விஜயகலாவும் விடுதலைப் புலிகளும்!!
வடக்கில் தலைவிரித்தாடும் வன்முறைச் சம்பவங்களும் சமூக விரோதச் செயல்களும் இப்போது தேசிய அரசியலிலும் பரபரப்பைத் தோற்றுவித்திருக்கின்ற விடயங்களாக மாறியிருக்கின்றன.
வடக்கில், விடுதலைப் புலிகளின் காலத்தில், தமிழ் மக்கள் நிம்மதியோடு இருந்த சூழலை நினைவுபடுத்தி, இப்போதுள்ள நிலையை எண்ணி, வருத்தம் கொள்வோரே அதிகம்.
வடக்கில் பெருகிவிட்ட போதைப்பொருள் பயன்பாடு, வாள்வெட்டுகள், பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், கொள்ளைகள் என்பன, இங்குள்ள மக்களைப் பல்வேறு வழிகளில் சிந்திக்கத் தூண்டியிருக்கின்றன.
அத்தகைய சிந்தனைகளுக்கு, அரசியல் பிரமுகர்களும் கூட விதிவிலக்காக இல்லை.
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் அரசாங்க நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது, விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டும் என்று வெளியிட்ட கருத்து அவ்வாறானதொன்று தான்.
அரசியல் நோக்கம் கருதியோ, ஆதங்கத்தின் வெளிப்பாடாகவோ அல்லது வாய் தடுமாறியோ- எத்தகைய காரணத்தை அவரோ அல்லது அவர் சார்ந்த கட்சியினரோ கூறினாலும் கூட, அவர் வெளியிட்ட கருத்து, அந்தக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்த பெரும்பாலானவர்களால் கைதட்டி வரவேற்கப்பட்டிருந்தது. அதற்காக, அரச அதிகாரிகளும் விசாரணையை எதிர்கொள்ளும் சூழலும் தோன்றியிருக்கிறது.
அதிலிருந்தே, இப்போதுள்ள சூழலில், குடாநாட்டில் உள்ள மக்கள், விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்ததைப் போன்ற நிலைக்காக ஏங்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
விஜயகலா மகேஸ்வரனின் அந்தக் கருத்து, கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. பொதுவாகவே, புலிப் பூச்சாண்டி காட்டிப் பிழைப்பு நடத்தப்படும் கொழும்பு அரசியலில், அவர்களின் வாய்க்கு, நல்ல தீனியாக வாய்த்திருக்கிறார் விஜயகலா மகேஸ்வரன்.
ஆனால், விஜயகலா மகேஸ்வரன், ஏன் இப்படியான கருத்தை வெளியிட்டார் என்பதை, ஆராய்ந்து பார்க்கக் கூடிய நிலையில், எந்தச் சிங்கள அரசியல்வாதியும் இல்லை.
வடக்கில் அதிகரித்திருக்கும் சமூக விரோதச் செயல்களும் வன்முறைகளும் தான், மீண்டும் விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களுக்கு ஞாபகப்படுத்தியிருக்கின்றன.
புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாகியும் அந்தக் காலத்தை ஒரு பொற்காலமாக நினைவுகூரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை, பிரிவினையைத் தூண்டுதல் என்றோ, ஈழக் கோரிக்கையை கையில் எடுக்கிறார்கள் என்றோ, தப்பான முறையில் வியாக்கியானப்படுத்தும் முயற்சிகள் தான் நடக்கின்றன.
போருக்குப் பின்னர், தமிழ் மக்களை நிரந்தரமாக, வாய்மூடி வைத்திருக்கச் செய்வதற்காக, வடக்கு, கிழக்கில் இராணுவத்தை நிரந்தமாக நிறுத்தி வைத்திருப்பதற்காக, மீண்டும் ஒரு போராட்டம் பற்றிய சிந்தனைகளே வந்து விடக்கூடாது என்பதற்காக, பல்வேறு உபாயங்கள், அரசாங்கத்தாலும், இராணுவத்தாலும் வகுக்கப்பட்டன.
பொதுவாகவே, போருக்குப் பிந்திய நிலைமைகளைக் கையாள்வதற்கு வெளிப்படையானதும் இரகசியமானதுமான திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயற்படுத்தப்படுவது வழக்கம்.
அத்தகைய திட்டங்கள், வடக்கு, கிழக்கிலும் நடைமுறைப்படுத்தப்பட்டமை உண்மை. அவ்வாறான செயற்றிட்டங்கள் பல அரசாங்கத்தால், இராணுவத்தால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்டன. வேறு பல திட்டங்கள், இரகசியமாகவே முன்னெடுக்கப்பட்டன. அத்தகைய இரகசியத் திட்டங்களின் விளைவுகளே, வடக்கின் இப்போதைய நிலைக்குக் காரணம் என்ற பொதுவான கருத்து, பெருமளவானோரிடம் உள்ளது.
அண்மைக்காலமாக, மீண்டும் குடாநாட்டில் வன்முறைகளும் சமூக விரோதச் செயல்களும் தலைவிரித்தாடத் தொடங்கிய போது, அதைக் கட்டுப்படுத்துவதற்கு மூன்று விதமான யோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
முதலாவது, மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தரப்பட்ட வேண்டும். அதன்மூலம், இத்தகைய செயல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
இரண்டாவது, முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரை வெளியே கொண்டுவந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலம், இத்தகைய செயல்களைத் தடுக்கலாம் என்று, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரப்போவதாக, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் டக்ளஸ் தேவானந்தா.
மூன்றாவதாக, இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகளை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கருத்து.
இந்த மூன்று கருத்துகளும் வெவ்வேறான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை.
மாகாணசபைக்குப் பொலிஸ் அதிகாரம் தரப்பட்டால், இவற்றை அடக்கி விடலாம் என்ற நம்பிக்கையில், முதலமைச்சர் தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில், 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட அதிகாரங்களைக் கூட, மாகாணசபையால் பயன்படுத்த முடியவில்லை என்ற ஆதங்கத்தைக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாகக் கொட்டி வருகிறார். பொலிஸ், காணி அதிகாரங்கள் மாகாணசபைகளுக்குத் தரப்பட வேண்டும் என்பது, அவரது உறுதியான நிலைப்பாடு.
போருக்குப் பின்னர், மத்திய அரசாங்கத்தால் தமிழ் மக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மாகாண அரசாங்கத்துக்குப் பொலிஸ் அதிகாரத்தைக் கொடுத்தால், உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பது முதலமைச்சரின் கருத்து.
ஆனால், முதலமைச்சரின் கருத்துக்கும் அவரது நிலைப்பாட்டுக்கும் நேர்மாறாகவே, டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாடு உள்ளது. டக்ளஸ் தேவானந்தாவைப் பொறுத்தவரையில், முகாம்களுக்குள் கட்டிப் போடப்பட்டிருக்கும் இராணுவத்தினரை வெளியே கொண்டுவந்து, உலாவ விட வேண்டும். இராணுவத்தினரை வெளியே விட்டால், தமிழ் மக்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் இருக்க முடியும் என்பது அவரது நினைப்பும் கணிப்பும்.
அவர் அங்கம் வகித்த கடந்த ஆட்சியில், கிறீஸ் பூதங்கள் உலாவி, தமிழ் மக்களுக்குத் தொந்தரவு கொடுத்ததும், அந்தப் பூதங்கள், படை முகாம்களுக்குள்தான், ஓடி ஒளிந்து கொண்டதுமான குற்றச்சாட்டுகள், இன்னமும் தமிழ் மக்களால் மறக்கப்படவில்லை. வடக்கில், படையினர் தாராளமாக உலாவிய காலத்தில், எந்த வன்முறைகளும், சமூக விரோதச் செயல்களும் நடக்காதது போன்று இருக்கிறது, அவரது கருத்து.
இப்போதும் கூட, வடக்கில் படையினரின் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் நியாயப்படுத்திக் கொள்வதற்காகவும் தான், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்த்தப்படுகின்றன என்று நம்பும் மக்கள், அதிகளவில் இருக்கிறார்கள். அதாவது, வடக்கில் படையினரை நிலைப்படுத்தி வைத்திருப்பது மற்றும் அவர்களை முகாம்களுக்குள் முடக்கி வைக்காமல் வெளியே உலாவ விடும் நோக்கில், சில தந்திரோபாயங்கள் கையாளப்படுகின்றனவோ என்ற சந்தேகம் பலமாகவே இருக்கிறது.
ஆனால், இவர்கள் இருவரினது கருத்துகளில் இருந்து, முற்றிலும் வேறுபடுகிறது விஜயகலா மகேஸ்வரனின் நிலைப்பாடு. அது வெறுமனே உணர்ச்சி வயப்பட்ட நிலையில், கோபத்தில், ஆதங்கத்தில் வெளிவந்தது. ஆனால் உண்மையானது. எனினும், அதனைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.
அதாவது, மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்கவோ, வலுப்படுத்தவோ முடியாது. வெறும் பேச்சுக்கு அதனைக் கூறலாமே தவிர, நடைமுறைப்படுத்த முடியாது; அதற்கு சட்டமும் இடமளிக்காது.
‘அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ என்ற பாணியில், தமிழ் மக்களுக்குத் தொந்தரவுகளைக் கொடுத்தால், அவர்கள், இராணுவ இருப்பையும் அவர்களின் தேவையையும் உணர்வார்கள் என்ற பாணியில் சிந்திக்கத் தலைப்பட்டால் அது ஆபத்தான விளைவுகளையே தரும் என்ற உண்மை வெளிப்பட்டிருக்கிறது.
அதாவது, வடக்கைக் கையில் வைத்திருப்பதற்கு, சட்டத்தின் ஆட்சிக்கு அப்பாற்பட்ட வழிமுறைகளைக் கையாள்வது- குறிப்பாக, இரகசியத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, எதிர்பார்க்கின்ற பலனைத் தராது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் தோல்வி காணும் போது, இராணுவத்தின் தேவையை தமிழ் மக்கள் உணர்வார்கள் என்ற எதிர்பார்ப்பில், காரியங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், அதற்கு மாறான தேவையே உணரப்பட்டிருக்கிறது.
யார் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்று நம்பியிருந்தார்களோ, அவர்களின் தேவையையே தமிழ் மக்கள் உணரும் நிலை தோன்றியிருக்கிறது. அதாவது, புலிகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி, அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நிலையைத் தோற்றுவித்திருப்பது, நிச்சயமாகத் தமிழ் மக்களல்ல.
இது அரசாங்கத்தின், படைகளின் தோல்வியாகும். ஆனாலும், இதனை மறைத்துக் கொண்டு, இராணுவத்தை இறக்கி, நிலைமையைக் கட்டுப்படுத்துவோம் என்று இறங்கினால், அது மேலும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
இந்த நிலைமையை அரசாங்கம், யதார்த்தமான வழிகளில் கையாளத் தவறினால் அது, பேராபத்தில் தான் போய் முடியும்.
Average Rating