வானவில் சந்தை!!(மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 6 Second

எனது தொழில் பங்காளி 2008ல் அப்போது பிரபலமாயிருந்த டிவிஎஸ் அப்பாச்சே மோட்டார் சைக்கிளை வாங்கினார். அவர் ஒரு மோட்டார் சைக்கிள் காதலர். அதை அவர் அப்போது நீண்ட தூரப் பயணங்களுக்கெல்லாம் பயன்படுத்தினார். நன்றாகவே மோட்டார் சைக்கிளைக் கையாளக் கூடியவர்தான். ஒரு நாள் விபத்தில் மாட்டிக்கொண்டார். கீழே விழுந்த தருணத்திலிருந்து வீட்டிற்கு போய்ச் சேர்ந்தது வரை என்ன நடந்தது என்றே அவருக்குத் தெரியவில்லை. வீட்டிற்குப் போய்ச் சேர்ந்த பிறகுதான் வலது கால் முட்டியில் கடுமையான வீக்கம் இருந்ததைக் கண்டிருக்கிறார்.

கால் முட்டியில் சவ்வு கிழிந்து பல மாதங்கள் அவதிப்பட்டார். நல்ல வேளை அவர் தலையில் ஹெல்மெட் போட்டிருந்தார். அப்போது மதுரையில் ஹெல்மெட் அணிவது மிகவும் குறைவு. இவர் சென்னைவாசி என்பதால், சொந்த ஊரான மதுரையிலும் அதை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பிழைத்தார். ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, அதற்கான கடைசி தேதி அன்று, கடைகளில் கூட்டம் அலைமோதியது. பிரபலமான மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகக் கடைகளில் மக்கள், ‘எனக்கு ஒன்று கொடுங்கள்’, என்று பாய்ந்தார்கள்.

ஹெல்மெட்டைத் தலையில் அணிந்து பார்க்கவெல்லாம் அவகாசமில்லை. பலசரக்குக் கடைகளில் எல்லாம் ஹெல்மெட்டை விற்றார்கள். நமது உடலின் முதன்மை உறுப்பான மூளையை பாதுகாப்பதில் மக்களுக்கு இருக்கும் அக்கறை சற்றுக் குறைவுதான். இரண்டு லட்சம் விலையில் மோட்டார் சைக்கிள் வாங்கும் இளைஞர்கள் கூட மிகச் சாதாரணமான, தரம் குறைந்த ஹெல்மெட்டுகளை அணிந்திருப்பதை இங்கே பார்க்கமுடியும்.

பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றும் ஹெல்மெட் அவ்வளவு சாதாரணமானதல்ல. உடலின் வேறெந்த உறுப்புகள் விபத்தில் பாதிக்கப்பட்டாலும் மாற்று உண்டு. தலைக்குள் இருக்கும் மூளைக்கு என்ன செய்வது? ஹெல்மெட்டின் முதன்மையான பணி, விபத்தின்போது கழுத்துக்கு மேலிருக்கும் தலையை (காது, கண்கள், மூக்கு, வாய் மற்றும் உள்ளிருக்கும் மூளை) பாதுகாப்பதே. ஒரு நல்ல, தரமான ஹெல்மெட் இவற்றைப் பாதுகாப்பதில் கூடுதல் பாங்காற்றுகிறது. பொதுவாக, ஹெல்மெட் மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்கிறது.

வெளிப்புற ஓடு. இது பெரும்பாலும் உறுதியான பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டிருக்கும். விலை உயர்ந்த ஹெல்மெட்டுகளில் கெவ்லார், கார்பன் ஃபைபர் போன்றவை பயன்படுத்தப்படும். கீழே விழுந்தவுடன் ஏற்படும் உராய்வு, கடினமான தரையின் பாதிப்பு ஆகியவற்றை இந்த கடினமான ஓடு தடுக்கும். இரண்டாவது அடுக்கு நொறுங்கக்கூடிய தெர்மகோல் (Thermacol) அடுக்கு. தலைக்கும் வெளிப்புற ஓட்டிற்கும் இடையில் இருந்து, அதிர்ச்சியைத் தாங்கி நொறுங்கும் தன்மை கொண்டது. மூன்றாவது, ஃபோமினால் (Foam) ஆன ஒரு அடுக்கு.

தலை மற்றும் முகத்தின் வசதிக்கென ஒரு மென்மையான அடுக்கு. அத்தோடு, ஹெல்மெட்டை தலையிலிருந்து தெறித்து விடாமல் இருத்தி வைக்கும், நாடியில் கட்டப்படும் ஒரு வார். இவையே ஒரு ஹெல்மெட்டின் அடிப்படைக் கட்டமைப்பு. இவற்றின் தரம் நமது தலையின் பாதுகாப்போடு நேரடித் தொடர்பு கொண்டது. மூன்று அடிப்படையான வடிவ அமைப்பில் ஹெல்மெட்டுகள் கிடைக்கின்றன. ஒன்று, முழு தலையையும் பாதுகாக்கும் ஹெல்மெட். இவையே முழு பாதுகாப்பைக் கொடுக்கும். இரண்டு, முகத்தை விட்டு விட்டுத் தலையை மட்டும் பாதுகாக்கும் ஹெல்மெட்.

இது முழுமையான பாதுகாப்பைத் தராது. விபத்தின் போது முகம் திறந்து இருப்பதால் பாதிப்பிற்குள்ளாகும் வாய்ப்பு அதிகம். மூன்று, அரை ஹெல்மெட். உச்சந்தலையை மட்டும் பாதுகாப்பது. ஒரு தொப்பி போல. இது மிகப்பழைய வடிவம். போர் வீரர்கள் உலகப் போரின் போது பயன்படுத்திய வடிவம். இதை சைக்கிள் ஓட்ட வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளலாம். இது போக, மோட்டார்சைக்கிள் பந்தயங்களில் பயன்படுத்தப்படுபவை, சாகச விளையாட்டுகளில் பயன்படுத்துபவை என குறிப்பிட்ட பயன்பாடு சார்ந்தும் ஹெல்மெட்டுகள் இருக்கின்றன.

இங்கு விற்பனையாகும் சில முக்கியமான நல்ல பிராண்டுகளைக் காணலாம். வேகா (Vega) இந்தியாவில் மிகவும் பிரபலமான பிராண்ட். வெறும் தொள்ளாயிரம் ரூபாயிலிருந்து நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் வரையிலான விலையில் இந்த பிராண்ட் ஹெல்மெட்டுகள் கிடைக்கின்றன. பரவலாக எல்லா ஊர்களிலும் இவை கிடைக்கும். ஸ்டட்ஸ் (Studds) அறுநூறு ரூபாயிலிருந்து நான்காயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கிறது இந்த நிறுவனத்தின் ஹெல்மெட்டுகள்.

ஸ்டீல்பேர்டு (Steelbird) எழுநூறு ரூபாயிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்டுகள். மிகப் பரவலாக கிடைக்கக்கூடிய பிரபலமான பிராண்டு இது. இங்கே கிடைக்கக்கூடிய உலகத்தரமான சில பிராண்டுகள் பற்றியும் நாம் பார்க்கலாம். ஷோய் (Shoei) ஜப்பானிய நிறுவனமான ஷோய் உலகத்தரமான ஹெல்மெட்களுக்கு புகழ் பெற்றது. முப்பத்தைந்தாயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேலேயும் இந்த ஹெல்மெட்டுகள் இங்கு கிடைக்கின்றன.

சிறிய நகரங்களில் அல்லாது பெரு நகரங்களில் மட்டுமே இவற்றை வாங்க முடியும். அமேசான் போன்ற தளங்கள் மூலம் வாங்கலாம் என்றாலும், ஒரு ஹெல்மெட்டை அப்படி வாங்குவது உசிதமல்ல. ஒரு வேளை உங்களுக்கு பிராண்டும் அளவும் பரிச்சயம் இருந்தால் அமேசான் போன்ற இணையதளங்கள் வழி வாங்கலாம். பெல் (Bell) அமெரிக்க நிறுவனமான பெல் பந்தயங்களிலும் சாகச விளையாட்டுகளிலும் பயன்படுத்தப்படும் ஹெல்மெட்டுகள் தயாரிப்பதில் புகழ்பெற்றவை.

பதினைந்தாயிரம் ரூபாயிலிருந்து தொண்ணூறாயிரம் விலை வரை சந்தையில் கிடைக்கின்றன இந்த ஹெல்மெட்டுகள். அராய் (Arai) உலகப் புகழ்பெற்ற தரமான ஹெல்மெட்டுகளைத் தயாரிக்கும் அராய் ஒரு ஜப்பானிய நிறுவனம். அதி உயர் தொழில்நுட்பமும் ஆராய்ச்சியும் இவற்றின் உருவாக்கத்தில் பங்குவகிக்கின்றன. மிகச்சிறந்த தரமான பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. மூவாயிரத்து ஐநூறு ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான விலையில் இவை விற்கப்படுகின்றன. ஐ.எஸ்.ஐ. தரச்சான்றிதழ் பெற்றிருக்கிறதா என்பதைத் தாண்டி, ஒரு ஹெல்மெட் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை இவை.

* குறைந்த எடை கொண்டிருக்க வேண்டும்.
* வசதியான வடிவம்
* தரமான கட்டுமானம்
* தலையில் கச்சிதமாகப் பொருந்த வேண்டும்
* தலை சூடாகிவிடாமல் காற்றோட்டமாக இருக்க வேண்டும்.

பெண்கள் இப்போது பெரிய மோட்டார் சைக்கிள்களில் நீண்ட தூரப் பயணம் செய்வது நிறைய நடக்கிறது. அப்படிச் செய்யாத பெண்களும், தங்களது ஸ்கூட்டரில் செல்வதற்கென ஒரு தரமான ஹெல்மெட்டில் முதலீடு செய்யவேண்டியது அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ!!
Next post ஆறுவேளை சாப்பிடுங்கள்…காபி, பால் பருகுங்கள் ! நீரிழிவைக் கட்டுப்படுத்த சூப்பர் பிளான்!!(மருத்துவம்)