‘வெறுப்பு’(கட்டுரை)
நல்லாட்சி அலுத்துப் போய், வெகு காலமாகிவிட்டது. இப்போது அதன் மீது வெறுப்பு ஏற்படத் தொடங்கி விட்டது. “நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையை, ஜனாதிபதியும் பிரதமரும் உரிய முறையில் நிறைவேற்றத் தவறினால், அடுத்த தேர்தலில், மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்” என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியிருக்கின்றார்.
மேலும், எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது, மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும், மேற்படி ஆட்சித் தலைவர்கள் இருவரிடத்திலும், அமைச்சர் ரிஷாட் கோரிக்கை விடுத்திருக்கின்றார். வரக்காபொல பிரதேசத்தில், சிங்கள மக்கள் மத்தியில் அமைச்சர் உரையாற்றிய போது இதனைக் கூறியிருந்தமை, அதிக கவனிப்புக்குரியதாகும்.
“எஞ்சியிருக்கும் காலத்தையாவது மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுங்கள்” என்று கூறுவதன் மறைதலை அர்த்தம், “இதுவரையில் நீங்கள், மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு, உங்கள் ஆட்சியை நடத்தவில்லை” என்பதாகும். அரசாங்கத்துக்குள் இருக்கின்ற முக்கிய அமைச்சர் ஒருவர் முன்வைக்கும் இந்தக் குற்றச்சாட்டை அலட்சியப்படுத்திவிட முடியாது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அந்த உரையில் மேலும் பல விடயங்களையும் தெரிவித்திருந்தார். அவை,
கடந்த அரசாங்கம் செய்த தவறுகளைப் போன்று, நல்லாட்சி என்று கூறப்படும் இந்த அரசாங்கத்தின் இரண்டு தலைவர்களும் அதே தவறுகளைச் செய்கின்றனர்.
தத்தமது கட்சிகள் தொடர்பான கவலைகளே இந்தத் தலைவர்களிடம் மேலோங்கி இருக்கின்றன. நாட்டு மக்களின் நலன்கள் தொடர்பான எண்ணங்கள், இவர்களிடம் குறைந்தளவிலேயே தென்படுகின்றன.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் நிலைப்பாடுகள், கவலை தருவதாக உள்ளன.
என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெளிப்படுத்தியுள்ள இந்த மனநிலையை, மக்களிடமும் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, இந்த ஆட்சி தொடர்பில் முஸ்லிம் மக்களிடம் வெறுப்பு உருவாகத் தொடங்கி வெகுநாள்களாகி விட்டன.
கடந்த ஆட்சிக் காலத்தில், முஸ்லிம் மக்கள், பௌத்த பேரினவாத அடக்குமுறைகளை எதிர்கொண்டு வந்தனர். அப்போதைய ஆட்சியாளர்கள், சில இடங்களில் அதனைக் கண்டும் காணாமல் இருந்தனர். சில இடங்களில், அடக்குமுறையாளர்களை உற்சாகமூட்டினர். இனியும் இந்த ஆட்சி தொடர்ந்தால், இந்த நாட்டில் தமக்கு இருக்க முடியாதென்கிற அச்சம், முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட போதுதான், அவர்கள், கடந்த ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்.
முன்னைய ஆட்சியின்போது முஸ்லிம்கள் தாக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள், தங்கள் அரசாங்கத்தில் ஒருபோதும் நடக்காதென்கிற வாக்குறுதியை, இப்போதைய ஆட்சியாளர்கள் தேர்தலில் களமிறங்கிய போது வழங்கியிருந்தனர்.
முஸ்லிம்களை, பௌத்த பேரினவாதத்தின் பெயரால் கஷ்டப்படுத்துவதற்கு முன்னின்ற சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களை ‘நாய்க் கூட்டில் அடைப்போம்’ என்று கூறித்தான், இப்போதைய தலைவர்கள் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டனர். ஆனால், நடப்பவை அனைத்தும் தலைகீழாக உள்ளன. முன்னைய ஆட்சி பரவாயில்லையோ என்று நினைக்கும் நிலையை, தற்போதைய ஆட்சியில் நடக்கும் நிகழ்வுகள் – முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன.
இந்த ஆட்சியின் தொடக்கத்திலேயே, மத்திய வங்கியில் மிகப்பெரும் மோசடி நடந்துள்ளது. பிணைமுறி விவகாரத்தில் பல நூறு கோடி ரூபாய்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. அந்த மோசடியை, தற்போதைய ஆட்சியாளர்கள் தான் செய்துள்ளனர். ஆனால், அது குறித்து வெறும் பேச்சுகள் மட்டுமே உள்ளன. ஆட்சியிலுள்ள திருடர்களைப் பிடிப்பதற்கான நம்பிக்கை தரும் நடவடிக்கைகள் எவையும் நடப்பதாகத் தெரியவில்லை.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் பலத்தைக் கொண்டு, மத்திய வங்கிக்கு அர்ஜுன மஹேந்திரன் என்கிற சிங்கப்பூர் குடியுரிமையை கொண்ட ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலத்தில் தான், பிணைமுறி மோசடி நடந்தது. தற்போது இது தொடர்பான வழக்கின் முக்கிய சந்தேகநபராக அர்ஜுன மஹேந்திரனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஆசாமி நாட்டை விட்டுத் தப்பியோடி விட்டார்.
அர்ஜுன மஹேந்திரனுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர், தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். எனவே, அர்ஜுன மஹேந்திரனை இலங்கைக்கு அழைத்து வந்து, பிணைமுறி மோசடி வழக்கில் ஆஜர்படுத்த வேண்டிய பொறுப்பு, பிரதமருக்கு உள்ளமையைத் தட்டிக்கழிக்க முடியாது.
ஆனால், இந்த விவகாரத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என்பது போல், இந்த விடயத்தில் பிரதமர் இருந்து வருகின்றார். இந்த அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு பெரும் அவநம்பிக்கை ஏற்படுவதற்கு, இவ்வாறான செயற்பாடுகள் மிக முக்கியமான காரணங்களாகி உள்ளன.
இந்த நிலையில், மிக் விமானக் கொள்வனவில் மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்துவந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, மஹிந்த ராஜபக்ஷ தரப்பு மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஷவின் உறவுக்காரரான உதயங்க, முன்னைய ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவுக்கான தூதுவராக இருந்தபோது, மிக் விமானக் கொள்வனவில் மோசடி செய்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில், உதயங்கவை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு மஹிந்த தரப்பு எடுத்துள்ள தீரமானமாது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. நாட்டை விட்டுத் தப்பிச்சென்றுள்ள அர்ஜுன மஹேந்திரனை அழைத்து வந்து, நீதிமன்றில் நிறுத்த வேண்டிய பொறுப்பை, இதனூடாக ரணிலின் தலைமையில் மஹிந்த தரப்பு இறக்கி விட்டிருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியதைப் போல், நாட்டு மக்களின் நலன்கள் தொடர்பான விடயத்திலும், ஆட்சித் தலைவர்கள் முழு மனதுடன் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத் திட்டத்தை, பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கையளிக்கும் விடயத்தில் கூட, தற்போதை ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தத் தவறியுள்ளனர்.
இதன் காரணமாக, அண்மையில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பில் பாரிய கூச்சல் குழப்பம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைப்பதற்கான நடவடிக்கைகளை, ஜனாதிபதிச் செயலகம் மேற்கொள்வதாக, கடந்த வருடம் கூறப்பட்டது. மேலும், அங்குள்ள 500 வீடுகளில் சுமார் 300 வீடுகளுக்கு அதிகமானவை, முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், அதற்குப் பிறகு, அந்த விடயம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்காக, சவூதி அரேபியாவால் நுரைச்சோலை வீட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டது. மஹிந்த ஆட்சிக் காலத்தில் தலைவிரித்தாடிய பௌத்த பேரினவாதிகள் தான், இந்த வீட்டுத் தொகுதியை முஸ்லிம் மக்களுக்கு வழங்கத் தடையாக இருந்தனர். குறித்த ஓர் இனத்துக்கு மட்டும் இந்த வீடுகளை வழங்கக் கூடாதென்று, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதை அடுத்து, இன விகிதாசார அடிப்படையில் நுரைச்சோலை வீடுகளை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது, நாம் அறிந்த தகவலாகும்.
இருந்தபோதும், இற்றை வரை அந்த வீடுகள் – மக்களுக்குப் பகிரப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன. நல்லாட்சியாளர்கள், நுரைச்சோலை வீடுகளை தமக்கு வழங்குவார்கள் என்று, சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் நம்பியிருந்தார்கள். ஆனால், அது நடக்கவேயில்லை.
அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம், கடந்த வாரம் அம்பாறை கச்சேரியில் நடைபெற்றபோது, நுரைச்சோலை வீட்டுத் திட்டம் பற்றிய பேச்சு எழுந்தது. அதன்போது, குறித்த வீடுகளை பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டுமென்று, அங்கிருந்த முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கடுமையாக வாதிட்டார். ஆனால், இன விகிதாசாரப்படிதான் அந்த வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும், அதனடிப்படையில் அங்குள்ள 70 சதவீதத்துக்கும் அதிகமான வீடுகள், சிங்கள மக்களுக்கே கிடைக்க வேண்டுமென்றும், அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாதிட்டார்கள். இறுதியில், இந்த விடயத்தில் தீர்வுகள் காணப்படவில்லை, கூச்சல் குழுப்பம் தான் ஏற்பட்டது.
ஆகக் குறைந்தது 500 வீடுகளை முஸ்களுக்குப் பகிர்ந்தளிக்கும் விடயத்தில் கூட, பௌத்த பேரினவாதிகளின் அழுத்தங்களைத் தாண்டி, தற்போதைய ஆட்சியாளர்களால் செயற்பட முடியவில்லை என்பது வெட்கக் கேடாகும். பௌத்த பேரினவாதத்தைத் தாண்டி, தற்போதைய ஆட்சியாளர்களாலும் செயற்பட முடியாதென்பதை, பல சம்பவங்கள் தோலுரித்துக் காட்டியிருக்கின்றன.
பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரர் சிறையில் அடைக்கப்பட்ட போது, இந்த ஆட்சியாளர்களின் உண்மை முகத்தை, முஸ்லிம்களுக்குக் காணக்கிடைத்தது. ஞானசார தேரருக்கு, ஜனாதிபதியிடமிருந்து பொது மன்னிப்புப் பெற்றுக்கொடுப்பதற்கான நகர்வுகள் இடம்பெற்றதாக வெளியான செய்திகள், முஸ்லிம்களைத் திகைக்க வைத்தன.
பௌத்த பேரினவாதத்திடம் மண்டியிடுவதில், எந்த ஆட்சியாளர்களும் குறைந்தவர்கள் இல்லை என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொண்டுள்ளனர். இந்த விடயத்தில், எல்லோரும் ஒரே குட்டையில் ஊறியவர்களாவே தெரிகின்றனர். பௌத்த பேரினவாதிகளின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டு, தமக்கு இந்த ஆட்சியாளர்கள் நன்மைகள் செய்வார்கள் என்கிற நம்பிக்கை, சிறுபான்மை மக்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
அந்த அவநம்பிக்கையினூடாக வெளிப்பட்ட கோபமாகவே, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடைய உரையைப் புரிந்துகொள்ள முடிகிறது. “எஞ்சியிருக்கிற ஆட்சிக் காலத்திலாவது, மக்களுக்கு நல்லது செய்யப் பாருங்கள்” என்று ரிஷாட் கூறியிருக்கின்றமை, ஏமாற்றத்தின் வெளிப்பாடாகும்.
மஹிந்த ஆட்சியில், முஸ்லிம்களுக்கு அக்கிரமம் நடக்கிறது என்பதற்காக, மைத்திரியை ஆட்சிக்குக் கொண்டுவந்தால், அதை விடவும் மோசமான நிகழ்வுகள் – முஸ்லிம்களுக்கு எதிராக இந்த ஆட்சியில் இடம்பெற்று வருகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக மஹிந்த ஆட்சியில் எத்தனை சம்பவங்கள் இடம்பெற்றன என்பதையும் மைத்திரியின் ஆட்சியில் எத்தனை சம்பவங்கள் இடம்பெற்றன என்பதையும் அண்மையில் ஒன்றிணைந்த எதிரணியினர் பட்டியலிட்டு ஊடகங்களுக்கு வழங்கியிருந்தனர். அதைப் பார்த்த போது, மஹிந்த ஆட்சியையே தொடர்ந்திருக்கலாமோ என்கிற எண்ணம், முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடும்.
தற்போதைய ஆட்சி தொடர்பில், சிறுபான்மையினருக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதென்பதை, யாரும் மறுப்பதற்கில்லை. அந்த வெறுப்பை, சிறுபான்மைச் சமூகத்தவரான தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வெளிப்படுத்தினால், இந்த ஆட்சியாளர்கள், தமது பதவிக் கதிரைகளை இழந்துவிடும் அபாயம் அதிகமாக உள்ளது.
ஆனால், தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து, இந்த அரசியல் நிலைமையைச் சீர்தூக்கிப் பார்க்கும் நிலையில் இல்லை. தேவையற்ற விடயங்களை முன்னிறுத்தி, இந்த இரண்டு சமூகங்களும் மிக மோசமாக மோதி வருகின்றன. இதன் காரணமாக, இரண்டு சமூகங்களுக்கிடையிலும் பகைமை நெருப்பு எரிந்து வருகிறது. இந்த நெருப்பில், யாரெல்லாம் குளிர்காய்வார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமலில்லை. சிலவேளை, குளிர் காய்கின்றவர்களே, இந்த நெருப்பைக் கொழுத்தி விட்டிருக்கவும் கூடும்.
நடிகர் விவேக் பாணியில் சொன்னால், புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ; புரியாதவன் புரிஞ்சவனக் கேட்டுத் தெரிஞ்சுக்கோ.
Average Rating