சணல் பை தயாரிப்பில் மாதம் ரூ.18,000 சம்பாதிக்கலாம்!(மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 7 Second

குறு, சிறு மற்றும் நடுத்தரமாக புதிய தொழில் துவங்க நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா? என்ன தொழில் செய்யலாம், நாம் நினைக்கும் தொழிலுக்கு யார் வழிகாட்டுவார்கள் எனச் சிந்தித்து கொண்டிருப்பவரா…? இதோ ‘குங்குமம் தோழி’ உங்களுக்கு வழிகாட்டுகிறது. வீட்டில் வைத்தோ மற்றும் அருகே சிறியதாக ஒரு கடை வாடகைக்கு எடுத்தோ அல்லது கூட்டாக தோழிகள் சேர்ந்தோ செய்யக்கூடிய தொழில்கள் ஏராளம் உள்ளன. அந்தச் சிறுதொழில்களில் ஒன்றான சணல் பொருட்கள் தயாரிப்பு தொழில் குறித்து பார்க்கலாம்…

சென்னை வளசரவாக்கம் கைக்கன்குப்பம் பகுதியில் சணல் பொருட்கள் தயாரிப்பு மற்றும் பயிற்சிகள் வழங்கி வரும் மீனலோச்சனி இத்தொழில் குறித்து நம்மிடம் பேசினார். ‘‘நான் டிப்ளமா இன் ஃபேஷன் டிசைனிங் படித்துவிட்டு ஒரு கல்லூரியில் ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட் ஆசிரியையாக வேலை செய்து வருகிறேன். பி.காம் படித்துவிட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிலையத்தில் (எம்.எஸ்.எம்.இ – டிஐ) பயிற்சிக்காக சென்றேன். எனக்கு ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் போன்றவற்றில் மட்டுமே விருப்பம் இருந்ததால் இந்தத் துறையில் சேர விருப்பம் இல்லை.

விருப்பப்பட்ட துறையில் சேர வாய்ப்பு தேடி அலைந்தேன். வேலை கிடைக்கவில்லை. அதனால், வீட்டில் இருந்தபடியே தாமாக வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன். வீட்டில் இருந்தபடியே துணிகள் தைக்க ஆரம்பித்தேன். கல்லூரியில் பணிபுரிந்த சமயத்தில் ஆசிரியை டாக்டர் ராஜஸ்ரீ வாசுதேவன் ‘எனக்கு இருநூறு சணல் பைகள் வேண்டும். நீ தைத்துக் கொடு’ எனக் கேட்டார், எனக்கோ சணல் பை பற்றி தெரியாது. சணல் பை எப்படி தைப்பது என்று கற்றுக்கொண்டு முதன் முதலில் இருநூறு பைகளை தைத்து கொடுத்தேன்.

அதன்பின்பு வீட்டு விசேஷங்களுக்கு பென் பவுச் மற்றும் சணல் ஃபைல் தைத்து விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டேன். இப்போது இத்தொழில் குறித்து தெரிந்துகொள்ள வருவோருக்கு பயிற்சியும் கொடுத்து வருகிறேன்’’ என தன் தொடக்கக் காலத்தைப் பற்றிக் கூறியவர் என்னென்ன தயாரிக்கிறார் என்பது பற்றியும் பேசினார். ‘‘சணல் கொண்டு ஆரம்பத்தில் கோணிப் பைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன. இப்போது, ஃபேன்சி பை, செல்போன் பவுச், லேப்டாப் பேக், ஃபைல் என ஏராளமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காததாகவும், அழகிய கலை நயத்துடனும் இருப்பதால் பலரும் விரும்பி வாங்குகின்றனர். அரசுக் கல்லூரி, அரசு அலுவலகங்களில் கண்காட்சி நடத்தி ஆர்டர் பெறலாம். பெண்கள் வீட்டில் இருந்தபடி இந்தத் தொழிலை செய்யலாம். இத்துறையில் நல்ல வளர்ச்சி உள்ளது. சணல் பொருட்களுக்கான சந்தை விரிந்து கிடக்கிறது. விற்பனை செய்வது எளிது. நிரந்தரமான வருமானம் கிடைக்கும். இத்தொழில் துவங்க தையல் தெரிந்தவர்கள் ஒரு வாரத்திலும், தையல் தெரியாதவர்கள் 15 நாளிலும் கற்றுக்கொள்ளலாம்’’ என்றவர், செலவினங்கள் பற்றிக் கூறினார்.

‘‘ தயாரிக்கவும் சேமித்து வைக்கவும் விற்பனைக்கும் என 20க்கு 10 அடி கொண்ட ஓர் அறை போதும். பவர் தையல் மெஷின் 10 ஆயிரம் ரூபாயில் கிடைக்கிறது. கட்டிங் டேபிள் 3 ஆயிரம் ரூபாய், கத்தரிக்கோல் 250 ரூபாய், ரேக், ஹேங்கர்கள் 6,750 ரூபாய் என தோராயமாக 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். வீட்டில் ஏற்கனவே தையல் மெஷின், டேபிள் போன்றவை இருந்தால் 10 ஆயிரம் ரூபாய் மிச்சமாகும். சணல் துணியை கொண்டு 35 வகையான பொருட்களை உற்பத்தி செய்யலாம்.

ஒரு நபர் ஒரு நாளில் 10க்கு 10 அளவுள்ள 50 தாம்பூலப் பை 13 இன்ச் அளவுள்ள 25 வாட்டர் பேக், 12க்கு 10 அளவுள்ள 30 லஞ்ச் பேக், 3 மடிப்புள்ள 15 பர்ஸ், 13க்கு 9 அளவுள்ள 25 பைல், 18க்கு 12 அளவுள்ள 20 ஷாப்பிங் பேக், 10க்கு 8 அளவுள்ள 20 சுருக்கு பை, 40 பென்சில் பவுச், 30 கிட் பவுச், 30 மொபைல் பவுச்-இவற்றில் ஏதாவது ஒரு வகையைத் தேர்ந்தெடுத்து தயாரிக்க முடியும். எதை உற்பத்தி செய்தாலும் ஒரு நாள் செலவு ரூ.1000. 25 நாட்களுக்கு ரூ.25 ஆயிரம். இதர செலவு ரூ.5 ஆயிரம் என ஒரு மாதத்திற்கு ரூ.30 ஆயிரம் தேவை’’ என்றவர், அந்த உற்பத்தி பொருள் மூலம் வரக்கூடிய வருமானம் குறித்தும் பேசினார்.

‘‘மாதம் 25 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரான பொருட்களை சில்லறையாகவும், மொத்தமாகவும் 75 சதவீத லாபத்தில் விற்கலாம். இதன் மூலம் 43 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மாதம் 18 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். கூடுதல் தையல் மெஷின்கள் வாங்கி அதற்கேற்ப ஆட்களை நியமித்து உற்பத்தி செய்தால் லாபம் கூடும்’’ என்றவர், தேவைப்படும் பொருட்கள் பற்றி கூறினார். ‘‘சணல் துணி உயர்தரம், முதல் தரம், 2ம் தரம் என உள்ளது. மீட்டர் 68 ரூபாய் முதல் 270 ரூபாய் வரைக் கிடைக்கிறது. ஒரு மீட்டரில் சராசரி அளவான 10க்கு 10 இன்ச் தாம்பூலப் பை 8 தைக்கலாம்.

தையல் நூல் (1 ரோல் ரூ.32. இதன் மூலம் 100 பை தைக்கலாம்), ஹேண்டில் காட்டன் ரோப் ( கிலோ ரூ.80. இதன் மூலம் 100 பை தைக்கலாம்). இந்தப் பொருட்கள் அனைத்தும் சென்னை பாரீஸ் கார்னரில் கிடைக்கிறது. பிற மாவட்டங்களிலும் கிடைக்கும்’’ என்றவர், எப்படி தயாரிப்பது என்பது பற்றி விளக்கினார். ‘‘சணல் துணியை தேவையான பொருட்களின் அளவுக்கு ஏற்ப வெட்டிக் கொள்ளவும். மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரங்களை கொண்டு தான் தைக்க முடியும். சாதாரண துணிகளை தைப்பதுபோல் எளிதாக இருக்காது.

சணல் துணிகளை தைப்பது ஆரம்பத்தில் கடினமாக இருக்கும். காலப்போக்கில் எளிதாகிவிடும். ஒவ்வொரு பொருளுக்குரிய தனித்துவத்தை அறிந்து அதற்கேற்ப தைப்பது முக்கியம். சணல் துணி ஒரு மீட்டரில் உயரம் 20 அகலம் 10 இன்ச் எடுத்துக்கொள்ளவும், பின் அதை இரண்டாக மடித்து வெட்டவும் அதன் மேல் பகுதியில் ஒன்றரை இன்ச் அளவு எடுத்து மடித்து தைக்கவும். அடுத்து உயரம் 28 இன்ச் அகலம் 4 இன்ச் எடுத்து மற்றொரு சணல் துணியில் வெட்டவும். இதிலும் மேல் பகுதி மடித்து தைக்கவும்.

வெட்டப்பட்டு இருக்கும் இரண்டு சணல் துணியை வைத்து தைக்கவும். உங்கள் சணல் பை தயார்’’ என சிம்பிளாக அதன் தயாரிப்பு முறையைப் பற்றிக் கூறியவர், எங்கே விற்பது என்பது பற்றியும் கூறினார். ‘‘தயாரித்த பொருட்களை வீட்டில் வைத்தோ, கடை போட்டோ விற்கலாம். கல்லூரி, அலுவலகங்களில் லேப்டாப் பை, ஃபைல் தயாரிக்க ஆர்டர் எடுக்கலாம். திருமண வீட்டில் விருந்தினர்களுக்கு வழங்கும் தாம்பூலப் பைக்கு ஆர்டர் வாங்கலாம்.

அரசு மற்றும் தனியார் கண்காட்சிகளில் விற்பதன் மூலம் பல்வேறு பொருட்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஃபேன்சி, டிபார்ட்மென்ட்டல் கடைகள் மற்றும் பிரத்யேக ஹேண்ட் பேக் கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யலாம். சணல் பை தைத்தால் ஒரு பையை 40 ரூபாய் வரை விலை வைத்து விற்கலாம். ஒரு பை தைப்பதற்கு செலவு 15 ரூபாய் ஆகிறது என்றால் 75 சதவீதம் நமக்கு லாபம் கிடைக்கும்.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதுதான் ரகசியம்!!(மருத்துவம்)
Next post கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!(அவ்வப்போது கிளாமர்)