முகநூல் எனும் அட்சய பாத்திரம்!!(மகளிர் பக்கம்)
போக்குவரத்தின் இடைவெளியில் கைபேசியும் கையுமாக, சமூக வலைத்தளங்களில் அரட்டை அடிக்கும் இளம் தலைமுறையினரை காண நேர்கிறது. அதே இளம் தலைமுறையினர் சில நேரங்களில் சற்றே மாற்றி யோசித்து, சமூக வலைத்தளமான சோஷியல் மீடியா நெட்வொர்க்குகளை தங்களுக்கு சாதகமானதாகவும் மாற்றி விடுகின்றனர். அப்படி மாற்றியவர்களில் ஒருவர்தான் சினேகா மோகன்தாஸ். ‘ஃபுட் பாங்க் சென்னை’ என்கிற பெயரில் முகநூல் கணக்கை ஆரம்பித்து அதில் நண்பர்கள் பலரை இணைத்திருக்கிறார். இன்று அது கிளை பரப்பி விருட்சமாகி நிற்கிறது. அதன் வேர் குறித்து நாம் அவரிடம் பேசியபோது…
“நான் பக்கா சென்னைப் பொண்ணு. சென்னை எத்திராஜ் கல்லூரியில் விஷூவல் கம்யூனி கேஷன் முடித்து, தொடர்ந்து எம்.எஸ்.டபிள்யூ படித்தேன். 3 வருடங்களுக்கு முன்பு இந்த குரூப்பை நான் துவங்கியபோது நான் பெரிய அளவில் ப்ளான் எல்லாம் செய்யவில்லை. சும்மா செய்து பார்க்கலாமே என விளையாட்டாகத்தான் துவங்கினேன். ஆனால் இன்று நான் துவங்கிய இந்த முகநூல் குழு அழுத்தமாக, ஆழமாக வேறூன்றி கிளை பரப்பியுள்ளது. இது வரை 25000 பேர் இதில் உறுப்பினராகி உள்ளனர். சென்னையில் மட்டுமே 200 பேர் தன்னார்வலர்களாக இதில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
நன்கொடையாக பணம் எதையும் நாங்கள் கையில் வாங்குவது இல்லை. உணவாக மட்டுமே பெறுகிறோம். அதுவும் அப்போதைக்கப்போது வீடுகளில் தயார் செய்யப்பட்ட உணவை மட்டுமே பெறுகிறோம். நமது வீடுகளில் வழக்கமாகச் செய்யும் அன்னதானம்தான். ஆனால் காலத்திற்கு ஏற்ற மாதிரி சோஷியல் மீடியா நெட் வொர்க் வழியாக இளைய தலைமுறையினரை இணைத்திருக்கிறேன் அவ்வளவே. நான் சின்ன வயதாக இருந்தபோது எங்கள் வீட்டில் என் தாத்தா, பாட்டி எப்போதும் அன்னதானம் செய்வார்கள். பிறந்த நாள் மற்றும் முக்கியமான நாட்களில் வெளியில் இருந்து வீட்டிற்கு ஆட்களை அழைத்து வந்து வீட்டிலே உணவை கூடுதலாகத் தயாரித்து அவர்களுக்கும் சேர்த்து வழங்குவார்கள்.
இப்போது அந்தப் பழக்கம் வழக்கொழிந்துவிட்டது. அதே கான்செப்ட்தான் கொஞ்சம் மாற்றி யோசித்தேன் அவ்வளவே. எந்த விசயமும் குழுவாக இணைந்து இயங்கும்போது நிறையப் பேரை சென்றடையும். சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பிறகுதான் நான் துவங்கிய ‘ஃபுட் பேங்க் சென்னை’ குரூப் கூடுதல் கவனம் அடைந்தது. இந்த குரூப்பை துவங்குவதற்கு முன்பு, பணம் எதுவும் கையில் பெறாமல், நேரடியாக ஒரு நல்ல விசயத்தை எப்படி செய்ய முடியும் என நிறைய யோசித்தேன். சும்மா ஜஸ்ட் லைக் தட் என பணத்தைக் கொடுத்துவிட்டுச் செல்லாமல், கொடுப்பவர்களும் இதில் ஈடுபாடு காட்ட வேண்டும்.
ஆதரவற்றோர் இல்லங்களில் நாம் கொடுக்கும் நன்கொடைக்கு அவர்கள் சரியாக உணவு கொடுத்தார்களா இல்லையா இதெல்லாம் நமக்கு எதுவுமே தெரியாது. இல்லங்களுக்குச் சென்று பணத்தையோ, காசோலையோ கொடுத்துவிட்டு வந்து விடுகிறோம் அவ்வளவே. நம் வீட்டுக்கு உறவினர்கள் வந்தால் எப்படி நாம் கூடுதல் உணவுகளை தயார் செய்கிறோமோ அதே மாதிரி உணவுகளை கொடுக்க விரும்புபவர்கள் தயார் செய்து தருவதை அவர்களிடம் இருந்து பெற்று தேவைப்படுவோருக்கு கொடுக்கும் வேலையினை இந்த முகநூல் குரூப் வழியாக செய்கிறோம்.
சுருக்கமாக சொல்வதென்றால் அப்போதைக்கப்போது சமைத்த உணவுகளை மட்டுமே கொடையாளிகளிடம் பெற்று தேவைப்படுவோருக்கு வழங்குகிறோம். பசியோடிருப்பவர்களும் நம்மைப் போல் நல்ல உணவைத்தான் உண்ண வேண்டும் என்ற திட்டத்தோடு இதைச் செயல்படுத்துகிறோம். வீடுகளில் மீதியான உணவுகள், பழைய உணவுகளை நாங்கள் பெற்றுக்கொள்வதில்லை. முகநூலில் இணைந் தவர்கள் ஒன்று சேர்ந்து, வாட்ஸ் அப் குரூப்பில் யார் எத்தனை சாப்பாடு கொடுக்க விரும்புகிறார்கள் என முதல் நாளே போட்டுவிடுவோம்.
முதல் நாள் மாலைக்குள் எத்தனை சாப்பாடு அடுத்த நாளுக்கு வரப்போகிறது என்பது எங்களுக்கு தெரிந்துவிடும். அதேபோல் உணவை எல்லாருக்கும் கொடுத்து அவர்களை சோம்பேறியாக்குவதில்லை. தேவைப்படுவோருக்கு மட்டுமே தருகிறோம். இதில் மனநலம் பாதிக்கப்பட்டோர், முதியவர்கள், உடல் ஊனமுற்றோர், வீடின்றி தெருக்களில் வசிப்பவர்கள் என முன்னுரிமை கொடுத்து, பார்த்து பார்த்து அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று வழங்குகிறோம். உணவு வழங்க விரும்பும் நீங்கள் அண்ணா நகரில் வசிக்கிறீர்கள் என்றால், அண்ணா நகர் குரூப் என்ற குரூப் இருக்கும்.
அந்தப் பகுதியில் உள்ளவர்களாக அதில் இருப்பர். அவர்களை அணுகலாம். அண்ணா நகர் டவர் பூங்காவில் எல்லா செவ்வாய்க் கிழமையும் இந்தக் குழு ஒன்று சேர்வோம். நீங்கள் உணவு தர விரும்புகிறீர்கள் என்றால் அங்கு வந்து உணவைக் கொடுத்துவிட்டுச் செல்லலாம். அதேபோல் தி.நகர், எழும்பூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், நங்கநல்லூர், ஓ.எம்.ஆர். வேளச்சேரி, போரூர், கொளத்தூர் என தனித்தனி குரூப் உள்ளது. நீங்கள் எந்த ஏரியாவில் உள்ளீர்களோ அந்த குரூப்போடு இணைவீர்கள்.
இதில் ஆர்வத்தோடு பலரும் இணைகிறார்கள். எனக்கு உணவு தயாரிக்க நேரமில்லை, உணவை வழங்க மட்டுமே வருகிறேன் எனவும் சிலர் விருப்பம் தெரிவித்து வருவார்கள். சிலர் உணவாக இல்லாமல் உணவு தயாரிப்பிற்கான மூலப் பொருட்களாகவும் தருவார்கள். அவற்றையும் சேகரித்து, மாதத்தில் ஒரு நாள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உணவு தயாரித்து, சென்னை முழுவதும் வழங்குவோம். இதில் உணவைத் தயாரிப்பது, தேவையான காய்கறிகளை நறுக்குவது, பாத்திரம் கழுவுவது என எல்லாமே தன்னார்வலர்கள்தான். உணவு தயாரிக்க தேவைப்படும் இடத்தை பள்ளி, கல்லூரி வளாகங்களை அணுகி வாடகைக்கு எடுத்துக் கொள்வோம்.
ஐதராபாத், நிஜாமாபாத், பெங்களூர் உள்பட இந்தியா முழுவதும் தற்போது எங்களிடம் 18 கிளைகள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை என முக்கியமான மாவட்டங்களிலும் உள்ளன. இந்த முயற்சி முகநூல் வழியாகவே சாத்தியமானது. முகநூல் வழியாக இணைந்த நாங்கள் வாட்ஸ் அப் வழியாகவும் எங்களை தொடர்புப்படுத்திக் கொள்கிறோம். உணவு தயாரிப்பிற்காக சென்ட்ர லைஸ்ட் கிச்சன் ஒன்றை நிறுவும் முயற்சியிலும் இருக்கிறோம்” என முடித்தார்.
Average Rating