ராஜபக்ஷ சம்பந்தன் சந்திப்பின் பின்னணி -என்.கண்ணன் (கட்டுரை)
சீனாவில், மக்கள் விடுதலை இராணுவம் உருவாக்கப்பட்ட ஆண்டு விழா, ஒவ்வோர் ஆண்டும் வெளிநாடுகளில் உள்ள சீனத்தூதரகங்களின் ஏற்பாட்டில் கொண்டாடப்படுவது இப்போது வழக்கமாகி விட்டது.
இலங்கையிலும் அண்மைக்காலமாக இந்த கொண்டாட்டம் மிகப்பெரியளவில் இடம்பெற்று வருகிறது.
கடந்த திங்கட்கிழமை, கொழும்பில் சங்ரி லா விடுதியில், மிகப்பெரிய நிகழ்வாக சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் இடம்பெற்றது.
சீனத் தூதுவர் செங் ஷியுவான் மற்றும் சீனத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், இம்முறை அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகளைக் காணவில்லை.
கடந்த ஆண்டு ஹில்டன் விடுதியில் சுமார் 400 பேர் பங்கேற்ற, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 90 ஆவது ஆண்டு விழாவில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன பிரதம விருந்தினராகப் பங்கேற்றிருந்தார்.
இம்முறை விழாவில் 600 பேருக்கு மேல் பங்கேற்றனர். இம்முறை, பாதுகாப்புச் செயலரான கபில வைத்தியரத்ன தான் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் ஆளும்கட்சி அரசியல்வாதி அல்ல.
அதைவிட, அரச தரப்பில் இருந்து எந்தவொரு அரசியல்வாதியும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.
அவ்வாறாயின், அரசியல்வாதிகளை ஒதுக்கி விட்டு பாதுகாப்புத் துறை சார்ந்தவர்களுக்குத் தான், சீனத் தூதரகம் அழைப்பு அனுப்பியதா என்றால் அதுவும் இல்லை.
ஏனென்றால், இலங்கையின் இரண்டு முக்கிய அரசியல்வாதிகளான மஹிந்த ராஜபக் ஷவும் இரா.சம்பந்தனும் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்களுடன், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக் ஷவும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் இப்போது அரை அரசியல்வாதியாக மாறி விட்டார்.
எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் சீனா அழைப்பு விடுத்திருப்பதன் பின்னால், எந்தவொரு உள்நோக்கமும் சீனாவுக்கு இருக்காது என்று யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது.
ஆண்டுதோறும் சீனா தனது இராணுவத்தின் பலத்தையும், பெருமையையும் பறைசாற்றுவதற்காக இந்த ஆண்டு விழாவை நடத்துகிறது.
சீனாவில் பெய்ஜிங் நகரில் மிகப் பெரியளவிலான இராணுவ அணிவகுப்பு நடத்தப்படும். அதில் இலட்சக்கணக்கான சீனப் படையினர், அதிநவீன போர்த்தளபாடங்களுடன் அணிவகுத்துச் செல்வது வழக்கம்.
வெளிநாடுகளில் சீனா அவ்வாறான இராணுவ பலத்தைக் காட்டமுடியாது. ஆனால் தனது இராணுவ பலத்தின் பெருமையைப் பேச முடியும். அதன் மதிப்பை உயர்த்திக் காட்ட முடியும்.
அதனை வைத்து, பிற நாடுகளுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும். அதற்காக தான் கொழும்பிலும், வேறு பல நாடுகளின் தலைநகரங்களிலும், இந்த விழா கொண்டாடப்படுகிறது.
கொழும்பில் சீன இராணுவத்தின் ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் என்பது, வழக்கமாக ஒரு இராணுவ அடையாளத்துடன், இரண்டு நாடுகளினதும் பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கான இலக்குடன் தான் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால், இந்தமுறை ஒழுங்கு செய்யப்பட்ட சீன இராணுவத்தின் ஆண்டு விழா அவ்வாறான ஒன்றாகத் தென்படவில்லை. அதற்கும் அப்பாற்பட்ட அரசியல் நோக்கங்களுடன் ஒழுங்குபடுத்தப்பட்டதா என்று சந்தேகிக்கத் தக்க பல காரணங்கள் உள்ளன.
1. அரச தரப்பு அரசியல்வாதிகள் இல்லாத ஒன்றாக இருந்தமை.
2. மஹிந்த ராஜபக் ஷவுக்கும், கோத்தாபய ராஜபக் ஷவுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்.
3. எதிர்க்கட்சித் தலைவரான இரா.சம்பந்தனும் அழைக்கப்பட்டமை.
இந்த நிகழ்வில் அரச தரப்பு அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் தவிர்க்கப்பட்டதா என்று தெரியவில்லை. அவ்வாறு தவிர்க்கப்பட்டிருந்தால், அரசாங்கத்துக்கும் சீனாவுக்கும் இடையில் காணப்படும் இடைவெளியை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
இந்த நிகழ்வு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான், பொலன்னறுவையில், சீனாவின் நிதியுதவியுடன் சிறுநீரக மருத்துவமனையை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. (11ஆம் பக்கம் பார்க்க)
சீனத் தூதுவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்த அந்த நிகழ்வில், சீனாவின் தேசிய கீதம் முதலில் இசைக்கப்பட்டது தொடர்பான சர்ச்சையும் உருவானது.
அதைவிட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பிய திட்டம் ஒன்றுக்காக 4,800 கோடி ரூபாவை வழங்குவதாக சீன ஜனாதிபதி அறிவித்திருப்பதான செய்தியும் இங்கு வைத்தே அறிவிக்கப்பட்டது.
எனவே, அரசாங்கத் தரப்புடன் சீனா முரண்டு பிடிக்கிறதா என்பதில் குழப்பமான சந்தேகங்களும் இருக்கின்றன.
மஹிந்த ராஜபக் ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கு, சீன நிறுவனம் நிதி வழங்கியது குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டதை சீனா விரும்பவில்லை என்ற செய்தியும் உள்ளது.
இந்த விவாதம் நடத்தப்படுவதற்கு முதல் நாள், பிரதமர் ரணிலுடன் தொடர்புகொண்ட கொழும்பில் உள்ள சீனாவின் மூத்த இராஜதந்திரி ஒருவர், அதுபற்றி எச்சரிக்கை செய்ததாகவும், அதன் பின்னரே விவாதம் அடக்கி வாசிக்கப்பட்டது என்றும் தகவல்கள் உள்ளன.
இதன் காரணமாக, ஐ.தே.க.வைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் ஓரம்கட்டப்பட்டிருக்கும் வாய்ப்புகளையும் நிராகரிக்க முடியாது.
எவ்வாறாயினும், ஐ.தே.க. அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட, மஹிந்தவுக்கும் கோத்தாவுக்கும் சீனா கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது.
ஆட்சியை இழந்த பின்னரும், மஹிந்த ராஜபக் ஷவும், கோத்தாபய ராஜபக் ஷவும், சீனாவின் அரச விருந்தினர்களாக அவ்வப்போது அழைக்கப்படுகின்றனர். பேச்சுக்களும் நடத்தப்படுகின்றன.
அதன் தொடர்ச்சியை, சீன இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு விழாவிலும் காண முடிந்தது.
இதில் இன்னொரு முக்கியமான விடயமாக கூறத்தக்கது, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அழைக்கப்பட்டதும், அவர் பங்கேற்றதும்.
இரா.சம்பந்தன் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக அழைக்கப்பட்டாரா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அழைக்கப்பட்டாரா என்பது சீனாவுக்குத் தான் வெளிச்சம்.
மஹிந்த ராஜபக் ஷவையும், கோத்தாபய ராஜபக் ஷவையும் அழைக்கும் போது, அவர்களை, அரசியல்வாதிகள் என்ற முறையில் தான் அழைத்தோம் என்று நியாயப்படுத்தவும் சீனா அவ்வாறு செய்திருக்கலாம்.
அதற்கும் அப்பால், மஹிந்த ராஜபக் ஷவையும், இரா.சம்பந்தனையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து பேச வைக்கும் முயற்சியாக இருந்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
பொதுவாக, சீரான உறவைக் கொண்டிருக்காதவர்களை இணைப்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகளை குடும்பங்களின் மத்தியில் மாத்திரம் நடத்துவதில்லை. நாடுகள் கூட, உயர்மட்டத்தில் நடத்துகின்றன. அவ்வாறான ஒரு சந்தர்ப்பமாகவே இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.
புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு ஆதரவு கோரி, மஹிந்த ராஜபக் ஷவை இரா.சம்பந்தன் சந்திக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகி பல வாரங்களாகி விட்டன. ஆனாலும் அந்தச் சந்திப்பு நடக்கவேயில்லை.
இப்படியான நிலையில், இவர்கள் இருவரும், சீனா ஒழுங்கு செய்த நிகழ்வில் ஆறுதலாக அமர்ந்து பேசியிருக்கிறார்கள். பல்வேறு விடயங்களையும் கலந்துரையாடியிருக்கிறார்கள்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த தரப்பில் உள்ள ஒருவரே வெற்றியைப் பெற வேண்டும் என்று சீனா விரும்பும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.
ஏனென்றால் சீனாவைப் பொறுத்தவரையில், ராஜபக் ஷவினர் தான் அவர்களுக்கு மிகவும் நம்பகமான கூட்டாளிகள். அவர்களை வெல்ல வைப்பதற்காக, சீனா இப்போதே காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளது என்றால் அதனை ஆச்சரியமான ஒன்றாக பார்க்க முடியாது.
கடந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவின் தோல்விக்கு முக்கியமான காரணியாக இருந்தவர்கள் தமிழ் பேசும் வாக்காளர்கள்.
இந்த தமிழ் பேசும் வாக்காளர்களில் இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் என்று மூன்று வகையினர் உள்ளனர். இந்த மூன்று தரப்பினரும் ஒன்றாக மஹிந்தவை எதிர்த்திருந்தனர்.
மஹிந்த தரப்புக்கு இப்போது, இந்த மூன்று தரப்பினதும் ஆதரவையும் பெற வேண்டிய தேவை உள்ளது.
ஏற்கனவே முஸ்லிம்களை வளைத்துப் போடும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்காக பொதுஜன முன்னணியில் முஸ்லிம் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது, அதற்கான பேச்சுக்கள், முஸ்லிம்களுடனான நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தும் சந்திப்புகள், நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
மலையக அரசியலில் இன்னமும் ஆறுமுகன் தொண்டமானை மஹிந்த அதிகளவில் நம்புகிறார். அண்மையில் நுவரெலியாவில் “எலிய” அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் கோத்தாபய ராஜபக் ஷ, விபூதியும் சந்தனப் பொட்டுமாக, தமிழர்களைக் கவரும் வகையில் தோன்றியிருந்தார்.
இது மலையக வாக்காளர்களை வளைத்துப் போடும் அடுத்த தந்திரம்.
ஆனாலும், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வளைத்துப் போடுவது தான் சிக்கலான காரியமாக இருந்து வருகிறது.
கூட்டமைப்பை வளைத்துப் போட்டு, தமிழ் வாக்காளர்களின் ஆதரவை உறுதிப்படுத்த வழிதெரியாமல் மஹிந்த தரப்பு நிற்கின்ற சூழலில் தான் மஹிந்தவையும் சம்பந்தனையும் சந்திக்க வைத்திருக்கிறது சீனா.
இந்தச் சந்திப்பில் தாம் ஆட்சிக்கு வந்த பின்னர், தீர்வு ஒன்றைக் காண, கூட்டமைப்பு ஒத்துழைக்க வேண்டும் என்றும், வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்ய உதவ வேண்டும் என்றும் மஹிந்த கேட்டிருக்கிறார்.
ஆனால் சம்பந்தனோ புதிய அரசியலமைப்புக்கு மஹிந்த ஒத்துழைக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.
இப்படியான நிலையில் தான், மஹிந்த, தமிழ் மக்களை சரியாக வழிகாட்டி ஒத்துழைக்காவிடின், கூட்டமைப்புக்கு மாற்றான புதிய அணிகள் உருவாகும், அப்படியான நிலையில் நீங்கள் தான் கவலைப்பட நேரிடும் என்று எச்சரிக்கும் தொனியில் கூறியிருக்கிறார்.
கோத்தாபய ராஜபக் ஷவுடன், சம்பந்தனை நெருக்கமாக்குவதற்கும் அவர் முயற்சித்திருக்கிறார் என்று தெரிகிறது.
எப்படியாவது, கூட்டமைப்பை வளைத்துப் போட்டு விட வேண்டும் என்பதில் ராஜபக் ஷவினர் ஆர்வம் கொண்டுள்ளனர். சீனாவுக்கும் அத்தகைய ஆர்வம் இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.
இதில் சம்பந்தன், மஹிந்த, கோத்தா போன்றவர்களுக்கு வெவ்வேறு சிந்தனைகளும் நோக்கங்களும் இருந்தாலும், சீனாவைப் பொறுத்தவரையில் அதைப்பற்றிய கவலைகள் ஏதுமில்லை.
ஏனென்றால், சீனாவுக்கு யார் குற்றினாலும் அரிசியானால் சரி. அதாவது ராஜபக் ஷவினர் ஆட்சிக்கு வந்தால் சரி. அவ்வளவு தான் அதன் எதிர்பார்ப்பு.
-என்.கண்ணன்
Average Rating