உச்சி முதல் பாதம் வரை!!(மகளிர் பக்கம்)
பண்டைய காலம் தொட்டு உடலில் நகைகள் அணிவது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. நகை அணியும் பழக்கம் ஏன் வந்தது எனச் சொல்கிறார் உளவியல் ஆலோசகர் வந்தனா. ‘‘நம் உடல் நரம்புகளால் பின்னப்பட்டது. அதனால்தான் உள்ளங்காலில் அடித்தால் உச்சிமண்டையில் வலிக்கும். அந்த அளவுக்கு தொடர்புடையது நரம்பு. நம் உடலில் நரம்புகள் ஒன்றுசேரும் அல்லது உள்ளுணர்வுகளைத் தூண்டக்கூடிய நரம்புப் பகுதிகள் ஆங்காங்கே உள்ளன. நகைகள் அணிவதன் மூலம் இந்தப் புள்ளிகளில் அழுத்தம் மற்றும் வேதியல் மாற்றங்கள் நிகழும்போது ஒவ்வொரு உடல் உறுப்பும் பராமரிக்கப்படுகிறது.
பெருமதியான ஆபரணங்கள் பல இருந்தாலும் தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களிலேயே அணிவதன் காரணம், அவை உடல் வெப்பத்தைக் குறைக்க உதவுகிறது’’ என்றவர், தங்கம், வெள்ளி, செம்பு, கண்ணாடி போன்ற ஆபரணங்களை எந்த இடத்தில் அணிவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார்.
‘‘பொதுவாக, பெண்கள் உடலின் மேல் பகுதியில் தங்க ஆபரணங்கள் அணிந்தும், உடலின் கீழ் பகுதியில் வெள்ளி ஆபரணங்கள் அணிந்தும் பார்க்கிறோம். விஞ்ஞான கோட்பாடுகளின்படி, வெள்ளி பூமியின் சக்தியுடன் நன்கு பிரதிபலிக்கிறது. அதே சமயம் தங்கம் உடலின் ஆற்றல் மற்றும் ஒளி ஆகியவற்றால் நன்றாக செயல்படுகிறது. எனவே, தங்கம் உடலின் மேற்பகுதிகளை அலங்கரிக்க பயன்படுத்தப்படுகிறது. வெள்ளியை கொலுசாக கணுக்கால்களுக்கும் மற்றும் மெட்டியை விரல்களில் அணிகிறார்கள்.
நெத்திச்சுட்டி
நம் நெற்றி வகிடுப் பகுதியில் அணியக்கூடியது நெத்திச்சூடி என்று அழைக்கப்படும் நெத்திச்சுட்டி. இது தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம் போன்ற உலோகங்களால் செய்யப்படலாம். நெற்றியின் வகிடுப் பகுதியில் உள்ள நரம்பில் அழுத்தம் கொடுக்கும்படி அணிவதால் நெற்றியிலிருந்து காது வரை செல்லும் நரம்புகள் தூண்டப்பட்டு புத்துணர்ச்சி பெற வைக்கிறது.
காதணி – ஜிமிக்கி கம்மல்
ஆண், பெண் இருவருக்கும் சிறு வயதிலேயே காதுகுத்தி அணிகலன்களை மாட்டிவிடுவார்கள். இது நம் சமூகத்தில் முக்கியமான சடங்காகவே இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காதின் அடிமடலில் துவாரமிட்டு உலோகங்கள் அணிவதன் முக்கிய நோக்கம் கண்பார்வை வலுப்படும். காது மடலில் இருந்து மூளைக்கு நரம்பு செல்கிறது. இந்த நரம்புத் தூண்டப்பட்டு கவனிக்கும் திறன் அதிகப்படும். காதுமடல்கள் மனித மூளையின் இடது மற்றும் வலது நரம்பு பகுதியை இணைக்கிறது. காதுகளின் இந்த புள்ளி துளைக்கப்படுகையில் அது மூளையில் உள்ள இரண்டு பாகங்களையும் நன்றாகச் செயல்படுத்துகிறது.
மூக்குத்தி – புல்லாக்கு
ஆண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே வலப்புற மூக்கில் குத்தி செம்பு உலோகத்தாலான கம்பியை மாட்டிவிடுவார்கள். உடலில் உள்ள வாயுவை வெளியேற்றவும், சுவாசப் பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காகவுமே இவ்வாறு செய்வார்கள். பெண்களுக்கு பொதுவாக பருவ வயதை அடைந்ததற்குப் பிறகே மூக்குக்குத்தி தங்கத்தினாலான பொருளை அணிவார்கள். நம் மூளையில் ஹிப்போதெலமஸ் என்றபகுதி உள்ளது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்த செயல்படக்கூடிய சில பகுதிகள் உள்ளன. அதேபோல் நமது மூளையில் இடதுபக்கம், வலது பக்கம் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.
இடது பக்கத்தில் அடைப்பு ஏற்படும்போது வலதுபக்கம் வேலை செய்யும், வலதுபக்கம் அடைப்பு இருந்தால் இடதுபக்கம் வேலை செய்யும். முன்நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம்விழுதுகள் போல்நரம்புகள் நாசித் துவாரத்தில் இறங்கி வரும். இந்த நரம்புகள் ஜவ்வுபோல மெல்லிய துவாரங்களாக இருக்கும். மூக்கில் குத்தி துவாரம் ஏற்படுத்தி தங்கம் அணியும் போது நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். உடலில் உள்ள வெப்பத்தை தங்கம் தன்னுள்ளே ஈர்த்து வைத்துக்கொள்ளும். மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படும். பெண்கள் இடப்பக்கம்தான் மூக்குத்தி அணிய வேண்டும். மூக்குக்குத்தி ஆபரணம் அணிவதால் கவனிக்கும் திறன் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
கழுத்துச் சங்கிலி
அனைத்து மத மக்களும் அவர்களின் வசதிக்கு ஏற்றாற்போல் கழுத்தில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களாலும், சந்தனம், ருத்ராட்சம், துளசி போன்ற மருத்துவ கட்டைகளாலும் சங்கிலியை அணிகிறார்கள். இதனால், நம் கழுத்துப் பகுதி நரம்புகள் பலப்படுதோடு, உஷ்ணத்தைக் குறைத்து சமநிலையை பேணிக்காக்கிறது.
மோதிரம் – கணையாழி
கை விரல்களில் சுண்டுவிரலுக்கு அடுத்துள்ள விரலில்தான் மோதிரம் அணியப்படும். இந்த விரலில் அணிவதால் அந்த இடத்தில் உள்ள நரம்பு இதயத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதால் இதயநோய், வயிற்றுப் பிரச்னை வராமல் தடுக்கப்படும். ஆண், பெண் இனவிருத்தி உறுப்புகளுக்கு கூடுதல் பலத்தைக் கொடுக்கும்.
வளையல்
வளையல் என்பது பாரம்பரிய அணிகலன். தங்கம் மற்றும் கண்ணாடி வளையல் ஆரம்பகாலத்தில் அணிந்தாலும் தற்போது பிளாஸ்டிக் வளையல்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வளையல் அணிவதன் முக்கிய நோக்கம் ஹார்மோன்களின் குறைபாடுகளை களைவதுதான். பிறந்தது முதல் நமது உடலில் ஹார்மோன்களின் குறைபாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வளையல் அணிவதால் சுவாசப்பாதை அழற்சி, ஆஸ்துமா போன்றவை குறையும்.
பொதுவாக, மணிக்கட்டுகளில் உள்ள துடிப்பு அனைத்து வகையான நோய்களுக்காகவும் சோதிக்கப்படுகிறது. வளையங்கள் தொடர்ந்து உராய்வதால் ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கிறது என்று நம்பப்படுகிறது. கூடுதலாக, தோல் வழியாக வெளியேறும் மின்சாரத்தைத் தடுக்கிறது. வளையல்கள் நம் கைகளை சுற்றி இருப்பதால், வெளியேறிய ஆற்றலை நம் உடலுக்குத் திரும்ப அனுப்புகிறது.
அரைநாண் கொடி
உடலின் நடுப்பகுதியான இடுப்பில் அணியப்படுவது அரைநாண் கொடி. மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக ஓடும் ரத்தம் இடுப்புக்கு வரும்போது சமநிலைக்கு கொண்டுவர இந்த அரைநாண் கொடி உதவுகிறது. முக்கியமாக வயிற்றில் தொப்பை விழாமலும், குடலிறக்கம் வராமலும் தடுக்கும். இந்த அரைநாண்கொடி உடல் பாதுகாப்புக்கு நல்லது.
கொலுசு
குழந்தையாக இருக்கும்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது. குடும்பத்தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது. இந்தக் கொலுசு பெரும்பாலும் வெள்ளியினால் அணிவிக்கப்படுகிறது. வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுக்கொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. இது பெண்களின் உணர்ச்சிகளை குறைக்கவே பயன்படுகிறது.
மெட்டி
பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால்விரலில் மெட்டி அணிவதால் கருப்பையின் நீர்ச்சமநிலை பாதிப்படைவதில்லை. வெள்ளியில் செய்த மெட்டியைத்தான் அணிய வேண்டும். வெள்ளியில் இருக்கக்கூடிய காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கச் செய்யுமாம். பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும் இந்தக் காலக்கட்டத்தில் இந்த நரம்பினை அழுத்தித் தேய்த்தால் மேற்கண்டவைகள் குறையும். இதனை எப்போதும் மெனக்கெட்டு நாம் செய்துகொண்டு இருக்கமுடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்ந்து நோய் வராமல் தடுக்கும்.
Average Rating