ஹேர் ஃபிரீ சில்கி ஸ்கின்!!(மகளிர் பக்கம்)
பெண்கள் அனைவரும் விரும்புவது ரோமமற்ற பட்டு போன்ற வழுவழுப்பான சருமம். அதற்காக வீட்டிலோ பார்லர்களிலோ சென்று நாம் வாக்ஸிங் செய்து கொள்வது வழக்கம். சிலர் மார்க்கெட்டில் கிடைக்கக் கூடிய பல ஹேர் ரிமூவல் கிரீம் உபயோகிப்பதும் உண்டு. வாக்ஸிங் என்பது மிகவும் பிரபலமான ஒன்று. உடல் முழுவதும் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் தற்காலிகத் தீர்வு இது.
வாக்ஸிங் பழங்கால எகிப்திய பெண்களால் சர்க்கரை கலவை கொண்டு செய்யப்பட்டது. ஷேவ் செய்வதை காட்டிலும் வாக்ஸிங் செய்யும்போது நம் முடியின் வளர்ச்சி குறைவதோடு, மீண்டும் முடி வளர்வதற்கு குறைந்தபட்சம் மூன்று முதல் எட்டு வாரங்கள் ஆகும். நமக்கு தேவையான இடத்தில் நாம் வாக்ஸிங் செய்துகொள்ளலாம்.
பொதுவாக பார்லர்களில் வாக்ஸிங்கானது புருவம், முகம், கை, கால், வயிறு, முதுகு ஆகிய இடங்களில் செய்யப்படுகிறது. பிகினி மற்றும் பிரெய்ஸிலியன் வாக்ஸிங் செய்பவர்களும் உண்டு. அதாவது பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் செய்யப்படுவதுதான் பிகினி வாக்ஸிங் என்கிறார் அழகுக்கலை நிபுணர் திருமதி மீனாட்சி.
‘‘வாக்ஸிங்கில் கோல்ட் மற்றும் ஹாட் வாக்ஸ் உள்ளது. நம் தோலுக்கு ஏற்ற வாக்ஸ் பயன்படுத்துவதுதான் சிறந்தது. வாக்ஸ் உருக்கும் மெஷினில்தான் அதை சூடுபடுத்தி உருக்க வேண்டும். நாம் பயன்படுத்த போகும் இடத்தை நன்கு சுத்தம் செய்து உலர்த்திய பிறகு வாக்ஸ் பவுடர் போட வேண்டும்.
ஸ்பாச்சுலரால் வாக்ஸை மெல்லியதாக மேலிருந்து கீழ்நோக்கி தடவ வேண்டும். பின் வாக்ஸிங் ஸ்ட்ரிப் கொண்டு அதன் மேல் வைத்து அழுத்தி தேய்த்து, கீழிருந்து மேல்நோக்கி எடுக்க வேண்டும். இந்த முறையை கை, கால் மற்றும் வயிற்றில் வாக்ஸிங் செய்ய பின்பற்றுவர். இப்போது நாம் பிகினி வாக்ஸிங் பற்றி பார்ப்போம்” என்றார்.
‘‘அந்தரங்க உறுப்புகளில் வளரும் முடிகளை அகற்ற பல வழிமுறைகளை பெண்கள் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக ஷேவிங், வாக்ஸிங், சுகரிங், எலெக்ட்ரோலைசிஸ், லேசர் மற்றும் கிரீம் போன்று பலவற்றை செய்கிறார்கள். இதில் சிலது பார்லர், ஸ்பா மற்றும் காஸ்மெடால ஜிஸ்டிடம் செய்யப்படும். ஒருமுறை கூட வாக்ஸ் செய்யாதவர்களுக்கும், செய்து நெடுநாட்கள் ஆனவர்களுக்கும் முதலில் எலெக்ட்ரி ரேசர் அல்லது கத்திரிக்கோல் கொண்டு முடிகளை வெட்டிவிட வேண்டும்.
தொடையின் மேல்புறத்தில் பேட்ச் பரிசோதனைக்கு பிறகே பிகினி வாக்ஸ் செய்யப்படும். நமக்கு ஒவ்வாமை ஏதேனும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளதான் இந்த பரிசோதனை. நம் உடலிலே மிக முக்கியமான பகுதி என்பதால் வாக்ஸிங் செய்யும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பிகினி வாக்ஸ் செய்யும்போதும் செய்தபிறகும் பல நிமிடங்களுக்கு அங்கு வலியுடன் கூடிய வீக்கம் இருக்கும். உடலின் மற்ற இடங்களில் பயன்படுத்தும் வாக்ஸை நாம் பிகினி வாக்ஸுக்கு பயன்படுத்த முடியாது. ஏனென்றால் அங்குள்ள ரோமம் அடர்த்தியாக இருக்கும். ஆதலால் பீஸ் வாக்ஸ் மற்றும் டால் ஆயில் கொண்டு தயார் செய்யப்படும் வாக்ஸால் மட்டுமே ரோமங்களை அகற்ற முடியும்.
இந்த பிகினி வாக்சில் பல வகைகளும், வடிவங்களும் உண்டு. ஆனால் அவற்றை நம் தென்னிந்திய பெண்கள் அதிகம் செய்து கொள்வதில்லை. பிகினி வாக்ஸ் மற்றும் பிரேசிலின் வாக்சிற்கு சில வித்தியாசங்கள் உண்டு. அதாவது பிகினி வாக்ஸ் என்பது பிகினி லைனில் இருக்கக்கூடிய ரோமங்களை மட்டும் அகற்றுவது.
ஆனால் பிரேசிலின் வாக்ஸ் என்பது தொப்புளில் ஆரம்பமாகி புட்டம் வரையிலுள்ள ரோமங்களை முழுவதுமாக அகற்று வது. கைதேர்ந்த, அனுபவமிக்க அழகுக்கலை நிபுணர்களை கொண்ட பார்லர்களில் மட்டுமே வாக்ஸிங் செய்துகொள்ள வேண்டும். எப்போதுமே மாதவிடாய் முடிந்து ஒருவாரத்திற்கு பிறகே அந்தரங்க பாகங்களில் வாக்ஸ் செய்வது நல்லது.
மாதவிடாய்க்கு முன்பும், மாதவிடாய் காலத்திலும் செய்தோமானால் அதீத வலி உண்டாகும் என்பதால் அந்நாட்களில் தவிர்ப்பது நல்லது. மேலும் வாக்ஸிங் செய்வதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு ஷேவ் செய்யக்கூடாது. பெண்கள் அனைவரும் பொதுவாகவே அந்தரங்க உறுப்புகளில் ரோமங்கள் இருப்பதை விரும்ப மாட்டார்கள்.
ஷேவ் செய்யும்போது ஏற்படும் சில காயங்களால் எளிதில் பாக்டீரியா, வைரஸ்களால் சில தொற்று நோய்கள் எளிதில் உடலுக்குள் ஊடுருவி விடும். ஷேவ் செய்வதற்கு பதிலாக ட்ரிம் செய்துகொள்வதும் நல்லது அல்லது வாக்ஸ் செய்தும் கொள்ளலாம். இதனால் நம் உறுப்பு சுத்தமாக இருக்கும்.
தண்ணீர் அல்லது வெஜைனல் வாஷ் கொண்டு சுத்தம் செய்யலாம். ஆனால் அதிகளவில் வாஷ் உபயோகிக்கும்போது வறண்டு போய்விடும். ஷேவ் செய்வதற்கு பதில் வாக்சிங் செய்வதனால் நம் ரோமங்கள் தோலின் அடியில் இருந்து அதாவது வேருடன் வெளிவருவதால், மீண்டும் முடி வளருவதற்கு அதிக நாட்கள் ஆகும்.
மேலும் எந்தவித காயமோ கீறலோ இன்றி ரோமங்களை அகற்றுவதில் சிறந்தது வாக்சிங்.நம் தோலின் நிறத்தையும் கருக்க செய்யாது. சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு ஷேவ் செய்யும்போது ரேஷஸ் வரும் வாய்ப்புள்ளது.மேலும் தோல் வறண்டு அதிகப்படியான ரோம வளர்ச்சி இருக்கும்.
வாக்சிங் செய்வதால் நம் ரோமத்தின் அடர்த்தி குறையும். நம் சருமத்தை மிருதுவாக்கும். வாக்சிங்கில் டீவீஸிங், ஹார்ட் வாக்சிங், சாப்ட் வாக்சிங் என்று மூன்று வகைகள் உண்டு. ஷேவ், கிரீம் போன்றவை கொண்டு ரோமங்களை எடுத்து நேர விரயம் செய்யாமல், தோலின் தன்மையை கெடுத்துக்கொள்ளாமல் வாக்ஸிங் செய்து ஹேர் ஃபிரீ சில்கி ஸ்கின் பெறுவோம். -பி. கமலா தவநிதி
Average Rating