மேற்குலகின் மையம்!!(மகளிர் பக்கம்)
நானும் கல்வித்துறையில் இருப்பதால், கல்லூரி மற்றும் பள்ளிகளை பார்ப்பதிலும் அதிக அக்கறை செலுத்தினேன். கல்லூரி என்றால் ஒரு கட்டடம் இல்லை. ஒவ்வொன்றும் ஒரு ஊர் போல் இருந்தது. ஒவ்வொரு பாடத்துறையும் தனித்தனி கல்லூரிகள் போன்று காட்சியளித்தன. ஒவ்வொரு துறையின் முன்புறமும் எத்தனையோ ஏக்கர் நிலப்பரப்பில் தோட்டங்கள், மாணவர்கள் அமர்ந்து சாப்பிட நிழல் தரும் குடைகள், மேசை நாற்காலிகள், பெஞ்சுகள் என அனைத்தும் திறந்தவெளியில் நிரந்தரமாக அமைக்கப்பட்டிருந்தன. நடுநடுவே, நோபல் விருது பெற்றவர்கள் சிலைகள், அவர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்பட்டன.
அதுவும் எங்கு திரும்பினாலும், நாம் வசதியாக அமர்ந்து உரையாடும் விதத்தில் அமைந்திருந்தது. ஒவ்வொரு இலாகாவிற்கும் பரிசோதனைக் கூடங்கள், வகுப்பறைகள் அனைத்தும் நமக்கு சுகமான ஆர்வத்தைத் தந்து ேவலை செய்ய தூண்டின. நூலகம் ஒரு பிரம்மாண்டமான கலைக் கோயில் போன்று காணப்பட்டது. அண்ணாந்து பார்த்தால், மேலே என்னென்ன கலைநயம் கொண்ட வேலைப்பாடுகள்! சுவர்களின் அலங்காரத்தைப் பார்த்தால், ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்றும், சிவப்புக் கம்பளத் தரையை பார்த்தால், நடந்தால் ‘கார்ப்பெட்டுக்குக் கூட வலிக்குமோ’ என்று தோன்றியது.
மொத்தத்தில் புத்தகங்களைக் கொண்ட ஆலயம்தான் என்று கூறலாம். அவ்வளவு பேர் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாலும், பக்கங்கள் புரட்டும் சப்தத்தைத் தவிர நிசப்தம் தான். அப்படியொரு இடத்தில் சுகமான அனுபவம் கிடைத்தபின் நமக்கு அங்கிருந்து வெளியே வரவே தோன்றாது. ஒரு துறையிலிருந்து மறு துறைக்குச் செல்ல வேண்டுமானால், அரை மணி நேரம் நடந்து செல்ல வேண்டும். மாணவர்கள் சைக்கிளில் செல்வர். திறந்தவெளியில் ஆங்காங்கே தனித்தனி குப்பைத்தொட்டிகள். அந்த குப்பைத் தொட்டிகள் கூட அவ்வளவு சுத்தம். உள் முழுவதும் உறையிடப்பட்டவை. அதிலும் சாப்பாடு மீதம் போட ஒரு ‘டஸ்ட்பின்’, பாட்டில் போட, கப்புகள் போட என பலவகைகளில் இருந்தாலும், அவற்றைத் தேடிச் சென்று சரியாக போடுவது என்பதும் நம் கடமையாகிறது. அது போல் அனைவரும் சரியாக பயன்படுத்துவதை பல இடங்களில் பார்த்தோம்.
இரவு ஒரு மணிக்குக் கூட, வெளிநாட்டு மாணவர்கள் நடந்தே வெகுதூரம் தன் அறைகளுக்கு படித்து முடித்து விட்டு திரும்புவதைக் காண முடிந்தது.மற்றுமொரு விஷயம், மாணவர்கள் யோசித்து யோசித்து செயல்படும் விஷயம் நம்மைக் கவர்கிறது. மேற்படிப்பிற்கு இந்தியாவிலிருந்தோ, வேறு நாடுகளிலிருந்தோ அங்கு செல்லும் மாணவர்களைப் பற்றி, அதாவது முதன் முதலில் அங்கு அவர்களின் கல்லூரியில் சேர்ந்து படிக்கப் போகும் மாணவர்கள் பற்றிய விவரங்களை மின்னஞ்சல் மூலம் சேகரித்து அவர்களுக்கு உதவ நினைக்கிறார்கள். சீனியர் மாணவர்கள் புதிதாக வரப்போகும் ஜூனியர் மாணவர்களை அன்புடன் வரவேற்கிறார்கள். முன் பின் தெரியாமல் ஊர் விட்டு ஊர் சென்றாலே, முதலில் நமக்கு சிறிது கலக்கமாகவேயிருக்கும். பல கடல்கள் தாண்டிச் சென்று, வேறு கண்டத்தில் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கும், அவர்கள் பெற்றோருக்கும் புதிய த்ரில் என்று கூட சொல்லலாம். புதிய மாணவர்கள் பத்து பேர் என்றால், பழைய மாணவர்கள் ஐந்து பேரும் பத்து மாணவர்களை தங்களிடம் தங்க இடம் தந்து, அவர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளில் உதவி செய்கிறார்கள். புதிதாக வரும் மாணவர்களுக்கு பெருந்துணையாக அமைகிறது. எப்படித் தயாராக வேண்டும், என்னென்னப் பொருட்கள் கொண்டு வர வேண்டும் என அனைத்தையும் முன்கூட்டியே தெரிவிப்பார்கள். புதிதாக சேர்ந்தவர்கள் கல்லூரிக்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டு, வங்கி வேலைகள் முடிந்து கொஞ்சம் பழகியவுடன் வேறு வீடு பார்த்துக் கொண்டு செல்லலாம்.
தன் குழந்தைகள் எங்கு தங்குவார்கள், எப்படி சமாளிப்பார்கள் என்றெல்லாம் கவலைப்படும் பெற்றோர்களுக்கு, ‘‘நாங்கள் இருக்கிறோம் கவலைப்படாதீர்கள்’’ என்று சொல்லும் விதத்தில் அவர்களின் செயல்கள் அமைந்திருக்கும். இத்துடனில்லாமல் ஒருவருக்கொருவர் தனக்குத் தேவையில்லாத புத்தகங்கள், பொருட்கள் போன்றவற்றை மற்றவருக்குக் கொடுத்து உதவுவதும் நமக்கு நல்ல சூழலை ஏற்படுத்தித் தரும். தனக்குத் தேவையில்லாத பொருட்களைக் குறிப்பிட்டு குரூப்பில் போடுவர். யாருக்கு எது தேவையோ அதை பெற்றுக் கொள்வர். விலையுயர்ந்த பொருட்களாயின், சிறிது பணம் தர நேரும்.
சில குடும்பங்களில், புதிதாக ஃபர்னிச்சர்கள் வாங்குவார்கள். அப்பொழுது, பழைய ஃபர்னிச்சர்களை வெளியில் ஓர் ஓரமாக வைத்து விடுவார்கள். அப்படி வைத்திருந்தால், அதை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று அர்த்தம். சிலர் அதில் ‘இலவசம்’ என்று எழுதி வைப்பர். அறையில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்கள், இது போன்ற படிக்க உதவும் பொருட்களை எடுத்துக் கொள்வர். சில மாணவர்கள் தாங்கள் பயன்படுத்திய கம்ப்யூட்டர், படிக்கும் மேசை போன்றவற்றை புதிதாக வரும் மாணவர்களுக்குக் கொடுத்து உதவுவர். மிகவும் விலையுயர்ந்த பொருட்களுக்கு மட்டும் குறைந்த கட்டணம் பெறுவர். இது போல், நாங்கள் நடைப்பயிற்சி செல்லும் பொழுது, நிறைய பங்களாக்களில் வெளியே நிறைய பொருட்களைக் கண்டிருக்கிறோம். வெகுநாட்களுக்குக் கூட அத்தகைய பொருட்கள் யாரும் எடுத்துச் செல்லாமல் கிடப்பதை பார்த்தோம்.
எல்லா இடங்களிலும் நாம் நடந்து சென்று விட முடியாது. நடப்பதற்கென சில இடங்கள் இருக்கும். அங்கு தான் நடைப்பயிற்சி செய்ய முடியும். நாங்கள் வீட்டிலிருந்து ‘லேக் கால்கூன்’ (Lake Calhoon) வரை தினமும் நடந்து செல்வது வழக்கம். அதற்கென தனி ‘நடைபாதை’ உண்டு. ‘சைக்கிள்’ பயன்படுத்துபவர்களுக்கு ஒரு வழி, கார், வேன்கள் செல்ல மெயின் ரோடு என பிரிக்கப்பட்டு அங்கங்கே தரையில் எழுதப்பட்டிருக்கும். நீண்ட தூரம் நடந்து சென்றால், திருப்பங்களில் மட்டும் நிற்க வேண்டும். ‘நடைபாதை’, ‘சிக்னல்’ காட்டியவுடன் மேலும் நடையை தொடரலாம். சிறிது கூட வியர்வை இல்லாமல், நடப்பதே தெரியாமல் ஏரியை அடைந்து விடுவோம். அங்கு பார்த்தால் தான் நாம் நடப்பது ஒன்றுமேயில்லையெனத் தோன்றும். காரணம், சிறிய பிள்ளைகள் முதல் எண்பது வயதிற்கு மேற்பட்டவர் வரை ‘வாக்கிங் ஷூ’ வுடன் வேக வேகமாக நடப்பதை காண முடியும். இளம்பெண்கள் கைக்குழந்தைகளுடன், குழந்தைகளை ‘வாக்கரில்’ தள்ளிக் கொண்டும், முதியவர்கள் ‘வாக்கிங் ஸ்டிக்’குடன் ஒருவருக்கொருவர் துணையுடன் வேகமாக நடந்து செல்வதைக் காணலாம். சிலர் தங்கள் வளர்ப்புப் பிராணிகளுடன் அதாவது நாய் குட்டிகள், பூனைக் குட்டிகளுடன் தினமும் வருவர். நடந்து செல்வது மட்டுமல்லாமல், அங்கு எத்தனை
எத்தனை காட்சிகளைப் பார்க்க முடியும் தெரியுமா?
‘ஏரிக்கரை’ என்று சொன்னால் அதன் அருகில் முழுவதும் புல் தரையும், பெஞ்சுகளும், நீர் அருவிகளும், ஏன் அவசரத்திற்கு ‘மொபைல் பாத்ரூம்’ கூட இருக்கும். சிலர் சொந்தமாக படகு வைத்துக் கொண்டிருப்பர். அலுவலக வேலை முடிந்தவுடன், காரில் படகை வைத்துக் கொண்டு, ஏரியில் வந்து படகு சவாரி செய்வர். ஒரு மூலையிலிருந்து, அக்கரை வரை செல்லுவதை ஆசையுடன் நின்று பார்த்து ரசிப்போம். சூரியன் அஸ்தமிக்கும் சமயம் அப்படி ஒரு அழகு. ஏரியின் மேல் உள்ள பாலங்களில் நின்று பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ஒரு நாயின் சொந்தக்காரர் மிகப் பெரிய ‘பந்தை’ எடுத்து வந்தார். அதை அவர் ஏரியில் தூக்கிப் போட்டதுதான் தெரியும், நாய் குதித்து தண்ணீருக்குள்ளிருந்து அந்த பந்தை உடனடியாக எடுத்து வந்தது. அங்கிருந்து நகர்ந்து சென்று எங்கெல்லாம் ஏரியில் தூக்கிப் போட்டாரோ, அங்கெல்லாம் நீரில் மூழ்கி எடுத்து வந்தது. திறந்த வாயை மூடாமல் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.
புல்வெளியில் அமர்ந்து குடும்பத்துடன் உரையாடுவது, சாப்பிடுவது போன்றவை அவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயமாகும். காரில், வேண்டியது அனைத்தையும் எடுத்து வருவர். ‘மொபைல் நாற்காலிகள்’ கூட உடன் வைத்திருப்பர். தரையில் துணி விரித்து உட்கார்ந்து அரட்டையடிப்பர். சிலர் மடித்துப் பிரித்துப் போடும் நாற்காலிகளை போட்டுக் கொண்டு அமர்வர். ஜூலை மாதம் அவர்களின் சுதந்திர தினத்தன்று ஏரியில் பட்டாசுகள் கொளுத்துவர். அப்படியொரு அழகு!
நடு இரவில் ‘பூவாக’ சிதறும் மத்தாப்புக்களுக்கு இடையே மக்களின் மத்தாப்புச் சிரிப்பும் ஏரியையே எதிரொலிக்கச் செய்யும். அத்தகைய காட்சியை கண்டு ரசித்தோம்.திரும்பும் பொழுது வீட்டு முகப்புகளின் தோட்டங்களையும் வண்ணமயமான பூக்களையும் ரசித்துக் கொண்டு எத்தனை தூரம் வேண்டுமானாலும் நடக்கலாம். அது மட்டுமா? எண்பது வயதிற்கு மேற்பட்டவர் கூட என்ன அழகாக கார் ஓட்டுகிறார்கள்? ‘சர் சர்’ என்று பறக்கும் கார்களையும் அவர்கள் ஓட்டும் முறையும் கூட நமக்கு வியப்பாயிற்று!
Average Rating