‘பிச்சை வேண்டும்; நாயைப்பிடி’!!(கட்டுரை)

Read Time:13 Minute, 8 Second

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிவு; கருணா இலண்டனில் கைது; பிள்ளையான் தரப்பின் ஆதிக்கம்; கிழக்கு மாகாணம் பிரிப்பு; சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சர்……. இவையெல்லாம் நடந்து முடிந்ததுக்குப் பிறகு, தற்போது கிழக்கு மாகாண சபைக்கான மூன்றாவது தேர்தல் நடைபெறவிருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில், தமிழ் அரசியல் கட்சிகள் பிரிந்து தேர்தலில் போட்டியிட்டால், தமிழ் முதலமைச்சர் பதவி பறிபோகும் என்கிற கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

உள்ளூராட்சித் தேர்தலின் போது, வீதியால் போனவரையும் பிடித்துப் போட்டியிட வைத்த நிலைமை இருந்தது.

மாகாணசபைத் தேர்தலிலும், புதிய முறையில் தேர்தல் நடைபெற்றால், அனேகமான அரசியல்வாதிகளுக்கு பிரச்சினைதான். புதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்வாங்கப்பட்ட பட்டியல் தயாரிக்கப்பட வேண்டியதுடன், குறித்த தொகுதிகளுக்குள் நிரந்தரமாக வாழ்பவர்கள்தான் அந்தத் தொகுதியில் போட்டியிட முடியும் என்றவாறான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அரசியல்வாதிகளுக்கு தடைதாண்டிய ஓட்டப்போட்டியாகத்தான் இருக்கப்போகின்றது.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் 40 சதவீதம் அளவில்தான் தமிழர்கள் வாழ்கின்றார்கள். இவர்களைப் பொறுத்தவரையில், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய தேர்தல்களில் 20 முதல் 25 சதவீதத்துக்கு உட்பட்ட அளவிலேயே வாக்களித்து பழக்கப்பட்டவர்கள். ஆனால், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டது என்று சொல்லிக்கொள்ளலாம்.

இறுதியாகக் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையில் 37 மொத்த உறுப்பினர்களில், 12 தமிழ் உறுப்பினர்கள், 15 முஸ்லிம் உறுப்பினர்கள், 10 சிங்கள உறுப்பினர்கள் என அங்கம் வகித்தனர். 2016 – 2017ஆம் ஆண்டுகளில், மாகாண சபை உறுப்பினர் நாடாளுமன்றத்துக்குச் சென்றதாலும், இராஜினாமாச் செய்ததாலும், இறுதிக் கட்டத்தில் இரண்டு தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். அதனால், 14 ஆனது.

தமிழர்கள் தேர்தலில் பிரிந்து நின்று போட்டியிடுகின்ற பட்சத்தில், கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் குறைந்து, ஏனைய முஸ்லிம், சிங்கள உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் அதிகமாகும் என்பதைத் தமிழ்த் தலைமைகள் மறந்துவிடக் கூடாது.

குறிப்பாக, கிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள், கடந்த 30 வருட யுத்த கால கட்டத்தில், அரசியல் அதிகாரமின்றியும் ஏனைய இனங்களின் இனவாதப் பார்வைகளால் பாதிக்கப்பட்டும், விரக்தி அடைந்தும், துவண்டு கிடக்கிறார்கள். இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள், தமிழர் ஒருவரை முதலமைச்சராகக் கொண்டு வரவேண்டும் என்பதே மனச்சாட்சியுடன் சிந்திக்கும் ஒருவரின் நியாயமாகும்.

ஆனால், இத்தகைய நிலையை அடைவதற்கு, கிழக்கில் வாழும் அனைத்து மக்களும், அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் ஆத்மார்த்தமான தீர்மானத்துக்கு வரவேண்டும். அதுவே விட்டுக்கொடுப்புக்கும் ஜனநாயகத்துக்குமான ஒரு வெளியைத் தோற்றுவிக்கும்.

கட்சிகளுக்குள், தமிழ்த் தலைமைகளுக்குள் நடைமுறை ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் முரண்பாடுகள் இருக்கின்றமையால், காழ்ப்புணர்ச்சிகளும் எதிர்ப்புணர்வுகளும் பழிவாங்கல்களும் தமிழ்ப் பிரதிநிதித்துவங்களின் இழப்புக்கே கால்கோளாய் அமையும்.

கடந்த காலங்களில், அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதி இல்லாமல் போனது போல, கிழக்கு மாகாணத்திலும் தமிழ் முதலமைச்சர் இல்லாமல் போகும் ஆபத்து உருவாகும்.

இந்த யதார்த்தமான சூழ்நிலையை உணர்ந்து, தமிழ்த் தலைமைகள், நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலுக்கான திட்டமிடலைக் கூட்டாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் இதன் முத்தாய்ப்பாய் இருக்கிறது.

இனப்பிரச்சினையின் தொடக்கப் புள்ளியே,சுயநிர்ணய உரிமை; அதிகாரப் பரவலாக்கம் ஆகும். அதிகாரங்களை இழப்பது உரிமைகளை இழப்பதற்க ஒப்பானதாகும். எனவே, அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில், கிழக்கில் தமிழர்களின் நலன் காக்கும் சக்திகளின் முன்வருகையும் ஒற்றுமையும் மிக முக்கியமானதாகும்.

அத்தோடு, அரசியல் அதிகாரம்தான் முக்கியம் என்பதற்காக, ஒற்றுமைக்குள் குழப்பங்களை மேற்கொள்ளும், அதிகாரத்துக்காக அடாவடித்தனம் செய்பவர்கள், எதை வேண்டுமானாலும் செய்வேன், எப்படியும் நடந்துகொள்வேன் என்பவர்கள், அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பது சிறப்பாக இருக்கும்.
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில், பல இடங்களில் தனித் தமிழ் பகுதிகளைத் தவிர, ஏனைய சில இடங்களில், தமிழர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போயிருக்கிறது. இது தமிழ்த் தலைமைகளின் பலவீனங்களால் விளைந்த நிலைமையாகும் என்பதே மக்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது.

இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலில், தமிழ்க்கட்சிகள் பிரிந்துநின்று போட்டியிடுவார்களேயானால், குறிப்பாக திருகோணமலை, அம்பாறை, மாவட்டங்களில், மூன்று மாகாண சபைப் பிரதிநிதிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்க் கட்சிகள், பல்வேறுபட்ட கொள்கைகளை உடையவைகளாகச் செயற்பட்டு வருகின்றன. தேசியக்கட்சிகள் எதிரும் புதிருமாக இரண்டு பிரிவுகளாகச் செயற்பட்டு வருகின்றன. அத்துடன் புதியபுதிய கட்சிகளும் கிழக்குக்குள் நுழைய முயன்று கொண்டிருக்கின்றன.

இந்த மூன்று பிரிவுகளுக்குள், தமிழ் கட்சிகள் பல பிரிவுகளாகச் செயற்படுவதோடு, அதிகாரப்பகிர்வு, வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் சில விடயங்களில் கொள்கை ரீதியாக முரண்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன.

‘கட்சி நலனே, எமது நலம்’ எனும் விடாப்பிடியில், கிழக்கு மாகாணத்திலுள்ள சில தமிழ்க் கட்சிகள் இருந்து வருவதும், இவர்களது தௌிவின்மைகள், உணர்வின்மைகள், கட்சிக் குழப்பங்கள் காரணமாக, கிழக்கு மாகாணத் தமிழ் பிரதிநிதித்தவத்தை இல்லாமல் செய்கின்ற அளவுக்கு, தமிழ்த் தலைமைகள் செயற்படுவதாகத்தான் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இத்தகைதொரு நிலைமையை இல்லாமல் செய்வதற்காகவே, கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கைகள், வேண்டுதல்கள், உந்துதல்கள் உருவாகியிருக்கின்றன.

“நாங்கள் ஒன்றுபடத் தயாரில்லை” என்று சொல்கின்றவர்கள் முன்வைக்கின்ற காரணங்கள் உப்புச்சப்பற்றவை; பெறுமானமற்றவை; திடசித்தமும் எதிர்கால நோக்கமும் இல்லாதவை என்றுதான் சொல்ல வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் எதிர்காலங்களில், ஒற்றுமையை வலியுறுத்திவரும் அமைப்புகளின் செயற்திட்டங்களில் வடிவமாற்றங்களும் பலதரப்பட்ட புதிய வியூகங்களும் உருவாகியாக வேண்டும். இது, தமிழ்த் தலைமைகள், தமிழரின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கின்ற செயற்திட்டமாகவே கொள்ளப்படவேண்டும் என்பதுதான் இப்போதைய அறைகூவலாகும்.

இந்த இடத்தில்தான், வட மாகாணத்தில் எடுக்கப்படுகின்ற எல்லா முடிவுகளும், கிழக்கு மாகாணத்துக்க ஏற்புடையதாக இல்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

இந்த வாதத்தை, எல்லோரும் ஏற்றுக் கொள்ளா விட்டாலும், குறிப்பிட்ட சிலர் ஏற்றுக் கொள்ளத்தான் செய்கின்றனர். ஆனால், அநேகர் இந்த விடயம் குறித்து, ‘பாசாங்கு நித்திரை’யில் காலம் கடத்துகின்றனர். இந்த நிலைமை மிகவும் மோசமானதாகும்.

அதேபோல், கிழக்கு மாகாணத்தில் எடுக்கப்படுகின்ற எல்லா முடிவுகளும், வடக்கு மாகாணத்துக்குப் பொருந்தாது என்பதையும் அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

யுத்த காலப்பகுதியில், கிழக்கு மாகாணம் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு இருந்தது என்பது அனைவருக்கும் ஏற்றுக்கொண்ட விடயமாகும். அதற்கு, அரசியல் ரீதியான அதிகாரங்களை அமுல்படுத்த முடியாமலும் போனமையும் பல பொருளாதாரப் பின்னடைவுகளை எதிர் கொண்டமையும் காரணமாகச் சொல்ல முடியும்.

அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் அதிகாரப் பலத்துடனும் ஒற்றுமையாக வாழ்வதற்கு, 40 சதவீதமாக உள்ள தமிழர்கள், தமிழ் முதலமைச்சர் ஒருவரை, உருவாக்க வேண்டும் என்பதுதான் தமிழச் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

வடக்கில் கட்சிகளுக்கிடையில் இருக்கின்ற முரண்பாடு காரணமாக, அங்கு தமிழர்களின் அரசியலில் பெரிதான பாதிப்புகள் ஏற்படப்போவதில்லை. ஆனால், கிழக்கில் முரண்பட்டால், அது தமிழர்களைக் கருவறுத்துவிடும் என்ற உண்மை, அநேக அரசியல்வாதிகளுக்குத் தெரிந்தாலும், அரசியல் இறுமாப்புக் கூத்துக்களே குறுக்கே நிற்கின்றன.

அரசியல் முரண்பாடுகளை மறந்து, தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்துக்காகவும் பொருளாதாரம், அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்காகவும் ஒன்றிணைந்து, தேர்தலில் போட்டியிடுவதற்கான ‘தேர்தல்கூட்டு’ அவசியமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாட்டு கேளு… தாளம் போடு…!!(மருத்துவம்)
Next post பரோட்டா சூரியே இவருகிட்ட ட்ரைனிங் எடுக்கணும் போல !(வீடியோ)