என் கோபத்தைகூட ரசிப்பார் என் மனைவி – நகைச்சுவை நடிகர் தாமு!!( மகளிர் பக்கம்)
“எங்களுடையது அரேன் ஞ்சுடு லவ் மேரேஜ். பொதுவா சினிமா நடிகர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்குவாங்க. கூட நின்னு போட்டோ எடுத்துப்பாங்க. ஆனா சினிமா நடிகர்களுக்கு பொண்ணு கொடுக்கணும்னா ரொம்ப யோசிப்பாங்க. அவ்வளவு சீக்கிரம் யாரும் பொண்ணு தரமாட்டாங்க. ஆனா, எனக்கு சொந்தத்தில் நிறைய முறைப்பெண்கள் இருந்தாங்க. அவங்கள்ல யாராவது ஒருத்தரை கல்யாணம் செய்யணும்னு வீட்டில் பெரியவங்க விரும்பினாங்க. அவர்களில் அம்மாவுடைய முக ஜாடையில் இருந்த சுகந்தியைப் பிடித்துப்போயிற்று. அவங்க எனக்கு இரண்டு வகையில் சொந்தம்.
ஒருபக்கம் அப்பாவுடைய தங்கச்சி பெண், ஒருபக்கம் அம்மாவுடைய அண்ணன் பெண். அவங்களுக்கும் ஒரு செலிபிரிட்டியோடு கல்யாணம் என்ற முறையில் என்னைப் பிடித்திருந்தது. என்னுடைய குருநாதர் பாலச்சந்தர் தலைமையில் நிச்சயம் நடந்தது. நிச்சயத்துப் பின்னான 6 மாதங்களும் நான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தேன். ‘காதலுக்கு மரியாதை’ க்ளைமேக்ஸ் ஷூட்டிங் நடக்கும்போது, 1997 அக்டோபர் 20ந் தேதி எங்களுக்கு நடிகர் சங்கத்தில் (சுவாமி சங்கரதாஸ் ஹாலில்) திருமணம் நடைபெற்றது.
கல்யாணத்துக்கு மறுநாளே படப்பிடிப்புக்குக் கிளம்பிப் போய் 15 நாட்கள் கழித்துதான் வந்தேன். கல்யாணத்திற்குப் பின்னர் வெளியூர்களுக்கெல்லாம் செல்லவில்லை. சொந்தக்காரங்க வீடுகளுக்குத் தான் சென்று வந்தோம். படங்கள் போனோம். ‘காதலுக்கு மரியாதை’ படம் பார்த்துட்டு சுகந்தி அதில் நடித்த எல்லாரையும் பாராட்டினாங்க. என்னை மட்டும் பாராட்டவில்லை. ஏன் என்று கேட்டதற்கு நான் உங்களை பாராட்டி பேசினா அது ரொம்ப செயற்கையா இருக்கும் என்று சொல்லவில்லை என்று சொல்லி கடைசியாக என் நடிப்பையும் ரொம்ப இயல்பா இருந்தது என்று பாராட்டினாங்க.
நல்ல புரிதலோடு இருந்த எங்கள் அன்பு வாழ்க்கை குழந்தை இல்லை என்று பிரச்னையால் கொஞ்சம் வாடியது. திருமணமாகி பல ஆண்டுகளாகியும் எங்களுக்குக் குழந்தை இல்லை. என்னுடைய தம்பி முரளிக்கு இரண்டு பையன்கள். நேமன், ராகுல். அவர்கள் எங்களுடன் இருந்ததால் எனக்குக் குழந்தை இல்லாத துக்கம் அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் வெளியே காட்டிக்கொள்ளாவிடினும் அவளுக்குள் துக்கம் இருந்தது. வாழ்க்கை கொஞ்சம் துக்கமாக மாறிய அந்த நேரத்தில் ஒரு கணவன் என்கிற ரோலை ஒழுங்கா செய்யணும்னு நினைச்சேன்.
அவங்களுக்கு பாஸிட்டிவ்வான ஃபீலிங் கொடுத்துக்கொண்டிருந்தேன். 13 வருஷம் குழந்தை இல்லை. அந்த மன அழுத்தத்தினாலோ என்னவோ அடிக்கடி மைக்ரேன் தலைவலியால் சுகந்தி அவஸ்தைப்பட்டாங்க. பின்னர் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. ஒருவர் கல்கிப் பிரியா, இன்னொருவர் ஜீவப்பிரியா. குழந்தைகள் தற்போது இரண்டாம் வகுப்பில் படிக்கின்றனர். குழந்தை பிறந்த பின்னர் அவங்களுக்கிருந்த மைக்ரேன் பிரச்னை போயே போச்சு. அதற்கு காரணம் மன அழுத்தம் குறைந்ததுதான்.
அதனால் நான் எப்போதும் என் குழந்தைகளுக்கு நன்றிக்கடன் பட்டவனாக இருக்கிறேன். என் மனைவி இப்போது மகிழ்ச்சியாக இருக்க என் பிள்ளைகள் தானே காரணம். நம்பிக்கையோடு இருந்தால் அசாத்தியங்களும் சாத்தியமே. என் மனைவி என்னுடைய கோபத்தை ரொம்ப இயல்பா கடந்து போவாங்க. உண்மையில் சொல்லப்போனால் என் கோபத்தை ரசிக்க ஆரம்பிச்சிடுவாங்க. நான் கோபமா பேசிட்டு இருந்தேன்னா, ‘ஏய் அங்க பாரேன் உங்க அப்பா கோபப்படுவதை’ என்று சொல்லி சிரிச்சிட்டுப் போவாங்க. அதன் பிறகு எனக்குக் கோபம் போய்விடும்.
அவங்க கோபப்பட்டாலும் எதனாலும் பேசி நான் அவங்க கோபத்தை சமாதானப் படுத்திவிடுவேன். ரொம்ப பொறுமையா இருப்பாங்க. நிறைய பக்தி. நான் இன்னிக்கு நல்லா இருப்பதற்கு காரணம் அவங்களோட பொறுமை, தியாகம், அவங்க என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை, அத்தோடு அவங்களுடைய பிரார்த்தனை என்று தான் நான் நம்புகிறேன். என்னுடைய வெற்றியைக் கொண்டாடு வாங்க. தோல்வியை ஃபோகஸ் பண்ண மாட்டாங்க. ரொம்ப பிரமாதமா சமைப்பாங்கன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் எனக்குப் பிடிச்ச மாதிரி எனக்குத் தேவையானதை சமைக்கிறாங்க. அது போதும்.
எங்கள் வீட்டில் தரையில் அமர்ந்துதான் சாப்பிடு வோம். அவங்க எனக்குப் பரிமாறுவாங்க. நான் அவங்களுக்குப் பரிமாறுவேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் சிரிச்சிட்டே இருப்பாங்க. அவங்க முகத்தில் இருப்பது ஆனந்தமா, துக்கமா என கண்டறிய முடியாதபடி எப்போதும் ஒரு புன்னகையோடு இருப்பாங்க. காலை 5.30 மணிக்கு எழுந்தாங்கன்னா பொழுதெல்லாம் வேலை சரியா இருக்கும். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. எனக்கு அம்மா இப்ப இல்லை. என் அப்பாவை தன் அப்பாவா நினைச்சுப் பார்த்துக்கிறாங்க. அவங்க இப்படி கேரிங்கா இருப்பதால் தான் என் கேரியரில் என்னால் வெற்றிகரமாக பயணிக்க முடிகிறது.
டாக்டர் அப்துல்கலாம் சாரை சந்தித்த பிறகு என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அப்துல் கலாம் சார் என்னை புதிய மாணவ சமுதாயத்தை உருவாக்கும் திட்டத்தில் சேர்த்துவிட்டார். நடிப்பதை விட்டுவிட்டு அப்துல் கலாம் அவர்களின் ‘லீட் இந்தியா 20/ 20’ எனும் திட்டத்தில் சீனியர் ட்ரைனர் பொன்ராஜ் வழிகாட்டுதலில் 2011 க்குப் பிறகு முழுநேர மாணவப் பயிற்சியாளராக மாறிவிட்டேன். என் பிள்ளைகள் இருவரும் படிப்போடு சிலம்பம், நீச்சல், கர்நாடக இசை, பரதம், வெஸ்டர்ன் டான்ஸ், யோகா மற்றும் மிமிக்ரி எல்லாம் கத்துக்கிறாங்க.
ரொம்ப திறமையா இருக்காங்க. என் வாழ்க்கையில் மகன், அண்ணன், கணவன், பெரியப்பா, மாமா என எல்லா ரோலையும் பண்ணேன். ஆனா அப்பா ரோல் மட்டும் குறையாக இருந்தது. அதையும் இப்ப பண்ணியாச்சு. முதல்ல ஒரு பிள்ளையா, பெற்றவங்களுக்கு, உடன் பிறந்தவங்களுக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்தேன். பின்னர் மனைவிக்காக வாழ்ந்தேன். இப்போதைய என் சிந்தனையெல்லாம் பிள்ளைகளின் வளர்ச்சிப் பற்றி தான். வாழ்க்கை மகிழ்ச்சியா போய்ட்டு இருக்கு. இத்தனை வருட வாழ்க்கையில் பசி என்கிற பிரச்னையில்லை, கடன் தொல்லைகளும் இல்லை.
எங்களுக்குத் தேவையான பொருளாதாரத்தோடும் ஆரோக்கிய விழிப்புணர்வோடும் மகிழ்ச்சியா இருக்கோம். நூறாண்டுகளைக் கடந்து என் மனைவியுடன் வாழணும் என்று ஆசைப்படறேன். என் மனைவிக்கு இதுவரை சாதாரண விஷயங்களை, அவங்க கேட்ட எல்லா விஷயங்களையும் செய்து கொடுத்திருக்கேன். ஆனால் பிரமாண்டம் என்கிற விஷயத்தை அவர்களுக்கு நான் காட்டியதில்லை. அதை அவர்களுக்குக் காட்ட வேண்டும் என்பதே என் ஆசை.” சுகந்தி “எனக்கு அவர் உறவு முறைதான். விரும்பி கல்யாணம் செய்து கொண்டேன்.
என் வாழ்க்கைக்கு நூறு சதவிகிதம் உறுதுணையாக இருப்பது என் கணவர் தான். எங்களுக்கு குழந்தை இல்லாத சமயங்களில் நான் வருத்தமாக இருக்கும்போதெல்லாம் எனக்கு ஆறுதல் சொல்லி என்னைத் தேற்றியது என் கணவர் தான். அவர் வீட்டில் எல்லாருக்கும் நகைச்சுவை உணர்வு அதிகம். எங்க அத்தை நல்லா காமெடியா பேசுவாங்க. இவரும் போனில் மிமிக்ரி பண்ணி என்னை ஏமாத்துவார். ஆரம்ப காலங்களில் நிறைய ஏமாறுவேன். பின்னர் அதைச் சொல்லி சிரிப்போம். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு அவர் நடித்த ‘லவ் டுடே’ படம் பார்க்கக் கூட்டிப்போனார்.
அதன் பிறகு அவருடைய எல்லாப் படத்தையும் ஒன்றுவிடாமல் பார்த்திருக்கிறேன். அவருடைய படங்களை டிவியில் எத்தனை தடவை போட்டாலும் பார்ப்பேன். அவர் ரொம்ப நல்லா சமைப்பார். நான் கர்ப்பமாக இருந்தபோது எனக்குப் பிடித்தமானவற்றை சமைத்துக் கொடுத்தார். இது வரை என்னை மரியாதைக் குறைவாக ‘வாடி’, ‘போடி’ என்றெல்லாம் அழைத்ததில்லை. பேர் சொல்லிக் கூப்பிடுவார் அல்லது அம்மா என்றோ மேடம் என்றோ மரியாதையாகத்தான் கூப்பிடுவார். என்ன தான் குழந்தைகளை அவர் அன்போடு பார்த்துக்கொண்டாலும் குழந்தைகளுக்கு தாய்ப்பாசம் என்பது முக்கியம் என்பார். இவரை கணவரா அடைந்ததில் எப்போதும் பெருமைதான் எனக்கு.”
Average Rating