வாழ்வென்பது… பெருங்கனவு!!(மகளிர் பக்கம்)
மூளை மடிப்புகளில் செஞ்சூரியனாகக் கனன்று கொண்டிருக்கிறது அவரவர்க்கான கனவுகள். பால்ய காலம் தொட்டு, வாழும் காலம் வரை ஏகப்பட்ட கனவுகள். சிலர் அந்த இலக்கை நோக்கி பயணிக்கலாம். பலர் வசப்பட்ட ஒன்றை தனக்கான நோக்காகக் கருதலாம். கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல… உன்னை தூங்க விடாமல் செய்வதே லட்சியக் கனவு. உண்மைதான். ஆனாலும், என்றைக்கு பொருளாதாரத் தேவைகள், குடும்ப சூழல்கள், சமூக சிக்கல்கள், உடல் நலக் குறைபாடுகள் நம்மை ஆட்டிப்படைக்கிறதோ அன்றைக்கே உறக்கத்திற்கான கனவாக நம் லட்சியம் மாறிப்போகிறது.
பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் பெரும் கனவு. தவழும் குழந்தைக்கு நடைவண்டி பெரும்கனவு, கல்வியற்ற வறுமையான பெற்றோரின் மகளுக்கு, கல்வியும் வேலைவாய்ப்பும் பெரும் கனவு. சுற்றிச் சுற்றி நம்மை வீழ்த்தும் பூமராங் கனவுகளுக்கு மத்தியில் நின்றுகொண்டு எட்டிஎட்டிப் பிடிப்பதும் தவற விடுவதும் தவிர்க்க இயலாதது. இந்தப் பகுதியில் தன் வாழ்க்கைக் கனவை பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர் முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி. “பெரிய திட்டமிடல் இல்லாத சிறுவயதில் பைக் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
உறக்கத்தில் கையைக் காலை உதறி வாகனம் ஓட்டுவதைப்போல் சப்தம் எழுப்பி, சகோதரிகள் என் முகத்தில் தண்ணீர் அடித்து கனவை கலைத்திருக்கிறார்கள். படித்து வேலைக்குபோய் ஜீப் வாங்கி அப்பாவையும் அம்மாவையும் ஏற்றிக்கொண்டு போவேன் என அடிக்கடி அவர்களிடம் சொல்லிய நினைவு இருக்கிறது. எல்லாவற்றையும் பணம்தான் தீர்மானிக்கிறது. நன்றாகப் படித்தால் நல்ல வேலைக்குப் போகலாம் என்பதை சமூகம் பழக்கிக் கொடுத்த காலகட்டம். என் அப்பா என்னை மருத்துவராக்க வேண்டும் என்று கனவு கண்டார். பதினைந்து வயதில், அப்பாவின் கனவுதான் எனக்கானதுமாக இருந்தது.
ஒருவேளை அவர் மீதிருந்த பாசமாகக் கூட இருந்திருக்கலாம். அப்பா கால்நடை மருத்துவர். அவர் பணி செய்யும்போது அருகிலேயே இருந்து கவனிப்பேன். விடுமுறை நாட்களில் கால்நடை மருந்தகமே என் பொழுதுபோக்கிற்கான இடம். நள்ளிரவில் கிராமங்களில் இருந்து மாடு முட்டி குடல் சரிந்த ஆட்டுக் குட்டிகளை சவுக்குக் கூடைகளில் வைத்து பதற்றத்தோடு வீட்டிற்கு தூக்கி வருவார்கள். அந்த நேரங்களில் நான் உதவியாளராக இருந்திருக்கிறேன். ரத்தம் சொட்டச் சொட்ட ஆட்டுக் குட்டியின் குடல்களை உள்ளங்கைகளில் தூக்கிப் பிடித்திருப்பேன்.
அப்பா தையல் போட்டுக் கொண்டிருப்பார். அந்த வயதில் அத்தனை தைரியத்தோடு என் கண்கள் ஒளிவீசும். பாதிக்கப்பட்ட வளர்ப்பு மிருகங்களின் நலன் விசாரித்துக் கொள்வேன். மருத்துவர் ஆகிவிட்ட கனவு மிளிரும். என் மூத்த சகோதரி செவிலியர் பயிற்சியில் இருந்தார். தாய்க்கு நிகரான பாசம். விடுமுறை நாட்களில் அவரைப் பார்க்க தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அம்மாவுடன் செல்வேன். வெள்ளை வெளேரென கௌன் போல் அவர்கள் உடுத்தியிருக்கும் சீருடை பிடித்திருந்தது. வார்டுகளில் ஆங்காங்கே வெண்புறாக்களாக வலம் வந்த காட்சி.
எப்படியும் செவிலியராக வேண்டும் என்ற ஈர்ப்பை ஏற்படுத்தியது. நமக்குப் பிடித்தவர்களெல்லாம் என்னவாக இருக்கிறார்களோ அவர்களாகவே மாறுவது இயல்புதானே. இதற்கிடையில், வைஜெயந்தி ஐபிஎஸ் படம் பார்த்த அன்று திரையரங்கத்தை விட்டு வெளியில் வரும்போதே இனி கண்டிப்பாக ஐபிஎஸ் தான் படிக்க வேண்டும் என முடிவு செய்ததெல்லாம் தனி சுவாரசியம். எல்லா அப்பாக்களையும்போல் மருத்துவருக்கான மதிப்பெண்கள் குறைந்ததும் ஒருமாத காலம் அப்பா என்னுடன் பேசாமல் இருந்தார்.
ஒருவழியாக நான் விரும்பிய செவிலியர் பயிற்சி முடித்தேன். இவையெல்லாம் கடந்து தனக்கான வாழ்க்கையை தான் தீர்மானிக்கலாமென நிமிர்கிறபோது இரண்டாம் பாகமான திருமணவாழ்க்கை. ஆண், பெண் பாரபட்சமின்றி ஒவ்வொருவரும் முன்வைக்கும் நேர்காணல் கேள்வி ஒன்றுண்டு. உங்களுக்கு எந்த மாதிரியான கணவன் வேண்டும்? நீங்கள் எப்படிப்பட்ட மனைவியை எதிர்பார்க்கிறீர்கள்? என்பதுதான். எல்லோருக்கும் இப்படியான எதிர்பார்ப்பு இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவரவரின் மனநிலை. அவ்வளவுதான். என் கணவரை நானே தேர்ந்தெடுத்தேன்.
குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும். குழந்தை வளர்ப்பு, செவிலியர் பணிக்குச் செல்வதில் சிக்கல். இனி கனவென்பது உறக்கத்தில் மட்டுமேயென உணர்ந்த வலிமிகுந்த தருணம். கனவுகள் உடைந்து சில்லுசில்லாய் நொறுங்கும்போது ஏற்றுக்கொள்ள முடியாமல், அதன் ஒரு சில்லை கையில் வைத்து முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்து, இயலாமையில் ஓவென்று கதறி ரௌத்ர வெளியில் நிற்கப் பழகுவோமே… அதுதான் என்னையும் தாங்கிப் பிடித்தது. குடும்பம் என்கிற கூட்டுச் செங்கற்களால் கட்டமைக்கப்பட்டது சமுதாயம்.
அதை உடைத்து அன்னியமாக கனவு காணும் சாத்தியம் இருப்பதில்லை. லட்சியத்திற்கு இணையாக அல்லது மாற்றாக மற்றொன்று பயணப்படும். நுட்பமாகப் பரிசோதித்தால் அதை எல்லோராலும் உணரமுடியும். பள்ளிப் பருவத்தில் இருந்தே தமிழின் மீது ஆர்வமும் வாசிப்பு பழக்கமும் இருந்தது. கனவில் வரும் கனவுகளை ரசிக்கப் பழக்கியது கடந்த கால அனுபவங்கள். யதார்த்தத்தை நினைவுகளாக்கி என்னை நிரூபிக்கும் ஆயுதமாக தாய்மொழியை கையிலெடுத்தேன். மீண்டும் இளங்கலையில் தொடங்கிய படிப்பு, பல்வேறு தடைகளைக் கடந்து முனைவராக உயர்த்தியது.
சொல்லப்போனால், புகுந்த இடத்தின் கனவிது. வியக்கிறார்கள். நினைத்ததை சாதித்ததாகக் கொண்டாடுகிறார்கள். நானோ இதுதான் லட்சியமாக இருக்குமோ என்ற சந்தேகத்தோடு சமரசப்பட்டுக் கொள்கிறேன். ஒரு பெண் தன் குடும்பத்தின் மேன்மைக்காக லட்சியத்தையும் தகவமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மருத்துவராக அல்லது செவிலியராக முடியாவிட்டால் என்ன? மனித நேயமும் வாஞ்சையும் குறையப்போவதில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய அரசுப்பணியில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
அத்துடன், மருத்துவம் சாராத மக்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் நோய்கள் குறித்த விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதுகிறேன். அந்த திருப்தி போதுமானதாக இருக்கிறது. சமூக அவலங்களைக் கண்டு கொந்தளிக்கும் மனநிலையை உருவாக்கியது, நிறைவேறாத என் கனவுகளாக இருக்கக்கூடும். ரௌத்ரம் என்பது உச்சபட்ச சகிப்புத் தன்மையின் வெடிப்பு. நிறைவேறும் கனவுகள் பெரும்பாலும் மடைமாற்றப்பட்ட ஒன்றுதான். பெண் முன்னேற்றங்கள் குறித்து எந்தெந்த மொழிகளில் எத்தனை புத்தகங்கள் எழுதினாலும் இதுதான் உண்மை.
ஆழ்மனம் கனவுகளின் திரட்சி. ஆழ்ந்த உறக்கத்தில் இன்றைக்கும் அனல் பறக்க, அதிவேகத்தில் பைக் ஓட்டுகிறேன். திடீரென்று மலை உச்சியிலிருந்து சறுக்கி பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தில் வீழ்கிறேன். செவிலியரின் வெள்ளைச் சீருடையில் என் பேராசிரியர் தனலெட்சுமி வகுப்பெடுக்கிறார். விழிக்கும்போது மனம் வலிக்கிறது. பழைய தோழிகளின் நினைவுகள் படபடக்கிறது. அன்று முழுக்க அலைபேசியில் அவர்களோடு பேசுகிறேன். மெல்ல மெல்ல நினைவுகள் நீர்க்கின்றன.
பெண்ணாகப் பிறந்தவளுக்கு பிறந்த வீடு, புகுந்த வீடாக கனவுகளும் இரண்டு மனப்பெட்டிகளாக பூட்டிக்கிடக்கின்றன. அவள் காணக் காத்திருக்கும் கனவு வேறு. காணுகின்ற கனவு வேறு. பயந்து காணாமல் இருப்பதைவிட, கண்டடைய முயற்சிக்க வேண்டும். மோதிப் பார்ப்போம். உடைவது பாறையாகவும் இருக்கலாம். தீரத் தீர அடங்காத வயிறாக, புசிக்கப் புசிக்க கனவு பசிக்கும். பசிக்கவிடுங்கள். தேடல் வெறி ஏறும். வாழ்க்கை வலிய வசப்படும்”
Average Rating