மருத்துவப் படிப்பில் சேர இனி ஆன்லைனில் ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!
தேசிய தேர்வு முகமை மூலம் நுழைவுத்தேர்வு எழுதும் 40 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள்.
* சிபிஎஸ்இ, ஏஐசிடிஇ ஆகிய கல்வி நிறுவனங்களின் பணிச்சுமை குறையும்
* தேசிய தேர்வு முகமை மூலம் மாணவர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதுடன், அவர்களின் நுண்ணறிவு, சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறன் ஆகியவற்றை மதிப்பிட முடியும்.
புதுடெல்லி: மருத்துவ படிப்பில் சேருவதற்கான தேசிய அளவில் நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு இனி ஆன்லைனில் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், இத்தேர்வை சிபிஎஸ்இ.க்கு பதிலாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘தேசிய தேர்வு முகமை’ நடத்த உள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்காக ‘நீட்’ என்ற பெயரில் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல், ஐஐடிபொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக ஜேஇஇ மெயின் தேர்வு, பேராசிரியர்கள் பணியிடத்திற்கான நெட் தேர்வு, மேலாண்மை படிப்புகளுக்கான சிமேட் தேர்வு, பார்மசி படிப்புகளுக்கான ஜிபாட் உள்ளிட்ட தேசிய நுழைவுத்தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் நீட், ஜேஇஇ, நெட் தேர்வுகளை மத்திய இடைநிலை கல்வி வாரியமும் (சிபிஎஸ்இ), சிமேட், ஜிபாட் தேர்வுகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் (ஏஐசிடிஇ) நடத்தி வருகின்றன.
இதில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்த தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதோடு, வினாத்தாள் மொழிபெயர்ப்பிலும், மாணவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கீடு செய்வதிலும் சிபிஎஸ்இ பொறுப்பின்றி செயல்பட்டதாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கிடையே, தேசிய நுழைவுத்தேர்வுகளை நடத்த தன்னாட்சி அதிகாரம் பெற்ற தனி அமைப்பு அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2019ம் ஆண்டு முதல் நீட் உள்ளிட்ட தேசிய நுழைவுத்தேர்வுகளை நடத்த, புதிதாக ‘தேசிய தேர்வு முகமை’ (என்டிஏ) என்ற அமைப்பு உருவாக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இதற்கு மத்திய அமைச்சரவையும் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், நுழைவுத்தேர்வு விஷயத்தில் அதிரடி மாற்றம் செய்வதற்கான அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று வெளியிட்டார். அதில், நீட் தேர்வு இனிமேல் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து அமைச்சர் ஜவடேகர் கூறியதாவது: நீட், நெட், ஜேஇஇ, சிமேட், ஜிபாட் உள்ளிட்ட அனைத்து தேசிய நுழைவுத்தேர்வுகளையும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமையே நடத்தும். இதில், நீட், ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும். நீட் தேர்வு ஆண்டுதோறும் பிப்ரவரி, மே மாதத்திலும், ஜேஇஇ தேர்வு ஜனவரி, ஏப்ரல் மாதத்திலும் நடக்கும்.
இதில் ஏதேனும் ஒரு தேர்வை தேர்ந்தெடுத்து மாணவர்கள் எழுதலாம். அல்லது விருப்பப்பட்டால் 2 தேர்வையும் எழுதலாம். இரண்டில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தார்களோ அதுவே கணக்கில் கொள்ளப்படும். தேர்வுகள் அனைத்தும் சர்வதேச விதிமுறைகளின் கீழ், முழு பாதுகாப்புடன் நடக்கும். எனவே, வினாத்தாள் கசிவு போன்ற பிரச்னைகளுக்கு இடமில்லை. வினாத்தாள் கசிவை கண்டறியும் வழிவகையும் செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் எளிதாக தேர்வு எழுதும் வகையிலும், வெளிப்படைத் தன்மையுடனும் தேர்வுகள் நடத்தப்படும்.இந்த தேர்வுகள் 4-5 நாட்கள் கால இடைவெளிக்குள் நடத்தப்படும். மாணவர்கள் தங்கள் விருப்பமான தேதியில் தேர்வு எழுதலாம். பாடத்திட்டம், வினாத்தாள் அமைப்பு, மொழிகள், கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.தேர்வு அட்டவணை அமைச்சக இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை வழக்கம் போல், ஐஐடிகளே நடத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.
எல்லாம் கணினி மயம்:
தேசிய நுழைவுத்தேர்வுகள் அனைத்தும் கணினி வழியாகவே நடத்தப்படும் என அமைச்சர் ஜவடேகர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘கணினி வழியில் தேர்வுகள் நடத்தப்படுவதால் வெளிப்படைத்தன்மை ஏற்படும். இதில் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு பயிற்சி அளிக்க மாவட்டம் தோறும் கணினி மையங்கள் அமைக்கப்படும். அங்கு ஆகஸ்ட் இறுதியில் இருந்தோ அல்லது செப்டம்பரில் இருந்தோ மாணவர்கள் பயிற்சி பெறலாம்’’ என்றார்.
Average Rating