மைத்திரி நழுவவிட்ட வாய்ப்புகள்!!(கட்டுரை)
ஊடக சுதந்திரத்தைக் காக்க வந்தவராகத் தன்னைக் காட்டிக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊடகங்கள் மீது அண்மைக்காலத்தில் முன்வைத்த கடுமையான விமர்சனங்களின் ஓர் அங்கமாக, திங்கட்கிழமை (23) அவர் முன்வைத்த விமர்சனங்கள், ஊடகங்கள் மீதான கவனங்களை மீண்டும் ஈர்த்துள்ளன.
அரசாங்கத்தைத் தாக்கும், பலவீனப்படுத்தும், அழிக்கும் செயற்பாட்டில் ஊடகங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன என, கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இலங்கையில் ஊடக நிறுவனங்கள், அவற்றின் போக்குகள் குறித்தான விமர்சனங்கள், நிச்சயமாகவே முன்வைக்கப்பட வேண்டியன. இலங்கையில் மாத்திரமல்லாது, உலகம் முழுவதிலும், ஊடகங்களின் போக்குக் குறித்த கேள்விகள் எழுந்திருக்கின்றன. மக்களை உசுப்பேற்றும் அல்லது உணர்வுரீதியாகத் தாக்கும் வகையிலான செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, உண்மையான அல்லது மக்களுக்குத் தேவையான செய்திகளுக்குப் பெரிதளவில் முக்கியத்துவம் வழங்கப்படாத ஒரு நிலைமையை எம்மால் காணமுடிகிறது.
ஆனால், தற்போதைய அரசாங்கம் மீதான விமர்சனங்களை யார் முன்வைக்கிறார்கள், யாரின் செயற்பாடுகள் அதற்குப் பாதகமாக அமைகின்றன என்ற கேள்வியை எழுப்பிப் பார்த்தால், அதற்கான பதில், ஊடகங்களை நோக்கியன்று, ஜனாதிபதியை நோக்கியே செல்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில், “மஹிந்தவின் ஆட்சியை விட அதிக கொள்ளைகள் புரிந்த ஆட்சி” என்று, தற்போதைய அரசாங்கத்தை, ஊடகங்கள் அழைத்திருக்கவில்லை. மாறாக, ஜனாதிபதி சிறிசேனவில் நேரடியான விமர்சனம் அது. அதேபோல், அமைச்சரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை, பகிரங்கமாக விமர்சித்து, அவற்றைத் தடுத்து நிறுத்துகின்ற செயற்பாடுகளை யார் புரிகிறார்கள் என்பதையும், ஜனாதிபதி, தன்னைத் தானே பார்த்துக் கேட்டுக்கொள்ள வேண்டியது அவசியமானது.
அதேபோல், ஜனாதிபதியின் உரையில், “அரசியல்வாதிகளின் முக்கியத்துவமற்ற, ஆனால் உணர்வுவெழுச்சியூட்டக்கூடிய கருத்துகளுக்கு” முக்கியத்துவம் வழங்குவதைப் பற்றிய விமர்சனம் காணப்பட்டது. ஆனால், ஜனாதிபதியின் இவ்வுரையே, அவ்வகையான ஓர் உரையாக மாறிப்போனமை தான், உச்சக்கட்ட முரண்நகை.
ஜனாதிபதியின் இவ்விமர்சனம், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஞாபகப்படுத்தியது.
ஏற்கெனவே, பல்வேறு விடயங்களில், இருவருக்குமிடையில் ஒற்றுமைகள் காணப்படுவதைக் கண்டு, அவற்றைச் சுட்டிக்காட்டியோரும் உண்டு. கடினமான கொள்கைகள் தொடர்பில் இருவருக்கும் பெரிதளவுக்குப் புரிதல்கள் காணப்படுவதில்லை என்பது, அந்த விமர்சனங்களுள் முக்கியமானது.
அதேபோல், ஊடகங்கள் மீதான விமர்சனங்களும், சுட்டிக்காட்டப்பட வேண்டியன. இவ்வாண்டு ஏப்ரலில் கருத்துத் தெரிவித்திருந்த ஜனாதிபதி, இலங்கையில் காணப்படும் இணையத்தள செய்திகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவை, போலிச் செய்திகள் எனக் கூறியிருந்தார். வெளிப்படையாகவே தவறாகத் தெரிகின்ற அத்தரவுக்கான ஆதாரம் எதனையும் அவர் வழங்கியிருக்கவில்லை.
ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தன் மீதான விமர்சனங்களை முன்வைக்கின்ற அனைத்து ஊடகங்களையும், “போலிச் செய்தி ஊடகங்கள்” என்று வர்ணிப்பதைத் தான், ஜனாதிபதி சிறிசேனவின் இக்கருத்து ஞாபகப்படுத்தியது. அதேபோல், விமர்சன ரீதியான செய்திகளை உருவாக்கக்கூடிய செயற்பாடுகளை மேற்கொண்டுவிட்டு, ஊடகங்கள் விமர்சிக்கின்றன என்று குறைபடுவதுவும், இருவரும் செய்யும் செயல்களாகும்.
இந்த விமர்சனங்கள் எவையும், ஜனாதிபதி சிறிசேனவை மட்டந்தட்டுவதற்காக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் கிடையாது. மாறாக, இலங்கையின் நவீனகால வரலாற்றில், அனைத்து வகையான மக்களையும் ஒன்றிணைத்து, நாட்டை முன்னேற்றக்கூடிய வாய்ப்பைக் கொண்டிருந்த ஜனாதிபதியான அவர், அவ்வாய்ப்புகளைத் தொடர்ந்தும் நழுவ விட்டுக்கொண்டிருக்கிறார் என்பதே இதில் முக்கியமானது.
ஜனாதிபதி சிறிசேனவுக்கு முன்னர் இருந்த மஹிந்த ராஜபக்ஷவை, பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. அதற்கு முன்னர் இருந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை, 1994ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் எதிர்பார்ப்புடன் எதிர்கொண்ட போதிலும், அவர் மீதான நம்பிக்கையை இலகுவில் இழந்திருந்தனர். அதற்கு முன்னைய ஜனாதிபதிகள் எவரும், தமிழ் மக்களுக்கு நேசமானவர்கள் என்று சொல்லப்பட முடியாது.
ஆனால் ஜனாதிபதி சிறிசேன, இலங்கையின் பிரதான மூவினங்களான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என, அனைத்து இனங்களிடையேயும் கணிசமான ஆதரவைப் பெற்றவராக இருந்தார்.
நாடாளுமன்றில், மூன்றிலிரண்டு பெரும்பான்மையை, மிக இலகுவாக அவர் கொண்டிருந்தார். 2015ஆம் ஆண்டில் அவர் தெரிவுசெய்யப்பட்டவுடன், அவர் செய்வதையெல்லாம் வரவேற்கும் மனநிலையில் மக்கள் இருந்தனர். அக்காலத்தைப் பயன்படுத்தி, நீண்டகால நோக்கிலான திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்க முடியும்.
ஜனாதிபதி சொல்வதைப் போல், ஊடக சுதந்திரத்தை மீளக்கொண்டுவர முயன்றமை உள்ளிட்ட விடயங்கள் முக்கியமானவை தான். ஆனால், இலங்கையின் பிரதான பிரச்சினை என்று வரும்போது, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முக்கியமான படிகளை எடுத்துவைத்திருக்க முடியும்.
ஆனால், பல்வேறு காரணங்களுக்காகப் பிற்போடப்பட்டு வந்த அம்முயற்சிகள், இப்போது தேங்கு நிலையை அடைந்திருக்கின்றன. அரசாங்கத் தரப்பு முன்வைக்கின்ற எந்தவிதமான தீர்வுகளையும் விமர்சிப்பதற்கு, தற்போது பலமடைந்துவரும் ஒன்றிணைந்த எதிரணி தயாராக இருக்கிறது.
தற்போதிருக்கும் அரசமைப்பை அப்படியே புதிதாக வழங்கினாலும் கூட, “இதோ, தமிழர்களுக்குச் சமஷ்டி செல்கிறது” என்று தான், அக்குழுவினர் விமர்சிக்கப் போகின்றனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு, அதிகபட்சமாக 17, 18 மாதங்களே இருக்கின்ற நிலையிலும், பொதுத் தேர்தலுக்கு அதிகபட்சமாக அதை விட சில மாதங்களே அதிகமாக உள்ள நிலையிலும், பெரும்பான்மையின மக்களைக் கோபப்படுத்துகின்ற எதையும் செய்வதற்கு, அரசாங்கம் விரும்பினாலும், அரசாங்கம் செய்யப் போவதில்லை.
இந்த யதார்த்தத்துக்கு மத்தியில், சமூக அடிப்படையிலாவது நாட்டை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்று கேட்டால், இல்லையென்று தான் பதிலளிக்கத் தோன்றுகிறது. மரண தண்டனைகளை நிறைவேற்றுவது தொடர்பான தனது உறுதியான நிலைப்பாட்டை, ஜனாதிபதி சிறிசேன, மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சொல்லும் விமர்சனங்களுக்கெல்லாம் அஞ்சப் போவதில்லை என அவர் சூளுரைத்திருக்கிறார்.
“போதை ஒழிப்பு” என்பதை, ஆரம்பத்திலிருந்தே தனது கொள்கைகளுள் ஒன்றாக வைத்திருக்கும் ஜனாதிபதி சிறிசேன, உண்மையிலேயே போதைப்பொருள் விற்பனையையும் கடத்தலையும் பாவனையையும் ஒழிப்பதற்குத் தான் விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
உண்மையிலேயே, போதைப்பொருள் போன்ற கடுமையான குற்றங்களுக்கு மாத்திரம் தான், மரண தண்டனை அமுலாக்கப்படும் என்றும் எண்ணுவோம். ஆனால், மரண தண்டனைகளை அமுல்படுத்துவதை ஆரம்பித்த பின்னர், அடுத்ததாக வருகின்ற அரசாங்கம், வேறு குற்றங்களுக்கும் அவற்றை அமுலாக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அரசியல் குற்றங்களுக்காகவும் அத்தண்டனைகள் வழங்கப்படாது என்ற உறுதிமொழியை ஜனாதிபதியால் வழங்க முடியுமா?
இப்படியாக எந்த உறுதிமொழியும் இல்லாத நிலையில், தற்போது வழங்கப்பட முனையப்படுகின்ற மரண தண்டனைகள், பல தசாப்தங்களுக்கு நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் செல்லும் ஆபத்தைத் தான் கொண்டிருக்கிறது. தனது குடும்பம், பொலன்னறுவையில் எவ்வாறு வறுமையானதாக இருந்தது என்பதை அடிக்கடி ஞாபகமூட்டுவதில், ஜனாதிபதி சிறிசேன, அதிக விருப்பத்தைக் கொண்டிருக்கிறார். 2015ஆம் ஆண்டில், அப்படிப்பட்ட ஏழைக் குடும்பத்திலிருந்து வந்த ஒருவரை ஜனாதிபதியாக்கிய இலங்கை மக்கள், பல தசாப்தங்களுக்கு இல்லாவிட்டாலும், சிறிய அளவிலாவது, நாட்டில் முன்னேற்றகரமான சிந்தனைகளையும் கொள்கைகளையும் ஏற்படுமென்றே நம்பினர்.
இவ்வாறில்லாமல், நாட்டை மேலும் பின்னோக்கி அழைத்துச் செல்லப்படும் முயற்சிகள், ஜனாதிபதி சிறிசேன முன் காணப்பட்ட எந்தளவுக்கு அதிகமான சந்தர்ப்பங்களை அவர் தவறவிட்டார் என்பதைக் காட்டுகின்றன.
ஆனால், அதிர்ஷ்டவசமாக, தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு, அனைத்து வகைகளிலும் நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்வதற்கான வாய்ப்பு, ஜனாதிபதி சிறிசேனவுக்கு இன்னமும் காணப்படுகிறது. அதற்கு அவர், “முக்கியத்துவமற்ற, ஆனால் உணர்வுவெழுச்சியூட்டக்கூடிய” விடயங்கள் பற்றி, ஊடகங்களுக்கு வழங்கிய அறிவுரையையே பின்பற்றுவது பொருத்தமானதாக அமையும்.
Average Rating