மணலாறும் திட்டமிட்ட குடியேற்றமும்!!(கட்டுரை)
திட்டமிட்ட அரசாங்க குடியேற்றங்கள்
1950களில் இருந்து, தமிழ்த் தலைமைகள் முக்கியமாக எதிர்த்து வந்ததொரு விடயம், தமிழர் பிரதேசங்களில் அரசாங்கத்தால் நடாத்தப்பட்டு வந்த, திட்டமிட்ட குடியேற்றங்கள் ஆகும்.
இந்தத் திட்டமிட்ட குடியேற்றங்கள், குறித்த பிரதேசத்தின் குடிப்பரம்பலைச் சிதைப்பதாக அமைகின்றன என்பது, தமிழ் மக்களின் அச்சமாகும். ஆனால், திட்டமிட்ட குடியேற்றங்கள், அதுவும் குறிப்பாகத் தமிழர் பிரதேசங்களில், சிங்கள மக்கள், அரசாங்கத்தால் திட்டமிட்டு குடியேற்றப்பட்டமை, தொடர்ந்து கொண்டிருந்ததானது, தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களின் மனநிலையையும் எண்ணப்பாட்டையும் பிரதிபலிப்பதாகவே அமைந்தது.
திட்டமிட்ட குடியேற்றங்கள் பற்றித் தமிழ்த் தலைமைகள் பேசும்போது, அதற்கெதிராகப் பொதுவான ஒரு விமர்சனம் எழுவதுண்டு. தமிழ் மக்கள் வடக்கு -கிழக்கிலிருந்து வந்து, கொழும்பு உள்ளிட்ட தென்னிலங்கை நகரங்களில் காணி வாங்கி, வீடு கட்டி வாழ முடியுமென்றால், சிங்கள மக்கள் ஏன் வடக்கு-கிழக்குக்குச் சென்று வாழ முடியாது, ஏன் வாழக் கூடாது என்பதுவே அந்த விமர்சனமாகும்.
தர்க்க சாஸ்திரத்தில், தர்க்கத் தவறுகள் (logical fallacies) என்று ஒரு விடயம் உண்டு. அதில், முக்கியமானதொரு தர்க்கத் தவறானது, தவறான சமநிலை (false equivalency) ஆகும். சுருங்கக்கூறின், ஒன்றுக்கொன்று வேறுபட்ட விடயங்களை, ஒத்த விடயங்களாகக் கருதி, இரண்டையும் சமமானதாகக் கொள்ளுதல் ஆகும். இது தர்க்க ரீதியில் தவறானதாகும்.
இன்னொரு முக்கியமான தர்க்கத் தவறானது, ‘வைக்கோல் மனிதன் தவறு’ (straw man fallacy) என்று சுட்டப்படும். அதாவது, ஒருவர் சொன்ன கருத்தை, எதிர்ப்பதற்குப் பதிலாக, ஒருவர் சொல்லாத கருத்தை, அவர் சொன்ன கருத்தாக உருவகப்படுத்திக்கொண்டு, அதனை எதிர்த்து வாதிடுவதாகும்.
‘தமிழ் மக்கள் தென்னிலங்கையில் வந்து வாழ முடியுமென்றால், சிங்கள மக்கள் ஏன் வடக்கில் சென்று வாழ முடியாது’ என்ற வாதத்தை, தமிழ்த் தலைமைகளின் திட்டமிட்ட அரச குடியேற்றங்களுக்கு எதிரான வாதமாக முன்வைப்பதில், மேற்சொன்ன இரண்டு தர்க்கத்தவறுகளும் இடம்பெறுகின்றன.
முதலாவதாக, தனிநபர்கள் தாமாகத் தனிப்பட்ட முறையில், இன்னோர் இடத்துக்கு இடம்பெயர்ந்து வாழ்வதும், அரசாங்கம் திட்டமிட்டு, ஒரு பகுதியிலிருந்து மக்களைப் பெருந்தொகையில் அழைத்து வந்து, இன்னோர் இடத்தில் அவர்களுக்கான குடியேற்றங்களை அமைத்து, அவர்களுக்கு உதவிசெய்து குடியேற்றுவதும், சமமான விடயங்கள் அல்ல.
தமிழ் மக்கள் வடக்கிலிருந்து, கொழும்புக்கு இடம்பெயர்ந்து வாழ்வதற்கு, அரசாங்கம் எந்த உதவியும் செய்யவில்லை. தமிழ் மக்கள் தனிப்பட்ட ரீதியில் காணிகளையும் வீடுகளையும் வாங்கி, அங்கு இடம்பெயர்ந்து, தாமே தமக்கான வாழ்வாதாரத்தையும் தேடிக் கொண்டார்கள்.
ஆனால், வடக்கு-கிழக்கில் அரசாங்கம், திட்டமிட்டுத் தனியாருடைய பெருங்காணிகளைக் கையகப்படுத்தி அல்லது அரச காணிகளில், தென்னிலங்கையிலிருந்து மக்களை அழைத்துச் சென்று குடியேற்றி, அவர்களுக்கான வீடுவாசல், அடிப்படை வசதிகள், வாழ்வாதாரம் என்பவற்றை ஏற்படுத்திக் கொடுத்து, அரச குடியேற்றங்களை உருவாக்கின.
இதைத்தான் தமிழ்த் தலைமைகள் எதிர்த்தார்களே அன்றி, சிங்கள மக்கள் தென்னிலங்கையிலிருந்து தாமாகத் விரும்பி வந்து, வடக்கு-கிழக்கில் குடியேறுவதைத் தமிழ்த் தலைமைகளோ, தமிழ் மக்களோ எதிர்க்கவில்லை. ஆகவே, தமிழ்த்தலைமைகள் சிங்கள மக்கள் வடக்கு-கிழக்கில் வந்து வாழ்வதை எதிர்க்கிறார்கள் என்பதில், எந்த உண்மையும் இல்லை.
மாறாக, அரசாங்கம் திட்டமிட்டு, சிங்கள மக்களைத் தமிழர் பிரதேசங்களில் குடியேற்றுவதைத் தான் அவர்கள், திட்டமிட்ட குடிப்பரம்பல் சிதைப்பு என்ற அடிப்படையில் எதிர்த்தார்கள். இந்தப் புரிதல் மிக முக்கியமானது.
மணலாறு
முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்று அறியப்பட்ட சிறு ஆறை ஒட்டி, தமிழ்க் கிராமங்களும், அதையொட்டிய விவசாய நிலங்களும், தமிழ் வணிகர்களுக்கு உரியதாக இருந்தன.
அரச காணிகளான இவை, 99 வருடக் குத்தகைக்கு, தமிழ் வணிகர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. நாவலர் ஃபாம், கென்ட் ஃபாம், டொலர் ஃபாம், சிலோன் தியேட்டேர்ஸ் ஃபாம், ரெயில்வே குறுப் ஃபாம், ஃபோஸ்ட் மாஸ்டர் குறுப் ஃபாம் எனக் கிட்டத்தட்ட 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள், 16 தனியார் தோட்டங்களாக அமைந்திருந்தன.
1977ஆம் ஆண்டு, இன வன்முறைகளைத் தொடர்ந்து, மலையகத்தில் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள், டொலர் மற்றும் கென்ட் ஃபாம்களில் குடியேற்றப்பட்டிருந்தனர். 1983 கறுப்பு ஜூலையைத் தொடர்ந்து, மணலாற்றை ஒட்டிய குடியேற்றங்களில் இருந்து, தமிழ் மக்களை விரட்டும் கைங்கரியத்தை, அரச படைகளூடாக அரசாங்கம், முன்னெடுக்கத் தொடங்கியிருந்ததாக, மனித உரிமைகளுக்கான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு, தனது அறிக்கையொன்றில் குறிப்பிடுகிறது.
குறிப்பாக, 1984இன் நடுப்பகுதியில், கென்ட் மற்றும் டொலர் ஃபாமுக்குள் நுழைந்த பொலிஸார், அங்கு வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி, அங்கிருந்து விரட்டியடிக்கும் கைங்கரியத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, அன்றைய தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் கண்காணிப்பில், சிங்கள மக்களைக் குடியேற்றும் பணி இடம்பெற்றது.
கென்ட் மற்றும் டொலர் ஃபாம்களில் குடியேற்றப்பட்டிருந்தவர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள்; அவர்கள் அங்கிருந்து, இத்தகைய விதத்தில் வௌியேற்றப்பட்டமையானது, சௌமியமூர்த்தி தொண்டமானுக்குக் கடும் விசனத்தை உருவாக்கியது. இதைக் கண்டித்து அவர், அமைச்சரவையில் கருத்துரைத்த போது, சிறில் மத்யூ, காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி உள்ளிட்ட அமைச்சர்கள், “அவர்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்குகிறார்கள்” என்று கூறி, தமது நடவடிக்கையை நியாயப்படுத்தியதாக ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.
லலித் அத்துலத்முதலி, பயங்கரவாதத்துக்கு உதவுகிறார்கள் என்ற பல்லவியோடு, இந்த மக்களின் பிள்ளைகள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, பயங்கரவாத இயக்கங்களில் வலிந்து சேர்க்கப்படுகிறார்கள்; ஆகவே அவர்களைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை அவசியம் என்ற சரணத்தையும் இணைத்துப் பாடினார்.
தமிழ் மக்கள் வௌியேற்றப்பட்டு, கென்ட் மற்றும் டொலர் ஃபாம்களில் சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் குடியேற்றப்பட்டனர். இதைச் சிறைச்சாலை மறுசீரமைப்பு நடவடிக்கை என்று குறிப்பிட்ட அமைச்சர் அத்துலத்முதலி, சிறைக்கைதிகள் மறுவாழ்வு தொடர்பிலான திறந்த சிறைச்சாலை பரீட்சார்த்த முயற்சி என்றும், சிறைக்கைதிகளும் அவர்களது குடும்பத்தினரும் இங்கு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இது அப்பகுதியின் குடிப்பரம்பலைச் சிதைக்கும் செயல் மட்டுமல்ல, மாறாகக் குற்றவாளிகள் குடியேற்றப்பட்டமையானது, அதற்கு அண்மித்த பகுதிகளில் வாழும் தமிழ் மக்களையும் ஆபத்தில் தள்ளும் செயலாக அமைந்தது.
மறுபுறத்தில், இந்த நடவடிக்கையானது, இஸ்ரேலின் ஆலோசனையின்படி, லலித் அத்துலத்முதலியால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்று, சிலர் கருத்துரைக்கிறார்கள்.
பலஸ்தீன கெரில்லா இயக்கங்களின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த, இஸ்ரேல் எல்லையோரக் கிராமங்களில், யூதக் குடியேற்றங்களை உருவாக்கி, அதன் மூலம் கெரில்லாப் படைகளின் ஊடுருவலையும் அவர்களது வழங்கல் சங்கிலியையும் தடுத்தனர். இதையொத்த நடவடிக்கையே, இங்கு முன்னெடுக்கப்பட்டது என்பது சில விமர்சகர்களது கருத்தாகும்.
கென்ட், டொலர் ஃபாம் படுகொலைகள்
இந்த நிலையில், 1984 நவம்பரில், வடக்கில் வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டிருந்தன. குறிப்பாகப் பொலிஸ், அரச படைகளுக்கும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கும் இடையேயான தாக்குதல்கள், கணிசமானளவில் அதிகரித்திருந்த காலப்பகுதி அதுவாகும்.
முல்லைத்தீவில் நடந்து கொண்டிருக்கும் அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும், ஏலவே அங்கு வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், பொலிஸ் மற்றும் அரச படைகளால் அங்கிருந்து விரட்டப்பட்டு வருவதும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் கவனத்தை, மணலாற்றின் பக்கம் திருப்பியது.
இதுவரை காலமும் பொலிஸ், அரசபடைகள் மற்றும் அரச இயந்திரம் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் வன்முறைக் கரம், முதன் முறையாகச் சிங்களப் பொதுமக்களைப் பதம் பார்த்தது.
1984 நவம்பர் 30ஆம் திகதி, இரவோடிரவாக மணலாற்றுக்கு வந்திறங்கிய விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த 50 போராளிகள், கென்ட், டொலர் ஃபாம்களுக்குள் நுழைந்து, அங்கிருந்த சிறைக் காவலர்கள், ஆண்கள் மற்றும் சில பெண்கள், குழந்தைகள் மீது துப்பாக்கி, கத்தி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரத் தாக்குதல் ஒன்றை நடத்தினர்.
இந்தத் தாக்குதலில், அங்கு குடியேற்றப்பட்டிருந்த குற்றவாளிகள், சிறைக் காவலர்கள், மற்றைய காவலர்கள் உள்ளிட்டு ஏறத்தாழ 80 ஆண்கள் உயிரிழந்திருந்தனர். அரசபடைகள், தமிழ்ச் சிவிலியன்கள் மீது கட்டவிழ்த்து வந்த வன்முறையை மட்டுமே இதுவரை அறிந்திருந்த உலகத்துக்கு, முதல் தடவையாகத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவொன்று, சிங்களப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய செய்தி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குறிப்பாக, தமிழ் நாட்டில் கூட, குறித்த தாக்குதல் தொடர்பில், அதிருப்தி ஏற்பட்டதாக 1984 டிசெம்பர் நான்காம் திகதி வௌியான ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.
1950கள் முதல், தமிழர்கள் மீது பொலிஸ், அரசபடைகள் நடத்திய தாக்குதலைக்கூட மறந்தும் இன அழிப்பு என்று குறிப்பிடாத அரசியல் விமர்சகர்கள் கூட, இந்தச் சம்பவத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு நடத்திய இன அழிப்பு என்று விளிப்பதைக் காணலாம்.
கென்ட், டொலர் ஃபாம் படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு வந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் தாம், 30 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாக அறிவித்தனர்.
இதைத் தவறு என்று தனது நூலில் குறிப்பிடும் ரீ.சபாரட்ணம், தாக்குதல் நடத்திய தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவினர் பொலிஸ், இராணுவம் அவ்விடத்துக்கு விரையும் முன்பே, அங்கிருந்து வௌியேறி விட்டிருந்ததாகவும், பொலிஸ், இராணுவம் அப்பாவித் தமிழ் மக்களையே சுட்டுக் கொன்றதாகவும் கூறுகிறார்.
எது எவ்வாறாயினும், சிங்களப் பொதுமக்கள் மீதான இந்தத் தாக்குதல், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் மீதான முதற்கறையாக அமைந்தது. மற்றொரு தமிழ் இளைஞர் ஆயுதக் குழுவான ஈ.பீ.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபா, இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்திருந்தார்.
அரசாங்கத்துடனும் அரச படைகளோடும் தான் யுத்தமேயன்றி, சிங்களப் பொதுமக்களோடு அல்ல என்பது அவரது கருத்தாக இருந்தது. இது மிகச் சரியான கருத்தாகும். அப்பாவிப் பொதுமக்கள் மீதான தாக்குதலானது, எந்த வகையிலும் நியாயப்படுத்தக் கூடியதொன்றல்ல; அது, மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.
இலங்கையில் இடம்பெறுவது பயங்கரவாதப் பிரச்சினைதான் என்று நிறுவ, பகிரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்த ஜே.ஆர் அரசாங்கத்துக்கு இந்தத் துயரம் மிகு சம்பவம், பெரும் வாய்ப்பாக அமைந்தது.
இந்தச் சம்பவத்தை முன்வைத்து, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராகச் சர்வதேச ரீதியில் பெரும் பிரசாரத்தை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தது. ஆனால், அரசாங்கத்தின் படைகள் இத்தோடு நின்றுவிடவில்லை.
Average Rating