பாதங்களை பராமரிப்பதிலும் கவனம் செலுத்துங்கள்!(மருத்துவம்)
அமெரிக்காவின் American Podiatric Association ஆய்வறிக்கையில், மனிதனுக்கு ஏற்படும் தொற்றுநோய்கள் முதல் உயிர்கொல்லி நோய் வரை அனைத்து நோய்களும் பாதத்திலிருந்துதான் ஆரம்பிப்பதாகவும், காலில் சோர்வு இருந்தாலே ஒருவர் மன அழுத்த நோயில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
மனதுக்கும் பாதத்துக்கும் தொடர்பு உண்டு என்பதையும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இப்படி நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடு தொடர்புடைய பாதத்தை நாமோ அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.
பாதத்தில் வரக்கூடிய பொதுவான பிரச்னைகள், அதற்கான சிகிச்சைமுறைகள், குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் பாதத்தை பராமரிக்க வேண்டிய அவசியம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள பாத சிகிச்சை சிறப்பு மருத்துவரான ராஜேஷ் கேசவனைத் தொடர்பு கொண்டோம்…
பாதத்தின் முக்கியத்துவம் பற்றிச் சொல்லுங்கள்….
‘‘நம்முடைய கால் பாதம் 5 விரல்களையும் அதனுள் 26 எலும்புகளையும், 33 மூட்டுக்களையும், சுமாராக 42 தசைகளையும், 2 லட்சத்து 50 ஆயிரம் வேர்வை சுரப்பிகளையும் உள்ளடக்கியது. ஒரு மனிதன் சுமாராகத் தன் வாழ்நாளில் 1 லட்சத்து 15 ஆயிரம் மைல்கள் நடக்கின்றான். நடக்கும்போது நம் உடலின் எடையின் அழுத்தத்தை சுமக்கும் பாதமானது ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான டன் எடை சக்தியை கையாளும் திறன் கொண்டது.
நாம் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செல்லும்போது கால்விரல்(Toes), குதிகால்(Heel), கால்பந்து(Ball) உட்பட பாதத்தின் பகுதிகள் அனைத்தும் இயைந்து வேலை செய்கிறது. அப்போது, உடலின் மொத்த எடையின் அழுத்தத்தை சுமக்கும் பாதத்துக்கு, மற்ற பாகங்களைவிட அதிக அளவில் காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.’’
பாதத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்னென்ன?
‘‘தோல் தடிப்புகள்(Corns): கால்விரல்கள் மற்றும் முன்பாதங்களில் தோல் தடித்து, புண்களாக மாறும். இதை கால் ஆணி என்றும் சொல்வார்கள். நாம் அனைவருமே வீட்டுக்குள்தானே இருக்கிறோம் என்று செருப்பு அணிவதில்லை. இதனால் தரையில் உள்ள அழுக்கு சேர்ந்து நாளடைவில் பாதத்தில் அதிக அழுத்தம் உள்ள இடங்களில் தோல் தடித்துக் கொள்கிறது. இதுவே கால் ஆணியாக மாறுகிறது. எனவே, வீட்டுக்குள்ளும் செருப்பு அணிந்துகொள்வது முக்கியம்.
கால் வெடிப்புகள்: நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்புகள் பாதிக்கப்படுவதால் உணர்ச்சி குறைவாகவும், பாதங்களில் இருக்கும் வியர்வை நாளங்களின் வேலை குறைவதால் தோல் வறண்டுபோய் வெடிப்புகளும் இருக்கும். அதிகநேரம் தண்ணீரில் வேலை செய்யும் பெண்களுக்கும், பாதங்களை சுகாதாரமாக பராமரிக்காதவர்களுக்கும் சேற்றுப்புண், பித்தவெடிப்பு போன்றவை ஏற்படும்.
இவர்கள் காலை, மாலை இரண்டு வேளையும் மெல்லிய சோப்பு நீரால் கழுவிவிட்டு, விரல்களுக்கு நடுவிலும் நன்றாக துடைத்து உலரவிட வேண்டும். தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதால் எறும்பு, எலி கடித்துவிட வாய்ப்புண்டு. அதனால் மினரல் ஆயில், லிக்விட் பாரஃபின் அல்லது வாசலைன் போட்டுக் கொள்ளலாம். சேற்றுப்புண்ணுக்கு பூஞ்சை எதிர்ப்பு(Anti fungus) களிம்புகளை தடவிக்கொள்ளலாம்.
விரல்கள் வளைவு(Hammertoes): சரியான அளவில் காலணி அணியாதவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும், கால் விரல்கள் அமைப்புகள் சீராக இல்லாமல் வளைந்து, நெளிந்து கோணலாக இருப்பதைப் பார்த்திருக்கலாம். இதனால் நடக்கும்போது குறிப்பிட்ட அந்த இடங்களில் அழுத்தம் அதிகமாவதால் அங்கு கால் ஆணி, புண்கள் அடிக்கடி வரும் வாய்ப்புகள் அதிகமாகிறது. இவர்கள் நுனிப்பகுதி கூரான ஷூக்களைத் தவிர்த்து தட்டையான ஷூக்களை அணிய வேண்டும்.
கால் வீக்கம்: தனிப்பட்ட நோய்க்கு மாத்திரை, மருந்துகள் சாப்பிடுவதால் கூட சிலருக்கு கால்வீக்கம் வரக்கூடும். ஒரு கால் மட்டும் வீங்கியிருந்தால் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். எங்காவது அடிபட்டு, அதை கவனிக்காமல் விட்டுவிடுவதால் கால்வீக்கம் ஏற்படும். மருத்துவரை அணுகி வீக்கத்துக்கான காரணத்தை அறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
குதிகால் வலி: குதிகால் எலும்பிலிருந்து Plantar Aponeurosis எனும் சதைப்பகுதி கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும் இந்த சதையும் இணையும் இடத்தில் அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகிறது. இதனால் குதிகால் வலி ஏற்படுகிறது. சிலருக்கு குதிகால் எலும்பும், தசையும் இணையும் இடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்ந்துவிடும். இதற்கு Calcaneal Spur என்று பெயர். இதன் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படும்.’’
குதிகால் வலிக்கு என்ன தீர்வு?
‘‘நம் பாதம் மண் தரை மற்றும் கரடு முரடான தரைகளில் நடப்பதற்கேற்ற வகையில் வடிவமைப்பைக் கொண்டது. இன்றோ மார்பிள், மொசைக் தரைகளில் செருப்பு அணியாமல் நடக்கிறோம். இதனால் பாதங்களில் அழுத்தம் ஏற்படுவதாலும், குதிகால் வலி வருகிறது. இதற்கு சில எளிய பயிற்சிகள் உள்ளன.
ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். இவற்றை செய்வதால் குதிகால் வலியிலிருந்து விடுபடலாம். ‘நாம் அனைவருமே பாதத்தை பராமரிப்பது முக்கியம் என்றாலும், நீரிழிவு நோயாளிகள் சற்று அதிகமான கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என சொல்லும் மருத்துவர் அவர்களுக்கான பாத பராமரிப்பு குறிப்புகளை விவரிக்கிறார்.
‘‘எங்கு சென்றாலும் செருப்பு இல்லாமல் நடப்பதை அறவே தவிர்க்க வேண்டும். கோவிலுக்கு செல்லும்போது காலணி அணியாதவர்கள், வெயில் நேரங்களில் செல்லாமல் காலை இளவெயில் நேரத்தில் செல்லலாம். ஏனெனில், அங்கு கருங்கல்லால் ஆன பாதைகள் இருப்பதால் சூடு அதிகமாகி, நீரிழிவு நோயாளிகளின் பாதத்தில் புண் ஏற்பட்டுவிடும்.
வாரத்துக்கு ஒரு முறை உங்கள் நகங்களை வெட்டிப் பாதங்களை மிகத் தூய்மையாகவும், நகங்களின் கீழ்ப்பகுதியை அழுக்கு அண்டாமலும் பார்த்து கொள்ள வேண்டும். உடலுக்கு போடும் மெல்லிய சோப்பையே காலுக்கும் போட வேண்டும். காலை அலம்பியதும், விரல் இடுக்கு, பாதத்தின் அடிப்பகுதியில் நீரை சுத்தமாக துடைத்து உலர வைக்க வேண்டும். உலர்ந்த பிறகு மாய்ச்சரைஸ் க்ரீம் தடவிக் கொள்ளலாம்.
மிக நீண்டதாக வளரும் நகங்கள் உள்நோக்கி வளர்ந்து உங்கள் பாதங்களில் காயங்களை ஏற்படுத்தக்கூடும். நகங்களை வெட்டும் முன் கால்களை சிறிது தண்ணீரில் ஊறவைத்து விட்டு, வெட்டுவதால் நகங்களை காயங்கள் ஏற்படாமல் எளிதாக வெட்ட முடியும். நகங்களை சதைப்பகுதியோடு சேர்ந்து வெட்டிவிடாமல் மிக ஜாக்கிரதையாக வெட்ட வேண்டும்.
உங்கள் பாதங்களின் பின் பகுதியை பார்க்க முடியாததால் முகம் பார்க்கும் கண்ணாடி கொண்டோ அல்லது மற்றவரின் உதவியுடனோ புண்கள், கொப்புளங்கள், தோலின் சிவந்த நிறம் ஏதும் உள்ளதா என்று அடிக்கடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பும், காலை படுக்கையில் இருந்து எழுந்ததும் சிறிது நேரம் உங்கள் பாதங்களை நீரில் கழுவி உங்களின் பாதத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தலாம். நீரிழிவு நோயாளிகள் சுடுநீரை பயன்படுத்த வேண்டாம். மற்றவர்கள் செய்வது போல் இவர்கள் உப்பு நீரில் ஊற வைப்பது போன்ற முயற்சிகளையும் செய்ய வேண்டாம்.
நடக்கும்போது பாதம் உங்கள் உடல் எடையின் பெரும் பகுதியை தாங்கிக் கொள்கிறது. அதனால் கால்களுக்கும், பூமிக்கும் இடையே ஏற்படும் உராய்வு விசை உங்கள் பாதங்களில் வெப்பத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க, ரப்பரால் செய்யப்பட்ட மிருதுவான காலணிகளை வாங்கி அணிவது நல்லது. இவர்கள் வீட்டுக்குள்ளும் காலணி அணிவது முக்கியம்.
காலுக்கு ஷூ அணிபவரானால், அடர்நிறத்தில் இருக்கும் நைலான் சாக்ஸ்களைத் தவிர்த்து, வெளிர்நிறத்தில் உள்ள காட்டன் சாக்ஸ்களை மட்டும் உபயோகியுங்கள். இதனால் காலில் இருக்கும் புண்ணில் ரத்தக்கசிவு இருந்தால் எளிதில் தெரிந்துவிடும். சாக்ஸில் இருக்கும் எலாஸ்டிக் அழுத்தும்போது அந்த இடம் புண்ணாகிவிடும். அதனால் நூலை எடுத்துவிட்டு அணியலாம். நல்ல காற்றோட்டம் உள்ள செருப்புகளையும், காலணிகளையும் அணியுங்கள்.
இதனால் செருப்பு, ஷூக்களினால் வரும் புண்களைத் தவிர்க்கலாம். அப்படி புண்கள் ஏற்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை கலந்து ஆலோசிப்பதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் மோசமான விளைவுகளை தவிர்க்கலாம்.’’
நீரிழிவு நோயாளிகளுக்கான அறிவுரை….
‘‘நீரிழிவு நோயாளிகள் காய்ச்சலுக்காக மருத்துவரிடம் செல்லும்போது கண்டிப்பாக மருத்துவர் பாதத்தை பரிசோதிக்க வேண்டும். ஏனெனில், பாதத்தில் ஏதாவது புண் இருந்தால் கூட காய்ச்சல் வரலாம். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் விரல்கள் அழுகி காலையே எடுக்கும் நிலைகூட வரலாம்.
நீரிழிவு நோயாளிகளில், குறிப்பாக காலில் பிரச்னை இருப்பவர்கள் நடைப்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். இவர்கள் அதற்கு மாற்றாக யோகா, பெடலிங் பயிற்சி, ஸ்டேட்டிக் சைக்கிள் பயிற்சிகளை செய்யலாம். உங்களின் சர்க்கரை அளவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக முக்கியம்.’’
Average Rating