தொக்கி நிற்கிறது.ஒரு பெண், மூன்று கணவர்கள், ஒரே வீடு பெரும்பாலும் அதிர்ச்சி யைத்தான் கொடுக்கும். ஆனால், அத்தனை ஏழ்மைக்கு நடுவிலும் அவர்களின் வாழ்க்கையையும்,அந்த பெருந்தன்மையையும் சுதந்திரத்தையும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதையும் பார்த்து பிரமிப்புத்தான் ஏற்படுகிறது. இப்படம் ஆண்-பெண் தேவையைப் பற்றியது என்பதைவிட பொருளாதாரத்தைப் பற்றியது என்பது சரியாக இருக்கும். பிரேசிலின் புழுதி பறக்கும் ஒரு கிராமத்தை அசலாக நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது Breno Silveira-ன் கேமரா. அந்த நிலத்தின் வறட்சியை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. Gilberto Gil-ன் ஜில்லின் இசை மௌனமான இடங்களை அலங்கரிக்கிறது. விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் தைரியமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் Andrucha Waddington
Average Rating