ரசாயன மீன் அதிர்ச்சி!!(மருத்துவம்)

Read Time:8 Minute, 45 Second

இயற்கை உரங்களுக்குப் பதிலாக, விஷத்தன்மை உடைய ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட செயற்கை உரங்கள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் என நம்முடைய பாரம்பரிய விவசாயம் என்றோ அழிவை நோக்கி போய்விட்டது. இத்தகைய ஆபத்தான சூழலில் மருத்துவர், உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் மாற்று உணவாக, கடலில் வாழும் உயிரினங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினர். அதிலும், குறிப்பாக மீன், இறால் போன்றவை ஆரோக்கியத்துக்கு ஏற்றவை என்பது இவர்கள் தரப்பு வாதம்.

மருத்துவ உலகம் வலியுறுத்தியதற்கு ஏற்றவாறு கடல் வாழ் உணவு வகைகளும் இருந்தன. அசைவ உணவுப் பிரியர்களும் உடல் நலனை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையில் இவற்றை விரும்பி சாப்பிட்டனர். ஆனால், இயற்கைக்கு முரணான அணுகுமுறையால் விவசாயம் எப்படி பாழானதோ, கடல் வாழ் உணவு வகைகளும் மெல்லமெல்ல அழிந்து வருகின்றன. இதன் உச்சகட்டமாக, இறந்த மனித உடலைப் பதப்படுத்த உதவும் பார்மலின் என்ற ரசாயனம், மீன் போன்றவற்றைக் கெட்டுப்போகாமல் வைக்க உபயோகப்படுத்தப்படுகிறது என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள், நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 10 நாள் முதல் ஒரு மாதம் வரை நடுக்கடலில் படகுகளில் தங்கி பிடிக்கப்பட்ட மீன்களுடன் கரைக்கு திரும்புகின்றனர். இவ்வாறு பிடித்து வரப்படும் மீன்கள் காசிமேடு, வானகரம், சிந்தாதிரிப்பேட்டை உள்பட நகரின் முக்கிய மீன் மார்க்கெட்களில் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

பிடிபட்ட மீன்கள் கெட்டு போகாமல் இருக்க, பார்மலின்(Formalin) என்ற ரசாயனம் தெளிக்கப்படுகிறது. சில சமயங்களில் பெரிய பேரல்களில் உள்ள தண்ணீரில் சில மில்லி அளவு பார்மலின் கலக்கப்படும். அந்த ரசாயனம் உள்ள பேரலில் பிடிக்கப்பட்ட மீன்கள் போடப்படும். சில மணிநேரம் கழித்து அந்த மீன்களை, ஐஸ்பெட்டியில் போட்டு மேலும் கெடாதவாறு பதப்படுத்தப்படும் என்கிறார்கள்.

பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையின் பிரதான மீன் மார்க்கெட்டுகளான சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு மீன் மார்க்கெட்டுகளில் இருந்து ஆய்வுக்காக மீன்கள் எடுத்து செல்லப்பட்டது. இவற்றை ஆய்வகத்தில் பரிசோதித்த போது, மீன்களை பதப்படுத்த புற்றுநோயை உண்டாக்கும் பார்மலின் இருந்தது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து டயட்டீஷியன் சங்கீதாவிடம் பேசினோம்…

‘‘உப்புத்தன்மை அதிகம் உள்ள கடல் நீரில் வாழ்கிற மீன் வகைகள் ஏற்கனவே பதப்படுத்தப்பட்ட நிலையில்தான் இருக்கின்றன. இவற்றைப் பிடித்த சில மணிநேரங்களிலேயே வாங்கி உடனடியாக, சமைத்து உண்பதுதான் ஆரோக்கியத்தைத் தரும். அவ்வாறு செய்வதால் வைட்டமின், அயர்ன், பாஸ்பரஸ், மினரல்ஸ், கொழுப்பு போன்ற சத்துக்கள் கொஞ்சமும் குறையாமல் நமது உடலில் சேரும். அதேவேளையில் கெட்டுப்போகாமல் இருக்க ஐஸ், பார்மலின் போன்றவற்றால் பதப்படுத்தி வைக்கப்படும் மீன்களில் நாளாகநாளாக, இச்சத்துக்கள் ஒவ்வொன்றாக அழிந்துவிடும்.

பல மாதங்களாகப் பதப்படுத்தப்பட்ட மீன் வகைகளில் அனைத்துவிதமான ஊட்டசத்துக்களும் அழிந்து போய்விடும். அவற்றில் இருந்து நச்சுத்தன்மை(Toxin) மட்டும்தான் நமக்கு கிடைக்கும். இந்த நச்சுத்தன்மையால் முதலில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மெல்லமெல்ல குறையும். இந்த மீன் வகைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து, உடலில் எல்லாவிதமான பிரச்னைகளும் உண்டாகும்.

ஜீரண மண்டலம் செயல் இழக்கும். அதன் பின்னர் செரிமான குறைப்பாடு, எரிச்சல் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகள், சளித்தொல்லை, முடி உதிர்தல், மலச்சிக்கல், ரத்தசோகை, ஒவ்வாமை வரும். தோலில் தடிப்புகள் ஏற்படும். பலவீனமான உடல்வாகு கொண்டவர்களுக்குக் காய்ச்சல் வரும். நாளடைவில், பார்மலின் போன்ற விஷத்தன்மை கொண்ட பொருட்கள் அதிகளவில் சேரச்சேர, எதிர்காலத்தில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

மீன் முதலான கடல் வாழ் உணவு வகைகள் உடலுக்கு ரொம்ப நல்லது. ஆனால், இன்று அவையே கேள்விக்குறியாகி விட்டன. நச்சுத்தன்மை உடைய பார்மலின் போன்ற ரசாயனங்களால் பதப்படுத்தப்பட்ட மீன்களைச் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து பாதுகாத்து கொள்ள மீன்பிடி இடங்களான ஏரி, ஆறு, கடல் போன்ற இடங்களுக்கு நேரிடையாகச் சென்று வாங்குவது நல்லது. நம்பகமான நபர்களிடம் இருந்தும் வாங்கலாம். குளிர்காலம் தொடங்கும்போது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே, முதியவர்கள், நோயாளிகள் பார்மலின் சேர்க்கப்பட்ட மீன் வகைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்’’ என்கிறார்.

ஆனால், இந்த செய்தியை மீன்வளத்துறை அமைச்சர் முற்றிலுமாக மறுத்திருக்கிறார். ‘மீன்களின் பார்மலின் இருப்பதாக விஷமிகள் வதந்தியை திட்டமிட்டு பரப்பியுள்ளனர். இதனை உதாசீனப்படுத்த கூடாது என்பதற்காக ஆய்வுகள் நடத்தினோம். ஆனால், ஆய்வின் முடிவில் பார்மலின் இல்லை என்றுதான் முடிவுகள் வந்துள்ளது.

எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம். இருப்பினும், இனி வரும் காலங்களில் தமிழகம் முழுவதும் அனைத்து துறைமுகங்களிலும் ஆய்வகங்களை அமைத்து மீன்களை ஆய்வு செய்து உறுதி செய்யப்பட்ட பிறகு, விற்பனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்க திட்டமிட்டுள்ேளாம். மக்கள் தைரியமாக மீன்களை உண்ணலாம். எந்த பிரச்னையும் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.எப்படியோ பொதுமக்களின் அச்சத்தைத் தீர்த்து, ஆரோக்கியமான மீன் வகைகள் கிடைக்க எல்லா நடவடிக்கைகளையும் அரசு செய்ய வேண்டும். பொதுமக்களும் கடல்வாழ் உணவுகள் வாங்கும்போது கவனமாக வாங்க
வேண்டியதும் அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பகாலத்தில் தாம்பத்யம், அசைவம் சரியா?(மகளிர் பக்கம்)
Next post ஹோட்டல் அரையில் ரகசிய கேமரா கண்டுபிடிப்பது எப்படி?( வீடியோ)