ஏதாவது பண்ணணும் பாஸ்…!!(மருத்துவம்)
சாதிக்க விரும்புகிறவர்களுக்கான உளவியல் வழிகாட்டி!
ஒவ்வொருவரின் வெற்றி, அவரவர் லட்சியத்தை அடைவதைப் பொறுத்தே அமைகிறது. அந்த வகையில், முன்னரே தீர்மானிக்கப்பட்ட லட்சியத்தை அடையும் எவருமே வெற்றியாளர்தான். வெற்றியாளர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுபவர்கள் அறியாத, ஆனால், ஒவ்வொரு வெற்றியாளனுக்கும் பின்னால் ஒரு கதை இருக்கும்.
அது அவனுடைய உழைப்பு, இழந்த மகிழ்ச்சி, பட்டினியான நாட்கள், தூங்காத இரவுகள்…இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சரி ஒரு வெற்றியாளனுக்குத் தேவை அறிவாற்றலா? ஆளுமையா?
சாதனைக்குப் பின்னால் உள்ள அறிவியல் என்னவென்று உளவியல் நிபுணர் ராமனிடம் கேட்டோம்…
சாதாரண மனிதனுக்கு எட்டாக்கனியாக இருக்கும் இலக்குகள் அல்லது சாதனைகளை எட்டிப்பிடிப்பவனை வெற்றிகரமான மனிதனாக சமூகம் கருதுகிறது. ஒருவருடைய வெற்றியானது அவர் என்ன செய்கிறார் என்பதை வைத்து அளவிடப்படுவதில்லை; எப்படி செய்கிறார் மற்றும் ஆர்வம் குன்றாமல் அந்த வேலையை எப்படி தொடர்கிறார் என்பதை வைத்தே அளவிடப்படுகிறது.
அடுத்து, ஒரு வெற்றியாளன் தன்னுடைய தடையில்லா பயணத்தைத் தொடர, தனிப்பட்ட ஆளுமைப்பண்புகள் மற்றும் அன்றாடம் கடைப்பிடிக்கும் பழக்கங்கள் அவசியமாகிறது. இதோடு, தடைகள் பல வந்தாலும்தான் மேற்கொண்ட பணியை விடாமுயற்சியுடன் தொடர்ந்தால் மட்டுமே அவனால் இலக்கை அடைய முடியும்.
நம்பு… திட்டமிடு…
ஒரு செயலைச் செய்வதற்கு முன் அதை நம்மால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும், அச்செயலால் ஏற்படும் விளைவுகள் பற்றிய நேர்மறையான எண்ணங்கள் ஒருவருக்கு இருக்குமானால், அந்த குணங்களே அவருடைய பணியில் உந்துசக்தியை அதிகரிக்கும். மேலும் தான் மேற்கொண்ட பணியில் பேரார்வம் கொண்டிருப்பவர்கள், வித்தியாசமாக சிந்திப்பதன் மூலம் சிறந்த படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்த முடியும்.
சாதனைக்குப் பின்னால் உள்ள அறிவியல் நம் அனைவருக்குமே நேரத்தை திட்டமிடுவது அவசியம் என்றாலும், வெற்றியாளர்களோ, ஒரு நாளின், ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள வகையில், தனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக மிக சாதூர்யமாகத் திட்டமிடுகிறார்கள்.
உச்சபட்ச வெற்றிக்கான தேடலில் ஒவ்வொரு நாளையும் எப்படி திட்டமிட்டு செயல்படலாம் என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் நிறைய உள்ளன. ‘ஒரு நல்ல பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளும்போது, வாழ்க்கையைச் செதுக்கும் ஆற்றலைப் பெற முடியும்’ என்பதை அவர்களின் பழக்கங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும்.
அதிகாலை எழு‘அதிகாலையில் நாளைத் தொடங்கும் நபர்கள் அதிக செயல்திறன் கொண்டவர்களாகவும், வாழ்க்கையில் மிகவும் பொறுப்பாளராகவும், பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பவர்களாகவும் இருக்க முடியும்’ என ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வுகள் சொல்கின்றன.
இன்று புகழின் உச்சியில் இருக்கும் ஒரு நாட்டின் அதிபர், பிரதமர், அரசியல் தலைவர்கள் அல்லது பிரபலங்கள் அனைவருமே அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். ஏனெனில், அதிகாலையில் மனிதனின் உற்பத்தித்திறன் மற்றும் ஆற்றல் நிலை அதிகமாக இருப்பதால், அந்த நேரத்தில் எடுக்கும் முடிவுகள் அன்றைய நாளை எளிதாக்கிவிடும். நேரத்தை திட்டமிட்டு சேமிக்காதிருப்பதே, இன்று பலர் வேலையை அரைகுறையாக முடிப்பதற்கும், தள்ளிப்போடுவதற்கும் காரணமாகிறது.
உடற்பயிற்சி அவசியம்
விளையாட்டு வீரர்களுக்கும், சினிமா பிரபலங்களுக்குமானது உடற்பயிற்சி என்று நினைப்பது தவறு. மிகப்பெரிய சாதனையாளர்கள் பின்பற்றும் பழக்கங்கள் பற்றி அமெரிக்க உளவியல் ஆய்வாளரான லாரா வான்டர்கம் எழுதியுள்ள கட்டுரையில், ‘உடல் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சி எவ்வளவு அவசியமோ, அந்த அளவு மன ஆரோக்கியத்துக்கும் தேவை. உடற்பயிற்சிகளை வழக்கமாக செய்யும்போது, கவனிக்கும் திறன் அதிகரித்து, பிரச்னைகளைத் தீர்க்கவும், நெருக்கடிகளை சமாளிப்பதற்குமான ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்’.
போதிய ஓய்வு
‘வேலை அழுத்தம் ஒருவருடைய அறிவு, கவனம் மற்றும் உணர்வுகளை சிதைத்துவிடும். வேலைக்கு நடுவே செய்யும் சிறு உடற்பயிற்சிகள், யோகா அல்லது தேநீர் இடைவெளி போன்ற ஓய்வு நேர நடவடிக்கைகள் வேலை இறுக்கத்தை குறைத்து படைப்பாற்றலை தூண்டுகிறது. இந்த எளிய பயிற்சிகளை செய்வதால் Parasympathetic Nervous system-த்தின் வேலையை மேம்படுத்த முடியும். இதயத்துக்கு ஓய்வு கிடைப்பதால், உறவுகளில் மேம்பட்ட நம்பிக்கையை பராமரிக்கவும், மேம்படுத்தவும் முடியும்’ என்பதற்கு வலுவான அறிவியல் சான்றுகள் உள்ளன’ என்கிறார்
பயணம்
கடினமான திட்டம் ஒன்றை செயல்படுத்தும்போது, மிக அழுத்தமான உணர்வு ஏற்படுவது இயல்பு. அதற்கு நல்ல மாற்று, ஒரு இனிய பயணத்தை மேற்கொள்வது. பிரபலங்கள் எவரும் தங்களுக்குப் பிடித்த தொலைதூரப் பயணத்தை விட்டுவைப்பதில்லை. பயணம், மூளையின் ஒத்திசைவை தூண்டி, ஆக்கப்பூர்வ சிந்தனையை மேம்படுத்துவதை அறிவியல் நிரூபிக்கிறது.
மல்டி டாஸ்க் வேண்டாம்
தன்னுடைய ‘மல்டி டாஸ்க்’ திறமையை பலரும் பெருமை பேசிக்கொள்வதை காண முடியும். ஆனால், ‘பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வதால் ஒரு வேலையில் செலுத்த வேண்டிய கவனம் சிதறடிக்கப்பட்டு அந்த வேலையின் தரத்தை பாதிக்கிறது. இரண்டு வேலைகளுக்கிடையே கவனத்தை மாற்றுவதற்கான அதிகபட்ச புலன் உணர்வை செலவு செய்ய வேண்டியிருக்கிறது’ என ஆய்வுகள் சொல்கின்றன.
வாசிப்பு
சாதனையாளர்கள் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அது ஓய்வுக்காக படிக்கும் புத்தகமாகவோ அல்லது தங்கள் துறை சார்ந்த சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களோ எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக அன்றைய நாளில் படிப்பதை தவிர்க்க மாட்டார்கள்.
மைண்ட் லேப் இன்டர்நேஷனல் நடத்திய ஆய்வின்படி, ‘இசை கேட்டல் அல்லது நடைப்பயிற்சி இரண்டையும் விட, ‘வாசித்தல்’ அதிக அளவில் மன இறுக்கத்தை குறைக்கிறது’.
இலக்குகள்
ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் தெரேசா அமாபிலஸின் தன்னுடைய ஆராய்ச்சியில், ‘உங்கள் முயற்சியில் உண்டாகும் சிறு முன்னேற்றம் கூட, வெற்றிக்கான உந்துதல் உணர்வை கொடுக்கும். அதனால் சின்னச்சின்ன வெற்றிகளுக்கான சிறிய இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலம் பெரும் வெற்றிகளை அடையலாம்’ என்கிறார்.
சுறுசுறுப்பு
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பட்டதாரி பள்ளியின் நிறுவன நடத்தை பேராசிரியரான ஜெஃரே பிஃபர், பல வெற்றியாளர்களிடம் பொதுவாக உள்ள குணங்களைப்பற்றி பகுத்தாராய்ந்ததில் புத்திசாலித்தனம், திறமை அல்லது ஆற்றல் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு, அவர்களிடம் உள்ள அதீத சுறுசுறுப்பையும், ஊக்கத்தையும் அறிய முடிந்தது. ‘சோர்வாகவும், உற்சாகமில்லாமலும் இருக்கும் ஒருவருக்கு பிற பலங்கள் இருந்தாலும் அவை பயனற்றவை’ என்கிறார்.
பணிவு
பிரபல உளவியலாளரான ஆடம் கிரான்ட் தான் எழுதிய ‘Give and Take A revolutionary Approach to Success’ என்ற புத்தகத்தில், ‘மிகச்சிறந்த வெற்றியாளர்களுக்கு, உந்துதல், திறமை மற்றும் வாய்ப்பு இந்த மூன்றும் சேர்ந்த கலவை தேவைப்படும். இவற்றோடு நான்காவதாக இன்னொரு முக்கியமான, ஆனால், பெரும்பாலும் நம்மால் புறக்கணிக்கப்படும் மூலப்பொருள் என்னவென்றால் மற்றவர்களை பணிவோடு அணுகும்முறை.
பணியிடம், நண்பர் குழு, குடும்பம் எந்த இடமாக இருந்தாலும், ‘பணிவை’ ஒரு வெற்றியாளனுக்கு வேண்டிய முக்கியமான பண்பாக வலியுறுத்துகிறார்.
மகிழ்ச்சியானவர்கள் சாதனையாளர்களாக இருப்பார்கள்‘வாழ்க்கையில் வெற்றியாளர்களுக்கும், தோல்வியாளர்களுக்கும் இடையேயான வேறுபாட்டை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணி உங்கள் மூளையில் உள்ளது’ என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள்.
அன்றாட வாழ்வில் உணவு, உறவு, தொழில் அல்லது விளையாட்டுகள் என எதன் மூலமும் மனிதன் அடையும் மகிழ்ச்சிக்கு மூளையில் இருக்கும் புகழ்பெற்ற நியூரோ டிரான்ஸ்மீட்டரான Dopamine-தான் காரணமாகிறது. அதேபோல் வெற்றிக்கும் இந்த Dopamine சுரப்புக்கும் கூட முக்கியமான தொடர்பு உண்டு.
நம் இலக்கில் முன்னேற்றம், சிறு முயற்சியில் கிடைக்கும் வெற்றி அல்லது சின்ன சின்ன பரிசுகளைப் பெறும்போதும் மூளையினுள் Dopamine வெளியாகிறது. அடுத்தடுத்து பெறும் சந்தோஷங்களால், மனம் புதுப்புது வெற்றிகளை எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுகிறது. வெற்றி என்னும் போதைக்கு அடிமையாவதுதான் வெற்றியாளர்களின் ரகசியம். மகிழ்ச்சியானவர்கள்தான் சாதனையாளர்களாக இருப்பார்கள்” என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் சோனியா லியுபோமிர்ஸ்கி.
நன்றியுணர்வு
சாதனையாளர்கள் அனைவரும், ஒவ்வொரு நாளும், அந்த நாளுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதை ஒப்புக்கொண்டு சத்தியம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த பழக்கமானது, அன்று முழுவதும், நபபலவிஷயங்களை முன்னெடுத்துச் செல்வதிலும், செயல்திறன் மற்றும் மற்றவர்களுடனான அணுகுமுறையை நேர்மறையாக்குகிறது.
இப்பழக்கம் 25 சதவீதம் மகிழ்ச்சியை அதிகரிப்பதாகவும், வெற்றிகரமான, நீண்டகால வாழ்க்கைக்கு ஊக்கமளிக்கும் கருவியாகவும் விளங்குவதாக கலிபோர்னியா பல்கலைக்கழக உளவியல் பேராசிரியரான ராபர்ட எம்மன்ஸ் அவர்களின் ஆராய்ச்சி கூறுகிறது.
Average Rating