உடலுக்கு உறுதி தரும் உலர் திராட்சை!!(மருத்துவம்)
* ‘‘சமையலில் சுவை மற்றும் மணம் கூட்டுவதற்கு உலர் திராட்சை பயன்படுத்தப்படுகிறது என்றே பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். ஆனால், இந்த உணவுப்பண்டத்திற்கென மருத்துவ குணங்கள் நிறைய உள்ளன’’ என்கிற ஊட்டச்சத்து நிபுணர் பிரீத்தா, உலர்திராட்சையின் பலன்களை இங்கே விவரிக்கிறார்.
* பச்சிளம் குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை அனைத்துத் தரப்பு வயதினருக்கும் ஏற்ற உலர் திராட்சையை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்; உணவு வேளைக்குப் பின்னரும் சாப்பிடலாம்.
* உலர் திராட்சை எளிதாகக் கிடைக்கக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த ஓர் உணவுப்பொருள். கறுப்பு மற்றும் வெளிர் நிறம் என இரண்டு வகைகள் இதில் உண்டு.
* நேரடியாக சூரிய ஒளியில் உலர வைத்தல், சல்ஃபர் டை ஆக்ஸைடு என்ற வேதிப்பொருள் சேர்த்து பதப்படுத்துதல், தண்ணீரில் ஊற வைத்து பதப்படுத்துதல் என மூன்றுவிதமாக திராட்சையைப் பதப்படுத்தி உலர் திராட்சையாக மாற்றுகிறார்கள்.
* புளிப்புத்தன்மை, இனிப்பு சுவை இரண்டும் கலந்த உலர் திராட்சையில் தேனின் மருத்துவ குணம் நிறைய உள்ளது.
* விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் ஏற்ற சத்துணவாக இது திகழ்கிறது. இவர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரம் கலோரி தேவைப்படும்.
* ஒரு கப் உலர் திராட்சை சாப்பிட்டால் 130 கலோரி கிடைக்கும். பயிற்சியின் இடையேயும் பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்றவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.
* பெண்கள் மெனோபாஸ் காலக்கட்டத்தில், தினமும் 5 உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் எலும்பு பலவீனம் அடைவது தடுக்கப்படும். ரத்தசோகை குறைபாட்டை சரி செய்யும் தன்மையும் இதற்கு உண்டு.
* உலர் திராட்சையை உண்பதால் செரிமான குறைபாடு வராது. மலச்சிக்கல் பிரச்னை தீரும். நோய் எதிர்ப்பு திறனும் அதிகரிக்கும்.
* உலர் திராட்சையில் புரதம் 3 சதவீதமும், நார்ச்சத்து 3.7%-லிருந்து 6.8 சதவிகிதமும் உள்ளன. இவற்றைத் தவிர, வைட்டமின்-சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, நீர்ச்சத்து, மினரல்கள் மற்றும் தாதுக்களும் அதிகம் உள்ளன.
* கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு உடல் நலனுக்குத் தீங்கும் உண்டாக்கும் கெட்ட கொழுப்பு சேர்வதையும் உலர்திராட்சை குறைக்கிறது. புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உலர்திராட்சைக்கு உண்டு.
* பல் சொத்தை, ஈறு தொடர்பான பிரச்னைகளையும் சரி செய்யும். வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை வளர விடாமல் தடுக்கும்.
* பச்சிளம் குழந்தைகளுக்கு சாதத்தில் நன்றாக பிசைந்து ஜூஸாகவும் கொடுக்கலாம். பெரியவர்கள் என்றால் நன்றாக மென்று தின்பது அவசியம். இரவில் பாலில் ஊற வைத்து சாப்பிடலாம்.
* ரசாயனம் சேர்க்கப்பட்டு உலர் திராட்சை பதப்படுத்தப்படும் வாய்ப்பு உண்டு என்பதால் தண்ணீரில் நீண்ட நேரம் ஊற வைத்து நன்றாக கழுவிய பின்னர் சாப்பிடுவதே பாதுகாப்பானது.
* கறுப்பு மற்றும் வெளிர் நிற திராட்சை இரண்டிலும் மருத்துவப் பயன்கள் இருந்தாலும் கறுப்பு நிற உலர் திராட்சையில் சற்று கூடுதலாகவே சத்துக்கள் உள்ளன.
Average Rating