பெண்களை பாதிக்கும் நோய்கள்!!(மகளிர் பக்கம்)
ஆண், பெண் எல்லாருக்கும் நோய் பாதிப்புகள் ஏற்படும். ஆனால் பெண்களை அதிகமாக தாக்கும் நோய்கள் என்று சில உண்டு. காரணம், பெண்களின் ஹார்மோன்கள், உடல் அமைப்பு அப்படி. இந்த நோய்களை பற்றி நமக்கு விளக்குகிறார் மருத்துவர் திலோத்தம்மாள். “குறிப்பாக வயதான பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் நோய்களில் ஒன்று ஆஸ்டியோபோரோஸிஸ். எலும்புத் தேய்மானம் என்பது, வயதான காலத்தில் ஏற்படும் இயல்பான ஒன்று.
சிலருக்கு ஓர் அளவிற்கு மேல் எலும்பு பலவீனமடைந்துவிடும். லேசாக விழுந்தால் எலும்புகள் உடையும் ஆபத்து இருக்கும். அதைத்தான் ஆஸ்டியோ போரோஸிஸ் என்கிறோம். ஆண், பெண் இருவருக்குமே இந்தப் பிரச்னை ஏற்படலாம். ஆனால் வயதான எல்லாருக்கும் ஏற்படும் என்று சொல்ல முடியாது. பெண்களுக்கு ஆண்களை விட எலும்பு மெல்லியதாக இருக்கும். மெனோபாஸ் காலகட்டத்திற்குப் பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைய ஆரம்பிப்பதால் பெண்களின் எலும்பில் நிறைய தேய்மானம் ஏற்படும்.
பெரும்பாலும் எண்பது சதவிகித வயதான பெண்களுக்கு ஆஸ்டியோபேரோஸிஸ் பிரச்னை இருக்கிறது. எலும்பு பலவீனமாகும் போது உடலில் பலவிதமான வலிகள் ஏற்படும். விழுந்தால் எலும்புகள் உடைந்து போகும். பெரும்பாலும் மணிக்கட்டு மற்றும் இடுப்பெலும்புகள் மிகவும் மெல்லியதாக இருப்பதால் பெண்களுக்கு அந்த எலும்புகள் உடையும் அபாயம் அதிகம். இடுப்பெலும்பு உடைந்து அதனால் படுத்த படுக்கையாகி மரணத்தை எதிர்கொள்பவர்கள் அதிகம். இந்தப் பிரச்சனையை எப்படி கையாள்வது?
ஆஸ்டியோபோரோஸிஸை கட்டுப்படுத்த முடியுமா?
புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் அதீதமான குடி பழக்கத்தைத் தவிர்த்தல். ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் ஓடி ஆடி வேலை செய்வது. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்தல். கால்சியம் மற்றும் வைட்டமின்டி நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளுதல். ஆஸ்துமாவிற்காக எடுத்துக்கொள்ளும் மருந்து எலும்புத் தேய்மானத்தை ஏற்படுத்தும்.
எனவே ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருத்தல். சாப்பிடாமல் இருக்கக் கூடாது. முறையான சாப்பாட்டு பழக்கமின்மையை மாற்றுதல். ஸ்டீராய்டு மருந்துகள் உட்கொள்ளும் போது எலும்புத் தேய்மானம் ஏற்பட அதிகம் வழி உண்டு. அதனால் ஸ்டீராய்டு மருந்துகள் தேவையில்லாத போது தவிர்த்தல் போன்றவற்றால் ஆஸ்டியோபோரோஸிஸை தவிர்க்கலாம்.
கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுப் பொருட்கள்
பால் உணவுகள்
கால்சியம் எலும்பிற்கு அடிப்படையான ஒன்று. 50 வயது வரை உள்ளவர்களுக்கு 1000 மில்லிகிராம் வரை தினமும் தேவைப்படுகிறது. 51 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு 1200 மில்லிகிராம் கால்சியம் வரை தேவைப்படுகிறது. கால்சியம் உள்ள உணவுப்பொருட்களில் முக்கியமானது பால்.
யோகார்ட் மற்றும் வெண்ணெய்
பால் குடிப்பதில் விருப்பமில்லாதவரா? அதற்குப் பதிலாக யோகார்ட் சாப்பிடலாம். அல்லது அதற்குப் பதிலாக சீஸ் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம். லாக்டோஸ் இன்டாலரன்ஸ் எனும் பிரச்னை உள்ளவர்கள் பாலை விரும்ப மாட்டார்கள். அவர்கள் லாக்டோஸ் குறைவாக இருக்கும் யோகார்ட் மற்றும் சீஸ் மற்றும் லாக்டோஸ் குறைவான பால் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். பால் மற்றும் பால் பொருட்களில் இருக்கும் லாக்டோஸ் கால்சியத்தை பாதிக்காது. முட்டையிலும் கால்சியம் இருக்கிறது.
கீரைகள்
பல பேர் அறிந்திராத ஒரு விஷயம் சில காய்கறிகளிலும் அதிகளவில் கால்சியம் இருக்கிறது. அடர் பச்சைக் கீரை வகைகள் மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும் கீரை வகைகளிலும் கால்சியம் சத்து மிகுந்துள்ளது. சைனீஷ் கேபேஜ் மற்றும் டர்னிப் கீரையிலும் அதிகளவில் கால்சியம் சத்து உள்ளது.
சோயா உணவுகள்
அரை கப் டோஃபூவில் 800 மில்லி கிராமுக்கும் அதிகமான கால்சியம் சத்து இருக்கிறது. மெனோபாஸுக்கு முந்தைய காலகட்டத்தில் எலும்பு தேய்மானத்தைத் தடுக்க சோயா மிகவும் உதவும்.
சால்மோன் மீன்
சால்மோன் மீன் மற்றும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள மீன்களில் எலும்பினை வலுப்படுத்தும் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்தும் அதிகமுள்ளது. மீன்களில் ஒமேகா 3 எனும் கொழுப்பு அமிலமும் உள்ளது. மீன் எண்ணெய் மாத்திரைகள் வயதானப் பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரேஸிஸ் பிரச்னையைக் குறைக்கிறது.
நட்ஸ்
நட்ஸ் மற்றும் விதைகள் எலும்பை உறுதியாக்க உதவுகின்றன. வால்நட் மற்றும் ஆலிவ் விதையில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் அதிகளவில் இருக்கிறது. வேர்க்கடலை மற்றும் பாதாமில் இருக்கும் பொட்டாசியம் சிறுநீரின் மூலமாக ஏற்படும் கால்சியம் இழப்பை தடுக்கிறது. நட்ஸ்களில் இருக்கும் புரதச் சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் பெருமளவில் எலும்பை உறுதியாக்க உதவுகின்றன.
சூரிய ஒளி
சூரிய ஒளியின் மூலம் உடம்பிற்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கும். வைட்டமின் டி சத்து தான் உணவிலுள்ள கால்சியம் சத்தை உடல் ஏற்றுக்கொள்ள உதவுகிறது.
உடற்பயிற்சி
ஆஸ்டியோபோரோஸிஸ் பிரச்னை உள்ளவர்களால் கடுமையான உடற்பயிற்சிகள் செய்ய முடியாது. ஏற்கனவே எலும்பு பிரச்னை உள்ளவர்களுக்கு அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். அதிகளவு ட்விஸ்ட்டிங் அல்லது குனிந்து நிமிர்தல் முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடும். அது போல் நீச்சல் மற்றும் சைக்கிளிங் போன்ற பயிற்சிகள் சிறந்த பயிற்சிகள் தான் என்றாலும் அவை எடை தாங்கும் உடற்பயிற்சியாக இல்லாததால் உடல் எடைக் குறைப்புக்கு அவை பயன்படலாமே தவிர எலும்பு உறுதிக்கு அவை பயன்படாது.
எடை தாங்கும் உடற்பயிற்சி எலும்பு வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் நல்லது. அதனால் எடை தாங்கும் உடற்பயிற்சியை தினமும் மேற்கொள்வது சிறந்தது. முடிந்த வரை சிறிய ஓட்டம் அல்லது வேகமான நடைப்பயிற்சி, டான்ஸ், யோகா அல்லது டென்னிஸ் போன்ற பயிற்சிகளை செய்யலாம். சின்ன சின்ன எடை தூக்கும் பயிற்சிகள் செய்யலாம். தொடர்ந்து ஏழு ஆண்டுகள் ஒரு மைல் தூரம் நடைப்பயிற்சி செய்து வந்த பெண்களின் எலும்புகள் உறுதியாவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உணவும் உடற்பயிற்சியும் சரியாக இல்லாத பட்சத்தில் எவ்வளவு தான் கால்சியம் சத்து எடுத்துக்கொண்டாலும் எலும்பில் அது சேராது.
உப்புச்சத்து
உப்பை அளவோடு பயன்படுத்த வேண்டும். உப்பை எந்த அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு கால்சியம் சத்து வீணாக சிறுநீரில் வெளியேறி விடும். அதனால் அளவோடு உப்பை பயன்படுத்தும் போது எலும்பை வலுவாக்கும். கால்சியத்தைப் பாதுகாக்கும். அதற்காக சுத்தமாக உப்பை தவிர்ப்பது வேறுவிதமான பிரச்னையில் கொண்டு விட்டுவிடும். சின்ன வயதில் நமக்கு எலும்புகள் வலுவாகத் தான் இருக்கும். நடுத்தர வயதை அடையும் போது எலும்புகள் பலவீனமாக ஆரம்பிக்கும். மெனோபாஸிக்குப் பிறகு பெண்களுக்கு எலும்புகள் உடையும் வாய்ப்புகள் அதிகம். எந்த ஒரு வயதிலும் சரியான உணவு நல்ல எலும்பு திடத்திற்கு உதவுகிறது.
ஆஸ்டியோபோரோஸிஸ் நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நிலை
பெண்களுக்கு பொதுவாக மெல்லியதான எலும்பு இருக்கும். மரபு வழியாக சிலருக்கு ஆஸ்டியோபோரோஸிஸ் வரும். வெள்ளைக்காரர்கள், ஆசியர்கள் போன்ற ஒரு சில இனங்களிலும் இந்த பிரச்னை அதிகமாக காணப்படுகிறது. ஆப்பிரிக்கன், அமெரிக்கன், ஹிஸ்பானிஸ் போன்றோருக்கும் கொஞ்சம் இந்தப் பிரச்னை இருக்கிறது. டைப் 1 சர்க்கரை நோய், ரூமடாய்டு ஆர்த்ரைடிஸ், குடல் அழற்சி நோய் மற்றும் ஹார்மோன் கோளாறு உள்ளவர்களுக்கு ஆஸ்டியோபோரோஸிஸ் ஏற்படுவதை தடுக்க முடியாது. குறிப்பிட்ட அந்த நோய்களுக்கு சிகிச்சை எடுப்பது ஆஸ்டியோபோரோஸிஸை கட்டுப்படுத்தலாம்.
ஆஸ்டியோபோரோஸிஸ் பாதிப்பு உள்ளவர்கள்
ஆஸ்டியோபோரோஸிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு எலும்பு பூஸ்ட் மாத்திரை களை மருத்துவரின் ஆலோசனை பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆஸ்டியோபோரோஸிஸ் உள்ளவர்கள் சுத்தமாக எதுவுமே செய்யாமலிருந்தால் மேலும் எலும்புகள் பலவீனமாகிவிடும். கொஞ்சமாக நடக்கவோ அல்லது தங்களால் முடிந்த சின்ன சின்ன வேலைகளை செய்ய வேண்டும். கைத்தடி போன்றவற்றை பயன்படுத்தியாவது கொஞ்சம் நடக்க வேண்டும்.
கூடுமானவரை விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விழுந்தால் எலும்புகள் உடைய அல்லது எலும்புகளில் கீறல் விழ வாய்ப்புண்டு. அவற்றைத் தவிர்க்க பாத்ரூமை ட்ரையாக வைத்திருக்க வேண்டும். பாசி படர்ந்திருந்தால், பாத்ரூம் வழவழப்பாக இருந்தால் விழுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். பாதுகாப்பான காலணிகளை அணிய வேண்டும். ஏதாவது ஆயின்மெண்டை தடவிக்கொண்டு ஈரமான பாத்ரூமில் நடப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
வயதானவர்கள் நடக்கும் போது எப்போதும் பொறுமையாக உஷாராக இருக்க வேண்டும். எலும்பு முறிவு ஏற்படாமல் பாதுகாப்பது உங்கள் எலும்பு உறுதிக்கு நல்லது. சின்ன வயதிலேயே போதுமான உடற்பயிற்சி, கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த சரியான உணவு, சரியான தூக்கம் போன்றவற்றை கொண்ட பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் வலுவான எலும்புகள் இருக்கும். அதனால் தான் சிறுவயதில் பிள்ளைகளை ஓடி ஆடி விளையாட விட வேண்டும்.
Average Rating