இந்திய சட்ட ஆணையகம் பரிந்துரை: கிரிக்கெட் சூதாட்டத்தை அனுமதிக்கும் சட்டம்?(கட்டுரை)
கிரிக்கெட் சூதாட்டம் (Betting)அனுமதிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றம் அதற்காகத் தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்’ என்று, இந்திய சட்ட ஆணையகத்தின் 276 பக்க அறிக்கையில், பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றது தொடர்பாக, பெரிய அளவில் செய்திகள் அடிபட்டு, இந்தியப் பொலிஸ், சூதாடியவர்களையும் தரகர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்தது. இதனால், கிரிக்கெட் வீரர்கள் பலரும், சர்ச்சைக்குள்ளான வரலாறு, கிரிக்கெட் சூதாட்டத்துக்கு உண்டு.
இப்படிப் பரபரப்புச் செய்திகளான கிரிக்கெட் சூதாட்டத்தை, அனுமதிக்கச் சட்டம் கொண்டு வரலாம் என்று, இந்திய சட்ட ஆணையகம் பரிந்துரை செய்திருப்பது, பலரது புருவங்களையும் உயர்த்தி இருக்கிறது.
இருந்தாலும், கறுப்புப் பணத்தை ஒழிக்க, கிரிக்கெட் சூதாட்டத்தைச் சட்டபூர்வமாக்குவது முறையானதே என்று, ஆணையகம் கருத்துத் தெரிவிப்பதைப் பலரும் ஏற்கும் நிலை உள்ளது.
ஆணையகத்தின் அறிக்கையில், ‘சூதாட்டம், பொது ஒழுக்கத்துக்குக் கேடு விளைவிக்கும் செயல்’ என்பதிலிருந்து, விடுபட்டு வரவே, நீண்ட போராட்டத்தை சட்ட ஆணையகத்தின் தலைவர் சவுகான் நடத்தியிருக்கிறார்.
‘பொது ஒழுக்கம்’ என்ற ஒரு நேர் கோட்டில், இந்தச் சூதாட்ட விவகாரத்தை பார்க்க இயலாது என்பதற்கு ஆதரவாக, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், சூதாட்டங்களுக்காக உள்ள சட்டங்களையும் இந்தியாவுக்குள் உள்ள சூதாட்டம் தொடர்பான பல்வேறு சட்டங்களையும் பகுத்து ஆராய்ந்திருக்கிறார் சட்ட ஆணையகத்தின் தலைவர் சவுகான்.
ஏன், தேசிய விளையாட்டு ஒழுக்கவியல் ஆணைக்குழு குறித்த சட்டமூலம், 2016இல் நாடாளுமன்ற உறுப்பினர் அநுராக் சிங் தாக்கூரால், தனிநபர் சட்டமூலமாகக் கையளிக்கப்பட்டு, அது இன்னும் விவாதத்துக்கு எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதையும் சவுகான் சுட்டிக்காட்டியிருந்தார்.
டெல்லியில் சூதாட்டம் பற்றிப் பதிவு செய்யப்பட்ட 2,800க்கும் மேற்பட்ட வழக்குகளை அடையாளம் கண்டு, டெல்லியில் மாதம் தோறும் சராசரியாக, 104 சூதாட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன என்ற தகவல்களையும் சவுகான் தனது அறிக்கையில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
இவை அனைத்தும், பொது ஒழுக்கம் என்ற ஒரே காரணத்தை வைத்துச் சூதாட்டத்தை முற்றிலும் தடை செய்துவிட முடியாது என்ற நிலையை வலியுறுத்தவே, இங்கு கையாளப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, இந்தியாவில் சூதாட்டத்தில் புரளும் பணம் பற்றிச் சட்ட ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விடயம் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. சூதாட்டச் சந்தையில் மூன்று இலட்சம் கோடி இந்திய ரூபாய்கள் புழக்கத்தில் இருப்பதாகக் கூறி, அரசாங்கத்துக்கு வரவேண்டிய வரி வருமானம், எப்படிக் கறுப்புப் பணமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதை, மறைமுகமாக எச்சரித்திருக்கிறார் இந்திய சட்ட ஆணையகத்தின் தலைவர் சவுகான்.
அதிலும், இந்தியக் கிரிக்கெட் அணி பங்கேற்கும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், சூதாட்டம் கொடி கட்டிப் பறக்கிறது என்று, தனது அறிக்கையில் பட்டவர்த்தனமாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய அணி பங்கேற்கும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 13,000 மில்லியன் இந்திய ரூபாய்கள் அளவுக்குச் சூதாட்டம் நடைபெறுவதாக சட்ட ஆணையகம் தெரிவித்திருக்கிறது.
அதன் அடிப்படையில், ஒரு கணக்கைப் போட்டு, இந்தியக் கிரிக்கெட் அணி பங்கேற்ற 21 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மட்டும், 273,000 மில்லியன் இந்திய ரூபாய்கள் அளவுக்குக் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாகவும் இந்திய சட்ட ஆணையகம், சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி வெளியிட்டிருக்கிறது.
பொது ஒழுக்கம், சமூக ஒழுக்கம் என்பதை மட்டும் மனதில் வைத்து, கிரிக்கெட் சூதாட்டத்தை அனுமதிக்கும் சட்டத்தைக் கொண்டு வராமல் இருக்க முடியாது என்பதற்கு, இந்தியச் சட்ட ஆணையகம், பல்வேறு அடுக்கடுக்கான ஆதாரங்களைத் தனது அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சட்ட ஆணையகத்தின் அறிக்கை, ஏதோ திடீரென்று வெளிவந்தது அல்ல; இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து, கிரிக்கெட் வீரர்களின் வாழ்வில் புயல் வீசிய காலத்தில், முட்ஹல் ஆணைக்குழு அமைக்கப்பட்டது.
அந்த ஆணைக்குழு, இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு, சச்சின் டென்டுல்கர், கபில் தேவ் போன்ற மூத்த கிரிக்கெட் வீரர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என்றும், விளையாட்டில் நடைபெறும் சூதாட்டத்தை கண்டுபிடிக்க பொலிஸாரிடத்தில் போதிய தொழில் நுட்பங்கள் இல்லை என்றும், இந்திய கிரிக்கெட் சபையிடமும் சூதாட்டத்தைத் தடுக்கப் போதிய வழிமுறைகள் இல்லாமல் இருக்கிறன என்றும் சில பரிந்துரைகளை முன்வைத்து, கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய விவாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதன் பிறகு ஏற்படுத்தப்பட்ட ‘லோதா ஆணைக்குழு’, கிரிக்கெட் சூதாட்டத்துக்கு சட்டம் கொண்டு வர வேண்டும்; ஆட்ட நிர்ணயம் (Match Fixing) குற்றவியல் குற்றமாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
இந்த ஆணைக்குழுகளின் அறிக்கையின் பலனாகவே, இந்திய உச்சநீதிமன்றம் ஜூலை 2017 மாதம், கிரிக்கெட் சூதாட்டம் பற்றி ஆய்வு செய்யுமாறு, இந்திய சட்ட ஆணையகத்துக்கு அறிவுறுத்தியது.
அதன்படி, இந்திய சட்ட ஆணையகத்தின் தலைவராக இருக்கும் பி.எஸ் சவுகான், தனது 276 பக்க அறிக்கையை, ஓராண்டு நிறைவு பெறும் இந்த நேரத்தில், தாக்கல் செய்திருக்கிறார். கிரிக்கெட் சூதாட்டத்தை அனுமதித்து, நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று, அந்தப் பரிந்துரையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சமுதாயத்தில் இப்படி பரிந்துரைப்பது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகும் என்பதாலோ என்னவோ, தனது பரிந்துரைக்கு ஆதாரமாக, வரலாற்றுக் காலம் முதற்கொண்டே சூதாட்டம் இருந்தது என்பதைத் தெளிவுபடுத்தப் பல்வேறு புராண காலத்து ஆதாரங்களை அடுக்கியிருக்கிறார்.
இராமாயணம், மகாபாரதம், ரிக் வேதம், அதர்வ வேதம், மனு சாஸ்திரம், நாரதர் சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம் போன்றவற்றில் எல்லாம், சூதாட்டம் பற்றி இடம் பெற்றுள்ள விவரங்களைச் சுட்டிக்காட்டி இருக்கிறது சட்ட ஆணையகம்.
இப்போது சட்ட ஆணையகம் கூறியிருப்பதில், ஒன்றே ஒன்று மீண்டும், மத்திய- மாநில உறவுகள் தொடர்புடையது. சூதாட்டம் பற்றிய அதிகாரம் மாநிலங்களுக்கும் இருக்கிறது. மத்தியில் நாடாளுமன்றத்துக்கும் இருக்கிறது.
இப்போதைக்குச் சூதாட்டத்தை அனுமதிக்கும் இந்தச் சட்டத்தை, நாடாளுமன்றம் கொண்டு வரலாம் என்றும் அதை விரும்பும் மாநிலங்கள், தங்கள் மாநிலத்தில் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் ஆணையகம் கூறுகிறது.
ஆகவே, நாடாளுமன்றத்தின் வாயிலாக, மத்திய அரசாங்கம் கொண்டு வரும் கிரிக்கெட் சூதாட்டத்தை அனுமதிக்கும் சட்டத்துக்கு மாநிலங்கள் ஆதரவு அளிக்குமா, எந்தெந்த மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளும் என்பது இனிமேல் புதிய விவாதமாகப் புறப்படும்.
சட்ட ஆணையகத்திடம் கருத்துத் தெரிவித்த பலரில், ஒரிஸா மாநிலம் மட்டுமே சூதாட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்திருக்கிறது. ஆனாலும், அகில இந்திய அளவில் கிரிக்கெட் சூதாட்டத்தை அனுமதிக்கும் சட்டம் கொண்டு வரும்போது, மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பே அதிகம்.
கிரிக்கெட் சூதாட்டம் எப்படி நடக்க வேண்டும் என்பதையும் இந்திய சட்ட ஆணையகம் எடுத்துரைத்திருக்கிறது. ‘பேன் கார்ட்’ , ‘ஆதார் கார்டுடன்’ இணைக்கப்பட்ட கிரிக்கெட் சூதாட்டமாக இருக்க வேண்டும் என்று சட்ட ஆணையகம் வலியுறுத்தியிருக்கிறது.
இதன் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுத்தப்படும் அத்தனை மில்லியன் ரூபாய் பணமும் வருமான வரி விதிப்புக்குள்ளும் அரசாங்கத்தின் வருவாய்க்குப் பாதகம் இல்லாமலும் அமையும் என்பது சட்ட ஆணையகத்தின் எதிர்பார்ப்பு.
கறுப்புப் பணத்தை ஒழிக்க, கிரிக்கெட் சூதாட்டத்தை அனுமதிப்பது நல்லது என்ற சட்ட ஆணையகத்தின் பரிந்துரையைப் புறந்தள்ளி விட முடியாது. சூதாட்டத்தில் மூன்று இலட்சம் கோடி இந்திய ரூபாய்கள் கறுப்புப் பணம் புழங்குகிறது என்பதும் இந்திய அணி பங்கேற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 13,000 மில்லியன் இந்திய ரூபாய்களுக்கு சூதாட்டம் நடக்கிறது என்பதும் முக்கியமானவையாகும்.
ஒன்-லைன் கிரிக்கெட் சூதாட்டத்தையும் சூதாட்டங்களையும் சட்ட பூர்வமாக்கும் இந்தியச் சட்ட ஆணையகத்தின் பரிந்துரை, நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வந்திருக்கிறது. ‘பொது ஒழுக்கம்’ என்பதைத் தனது முக்கிய முழக்கமாக வைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி, அரசாங்கம் மத்திய ஆட்சியில் இருக்கின்ற இந்த நேரத்தில், சூதாட்டத்தை சட்டமாக்கவும் கிரிக்கெட் சூதாட்டத்தை அனுமதிக்கவும் உடனடியாகச் சட்டம் கொண்டு வருமா?
மகாபாரதத்திலோ, இராமாயணத்திலோ ‘சூதாட்டம்’ நடைபெற்றது என்பதற்காகச் சூதாட்டத்தை, சட்ட பூர்வமாக்கி விட முடியுமா? அப்படியானதொரு நிலை ஏற்பட்டால், மில்லியன் கணக்கான இரசிகர்கள் இரசிக்கும் கிரிக்கெட் போட்டிகள் மீதான ஆர்வத்தில், பாதிப்பை ஏற்படுத்துமா?
‘போட்டி நிர்ணயம் நடக்கலாம்’ என்ற சந்தேகத்துடன் கிரிக்கெட்டைக் கண்டு இரசிக்கும் இரசிகர்கள், ‘சூதாட்டம் நிச்சயமாக இருக்கும்’ என்ற நிலை உருவானால், அந்நிலையை எவ்வாறு ஏற்பார்கள்? இவை எல்லாம் இனி வரப் போகும் கேள்விகள்.
Average Rating