ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனை!!(மருத்துவம்)
உலகமயமாக்கல், காலமாற்றம், மருத்துவ உலகின் அபார வளர்ச்சியின் காரணமாக எத்தனையோ மருத்துவமனைகள் இன்று பிரசித்தி பெற்று விளங்குகின்றன. அவற்றில் தன்னிகரில்லா தனிச்சிறப்பு கொண்டதாக சென்னையில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனை விளங்குகிறது. ‘ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனை’ என்ற பெயரும், பெருமையும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மட்டுமே உண்டு. தனியார் மருத்துவனைகளையும் சேர்த்துத்தான் இந்த கணக்கெடுப்பு என்பது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.
பரபரப்பு மிகுந்த சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் ராஜீவ்காந்தி மருத்துவமனை சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கிறது. அப்படி என்னென்ன இந்த மருத்துவமனையில் ஸ்பெஷல், அங்கு என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்று தெரிந்துகொள்ள ரவுண்ட்ஸ் வந்தோம்…
ராஜீவ் காந்தி மருத்துவமனையின் உள்ளுறை மருத்துவ அதிகாரி டாக்டர் இளங்கோ அதன் சிறப்பம்சங்கள் பற்றி விவரிக்கிறார்…
‘‘ஆங்கிலேய ஆட்சியில் ‘பூங்கா நகர் அரசு மருத்துவமனை’யாகத் தொடங்கப்பட்டு, இயங்கி வந்த பாரம்பரியம் கொண்டது இந்த மருத்துவமனை. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது என்பதாலேயே இதனை ஆசியாவின் பிரம்மாண்டம் என்று குறிப்பிடுகிறார்கள். கடந்த 2001-ம் ஆண்டு முதல்வராக இருந்த மு.கருணாநிதி இந்த மருத்துவமனை வளாகத்தினுள் இரண்டு புதிய ஏழு அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பெயரை சூட்டினார். பின்னர் 2005- ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா இதை திறந்துவைத்தார்.
ஒரு மருத்துவமனை சுகாதாரமாக இருப்பதன் ஆணிவேராக இருப்பவர்கள் துப்புரவுத் தொழிலாளர்கள். அந்த தாரக மந்திரத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இங்கு பணிபுரியும் 1000-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள். அவர்களுக்குப் பிறகு, இந்த மருத்துவமனையில் சேவையாற்றும் செவிலியர்கள் சேவை அளவிட முடியாதது. இவர்கள் ஒரு நாளைக்கு மூன்று ஷிஃப்ட் முறையில் சிறந்த முறையில் பணியாற்றுகிறார்கள். புற நோயாளிகளுக்காகக் கழிப்பறை வசதிகளும் இங்கு ஏற்பாடு செய்து வைத்துள்ளோம்’’ என்கிறார்.
செவிலியர் சுலோச்சனாவிடம் மருத்துவமனை பற்றி பேசினோம்… ‘‘இங்கு 15 ஆண்டுகளாக பணியாற்றுகிறேன். உள்நோயாளிகளின் சிகிச்சை முதல் அவர்கள் படுக்கை தூய்மைப்படுத்துதல்வரை அனைத்து பணிகளையும் மனதார செய்துவருகிறோம். நோயாளிகள் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை அளிக்கிறார்கள். சிகிச்சை அளிப்பதில் அன்பாக நடந்துகொள்ளும் அதே நேரத்தில் கண்டிப்புடனும் நடந்துகொள்கிறோம்.
இங்கு உள்நோயாளிகள் எண்ணிக்கைக்குத் தகுந்த செவிலியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. எங்கள் தலைமை மூலம் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அது விரைவில் நடக்க வேண்டும்’’ என்கிறார்.ரத்த வங்கியின் செயல்பாடுகள் பற்றி டாக்டர் சுபாஷ் கூற ஆரம்பித்தார்.
‘‘தமிழகத்தில் உள்ள அரசு ரத்த வங்கிகளிலேயே இதுதான் மிகப்பெரிய ரத்த வங்கி. ஏறக்குறைய 6,800 சதுர அடியில் இந்த வங்கி அமைந்துள்ளது. தினமும் 50-லிருந்து 75 பேர் தாமாகவே முன் வந்து ரத்து தானம் அளிக்கின்றனர். ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் கொடை அளிக்கின்றனர். இவர்களின் ஒத்துழைப்பால் சராசரியாக ஓர் ஆண்டுக்கு 38 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் யூனிட் வரை ரத்தம் சேகரிக்கிறோம். அவ்வாறு பெறப்படும் குருதி மூலமாக ஒரு வருடத்தில் 375 முகாம்கள் நடத்துகிறோம்’’ என்கிறார்.
இரைப்பை மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை துறை மருத்துவர் சீனிவாசன் கூறும்போது…
‘‘இந்தியாவிலேயேயே முதன்முதலில் இங்குதான் 1984-ம் ஆண்டு இரைப்பை மற்றும் குடலியல் துறை தொடங்கப்பட்டது. இங்கு உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், கல்லீரல், கணையம் பெருங்குடல் ஆசன வாய் பாதிப்பு இவைகளில் சாதாரண சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை வரை செய்கிறோம். மேலும் புற்றுநோய் அறுவை சிகிச்சையும் சிறந்த முறையில் அதிநவீன தொழில் நுட்ப கருவிகள் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 640 நோய்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்புகிறவர்கள் குடும்ப அட்டை, வருமான சான்றிதழ் கொண்டு வந்தால் போதுமானது. உடனடியாக இவ்வசதி செய்து தரப்படும். இதற்கென்று தனிப்பிரிவு செயல்படுகிறது. நடுத்தர வர்க்கத்தினரும் பயன்பெறும் வகையில், 200 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு உள்ளது. 2 முதல் 4 பேர் தங்கும் இந்த வார்டுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது’’ என்கிறார்.
நரம்பியல் துறை மருத்துவர் சந்திர மெளலீஸ்வரன் கூறும்போது…‘‘இந்த மருத்துவமனையின் நரம்பியல் துறை இந்தியாவில் மிகவும் பழமையான துறையாகும். நரம்பியல் மருத்துவத்தில் முன்னோடியாக உள்ள இத்துறையில் தலைவலி, உடல் உறுப்புகள் அசைவு குறைப்பாடு, ஞாபகமறதி, பக்கவாதம், பிசியோதெரபி, தசை மற்றும் நரம்பு ஆகியவற்றிற்குத் தனித்தனியே க்ளினிக்குகள் உள்ளன.
இங்கு நாளொன்றுக்கு 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் முற்றிலும் இலவசமாக தரப்படுகின்றன. மேலும், பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகளால் அவதிப்படுபவர்களுக்கு வசதியாக ஆம்புலன்ஸ் வாகனமும் விரைவில் வர உள்ளது’’ என்கிறார்.
மருத்துவமனையின் சேவை எப்படி இருக்கிறது என்று நரம்பியல் வார்டில் அட்மிட் ஆகியிருந்த சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ரியாஸிடம் கேட்டோம்…‘‘கைகள் நடுக்கம், பேச்சு குழறல் ஆகிய பிரச்னைகளுக்காக சேர்ந்திருக்கிறேன். தரமான சிகிச்சை தருகிறார்கள். இரவு நேரங்களில் அவசரம் என்று போன் செய்தால் டாக்டர், நர்ஸ் உடனே வந்து கவனிக்கிறார்கள். இதுபோல் வசதிகள் நிறைய இருந்தாலும், சில அசெளகரியங்களும் இருக்கின்றன. நோயாளிகளைக் கவனித்துக் கொள்வதற்காக வருபவர்கள் ஓய்வெடுப்பதற்கான இடம் போதுமானதாக இல்லை.
ஆங்காங்கே படிக்கட்டுகளில், வராண்டாவில் நோயாளிகளின் உறவினர்கள் உட்கார்கிறார்கள். இந்த பிரச்னை சரி செய்யப்பட வேண்டும். அதேபோல், எல்லா தளங்களும், எல்லா வார்டுகளும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இது பொதுமக்களுக்கு குழப்பமாகி திண்டாடும் நிலை உள்ளது. எனவே, ஒவ்வொரு தளத்திலும் வரவேற்பறையோ அல்லது தகவல் தொடர்பு அறையோ இருந்தால் உதவியாக இருக்கும்’’ என்கிறார்.
நிறைகள் தொடரட்டும்… குறைகள் சரி செய்யப்படட்டும்!
மாஸ்டர் ஹெல்த் செக் அப்
முழு உடல் பரிசோதனை திட்டத்தினை(Master HealthCheck-Up) இந்த மருத்துவமனையின் சிறப்பு அம்சம் என்று சொல்லலாம்.‘பேக்கேஜ் சிஸ்டம்’ என்ற அடிப்படையில் ‘அம்மா கோல்ட்’ ‘அம்மா டைமண்ட்’ ‘அம்மா பிளாட்டினம்’ என மூன்றுவிதமாக உடல் பரிசோதனைகள் இங்கு செய்யப்படுகின்றன. இவற்றிற்கு முறையே ரூபாய் 1000, 2000 மற்றும் 3000 என கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.
ரத்தப்பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு, கல்லீரல் பரிசோதனைகள், ஹெப்படைடிஸ் பரிசோதனை, எக்ஸ்ரே, இசிஜி, ஸ்கேன்,பாப்ஸ்மியர், பி.எஸ்.ஏ. தைராய்டு, மார்பகப் பரிசோதனை(Digital Mammogram) போன்ற பல்வேறு பரிசோதனைகள் சிறந்த வல்லுனர்களால் செய்யப்படுகின்றன.
அவற்றின் முடிவில், குறைப்பாடுகள் ஏதேனும் இருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட வார்டுக்கு அனுப்பட்டு தகுந்த சிகிச்சைகளும், தரமான மருந்து, மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள விரும்புகிறவர்கள் mmcmhc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
சில முக்கிய தகவல்கள்
*கிழக்கு இந்திய கம்பெனியைச் சேர்ந்த சர். எட்வர்ட் லின்டர் என்பவரால், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 1664-ம் ஆண்டு, நவம்பர் மாதம், 16-ம் தேதியன்று இந்த மருத்துவமனை நிறுவப்பட்டது.
* தற்போது அமைந்துள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள இடத்திற்கு சர்.ஏல் என்பவரது முயற்சியால் 1772-ம் ஆண்டு மாற்றப்பட்டது.
* இங்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகம் உட்பட நாடு முழுவதும் இருந்து, ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். சராசரியாக தினமும் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வெளிநோயாளிகளாகவும், 3500 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
*காலை ஏழரை மணிமுதல், மதியம் 12 மணிவரை பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, நரம்பியல், கதிரியக்கம், சிறுநீரகவியல், ரத்த நாள அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, அனஸ்தீசியா, ரத்த வங்கி, எலும்பு மருத்துவம், இதய நோய் உட்பட பல்வேறு பிரிவுகள் வெளிநோயாளிகளுக்காக செயல்பட்டு வருகின்றன.
* 24 மணிநேரமும் இயங்கும் அவசர சிகிச்சைப் பிரிவும் அமைந்துள்ளது.
Average Rating