வலிகளைத் தாண்டி வாழும் காலம் வரை நிம்மதி!!(மகளிர் பக்கம்)
வலியோடும் வேதனையோடும் வாழ்வதைவிட செத்துவிடலாமே என நினைப்பவர்களுக்கு, ‘இந்த பூமியில் நீங்கள் வாழும் காலம் இன்னும் மிச்சம் இருக்கிறது. அதை நிம்மதியாக வாழ்ந்துவிட்டுப் போக வழிகாட்ட நாங்கள் இருக்கிறோம்’ என பாலியேட்டிவ் கேர் சிகிச்சை மூலம் முதியோர்கள் மற்றும் குணப்படுத்த முடியாத நோயாளிகளை வைத்து பராமரித்து வரும் மருத்துவர் ரிபப்ளிகா ஸ்ரீதர் தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
‘‘உலக அளவில் மனித இறப்புக்கான இரண்டாவது இடத்தில் புற்றுநோய் இருப்பதாக அமெரிக்கப் புற்றுநோய் கழகம் (American cancer Society) தெரிவிக்கிறது. பொதுவாக புற்றுநோய் பரவியதற்குப் பின்னர் அதன் வலி தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமைக்கு பலர் சென்றிருக்கிறார்கள். எலும்பில், நுரையீரலில் பரவிவிட்டால் சிகிச்சை முறையே கிடையாது. அதேபோன்று குணப்படுத்த முடியாத பக்கவாதம் (Stroke), நடுக்குவாதம் (parkinson), விபத்தில் சிக்கி கோமா நிலையில் இருப்பவர்கள், சிறுநீரக செயலிழப்பு (kidney failure) உள்ளிட்ட நோயாளிகளை வலி தெரியாமல் பராமரிப்பதுதான் பாலியேட்டிவ் கேர் சிகிச்சை.
குணப்படுத்த முடியாத நோய்களைப் பராமரிப்பதும், வலி நீக்கம் கொடுத்து வாழவைப்பதுதான் பாலியேட்டிவ் கேர் சிகிச்சை’’ என்று விளக்கம் கொடுத்தவர், தான் கடந்து வந்த பாதைகள் பற்றி விவரிக்கலானார். ‘‘அலோபதி மருத்துவத்துறையில் இந்த பாலியேட்டிவ் கேர் சிகிச்சைப் படிப்பை பல பேர் விரும்பி எடுப்பதில்லை. காரணம், இதில் பெரிய அளவிலான வருமானம் வராது. எலும்பியல் நிபுணர், அறுவைசிகிச்சை நிபுணர் என சிறப்பு மருத்துவர் என்றிருந்தால் நல்ல வருமானம் வரும்.
அடுத்து, நோயைக் குணப்படுத்த முடியாது என மருத்துவர்களால் கைவிடப் பட்டவர்களை பராமரிப்பதுதான் இந்த பாலியேட்டிவ் கேர் சிகிச்சை என்பதால் மருத்துவம் படிப்பவர்கள் இதை பெரும் பாலும் விரும்புவதில்லை. நாம் வாழும் காலத்தில் ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்பதற்காகவே இதனை தேர்ந்தெடுத்தேன். வெளிநாடுகளில் பாலியேட்டிவ் கேர் சிகிச்சை என்பது பிரபலம். ஆனால், நம் நாட்டில் முதன் முதலாக இந்தச் சிகிச்சை முறையை நான் ஆரம்பிக்கும்போது மக்களிடையே இதுபற்றி போதிய விழிப்புணர்வு இல்லை.
இந்தியாவில் இந்தச் சிகிச் சைக்கென ஒருசில மருத்துவமனை களில் தனிப்பிரிவு இருந்தாலும், இதற் கென தனியாக ஒரு மருத்துவமனையை சென்னை தியாகராய நகரில் ஆர்.எம்.டி. என்ற பெயரில் ஆரம்பித்து 5 நோயாளிகளை வைத்து பராமரித்து வந்தேன். படிப்படியாக இதுபற்றிய மகத்துவம் வெளியில் தெரியவர இப்போது 110 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையை பராமரித்து வருகிறேன். ‘ஆர்.எம்.டி. பெயின் அண்ட் பாலியேட்டிவ் கேர் டிரஸ்ட்’ என்கிற அமைப்பின் மூலம் கிராமப் பகுதிகளுக்கு சென்று ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறேன்.
மருத்துவர் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்தாலும், மருந்து மாத்திரைகளின் விலை அதிகம் என்பதால் ஏழை எளிய மக்களிடமிருந்து குறைவான பணம் பெற வேண்டிய சூழல் உள்ளது. இதற்கு சமூக அக்கறைக் கொண்டவர்கள் உதவினால், இன்னும் ஏராளமான ஏழைகளுக்கு இச்சிகிச்சையை இலவசமாக அளிக்க வாய்ப்பாக இருக்கும்’’ என்றார் மருத்துவர் ரிபப்ளிகா ஸ்ரீதர். ‘‘சில புற்றுநோய் நரம்புகள் வழியாக வலியை ஏற்படுத்தும். அந்த நரம்புகளைக் கண்டுபிடித்து பிளாக் செய்துவிட்டால் வலி முழுமையாக நின்றுவிடும்.
பாலியேட்டிவ் கேர் சிகிச்சையில் இது ஒரு சிறப்பு முறை. சென்னை தியாகராய நகர் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் மருத்துவமனையாகவும், மதுரவாயல், மதுரை ஆகிய இடங்களில் நோயாளிகளை பராமரிக்கும் மையமாகவும் வைத்து இரண்டு வகையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். நோயாளியுடன் உறவினர் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. பாலியேட்டிவ் கேர் சிகிச்சை முறைக்கும் மற்ற மருத்துவ சிகிச்சை முறைக்கும் என்ன வித்தியாசம் என்றால், பொதுவாக மருத்துவமுறைகளில் நோய்களை குணப் படுத்த மட்டுமே சிகிச்சை அளிப்பார்கள்.
நோயாளிகளை கடைசி வரை எப்படி அணுகவேண்டும் என்பது தெரியாது. நோயாளிக்கு அத்தனை டெஸ்ட்டுகளையும் செய்து பார்த்துவிட்டு நோய் முற்றிவிட்டது, குணப்படுத்த முடியாத காலகட்டத்தைத் தாண்டிவிட்டார், எனவே நீங்கள் நோயாளியை அழைத்துச் சென்றுவிடுங்கள் என அனுப்பிவிடுவார்கள். ஆனால், பாலியேட்டிவ் கேர் சிகிச்சை முறையில், இதுமாதிரியான நோயாளிகளுக்கு அவர்கள் இந்தப் பூமியில் வாழும் காலம் வரை அவர்களை நிம்மதியாக வாழவைக்க அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த சிகிச்சை அளித்து பராமரிப்பும் செய்கிறோம்.
பொதுவாக மருத்துவமனைகளில் இனிமேல் சிகிச்சை அளித்து பயனில்லை, கூட்டிக்கொண்டு செல்லுங்கள் என்று சொல்லும்போது குடும்பத்தினருக்கும் அவர்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற விவரம் தெரியாது. நோயாளி ஒருபக்கம் வலியால் துடித்துக்ெகாண்டிருப்பார். குடும்பத்தினர் ஒரு பக்கம் வேதனையால் துடித்துக் கொண்டிருப்பார்கள். அதாவது, இரண்டு மூன்று நாட்களில் இறந்துவிடுவார் என்று கைவிடப்பட்ட நோயாளிகள் இந்த பாலியேட்டிவ் கேர் சிகிச்சை முறையினால் நன்றாக குணமாகி வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்.
நோய் முற்றிப்போய்விட்டால் எல்லாருமே இறந்து போய்விடுவார்கள் என அவர்களை விட்டுவிடக்கூடாது. அவர்களுக்கு சிகிச்சையும், பராமரிப்பும் செய்தால், உயிரோடு இருக்கும் வரை நிம்மதியாக வாழலாம் என்பதைச் செய்வதுதான் பாலியேட்டிவ் கேர். இதுவரையில், இருபத்தைந்தாயிரம் பேருக்கு சிகிச்சை அளித்துள்ளேன். இப்போது படிப்படியாக விழிப் புணர்வு ஏற்பட்டு பெரிய பெரிய மருத்துவமனைகளில் இருந்தெல்லாம் பாலியேட்டிவ் கேர் சிகிச்சைக்காக இங்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்த சிகிச்சை மற்றும் பராமரிப்பு குறித்து செவிலியர் பயிற்சியும் அளிக்கிறோம்.
மருத்துவர்களும் வந்து தெரிந்துகொண்டு செல்கின்றனர். பாலியேட்டிவ் கேர் சிகிச்சை முறையில் நான் ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறேன் என்றால், நம்மூரில் வெளிநாடுகள் போன்று உடல்நலத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. நோயின் அட்வான்ஸ்டு ஸ்டேஜில்தான் மருத்துவமனைக்கே செல்கின்றோம். முன்னதாகவே போய் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை மற்றும் உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்பது நம்முடைய மருத்துவமுறையில் இன்னும் வரவில்லை.
இந்த மாதிரி அட்வான்ஸ்டு ஸ்டேஜ்ல வந்துவிட்டபோது குடும்பத்தினருக்கும் என்ன செய்வது எனத் தெரியாமல் போய்விடுகிறது. எல்லாருமே ஒரு குற்ற உணர்ச்சியோடு போய்விடுகிறார்கள். நாம் முன்னதாகவே கவனம் எடுத்துக்கொள்ளவில்லையோ என நினைக்கிறார்கள். நோய் பாதி, பயம் பாதி என்பதில் இறந்து போய்விடுகிறார்கள். இறுதிகட்டத்தில்தான் பாலியேட்டிவ் கேர் சிகிச்சை என்பது கிடையாது.
எந்த நிலையில் இருந்தாலும் அவர்களின் நிலைமைக்கு தக்கவாறு சிலருக்கு மருத்துவமனையில், சிலருக்கு வீட்டில் என பராமரித்து சிகிச்சை அளிக்கிறேன். சாகும் நாள் தெரிந்துவிட்டால், வாழும் நாட்கள் நரகமாகிவிடும் என்பார்கள். ஆனால், நானோ, ஒருவர் வாழும் காலம்வரை நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவே இந்தப் பணியை செய்து வருகிறேன்’’ என்றார் பெருமிதத்துடன்.
Average Rating