தலைவிரித்தாடும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளியிடுவது யார்?(கட்டுரை)
இனமுறுகளின் பின்னணியின் பல வரலாறுகள், பாடம் புகட்டும் தன்மையைக் கொண்டிருக்கும் என்பதற்கு, மேற்கத்தேய நாடுகளில் இடம்பெற்ற பல உள்நாட்டுப் போர்கள் சான்றாகியுள்ளன.
அந்தப் பாடங்களில் இருந்து, நம் நாட்டவர்களும் பாடம் கற்றுக்கொண்டனரா என்பதை ஆராய்ந்துப் பார்க்க வேண்டிய தேவை, காலத்தின் கட்டாயமாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் என்ற தொனிப்பொருளை, ஏட்டளவில் வைத்து அரசியல் நகர்வை மேற்கொள்ளும் இலங்கை அரசியலாளர்கள், அதற்கு யதார்த்த வடிவத்தைக் கொடுத்துள்ளனரா என்ற சந்தேகம் நிறைந்தேயுள்ளது.
யுத்தம் நடைபெற்ற நாடொன்றன் சிறுபான்மையினக் குழுமத்தை வெற்றிகொண்ட பெரும்பான்மையினக் குழுமங்கள், குறித்த சிறுபான்மையினக் குழுமத்தை ‘மெல்ல அழித்தல்’ என்ற மௌன யுத்தத்தை, பல ஆண்டுகளுக்கு நடத்த வல்லனவாகவே உள்ளன. ஏனெனில், யுத்தத்தின் பின்னர் பாதிப்புக்குள்ளான இனமொன்று, மீண்டும் தமது உரிமைகள் சார்ந்து போரியல் குணத்தோடு உருவாக்கம் பெறுவதை தடுக்கும் நோக்கில், இவ்வாறான மௌன யுத்தங்கள் நடத்தப்படுகின்றது.
அந்த வகையில், மௌன யுத்தத்தின் தாக்கம், பல்வேறு வடிவங்கொண்டு அமைந்துவிடுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ள நிலையில், இலங்கையில் பெரும்பான்மை இனத்தால், சிறுபான்மையினர் மீது பல்வேறு முறையிலான மெல்ல அழித்தல் செயன்முறை பிரயோகிக்கப்பட்டு வருகின்றதென்றக் கருத்து மேலோங்கியுள்ளது.
குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு யுத்தத்தின் பின்னரான மக்களை, பொருளாதார ரீதியில் வழுவிழக்கச் செய்யும் நடவடிக்கையாக, நுண்நிதி நிறுவனங்கள் என்ற போர்வையில் கொண்டுவரப்பட்ட பொருளாதாரப் பாதிப்புகள், மீள்குடியேற்றத்தின் போதான நிலைமைகளில், பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.
எனினும், நீண்டகாலச் செயற்பாட்டின் பின்னர், நுண்நிதி நிறுவனங்களின் வலைக்குள் இருந்து மீளமுடியாத மக்கள், இன்று பல்வேறான இன்னல்களுக்கு முகங்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளமையை, அண்மைக்கால நிகழ்வுகள் படம்போட்டுக் காட்டுகின்றன.
இவ்வாறான நுண்நிதி நிறுவனங்களின் தாக்கங்கள், இன்று பொருளாதார ரீதியான பின்னடைவை மாத்திரமல்லாது, தற்கொலைகளைத் தூண்டிவிடும் பேராயுதமாகவும் காணப்படுகின்றமையை, தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மறைமுக அழிப்புப் பொறிமுறையாகவே பார்க்கத் தோன்றுகின்றது.
இதற்கும் அப்பால், தமிழர்களின் கலாசார பூமியாகப் பார்க்கப்பட்ட யாழ்ப்பாணத்தில், இன்று தலைவிரித்தாடும் சமூக விரோதச் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டிய தேவை நிறையவே உள்ளது. பெரும் கட்டுக்கோப்புகளையும் ஒழுக்க நெறிகளையும் கொண்ட யாழ்ப்பாணத்துச் சமூகம், இன்று தடுமாறி தடம்புரண்டு போவதற்குக் காரணம் என்னவென்பது பற்றியும் அதன் பின்னணி பற்றியும் சிந்திக்கத் தலைப்பட வேண்டிய தேவையுள்ளது.
வித்தியாவுக்கு முன்னரும் பின்னருமான வன்புணர்வுச் செயற்பாடுகள், வாள்வெட்டுச் சம்பவங்கள், கொள்ளை, கொலை என அடுக்கடுக்காக ஏறிச்செல்லும் குற்றச்செயல்கள், எதை உணர்த்த முனைகின்றன?
வெறுமனே இளைஞர்கள் மீது குற்றத்தைச் சுமத்திவிட்டுக் கடந்துசெல்ல முடியாதென்பதை உணர்ந்து, ஆராய்ந்து பார்க்கும்போது, இதன் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்ற கேள்விக்கான பதில் கிடைக்கத் தோன்றும்.
குறிப்பாக, யாழ்ப்பாணத்தை மாத்திரம் இலக்காக வைத்து, படு பயங்கரமான குற்றச்செயல்கள் இடம்பெறுவதானது, தனித்துத் தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட சம்பவங்களாகவே பார்க்க முடியும்.
வவுனியா, மன்னார் போன்ற பல்லினச் சமூகங்கள் வாழும் பகுதிகளில் இடம்பெற்றுவரும் குற்றச்செயல்களை விட, யாழ்ப்பாணத்தில் இவ்வாறான சம்பவங்கள், தமிழ் மக்களின் கலாசார, பண்பாட்டு விழுமியங்களை அழிக்கும் திட்டங்களுக்கு விலைபோன தமிழர்கள் சிலரின் மூலம் அரங்கேறி வருவது வெளிப்படை.
2000ஆம் ஆண்டுகளுக்கு முன்னர், எவ்வித போதைப்பொருட் பாவனையற்ற பிரதேசமாகக் காணப்பட்ட வடபுலம், இன்று எந்தவகை போதைப்பொருள் இங்கு இல்லை என்று கேட்கும் அளவுக்கு அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
திட்டமிட்டுப் பரவலாகவே மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான சமூக விரோத நிலைப்பாடுகளுக்கு இரையாகிப் போகும் இளைஞர்களை, தம் இனம் சார்ந்துச் சிந்திக்காத போக்குக்குள் நகர்த்தும் பட்சத்தில், மீண்டும் இந்நாட்டில் சிறுபான்மையினர் தமக்கான உரிமைப் போராட்டத்தில் முனைப்பு காட்டமாட்டார்கள் என்ற சிந்தனை, பெரும்பான்மை அரசியலாளர்களுக்கு ஏற்படுகின்றது.
ஆகவே, வெளிப்படையான போரின் மூலமான தாக்கத்தில் இருந்து, ஓரினக் குழுமம் மீளக் கட்டியெழுப்பப்படுவதற்கு முன்பாகவே, அவர்கள் மீது தொடர்ச்சியான மறைமுகத் தாக்கங்களை, பிற காரணிகளின் ஊடாகச் செலுத்தும் போது, அவ்வினம் தனது இருப்பில் இருந்து சிதைந்து போகும் தன்மைகள் நிறைவாகவே உள்ளனவென்ற பொறிமுறையே, வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பிரயோகிக்கப்பட்டு வருகின்றதா என்ற சந்தேகம் எழுகிறது.
இவ்விடயங்கள் தொடர்பாக, தமிழ்த் தரப்பு அரசியலாளர்கள், எவ்வாறான சிந்தனையோட்டத்தைக் கொண்டுள்ளனரென்பது தொடர்பாகச் சிந்திக்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட ரெஜினா என்ற குழந்தையின் மரணம் தொடர்பாக நீதி கோரும் போராட்டங்களில், அரசியலாளர்கள் முன்னின்றார்களா என்பதற்கு அப்பால், அக்குழந்தையின் மரணத்துக்கு, சட்ட ரீதியான முன்னெடுப்புகளை மேற்கொள்ளுமாறும் அதனை நீதி நேர்மையோடு முன்னெடுக்குமாறும் அழுத்தங்களைப் பிரயோகித்தனரா என்பது தொடர்பிலும், மக்கள் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இதுவாகும்.
இதற்கும் அப்பால், இம்மரணம், ரெஜினா சார்ந்ததாகவோ அல்லது அவர்கள் குடும்பம் சார்ந்ததாகவோ பார்த்துவிட்டுச் செல்வது இயலாத காரியமாக உள்ளதென்ற நிலையில், இது தொடர்பான மக்கள் விழிப்புணர்வுச் செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டியதில், அரசியலாளர்களுக்கு பெரும் பங்குண்டு என்பதை உணரவேண்டும்.
வெறுமனே, மக்களை உருவேற்றும் அரசியல் பேச்சுகளால், தமிழர்களின் இருப்புகளைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமென்ற போலியான எண்ணப்பாடுகள், எதிர்வரப்போகும் நாட்களில், மக்களிடம் எடுபடாமல் போகும் என்பது யதார்த்தம்.
இச்சூழலில், தமக்குள்ளான அரசியல் நிலைப்பாடுகளை மாத்திரம் வைத்துக்கொண்டு, பல பிரிவுகளாக அரசியல் களத்தில் செயற்படும் அரசியலாளர்களாலும் அரசியல் கட்சிகளாலும், மக்கள் அன்றாடம் எதிர்கொண்டு வரும் சமூக விரோதச் செயற்பாட்டுகளுக்கு எவ்வாறு முற்றுப்புள்ளி இடுவதென்பது தொடர்பான கருத்துகளை முன்வைக்க, போதிய அறிவார்ந்த சிந்தனையோட்டம் இல்லாதுள்ளமை வேதனையே.
குலங்கள் கடந்து சென்று வாய் திறப்பதனால், எது கிடைக்கப்போகின்றதோ? அதற்காக அதனை இப்போதே செய்வது மேல் என, தமிழ் அரசியல் தளத்தில் செயற்படுவோர் எண்ண வேண்டும். தனிப்பட்ட அரசியல் காழ்புணர்ச்சிகளால், தமிழர் தம் இருப்புகளுக்கு பங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகளைப் பார்வையாளர்களாக இருந்து பார்ப்பதை விடுத்து, இவ்விடயத்துக்கேனும் ஓரணியில் நின்று குரல் கொடுக்கும் தன்மைக்கு, தமிழ் அரசியலாளர்கள் வரவேண்டிய தேவை உணர்த்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலோடு நின்றுவிட்டதாக எண்ணப்பட்ட தமிழர் மீதான ஒடுக்குமுறை, இன்று வேறு வடிவங்கொண்டு முன்னெடுக்கப்படும் நோக்கத்தின் உள்ளர்த்தத்தை, அரசியலாளர்களே வெளிப்படுத்த வேண்டிய தேவை, பலமாக எழுந்துள்ளது.
தமது தொகுதிகளுக்கே செல்லாத அரசியலாளர்கள் நிறைந்து வரும் வடக்கு, கிழக்கில், தமது மக்களின் இன்னல் வாழ்வு தொடர்பில் சிந்திக்கும் அரசியலாளர்கள் உருவாக்கப்பட வேண்டுமென்ற எண்ணப்பாடு துளிர்விட ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள் ஒடுக்கப்பட வேண்டிய தேவையும் முன்னிற்கின்றது.
ஆகவே, இயலாமையையும் தனிப்பட்ட கட்சி நலனும் சார்ந்த அரசியலாளர்களா அல்லது சமூகத்தின் மீதான தாக்கத்துக்கு விடை காணும் அரசியலாளர்களா, தற்போதைய தேவையென்பதை, மக்கள் உணரத் தலைப்படாத வரை, மாற்றம் ஒன்றைக் காணுவது கனவாகிப் போகுமென்பது மறுப்பதற்கில்லை.
Average Rating